புத்தரின் இசை, மற்றும் குற்றவுணர்வு.


ஆனால், இவற்றுக்கெல்லாம் பதில் கிடைத்தாற்போல் இருந்தது நான் இமயமலையில் சந்திக்க நேர்ந்த அந்தத் துறவியின் சந்திப்பு. “ சித்தத்தின் நிலைகளுக்கெல்லாம் மனமே முன்னோடி. அவை மனத்திலிருந்து உண்டானவை. மனமே எல்லாவற்றுக்கும் மேலாக நிற்கிறது. தீய எண்ணத்தோடு ஒருவன் பேசினாலென்ன, செயல்புரிந்தாலென்ன வண்டிச் சக்கரம் மாட்டின் அடியைத் தொடர்ந்து செல்வது போலத் துன்பம் அவனைத் தொடர்ந்து செல்லும்.” என்று கூறும் அவர், உலகெங்கும் சென்று தம்ம பதத்தினைப் பற்றி விளக்கிக் கூறுகின்றார். அவர் எந்த நாடுகளுக்குச் செல்கின்றாரோ அந்த நாடுகளிருந்து மட்டுமில்லாமல் பக்கத்து நாடுகளிலிருந்தும் அவரின் உரையைக் கேட்பதற்காக மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து விடுகின்றார்கள். மலேசியாவில் பிறந்து, லண்டன் கல்லூரியொன்றில் கல்வி கற்றவரான அவருக்கு எட்டு மொழிகளில் பரிச்சியம். தமிழ் உட்பட. 

ஆம், தமிழில் எழுதப்படிக்கத் தெரியாவிடினும் தமிழில் சரளாமாகக் பேசத் தெரிந்திருந்தது. எப்படி இது சாத்தியம். இவரின் தந்தை இலங்கை யாழ்ப்பாணத்தைப் பூர்விகமாகக் கொண்டவர். மலேசியாவிலுள்ள ஃபெட்ரோநாஷ் கோபுரத்தின் சொந்தக்காரர். உலகின் மிகப்பெரும் பணக்காரர்களில் இவரும் ஒருவர். தாய் தாய்லாந்துக்காரி. 

நான் அவரை இரவுச் சாப்பாடு சாப்பிட அழைத்தபோது, இன்னும் ஒருமணி நேரத்தில் மற்ற துறவிகளுடன் சேர்ந்து வீடுவீடாகச் சென்று உணவு யாசகம் கேட்கவேண்டுமெனக் கூறி மறுத்துவிட்டார். அது எனக்குள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பௌத்தமதம் குறித்து எனக்குள் பெரும் தாக்கத்தினை உண்டாக்கியது. அன்று முழுவதும் அவருடனே தங்கியிருந்தேன். 

நானும் இலங்கையைச் சேர்ந்தவனென்பதை அறிந்ததும் என்னோடு மிகவும் நெருக்கமானார். தனது தந்தையின் பூர்வீக தேசமான இலங்கையைப் பார்ப்பதற்கு தான் பிரியப்படுவதாகவும் கூறினார். ஒரு மிகப்பெரும் செல்வந்தரின் மகனான நீங்கள் பௌத்த மதத்தினைப் பின்பற்றி ஒரு துறவியாக மாறியதின் பின்னணி என்னவென்று கேட்டபோது பௌத்தமதம் என்று சொல்லிச் சிரித்தார் Ven Ajahn Siripanyo என்கின்ற அந்த சமகால கௌதம புத்தர். 

துப்பாக்கியும், கணையாழியும் மற்றும் மோபியஸ் ஆகிய இரண்டு படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தபோது எனக்கு மேற்குறிப்பிட்ட சம்பவம்தான் நினைவுக்கு வந்தது. உண்மையில், மௌனம் போன்றொரு உன்னதமான சங்கீதத்தினை நீங்கள் எங்குமே சுகிக்க முடியாது. எந்தவொரு அசாத்தியமான கலைஞனினாலும் அப்படிப்பட்டதொரு இசையினை அவ்வளவு இலகுவில் கொடுத்துவிடவும் முடியாது. அதனால்த் தான் புத்தரின் மௌனத்தை நான் இசைக்கு ஒப்பிட்டுக் கூறினேன்.  

ஈழப்பிரச்சினை என்பது இன்று சர்வதேச சினிமாவுக்கான முக்கியமான கருப்பொருளாக ஈழத் தேசியவாதிகளினாலும், / பன்முக விமர்சனங்களையுடைய படைப்பாளிகளினாலும் நோக்கப்படுகின்றது. இதில் பன்முக விமர்சனங்களையுடைய படைப்பாளிகள் தங்களது இருப்பிக்கான / அடையாளக் கருப்பொருளினை சர்வேதேச அரங்குகளில் முன்வைப்பது இன்றைய முக்கிய ஈழம்சார் அம்சங்களில் ஒன்று. ஆனால்  அவ் அடையாளங்களை உருவாக்கும் போது ஈழம்சார் படைப்பாளிகள் தமிழகத்துச் சினிமா/ இலக்கிய அடையாளங்களிலிருந்தும், அமெரிக்க போன்ற மிதமிஞ்சிய வணிக அடையாள சினிமாவிலிருந்தும் விலகி தனக்கென்றொரு பிரத்யோக /தனித்துவ அடையாள சினிமாவையே, அல்லது இலக்கியங்களையோ உருவாக்குவது முக்கியமானதாகும். 

ஓர் எழுத்தினை வெகுஜன எழுத்து, இலக்கிய எழுத்து என இரண்டுவகையாகப் பிரிப்பதினைப்  போலவே சினிமாவினையும் இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று வணிக சினிமா, இன்னொன்று உலகசினிமா. இவ்விரண்டு சினிமாக்களும் அதனது தொடக்க நிலையினிலேயே பார்ப்பவனை உள்ளிழுத்துக்கொண்டுவிடக்கூடிய சாமர்த்தியங்களோடு இருக்க வேண்டும். ஏனெனில், எப்படி இலக்கியங்களில் தேய்வழக்கு என்கின்றவொன்று இருக்கின்றதோ அதைப்போன்றே திரைப்படங்களிலும் தேய்வழக்கு என்கின்றவொன்று இருக்கின்றது. அதரப்பழசான ஒரு காட்சியோடு ஒரு திரைப்படம் தனது தொடக்கநிலையினைக் கொண்டிருக்குமானால் அந்தத் தேய்வழக்கு பார்ப்பவனை சலிப்படைய வைக்கின்றது. அதேபோன்று ஒருதிரைப்படத்தின் இறுதிக்காட்சியும் யூகித்துவிடமுடியாதளவிற்கு பார்ப்பவனுக்கு ஆச்சரியங்களையும், ஒரு உன்னத பரவச நிலையையும் அளிக்க வேண்டும். 

                                                                  2

துப்பாக்கியும், கணையாழியும் திரைப்படம் சமீபத்திய தமிழ்நாட்டுத் திரைப்படங்களிலிருந்தும், புலம்பெயர் ஈழத் திரைப்படங்களிலிருந்தும் அதன் கதைசொல்லல் முறையின் மூலமும், உருவாக்கத்தின் மூலமும் தனித்து விலகி நிற்கின்றது. 

படம்  தொப்பி அணிந்திருக்கும், முகம் காட்டப்படாத ஆணொருவர் இன்னோர் ஆணை விசாரணை செய்வதோடு ஆரம்பிக்கின்றது. “மாற்று” இயக்கத்தைச் சேர்ந்தவர்களிடமிருந்து சிலர் தப்பிப்  போக முயற்சி செய்கின்றனர். முயற்சி தோல்வியில் முடிய அனைவரும் பிடிக்கப்பட்டு விசாரணை செய்யப்படுகின்றனர். முடிவில் அவர்களனைவரும் “தொப்பி அணிந்த மனிதரால்” அடித்தே கொலைசெய்யப்படுகின்றனர். 

மற்றைய படங்களைப்போல் துப்பாக்கியும், கணையாழியும் திரைப்படத்தின் கதையை எழுதிவிடுவது அத்தனை சுலபமானது அல்ல. ஏனெனில் இத்திரைப்படத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கருக்கள் கதையினூடு தண்ணீரில் ஓடும் மின்சாரத்தைப் போல் பின்னிப்பிணைந்திருக்கின்றது. ஒரு தண்ணீரில் இருக்கும் மின்சாரத்தை பிரித்தெடுப்பது எப்படி இயலாத காரியமா அப்படியே துப்பாக்கியும், கணையாழியும் திரைப்படத்திலிருக்கும் கதையைப் பிரித்தெடுப்பதும் இயலாத காரியம். 

போரிலிருந்து தப்பி, கனடா வந்த பிற்பாடு தனக்கு நிச்சயிக்கப்பட்டவனால் கைவிடப்பட்டு நிர்க்கதி நிலைக்கான போதிலும் துணிச்சலைத் துறக்காத பெண்ணான அபி.

தானெடுக்கும் ஒரு பிழையான தீர்மானத்தினால் ஒரு சிறுமியை பலிகொடுக்க நேரிட்டபோது அதையெண்ணி குற்றவுணர்வு கொள்ளும் ஒரு கனேடியப் போலிஷ் அதிகாரி.

மனைவியை இழந்த பிற்பாடு மகளை வளர்ப்பதையும் மக்கள் சேவையையும் மாத்திரமே தனது பணியாகக் கொண்டு வாழும் சமூகத் தலைவர் சொர்ணம்.

தனது காதலனின் தற்கொலைக்கு தனது தந்தையே காரணமென எண்ணி அவரைக் கொல்லத்துடிக்கும் ஹோமோசெக்ஸுவல் ஆதி. 

கடந்த காலத்தின் நினைவுகளினால் மனப்பிறழ்வுற்றிருக்கும் இளைஞனான ஞானம்.

தன்னுடைய ஒரே மகனின் தற்கொலைக்குப் பின் விரத்தியுற்றிருக்கும் முன்னாள்த் துணைத் தளபதியான அரியம்.

எனக்கு இந்தப்படத்தினை புத்தரின் இசையோடு ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றியதற்கு முக்கியமான காரணம் இப்படத்தின் காட்சிகள் எடுக்கப்பட்ட விதம். 

உதாரணத்திற்கு ஒரு காட்சி. அந்தக் காட்சியில் அபி பைபிள் வாசித்துக்கொண்டிருக்கின்றாள். அப்போது அங்கே தேனீர் தாயாரிக்க வரும் அபிற், அபியிடம் என்ன வாசித்துக் கொண்டிருக்கின்றாயெனக் கேட்கின்றான். பைபிள் என்கிறாள் அபி. நீ மத நம்பிக்கையுடையவாளா என்று திரும்பவும் கேட்கிறான் அபிற். இல்லையெனக் கூறும் அவளிடம் அபிற் மறுபடியும், அப்படியெனில் ஏன் அதை வாசிக்கின்றாயெனக் கேட்கிறான். அவளோ, விடை கண்டுபிடிக்க எனக் கூறுகின்றாள்.

இவ்வளவு நேரமும் அமைதியாயிருந்த கமரா, இப்போது பேசத் தொடங்குகின்றது. அமைதியாக – மிக அமைதியாக – முன் நோக்கி நகர ஆரம்பிக்கின்றது. கூடவே புத்தனின் மௌனத்திற்கு  நிகரானவொரு இசை. இரண்டும் சேர்ந்து அபிற்றின் மனநிலையையும், அபியின் மனநிலையையும் பார்வையாளனுக்கு மிகத் தெளிவாக புரிய வைக்கின்றன. பிற்பாடு அபிற் ஏதும் பேசாமல் தேனீர்க் கோப்பையோடு அபியினருகில் சென்று அமர்கிறான். இப்போது கமரா மிகச் சரியாக அவர்களிருவரும் அமர்ந்திருக்கும் இடத்திற்கு முன்னால் வந்து நிற்கின்றது. அப்போது அவர்களிருவரும் தொடர்ந்து பேசத்தொடங்க கமரா தியானம் புரியும் மௌனத்துடன் நிலைத்து நிற்கிறது. 

இன்னோர் காட்சி, மகனைப் பறிகொடுத்த நடுத்தர வயதுத் தாயொருவர் ஒரு பொருளைத் தேடுகின்றார். பின்னணியில் இசையானது ஒரு பாம்பினைப் போல் ஊர்ந்து கொண்டிருக்கின்றது. பெண்ணுக்கு எங்கு தேடியும் அந்தப் பொருளானது கிடைக்கவில்லை. தோல்விகளை அவரின் முகத்தில் படிய ஆரம்பிக்கின்றது. ஊர்ந்து கொண்டிருந்த பாம்பு திடீரெனத் தன் தலையைத் தூக்கிப் பார்க்கின்றது. நாக்கினை நீட்டிச் சத்தம் செய்கிறது. இந்தக் காட்சியில் வசனமெதுவும் பயன்படுத்தப்படவில்லை. ஆனால் பார்வையாளன் பெண்ணின் மனநிலையை பாம்பின் செய்கை மூலம் அறிந்துகொள்கிறான்,  பாம்பு மறுபடியும் சாதுவாகி ஊர்ந்து செல்கிறது. இதைத் தான் நான் திரை நுணுக்கமென்கிறேன். இந்த நுணுக்கம் திரைமொழிக்கு மிகவும் அவசியமானவொன்று. 

திரைப்பட உருவாக்கத்தில் கவனிக்கப்படவேண்டிய இன்னொர் நுட்பம், ஒரு காட்சியைக் காட்சிப்படுத்தும் போது அக்காட்சி சொல்லவரும் கருத்தினை அந்தக் குறிப்பிட்ட காட்சியில் பேசப்படும்/ பயன்படுத்தப்படும் வசனங்கள்தான் புரியவைக்க வேண்டுமென்று எந்த கட்டாயமுமில்லை. காட்சியை காட்சிப்படுத்தும் விதத்தில் கூட சொல்லிவிட்டுப் போகலாம். அது ஒருவகையான திரை நுணுக்கம். அந்த குறிப்பிட்ட நுணுக்கத்தினை ஒருசில தேர்ந்த கலைஞர்கள் மாத்திரமே அறிந்திருப்பார்கள். லெனின். எம். சிவமும் அவ்வாறானவொரு நுணுக்கத்தினையறிந்த கலைஞரே. 

படத்தில் மிகச்சிறப்பாக அமைந்த இன்னோர் விஷயம், ஈழத்தமிழர்களின் அசலான பேச்சுவழக்கு. ஈழத்தமிழை இவ்வளவு அழகாக உச்சரித்து நான் எங்குமே காணவில்லை. மணிரத்னத்தின் கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஈழத்தமிழ் ஓரளவு நன்றாக வந்திருப்பினும் அதில்கூட ஒருவித எரிச்சலூட்டும் தன்மையும் / மிகைத்திணிப்பும் இருக்கும். புலம்பெயர்ந்த திரைப்பட இயக்கக் கூட்டங்களில், பெரும்பாலான இந்தியத் தமிழ்த் திரைப்படங்களில் அவர்களின் – தமிழ்நாட்டு பேச்சு வழக்கு – அசலான பேச்சுவழக்கு பயன்படுத்தப்படுவதில்லை. மாறாக தயாரிக்கப்படும் சினிமாவுக்கு ஏற்ற ஒரு பேச்சுவழக்கே பயன்படுத்தப்படுகின்றதுயென்றும், அவ்வாறானவொரு பிரத்யோக பேச்சுவழக்கினையே ஈழத்தமிழ் திரைப்படங்களிலும் பயன்படுத்தவேண்டுமென்கின்ற வாதமும் முன்வைக்கப்பட்டிருந்தது. அப்போதிருந்த மனநிலையில் அதையே மிகச்சரியென நானும் பரிந்துரைத்திருந்தாலும்  துப்பாக்கியும், கணையாழியும் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் நேர்த்தியான / அலம்பலில்லாத ஈழத்தமிழ் பேச்சுவழக்கினை  பார்த்தபோது இனிவரும் காலங்களில் ஈழத்தமிழர்களினால் தயாரிக்கப்படும் ஈழத் திரைப்படங்களில் அசலான ஈழத்தமிழையே பயன்படுத்த வேண்டுமென்கின்ற 

இன்னொன்று இத்திரைப்படத்தில் மிக நுட்பமான முறையில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அரசியல். தொப்பி அணிந்த மனிதர் தன்னிடம் பிடிபட்டவனிடம் இங்கிருந்து தப்பி எங்கே போகயிருந்தீர்களெனக் கேட்க புலிகளிடமென்று பதிலுரைக்கின்றான் எதிராளி. இந்த ஒற்றைவரி மட்டும் இத்திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்காவிடின் இத்திரைப்படம் தமிழ்த்தேசியவாதிகளினால்  மிகக் கடுமையான தொனியில் விமர்சிக்கப்பட்டிருக்கும். லெனின் இதை முன்கூட்டியே உணர்ந்திருக்க வேண்டும், மிக நுட்பமாக திட்டமிடப்பட்ட / சமரசத்  திரைக்கதை மூலம் பழியை வேறொரு இயக்கத்தின் மீது சுமத்திவிடுகின்றார். ஆனால் அப்படியானவொரு சமரசத் திரைக்கதையை ஒருவர் எழுத நிர்ப்பந்திக்கப்படுவதின் பின்னாலுள்ள அரசியலைப் போன்று மொண்னையான விஷயம் வேறெதுவுமேயில்லை. துப்பாக்கியும், கணையாழியும் திரைப்படத்திலும் அதுவே நிகழ்ந்துள்ளது. 

லெனின் இவ்வாறானவொரு சமரசத் திரைக்கதையினையெழுதியதின் மூலம் இரண்டுவிதமான முடிவுகளை நம் முன் வைக்கின்றார். ஒன்று எதற்கு வம்புயென்று ஒதுங்கிப் போதல். அல்லது, அவரின் தீவிரமான விடுதலைப்புலிகள் மீதான ஆதரவு. 

புலம்பெயர் ஈழத்துச் சினிமாவில் துப்பாக்கியும், கணையாழியும் திரைப்படமே கதை, ஒளிப்பதிவு, எடிட்டிங், லைட்டிங், நடிப்பு, வசனமென்று அனைத்துப் பிரிவுகளிலும் ஒரு முறையான செய் நேர்த்தியுடன் வெளிவந்துள்ளது எனலாம். இதுவொரு மாபெரும் பாய்ச்சலாகவே தோன்றுகிறது. ஒரு திரைப்படத்தில் நடிப்புயென்பது வெறும் உடல்மொழி சார்ந்ததல்ல. அது உடல்மொழியும், நடிப்பவரின் உணர்வுமொழியும் சார்ந்த ஒன்று. ஒரு திறமையான நடிகனென்பவனுக்கு  மேற்குறிப்பிட்ட இரண்டு மொழிகளையும் சம அளவில் கலந்து திரையில் கொட்டிவிடக்கூடிய சாமர்த்தியம் தெரிந்திருக்கவேண்டும். ஆனால் துரதிஷ்டவசமாக இதுவரைகாறும் வெளிவந்த ஈழத்துத் திரைப்படங்களில் அந்தச் சாமர்த்தியம் யாருக்குமே கைகூடிவரவில்லையென்பதே உண்மை. ( முகம் விதிவிலக்கு)

இன்னொர் விசயம், “உன் முன்னால் இருக்கும் கமராக் கருவியை மறந்துவிட்டு உனக்குளிருக்கும் உணர்வுகளை வெளியிலெடு” என்கிறார் ழான் பாத்தேய். ஈழத்துச் சினிமா நடிகர்களைப் பொறுத்தவரை யாருக்குமே இந்தச் சாமர்த்தியம் கூடிவரவில்லை. இதுவரையிலான எல்லாமே ஏதோவொரு விதத்தில் மிகைப்படுத்தப்பட்ட நடிப்பாகவும், அல்லது ஒன்றின் மீதான இன்னொன்றின் பிரதியாகவேயிருக்கின்றது. இதுவரை வெளிவந்திருக்கும் பெரும்பாலான ஈழம்சார் முழுநீளச்/குறும்படச் சினிமாக்கள் அனைத்திலுமே இவ்வகையான குறைபாடுகளை நாம் காணமுடியும். 

ஆனால், துப்பாக்கியும், கணையாழியும் திரைப்படத்தில் அபியாக வரும் தேனுகா ஒரு மிகச்சிறந்த நடிகையென்றே எனக்குத் தோன்றுகின்றது. ஒரு உதாரணம் சொல்லுகின்றேன். கனேடியப் பெண்ணின் வீட்டில் வாழப்பிடிக்காமல், ஒரு அடுக்குமாடிக்குடியிருப்பில் தனியே அறையெடுத்து வாழ்ந்து வருகின்றார் தேனுகா. அகதிகள் மட்டுமே வாழ்ந்துவரும் அந்தக்குடியிருப்பின் மேல்தளத்தில் ஒரு ஓய்வெடுக்கும் அறையிருக்கின்றது. ஒருநாள் அங்கே முதல்முறையாகச் செல்லுகின்றாள் அபி. ஒரு வெருண்ட பூனையைப் போல் அறையின் கதவருகிலேயே நின்று அறையைப் பார்க்கின்றாள். மெதுவாக உள்ளே நுழையும் அவள் இன்னொரு மனிதனும் அறைக்குள்ளிருப்பதைக் கண்டு சடடெனத் திகைப்படைகின்றாள். அபி தன்னைக் கண்டு பயப்படுவதை உணர்ந்து கொள்ளும் அபிற் தன்னுடைய பெயர் அபிற் என்றும் இந்தத் தளத்தில் நீங்களும், நானும் மட்டுமேயிருப்பதாகவும் கூறுகின்றான். எல்லாவற்றுக்கும் ஒரு புன்னகையை உதிர்ந்துவிடும் அபி, கடைசியில் எதுவுமே பேசாமல் இரண்டு கைகளையும் பொத்திப்பிடித்தவாறு விருட்டென்று நடந்து போகின்றாள். 

துப்பாக்கியும், கணையாழியும் திரைப்படம் அதனுடைய கதைப்போக்கிலும் சரி ,அல்லது அத்திரைப்படத்தில் தோன்றும் காதாப்பாத்திரங்களின் நடிப்பிலும் சரி ஏதோவொரு வகையில் கொரியத்திரைப்படங்களை எனக்கு நினைவுப்படுத்திக்கொண்டேயிருந்தன. கொரிய இயக்குனரான கிம் கி டுக்கின் திரைப்படங்கள் துப்பாக்கியும் கணையாழியும் திரைப்படத்தினைப் போன்றே பெரும்பாலும் வன்முறையையும், அமைதியையும் கொண்டிருக்கும். அவரின் திரைப்படங்களில் வரும் பெரும்பாலான கதாப்பாத்திரங்கள் மணிக்கணக்காக எதுவுமே பேசமாட்டார்கள். கடந்தகாலங்களைப் பற்றிய சிந்தனைகளிலும், நிச்சயமற்ற எதிர்காலம் குறித்த பயத்துடனும் சதா மூழ்கியிருப்பவர்களாகவே அப்பாத்திரங்கள் படைக்கப்பட்டிருக்கும். லெனினின் பாத்திரங்களிலும் அவற்றின் பிரதி மிக வெளிப்படையாகவே தெரிகின்றது. துப்பாக்கியும், கணையாழியும் திரைப்படத்தில் தோன்றும் கதாப்பாத்திரங்கள் சிலர் எதுவுமே பேசாமல் அமைதியாகயிருக்கின்றார்கள். மேம்போக்காகப் பார்க்கும்போது இதுவொரு போலித்தனமான பிரதியேயெனத் தோன்றினாலும், மிக ஆழமாக உள்நுழைந்து பார்க்கும்போது குறிப்பிட்ட பாத்திரங்களின் அமைதியை, கலையென்பதின் உன்னத வடிவமாகவே பார்க்கத் தோன்றுகின்றது. மெய்யான கலைப்பிரதியென்பது மிகத் திறமையான ஓவியரொருவரினால் தீட்டப்பட்ட ஓவியத்தைப் போன்றது. வெறும் கோடுகளினாலும், வர்ணங்களினாலும் தீட்டப்பட்டவை மிகச்சிறந்த ஓவியங்கலாகாது. அவ்வோவியம் தீட்டப்பட்டிருக்கும் நுணுக்கத்திலும், அவ்வோவியம் கூறிச்செல்லும் செய்தியிலுமே ஓவியத்தின் உன்னதமிருக்கின்றது. உன்னதமிக்க கலையெனப்படுவது மௌனத்தினை தன்னுடைய மொழியாகக் கொண்டிருக்க வேண்டும். 

பார்த்துக் கொண்டிருக்கும்போதே மிக உன்னதமானவொருவுணர்வினை ஏற்படுத்திய திரைப்படம் துப்பாக்கியும், கணையாழியும். காரணம் அப்படத்தில் நிலவிய கௌதம சித்தார்த்தனின் மௌனத்திற்கு நிகரான அமைதி. யாருமே அதிர்ந்து பேசுகிறார்களில்லை. நடக்கும் போதுகூட மெதுவாகவே நடக்கின்றார்கள். பேசும்போதும் பார்வையாளர்களின் காதுகளுக்கு வலித்துவிடுமோயென்று மெதுவாகவே பேசுகின்றார்கள். அவ்வளவு அமைதி. சிறிய வயதிலிருந்தே நான் அமைதியை விரும்புவனென்பதால் மௌனமான படங்களில் அப்படியொரு ஈர்ப்பு. துப்பாக்கியும், கணையாழியும் திரைப்படத்தினைப் பொறுத்தவரை மனிதர்களோடு சேர்த்து இத்திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டிருந்த தொழிநுட்பமும் அமைதியைப் பேசுபவையாகவேயிருந்தன. இசை, கமராயென்று மொத்தமும் ஒரு இராணுவ ஒழுங்கோடு அமைதியாகவேயிருந்தன. 

சியோ யங்-ஜூ தன் தாய் லீ என்-வூ மற்றும் தந்தை சோ ஜியே-ஹியூவுடன் வசித்து வருகின்றான். ஒருநாள் தன் தந்தை சோ ஜியே-ஹியூ இன்னொரு பெண்ணுடன் பாலியலுறவில் ஈடுபடுவதைப் பார்த்துவிடுகின்றான் சியோ யங்-ஜூ.  கூடவே அந்தக் காட்சியை லீ என்-வூவும்  பார்த்துவிடுகின்றாள். 

அன்றைய இரவே தன் தந்தை இன்னொரு பெண்ணுடன் பாலியலுறவில் ஈடுபடும் காட்சியை நினைத்து சியோ யங்-ஜூ சுயமைதுனம் செய்துகொள்கிறான். இதையும் லீ என்-வூ பார்த்துவிட ஆத்திரப்படும் அவள் ஒரு கத்தியைஎடுத்து தன் கணவனின் குறியை அறுக்க முயற்சி செய்ய அவளைத் தள்ளிவிட்டு ஓடிவிடுகின்றார் அவர். கடைசியில் தன்  மகனின் குறியை அறுக்கும் லீ  என்- வூ அந்தக்  குறியைத் தின்றும்  விடுகின்றாள். 

குறியை இழந்து கதறும் மகனை மருத்துவமனைக்கு தூக்கிச் செல்கின்றார் சோ ஜியே-ஹியூ. அங்கே அவனுக்கு சிகிச்சை அளிக்கப்படுகின்றது. முடிவில் குறியில்லாமல் வீடு திரும்புகின்றான்  சியோ யங்-ஜூ.  “அந்தச்” சம்பவத்திற்குப் பிறகு வீட்டை விட்டு போய்விட தனிமையிலும், குற்றவுணர்ச்சியிலும் துன்பப்படுகின்றார்  சோ ஜியே-ஹியூ. 

ஒருநாள் சியோ யங்-ஜூ பள்ளியில் சிறுநீர் கழிக்கும்போது சிறுநீரானது நேராகப் போகாமல் வளைந்து போகின்றது. அத்தோடு சிறுநீரானது  அவன் அணிந்திருக்கும் சப்பாத்திலும் தெறித்துவிடுகின்றது. இதைக் கவனித்துவிடும் அவனுடைய பள்ளித் தோழர்கள் அவனை வழிமறித்து அவனுடைய காற்சட்டையை கழற்றிப் பார்க்கின்றார்கள்.  சியோ யங்-ஜூக்கு தங்களைப் போன்று குறியில்லையென்பது தெரியவர அவனை கேலி செய்கின்றார்கள். அவமானத்தில் வெட்கித் தலைகுனிகின்றான் சியோ யங்-ஜூ. 

இதற்கிடையில்,  இது எல்லாவற்றுக்கும் தான் செய்த துரோகம் தான் காரணமென தெரியவர அதிகமாகத் துன்பப்பட்டுப் போகின்றார் சோ ஜியே-ஹியூ. கூடவே தான் பாலியல்த் தொடர்பு வைத்திருந்த பெண்ணுடனும் தொடர்பைத் தூண்டித்து விடுகின்றார். 

இன்னொருநாள் சியோ யங்-ஜூ தன் தந்தை பாலியல்த் தொடபு வைத்திருந்த பெண்ணின் கடைக்குச் செல்கின்றான். அங்கே அவனை உறவுக்கு வருமாறு அந்தப் பெண் அழைக்க தனக்கு குறையில்லாத விஷயம் தெரியவந்தால் அவள் தன்னை அவமானப்படுத்தக்கூடுமென எண்ணி அங்கிருந்து ஓடிவிடுகின்றான்  சியோ யங்-ஜூ. அதற்கு அடுத்த காட்சியில் அவனுடைய பள்ளித்தோழர்கள் அவனைக் கண்டு அவனின் காற்சட்டையை கழற்றிப் பார்க்கின்றார்கள். அப்போது சியோ யங்-ஜூங்கை சில இளைஞர்கள் காப்பாற்றுகின்றார்கள். 

அதற்கு அடுத்த காட்சியில் அந்த இளைஞர்களுடன் சேர்ந்து சியோ யங்-ஜூ மதுவருந்துகின்றான். இது எல்லாமே அந்தப் பெண்ணின் கடையில் வைத்தே நடக்கின்றது. அப்போது அந்த இளைஞர்களிலொருவன் குடிபோதையில்  அந்தப்பெண்ணை வன்புணர்கின்றான். அடுத்ததாக சியோ யங்-ஜூகும் அந்தப் பெண்ணை வன்புணர்கின்றான். 

இந்த விஷயம் காவல்துறைக்குத் தெரியவர,  அவர்கள்  சியோ யங்-ஜூகைத் தேடி அவனின் வீட்டுக்கு வருகின்றார்கள். சோ ஜியே-ஹியூ அவனுக்கு குறியே இல்லையெனவும், குறியில்லாத ஒருவனால் எப்படி ஒரு பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்த முடியுமென்றும் கேட்கின்றார். சோ ஜியே-ஹியூ கூறுவது உண்மைதானா என்பதையறிய சியோ யங்-ஜூங்கின் காற்சட்டையை உருவிப்பார்க்கின்றது காவற்துறை. கூட இருந்த இளைஞர்கள் அவனைக் கேலி செய்கின்றார்கள். ஆத்திரத்தில், அவமானத்தில் வெட்கித் தலைகுனியும் சியோ யங்-ஜூ தன் தந்தையை அடித்து உதைக்கின்றான். 

தன்னுடைய அறையிலிருந்து கண்ணீர் விடும் சோ  ஜியே-ஹியூ தன் மகனின் பிரச்சனைக்கு பரிகாரம் தேட எண்ணி இணையத்தில் குறியில்லாமல் இன்பம் அனுபவிப்பது எப்படியென்று தேடத் தொடங்குகின்றார். மனித உடலில் சுயமாகவே காயங்களை ஏற்படுத்துபோது எங்கள் குறியானது விறைக்கத் தொடங்கி ஷ்கலிதமடைகின்றது என அதில் எழுதப்பட்டிருப்பது கண்டு திகைப்படைகின்றார்.

பிறிதொரு சமயம், கல்லொன்றினை எடுத்து தன்னுடைய காலில் காயம் ஏற்படும்வரை தேய்க்கின்றார். காலில் உராய்வு ஏற்பட்டு இரத்தம் கசிகின்றது. கூடவே சோ ஜியே-ஹியூக்கு குறி விறைக்கத் தொடங்கி ஷ்கலிதமும் ஏற்படுகின்றது. 

சிறையிலிருக்கும் மகனிடமும் இதைப்பற்றிச் சொல்ல,   சியோ யங்-ஜூ வும் சிறைச் சுவரிலிருக்கும் சிறிய கற்துண்டொன்றினை பெயர்த்தெடுத்து தன்னுடைய கையில் உராஞ்சுகிறான். குறி விறைத்து ஷ்கலிதமடைகிறது. 

பின்னர்  சியோ யங்-ஜூ சிறையிலிருந்து விடுதலையாகின்றான். நேராகக் கடை வைத்திருக்கும் பெண்ணிடம் செல்கிறான். அவள் தன்னிடமிருக்கும் கத்தியொன்றினால்  சியோ யங்-ஜூவின் தோற்பட்டையில் குத்துகின்றாள். தன் மார்புகளை விலக்கிக் காட்டி அவனின் குறியை விறைக்கப் பண்ணும் அவள்  சியோ யங்-ஜூவின் தோற்பட்டையில் சொருகியிருக்கும் கத்தியைப் பிடித்து பின்னும், பின்னும் அசைக்க  சியோ யங்-ஜூக்கு ஷ்கலிதமாகி இன்பம் கிடைக்கிறது. 

ஆண்குறி மாற்று சிகிச்சை பற்றி இணையத்தில் செய்திவர அன்றே மகனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் சோ  ஜியே-ஹியூ மகனுக்கு ஆண்குறி மாற்று அறுவைசிகிச்சை செய்யுமாறு மருத்துவரிடம் கெஞ்சுகிறார். முடிவில் சியோ யங்-ஜூக்கு குறியும் கிடைத்து விடுகின்றது. 

காட்சிகள் இவ்வாறு நகர்ந்து கொண்டிருக்க ஒருநாள் வீட்டைவிட்டுப் போன லீ  என்- வூ திரும்பி வருகிறாள். வந்தவள் நேராகப் படுக்கையறைக்குச் சென்று தூங்கி விடுகின்றாள். இரவில் தூக்கத்திலிருந்து விழித்துக் கொள்ளும் அவள், நேராக சியோ யங்-ஜூவின் படுக்கையறைக்குச் சென்று அவனருகில் படுத்துக் கொள்கிறாள். மகனின் கன்னத்தைப் பிடித்து தடவுகிறாள். சியோ யங்-ஜூக்கு குறி விறைத்துக் கொண்டு விடுகிறது. அதைப் பார்த்து அதிர்ச்சியடையும்  லீ  என்-வூ தன் கணவனின் காற்சட்டையைப் பிடித்து உருவிப் பார்க்க அவருக்கு குறியில்லாதது கண்டு மேலும் அதிர்ச்சியடைகின்றாள்.

பிறிதொரு நாள், தன் சொந்த மகனுடனேயே  லீ  என்- வூ பாலியலுறவில் ஈடுபட்டிருப்பதைக் கண்டு கொதித்துப் போகும்  சோ  ஜியே-ஹியூ அவளைச் சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்கின்றார். தாயின் மரணத்திற்கும், தந்தையின் மரணத்திற்கும் தன்னுடைய குறியே காரணமென்கிற குற்றவுணர்வு சியோ யங்-ஜூக்கு ஏற்பட தன் குறியை தானே சுட்டுக் கொள்கிறான்.

துப்பாக்கியும், கணையாழியும் திரைப்படத்தை நான் புத்தனின் இசைக்கு ஒப்பிட்டால், கிம் கி டுக்கின் மோபியஸை குற்றவுணர்வோடு ஒப்பிடுவேன். துப்பாக்கியும், கணையாழியும் திரைப்படத்திலும் குற்றவுணர்வு என்பது ஒரு பகுதியாக வருகின்றது. உதாரணமாக அந்த வெள்ளைக்காரப் போலிஷ் அதிகாரியின் குற்றவுணர்வினைக் குறிப்பிடலாம்.   – காப்பாற்றப்படக்கூடிய சர்ந்தப்பமிருந்தும் தன்னுடைய ஒரு சிறிய தவறினால் அந்தச் சிறுமி அநியாயமாக இறந்து போனதை நினைத்து சதா சர்வகாலமும் குற்றவுணர்வு கொள்கின்றார். முடிவில் அந்தத்  தகப்பனிடம் சென்று நடந்ததனைத்தையும் கூறி மன்னிப்புக் கேட்கின்றார். தகப்பனும் மன்னித்துவிட நிம்மதியாக வீடு திரும்புகின்றார் அவர்.- ஆனால் மோபியசினைப் பொறுத்தவரை குற்றவுணர்வே படம் முழுவதும் ஒரு கண்ணுக்குப் புலப்படாத மாய அலையினைப் போல் படர்ந்திருக்கின்றது. காட்சிக்கு காட்சி மனிதர்கள் குற்றவுணர்வு கொள்கின்றார்கள்.  

தன்னை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியவனை அவனின் குறியைத் துண்டிப்பதன் மூலம் தண்டனை வழங்கினாலும், பின்பு குற்றவுணர்வினால் அவனுக்கு அவனின் உடலில் காயத்தை ஏற்படுத்தி குறியை விறைக்கப் பண்ணி ஷ்கலிதமடைய வைப்பது ஒரு உதாரணம். 

இத்திரைப்படத்தினை பார்த்து முடித்த பின்னர் இணையத்தில் குற்றவுணர்வு பற்றித் தேடிப்பார்த்த போது பல சுவாரஷ்யமான விஷயங்கள் எழுதப்பட்டிருந்தன. 

18 நூற்றாண்டில் கிழக்கு ஐரோப்பாவில் இரத்தக் காட்டேரிகள் பற்றிய கதைகள் பெருமளவில் தோன்றத் தொடங்கின. அவைபற்றிய அச்சங்களும் ஐரோப்பியர்கள் மத்தியில் பரவலாக பரவத் தொடங்கின. இது ஒருபுறமாக இருந்தாலும் இரத்தக் காட்டேரிகள் இரவு நேரங்களில் தங்களுடைய கல்லறையைவிட்டு எழும்பிவருவதற்கு குற்றவுணர்வும் ஒரு காரணமென நம்பப்படுகின்றது. இறந்துபோன ஒருவருடன் மீண்டும் இணைவதற்கு விரும்பி அவரையே நினைத்துக் கொண்டிருக்கும்போது அவ்வாசையானது இறந்து போனவருக்கும் ஏற்படும்போது காட்டேரிகள் கல்லறையிலிருந்து மீள்வருகின்றார்கள். அல்லது ஒருவர் வாழும்போது செய்யும் தவறுகளின் மூலம் அவர் இறந்த பின்பு அந்த தவறையெண்ணி குற்றவுணர்வு கொள்ளும்போது காட்டேரிகளின் துயில் எழும்புதல் நிகழ்வு நடைபெறுகின்றது.  

நம்முடைய மனதே நம்மை குற்ற உணர்ச்சியால் கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும்போது அதை தாங்கிக்கொள்ளவே முடியாது. “என் அக்கிரமங்கள் என் தலைக்கு மேலாகப் பெருகிற்று, அவைகள் பாரச் சுமையைப்போல என்னால் தாங்கக்கூடாத பாரமாயிற்று” என்று தாவீது ராஜா எழுதினார். (சங்கீதம் 38:4) யெகோவா என்னை மன்னிக்கவே மாட்டார் என்று நினைத்து சிலர் குற்ற உணர்ச்சியால் நொந்துபோயிருக்கிறார்கள். (2 கொரிந்தியர் 2:7

கடந்தகாலங்களை அடிப்படையாகக் கொண்டு ஏற்படும் குற்றவுணர்வானது,  உண்மையில் ஒவ்வொரு மனிதர்களுக்கும் இருக்க வேண்டிய அடிப்படைப்பண்பு என்கின்றார் ஹாவர்டு பல்கலைக்கழகத்தின் சட்ட விரிவுரையாளரான  ஃபேக் தோமஸ்  அன்பிர்டு. ஒரு தவறிலிருந்து தண்டனை பெறாமல் தப்பிவிட்டு, பின்னர் அத்தவறை எண்ணி காலம் முழுவதும் வேதனைப்படுதல் நூறு தண்டனையைப் பெற்றுவிடுவதற்குச் சமம் என்றும் அவர் தன்னுடைய “ குற்றவுணர்வு ” என்கிற   புத்தகத்தில் கூறுகின்றார். 

இப்படி ஏகப்பட்ட விஷயங்களை குற்றவுணர்வு பற்றி அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் துரதிஷ்டவசமாக நான் சந்தித்த நிறைய மனிதர்கள் குற்றவுணர்வு பற்றி கிஞ்சித்தும் அக்கறை கொள்கின்றார்களில்லை. அதுவும் தமிழர்கள் இந்த விஷயத்தில் சுத்த சூனியமாக இருக்கின்றார்கள்.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Scroll to Top