விடுதலைப் புலிகள் மீது எனக்கும் பற்றிருந்தது. ப. தெய்வீகன்.


1, எல்லோரையும் போலவே நானும் என்னுடைய முதலாவது கேள்வியை முதலில், உங்களைப் பற்றி  கொஞ்சம் சொல்லிவிடுங்களேன் என்றவாறாகவே முன் வைக்கின்றேன்?

சொந்த இடம் மானிப்பாய். படிக்க சென்றது யாழ். இந்துக்கல்லூரி. அங்கிருந்து நேரே வேலைக்கு சென்ற இடம் உதயன் பத்திரிகை. போன மாத்திரத்திலேயே விளையாட்டுத்தனமாக இருக்கிறான் என்று கண்டுகொண்டார்களோ என்னவோ விளையாட்டு செய்தியாளராக நியமனம் தந்தார்கள். பத்திரிகை என்பது கொஞ்சம் சீரியசான விஷயம் என்பதை உணர்த்தும் விதமாக அங்கு பல வேலைகள் நடைபெற்றதை கண்டுகொண்டதை அடுத்து, நானும் அதற்கு சமாந்தரமாக பணிபுரிவதற்கு ஆசிரியர்பீட வேலைகளை பழகினேன். அப்போதெல்லாம் உதயன் ஆசிரியர் பீடம் கானமயில்நாதன் – வித்தியாதரன் ஆகியோர் தலைமையில் அருமையான பாசறை. நிறைய விடயங்களை நான் கற்றுக்கொள்கிறேன் என்று தெரியாமலே படித்துக்கொண்டேன். பத்திரிகை என்றால் என்ன, அதன் தாற்பரியம் என்ன என்பதை சிறிது சிறிதாக அறிந்துகொண்ட காலப்பகுதியில் உதயன் நிர்வாகத்தின் இன்னொரு பத்திரிகையான சுடரொளியில் பணிபுரிவதற்கு கொழும்புக்கு அழைக்கப்பட்டேன். அங்கு சிறிதுகாலம் பணிபுரிந்துவிட்டு வீரகேசரிக்கு சென்றுவிட்டேன். புலம்பெயர்ந்து ஆஸ்திரேலியா வரும்வரை வீரகேசரி வாரஇதழ் பகுதியில் உதவி ஆசிரியராகவும் வாரப்பத்தி எழுத்தாளராகவும் பணிபுரிந்தேன்.

இங்கு வந்த பின்னரும் அரசியல் பத்திகளை தொடர்ச்சியாக எழுதினேன். இடையிடையே நாட்டில் இடம்பெற்ற பல சம்பவங்கள், மாற்றங்கள் எல்லாமே – எல்லோருக்கும் போல – எனக்கும் அயர்ச்சியையும் தளர்ச்சியையும் தந்தது. இதனால் எழுத்துப்பணியில் அவ்வப்போது சோர்வு ஏற்பட்டது. ஆனால், எல்லாம் முடிந்துவிட்டது என்று குந்தி இருத்துவிட மனம் அனுமதிக்கவில்லை. வீரகேசரியில் நான் பணிபுரியும்போது மித்திரன் இதழின் ஆசிரியராக பணிபுரிந்த நண்பன் மதனை ஆசிரியராக கொண்டியங்கும் தமிழ் மிரர் பத்திரிகையில் இப்போது வாரந்தோறும் அரசியல் பத்திகளை எழுதி வருகிறேன். புலம்பெயர்ந்த நாடுகளில் இயங்கும் வானொலிகள் மற்றும் தொலைக்காட்சிகளுக்கு அரசியல் ஆய்வு மற்றும் ஆஸ்திரேலிய நிலைவரங்கள் குறித்த செவ்விகளை அவ்வப்போது கொடுப்பது வழக்கம்.

இலக்கியம், சினிமா, இசை, கவிதை, விளையாட்டு என்று சமாந்தரமாக ஏனைய பரப்புக்களிலும் நிறைய ஈடுபாடு உண்டு. ஆனாலும் கதவிடுக்குகளின் ஊடாக ஓடித்திரியும் எலிகள் போன்று தேவைகளுக்கு பின்னால் அலையும் புலம்பெயர்வாழ்வில் இயன்றளவு நான் ஈடுபாடுகொண்ட துறைகளில் எனது ஆக்கங்களை மேற்கொண்டுவருகிறேன். இலக்கிய பரப்பில் நூல் விமர்சனங்கள் மற்றும் வித்தியாசமான படைப்புக்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவேண்டும், முக்கியமாக போரிலக்கியம் குறித்த விழிப்புணர்வும் அதன் தேவைப்பாடும் எமது மக்களுக்கும் படைப்பாளிகளுக்கும் ஏற்படவேண்டும் என்ற ஆர்வத்தை நோக்கி அதிகம் செயற்படுவது வழக்கம்.

இசைத்துறையில் ஒரு பாடகனாக நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து எமது ஈழக்கலைஞர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவருவதில் தொடர்ந்து பணியாற்றிவருகிறேன். அதேபோன்று தனிப்பட்ட ரீதியல் கடந்த மூன்று வருடங்களாக வெவ்வேறு நாடுகளில் உள்ள கலைஞர்களை ஒன்றிணைத்து புதிய பாடல்களை தயாரித்து வெளியிட்டு வருகிறோம்.

பச்சையாக சொல்லப்போனால், “அஞ்சு சதத்துக்கு பிரயோசனமில்லாத உந்த வேலையளை விட்டுட்டு ஏதாவது உருப்படியா செய் பாப்பம்” என்ற சம்பிரதாய “அர்ச்சனைகளுக்கு” சகல தகுதியுடனும் இந்த நானும் தமிழ் படைப்புலகமும் ஆளையாள் இறுகப்பிடித்துக்கொண்டிருக்கிறோம்.

2, சரி,எதற்காக எழுத வந்தீர்கள்? இந்தக் கேள்வி கொஞ்சம் சண்டித்தனமாகவிருக்கின்றது என உங்களுக்குத் தோன்றினால் கேள்வியை மாற்றிக் கேட்கின்றேன். உங்களை எழுதத் தூண்டியது எது?

எழுத்தாளனாக வரவேண்டும் அல்லது சமூகத்துக்கு எழுத்துப்பணி செய்யவேண்டும் என்ற எந்த நோக்கமும் எப்போதும் எனக்கிருந்ததாக ஞாபகம் இல்லை. தேவாரத்துக்கு பொழிப்பு எழுதுவதும் கட்டுரைக்கு சுருக்கம் எழுதுவதும் எப்படி என்கின்ற பாணியில் காணப்பட்ட எமது பாடத்திட்ட வரைமுறைகளுக்குள் தமிழை மேலோட்டமாக படித்தபோது தாய்மொழி என்ற ரீதியில் மொழிமீது பற்றும் பாசமும் இருந்தது. யாழ் இந்து கல்லூரியில் படிக்கும்போது எமது சமய பாட ஆசிரியர் கவிஞர் ச.வே. பஞ்சாட்சரம் நான் கிறுக்கும் கவிதைகளுக்கு நல்ல ஊக்கமளித்தார். அதை தவிர்த்து பார்த்தால் அந்த காலப்பகுதியில் இசைதான் எனக்கு மிகுந்த ஈடுபாடுகொண்ட துறையாக இருந்தது. அதற்கு எனது நட்புவட்டமும் ஒரு மிகப்பெரும் காரணம்.

மற்றும்படி, பொன்னியின்செல்வன், கடல்புறா என்று தலையணை சைஸ் புத்தகங்களுக்கு பின்னால் சென்றவனும் இல்லை. ராஜேஷ்குமார், சிவசங்கரி ரக புத்தகங்களை வாசிப்பதற்கு நூலகங்களுக்கு சென்று வந்தவனும் இல்லை. சுஜாதா பிரியர்களாக வெறியர்களாக எனது நட்புவட்டாரத்திலும் பலர் இருந்தார்கள். ஆனால், எல்லாவற்றிலும் தேர்ந்தெடுத்த சுவாரஸ்யமான படைப்புக்களை மேலோட்டமாக – வலுக்கட்டாயமாக – நாலுபேர் தங்கள் வாசிப்பு பற்றி பேசும்போது நாங்களும் எமது பக்க சவுண்டை கொடுக்கவேண்டும் என்ற “பொறுப்புணர்வோடு” படித்தது மட்டும்தான். அந்த வாசிப்புக்கள் ஏனோ அவ்வளவாக எழுத்தின்மீது எந்தவிதமான அதிதீவிர ஆசைகளை ஏற்படுத்தியதில்லை. “நளன் தமயந்தியை காட்டில்தானே விட்டுச்சென்றான். நீ என்னை வார்ட்டில் அல்லவா விட்டு சென்றுவிட்டாய்” என்று நண்பர்களை குஷிப்படுத்தும் கவிதைகளின் மீதுதான் நாட்டமிருந்தது.

36475777_10160747166980604_3228940654897790976_n

அதன்பின்னர், பத்திரிகை துறையில் இணைந்துகொண்ட பிறகு தொழில்ரீதியாக வாசிப்பு என்பது அத்தியாவசியமான தனிமூலதனமாக தோன்றியது. ஆகவே, இயல்பான விருப்பத்துடன் அரசியல் சார்ந்த வாசிப்புக்களை அதிகரித்துக்கொண்டேன். மக்களுக்கு எனது எழுத்துக்களின் ஊடாக ஏதோ ஒன்றை சொல்லவேண்டும் என்றால், எனது எழுத்தை வாசிப்பவர்களில் குறிபட்ட சதவீதத்தினரைவிட அதிகமாகவேனும் நான் வாசிப்பு அனுபவத்தை பெற்றிருக்கவேண்டும் என்ற தார்மீக பொறுப்போடு வாசிப்பு பரப்புக்களை விஸ்தரித்துக்கொண்டேன். அதன்பிரகாரம், கொஞ்சம் கொஞ்சமாக எனது ஊடகவியல் பயணம் வீச்சடைந்தது. இந்த பயணத்துக்கு வித்தி அண்ணா, கானமயில்நாதன், பத்மசீலன், குகநாதன், குமாரதாசன், ஜெகன் என்று பலர் உறுதுணையாக இருந்தனர். இன்றுவரையான எழுத்து பணிக்கும் பாணிக்கும் அவர்களே அச்சாரம். இந்த தொடர்ச்சியான பயணத்தில் பின்னர், சுடரொளி ஆசிரியர் ரட்ணசிங்கம், எட்வேட், சிவகுருநாதன் வீரகேசரியில் சிவராம் அண்ணா என்று பலர் திறமைகளை புடம்போட்டு எனக்கே தெரியாமல் என் எழுத்துக்களை வழிப்படுத்தி அழகுபார்த்தனர்.

எனக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் என்ன என்று கேட்டால், ஒரு குறுகிய காலப்பகுதியில் ஈழத்தமிழ் ஊடகப்பரப்பில் மிகப்பெரும் சாதனைகளை நிகழ்த்திய குறிப்பிடத்தகவர்களுடன் ஆழமாக பழகி அவர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் கிட்டியதே ஆகும். அதற்கு அக்காலப்பகுதியில் நிலவிய நாட்டு நிலைவரமும் ஒரு காரணம் என்று கூறலாம்.

தொண்ணூறில் ஆரம்பித்து இரண்டு தசாப்தகால ஈழம்தான் உள்ளும் புறமுமாக நான் அனுபவித்த தாயகம். அக்காலப்பகுதியில், நான் நேசித்த அந்த மண் பட்ட காயங்களும் மக்கள் பட்டவலிகளும்தான் ஒரு குறிப்பிட்டகாலம்வரை எனது எழுத்துக்களில் நீக்கமறநிறைந்திருந்தது. சுருக்கமாக சொல்லப்போனால், சோபாசக்தி கூறியதுபோல, நானும் ஒரு போர்பெற்ற குழந்தை. ஆகவே, எனது எழுத்துக்கள் அதைப்பற்றியதாகவே இருக்கவேண்டும். அதைத்தான் எழுதவேண்டும் என்ற சுயதணிக்கையுடன் எனது எழுத்துக்களை முன்வைத்தேன். அதற்குவெளியே சென்று பலவிடயங்களை வாசித்து ரசித்தபோதும் அவையெல்லாம் எமது போர்செறிந்த மண்ணுக்கு இப்போதைக்கு ஒவ்வாதவை என்ற இறுக்கமான நிலைப்பாடுதான் எனது எழுத்துக்களை மிரட்டிக்கொண்டிருந்தது. எனது எழுத்து முன்னோடிகளும் அவ்வாறான எழுத்தொழுக்கத்துடன் நடந்துகொண்டமை இதற்கு மிகப்பெரிய காரணம்.

இந்த சுய கட்டுப்பாட்டிற்கு வெளியே நானாக என்னை உடைத்து வெளியே வருவதற்கு பல காலம் எடுத்தது. இப்போதும் முழுமையாக வந்துவிட்டேனா என்ற சந்தேகம் எனக்குள் அவ்வப்போது எழுவதுண்டு. புலம்பெயர்வாழ்வு அதற்கான வெளிகளை திறந்துவிட்டிருக்கலாம். போர்எழுத்துக்களுக்கு வெளியே பரந்த வாசிப்பு நிறைந்த பரப்புக்களை கடந்த பதினைந்து ஆண்டுகள் அறிமுகம் செய்ததனால் எனது பேனா இப்போது பலகளங்களுடன் பேசியிருக்கிறது. பல தளங்களை விசாரணை செய்திருக்கிறது. எனது வரவின்றி கிடந்த காலப்பகுதியுடன் நிறைய அளவளாவியிருக்கிறது. இது ஒரு செழிப்பான தரிசனமாக பட்டது.

தற்போதெல்லாம், எனது இரத்தத்தில் ஊறிக்கிடந்த போர் எழுத்துக்களுக்கு சமாந்தரமாக இலக்கியபரப்பின் பரந்துபட்ட வெளிகளுடன் உரையாடி மகிழ்கிறேன். தொடர்ந்து வாசிக்கிறேன். நண்டுபோல மனதை கவ்வியிருக்கும் தாயக நினைவுகளில் கொஞ்சம் நண்டோஸ் நினைவுகளும் வித்தியாசமான எழுத்துக்களுக்கு விதை தூவியிருக்கின்றன.

3, ஆரம்பத்தில் பத்திரிக்கையாளராக இருந்த நீங்கள் எப்போது அரசியல்க் கட்டுரைகளை எழுத ஆரம்பித்தீர்கள்?விடுதலைப் புலிகளின் அரசியல் குறித்து என்னவிதமான கருத்துகளைக் கொண்டிருந்தீர்கள்? “எல்லோரையும்” போலவே யுத்தத்தின் முடிவு இப்படித்தான் இருக்குமென்பதை நீங்களும் முன்கூட்டியே உணர்ந்திருந்தீர்களா?

உதயனில் பணிபுரியும்போது அரசியல் கட்டுரைகள் எழுதும் பொறுப்பும் பக்குவமும் அனுபவமும் இருக்கவில்லை. சுடரொளியில்தான் கட்டுரை முயற்சிகள் துளிர்விட ஆரம்பித்தன. வீரகேசரி வாரப்பத்திரிகையில் உதவி ஆசிரியராக பணிபுரிந்த காலப்பகுதியில் கட்டுரைகள், செவ்விகள் என்று எனது பங்களிப்பு தொடர்ந்தது. அக்காலப்பகுதியில் ‘தமிழ்நாதம்’ இணையத்தில் எனது தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் மறுபிரசுரமாகியிருந்தன. ஓரிரு தடவைகள் விகடனிலும் இலங்கை சம்பவங்கள் குறித்த எனது கட்டுரைகள் வெளியாகியிருந்தன.

ஆஸ்திரேலியா வந்த பின்னர், ‘தமிழ்நாதம்’ இணையத்தில் தொடர்ச்சியாக எனது கட்டுரைகள் வெளிவந்திருந்தன. புதினம் இணையத்தளத்திற்காக பல செவ்விகளை மேற்கொண்டிருந்தேன். அவற்றில் குறிப்பாக அனிதா பிரதாப் அவர்களுடனான எனது செவ்வி வன்னியில் பலபிரதிகள் எடுக்கப்பட்டு போராளிகள் மத்தியில் படிக்கக்கொடுக்கப்பட்டதாக அறிந்தேன்.

புலம்பெயர்ந்த பின்னரும் நான் எழுதிய பல கட்டுரைகளுக்கு மிகமுக்கிய காரணம் தாயகத்துடன் தொடர்ச்சியாக கடைப்பிடித்துவந்த தொடர்புகள்தான். நிலப்பரப்புக்களால் பிரிந்திருந்தாலும் எனது ஊடக தொடர்புகள் பல்வேறு மட்டத்திலும் தாயகத்துடன் பிணைந்திருந்தன. அந்த தொடர்புகளின் உச்சத்துக்கு நல்ல உதாரணமாக வித்தியாதரன் அவர்கள் கடத்தப்பட்டிருந்தபோது நான்காம் மாடி விசாரணையாளர்கள் அவரது கைத்தொலைபேசிக்கு அதிகமாக வந்து போன அழைப்புக்களின் அடிப்படையில் என்னையும் தொடர்புகொண்டு விசாரித்தமையை குறிப்பிட்டலாம்.

நீங்கள் கேட்ட அடுத்த கேள்விக்கு வருகிறேன்.

விடுதலைப்புலிகளின் பயணம் நிச்சயம் கணிசமான அளவு வெற்றியைத் தமிழ் மக்களுக்கு பெற்றுத்தரும் என்று நம்பியவர்களில் நானும் ஒருவன். விடுதலைப்புலிகள் அமைப்பு எத்தனையோ தவறுகளின் ஊடாக பயணித்தாலும் அவை எல்லாமே எமது மக்களின் விடிவுக்கான பாதையில் தவிர்க்கமுடியாத விடயங்கள் என்றுதான் நானும் எண்ணியிருந்தேன். அந்த அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட சில முடிவுகள், நடவடிக்கைகள், சம்பவங்கள் என்பவை தவறு என்று புரிந்துகொள்ளமுடியாத அளவுக்கு போரும் போராட்டமும் என்னை மட்டுமல்ல எல்லோரது மனங்களையும் சலவை செய்துவைத்திருந்தது என்பதுதான் உண்மை. அவற்றை மீறி அப்போது சிந்தித்திருந்தால்கூட அந்த தவறுகளை நான் நியாப்படுத்தியே பேசியிருப்பேன். எழுதியிருப்பேன். ஏனெனில், அதுவே அன்றைய காலக்கட்டாயமாக இருந்தது. எமக்கு எதிரான அடக்குமுறைகளையும் ஆக்கிரமிப்புக்களையும் மேற்கொண்ட பேரினவாத அரசுக்கு எதிராக எல்லோரும் எல்லா விதத்திலும் ஒற்றுமையாக செயற்படவேண்டிய நிர்ப்பந்தத்தை உணர்ந்த காலம் அது.

ஆனால், விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு ஈற்றில் இவ்வாறான ஒரு முடிவு ஏற்படும் என்று நான் எப்போதும் எண்ணவில்லை. எவ்வளவோ பின்னடைவுகளை சந்தித்தாலும் ஏதோ ஒரு வெற்றிவெளியை நோக்கி போராட்டம் நகரும் என்ற அசாத்திய நம்பிக்கையுடன் – கடந்த கால உதாரணங்களுக்கு சமாந்தரமாக – சிந்தித்தும் எழுதியும் மக்களுக்கு நம்பிக்கையை கொடுத்தும் ஊடகப்பணியை ஆற்றியிருந்தோம். ஆனால், நினைத்துப்பார்க்க முடியாத முடிவுகள் நெருங்கும்போது தவறுகளை உணர்ந்துகொண்டோம். அப்போது எங்களது வருத்தத்துக்கும் கண்ணீருக்கும் எந்த பெறுமதியும் இருக்கவில்லை.

ஆனால், இதில் கோடிட்டுக்காட்டவேண்டிய மிகமுக்கியமான விடயம், தமிழ்மக்களின் நியாயமான போராட்டத்தை முள்ளிவாய்க்கால் பேரழிவின் மூலம் பாசித்தாள் பரிசோதனை செய்துபார்ப்பவர்களாக பலர் உள்ளனர். உண்மையில், முள்ளிவாய்க்காலில் ஏற்பட்ட அழிவுக்கும் முடிவுக்கும் விடுதலைப்புலிகள் அமைப்பு ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்கு பின்னர் மேற்கொண்ட சில பிழையான முடிவுகளும் காரணமாக இருக்கிறதே தவிர, அதுதான் முழுமுதற் காரணம் என்று கூறிவிடமுடியாது. அதேபோல, அந்த முடிவுகளின் அடிப்படையில் அந்த அமைப்பு பயணம் செய்த போராட்ட பாதையையும் அவர்களின் அர்ப்பணிப்பையும் அந்த அமைப்பின் ஆணிவேராக இருந்த விடுதலைக்கொள்கைiயும் கொச்சைப்படுத்திவிடவும் முடியாது.

முப்பதாண்டு காலமும் விடுதலைப்புலிகளின் முடிவுகளினால் எட்டப்பட்ட வெற்றிகளுக்கு வெடி கொழுத்திவிட்டு, அழிவுக்கு கொண்டுசென்ற புலிகளின் முடிவுக்கு மாத்திரம் அவர்களை குற்றஞ்சாட்டுவது வாதத்திற்குகூட பொருந்தாத ஒன்று. எமது இனம் சந்தித்த அழிவுக்கு பல காரணங்கள் உள்ளன. இன்றும்கூட நாம் சந்தித்துக்கொண்டிருக்கும் படிப்படியான சுத்திகரிப்புக்கு தமிழ் கூட்டமைப்பை குற்றஞ்சாட்டுகிறோம். ஆனால், அது உண்மையில் அவர்களது குற்றமா அல்லது அவர்களது ஆற்றலுக்கு அப்பாற்பட்டு இடம்பெறும் செயற்பாட்டினை தடுக்கமுடியாததால் அவர்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் குற்றச்சாட்டா என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.

அடுத்த கட்டப்போராட்டத்தினை நோக்கிய பாதையில் நாம் கடந்த காலத்தில் விட்ட தவறுகளிலிருந்து கற்றுக்கொள்வது என்பது வேறு அந்த தவறுகளுக்கு காரணமானவர்கள் விடுதலைப்புலிகள் மாத்திரமே என்று குற்றப்பத்திரிகை வாசித்து அதில் சுயலாபம் தேடுவது என்பது வேறு. இந்த இடைவெளிகளின் ஊடாக இன்று தத்தமது அரசியல் நிகழ்ச்சிகளோடு செயற்படுபவர்கள் பலர்.

இந்த போராட்டம் இப்படித்தான் முடியும் என்று ஹேஷ்யம் கூறியவர்கள் உட்பட உலகின் அனைத்து தமிழர்களுக்கும் முகவரியை கொடுத்தவர்கள் விடுதலைப்புலிகள். அந்த அமைப்பினதும் அதிலிருந்து வித்தான மாவீரர்களின் தியாகமும்தான் இன்று தமிழ்மக்களின் அடையாளம். சரி, பிழைகளுக்கு அப்பால் இதுவே என்னைப்பொறுத்தவரை யதார்த்தம்.

ப. தெய்வீகன்.

4, பச்சையாகவே கேட்கின்றேன்;விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறந்து விட்டாரா?அல்லது தமிழகத் தலைவர்கள் சிலர் சொல்வது போல் உயிருடனிருப்பதற்கான வாய்ப்பு இருக்கின்றதா?உங்களுடைய பார்வையில் இதைப்பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?

பேட்டி என்று வந்துவிட்டால், இந்த கேள்வியும் கட்டாயம் இருக்கவேண்டும் என்பது இப்போதைல்லாம் சம்பிரதாயமாகிவிட்ட பிறகு, இதற்கு நான் பதிலளிக்கவேண்டியதும் எனது கடமைதான்.

பிரபாகரன் இறந்துவிட்டார் என்பதற்கு காண்பிக்கப்படும் எந்த ஆதாரங்களிலும் எனக்கு நம்பிக்கை இல்லை. வேண்டுமென்றே முடிந்துவிடப்பட்டிருக்கும் இந்த குழப்பகரமான தகவல்கள் முழுவதிலும் எனக்கு ஆழமான சந்தேகங்களே உண்டு.

ஆனால், போராட்டத்தின் காலஅட்டவணை நீட்சியில் பிரபாகரன் அவர்கள் முள்ளிவாய்க்காலுக்கு பிறகு, தான் உயிரோடு இருக்கவேண்டும் என்று நிச்சயம் நினைத்திருக்கமாட்டார் என்ற அந்த மிகப்பெரும் நம்பிக்கைதான் அவர் இல்லை என்ற உறுதியான முடிவை எனக்குள் ஏற்படுத்தியிருக்கிறது.

தான் கட்டியெழுப்பிய அமைப்பும் தான் நேசித்த போராளிகளும் மக்களும் முள்ளிவாய்க்காலில் வரலாறு காணாத பேரழிவுக்குண்டத்தில் ஆகுதியான பின்னர் தான் மாத்திரம் தப்பிக்கொள்வதற்கு நினைத்திருக்கமாட்டார். அவ்வாறான ஒரு மனிதராக அவர் தன்னை எப்போதும் முன்னிறுத்தாமை என்பது உட்பட பல முக்கியமான போராட்ட பண்புகளின் அடிப்படையில்தான் மக்கள் அவருக்கான அங்கீகாரத்தை வழங்கியிருந்திருந்தார்கள். அதனால் உலகமே அவரை பார்த்து வியந்தது. பயந்தது. அவரும் அதற்கான முழுத்தகுதியுடனும் பயணித்திருந்தார்.

அப்படிப்பட்ட ஒரு தூய போராளி இப்பேற்பட்ட பேரழிவுகளுக்கு பின்னரும் தப்பிச்சென்று எங்கோ ஒழித்திருக்கிறார் என்று கூறுவது அவர் மீது சுமத்தும் அபாண்டான பழியாகவே இருக்கும்.

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார், அவர் தலைமையில் மீண்டும் ஆயுதப்போராட்டம் வெடிக்கும் என்று தமிழகத்திலும் இதர பகுதிகளிலும் அவ்வப்போது கூறித்திரிபவர்கள் எவரும் தமிழர்களின் எதிர்கால அரசியலில் அக்கறைகொண்டவர்கள் அல்லர். அவர்கள் தங்களது இருப்பிலும் அரசியலிலும் கீறு விழுந்துவிடக்கூடாது என்ற அச்சத்தில் புலம்புபவர்கள் மாத்திரமே ஆவர்.

5, நல்லது தெய்வீகன்.அப்படியாயின் சுத்தமாக தாடி மழிக்கப்பட்டிருந்த அந்த உடல் யாருடையது?உடல் பிரபாகரனுடையதுதானா? அல்லது பிரபாகரனை ஒத்த உருவமுள்ள இன்னொரு ஆசாமியினுடையதா?அப்படியும் இல்லையாயின் பிரபாகரனின் இறப்பு நாடகம் யாருடைய அரங்கேற்றம்?

6, (அந்த உடல் பிரபாகரனின் உடல் தான் என நீங்கள் கூறும் பட்சத்தில்) இரண்டாயிரத்தி ஒன்பது, யுத்தம் உக்கிரமாக நடந்து கொண்டிருக்கிறது. தோல்வி, அச்சம், தவிப்பு, ஆற்றாமை, பசி, துயரம், இன்னபிற… என்று, வன்னி மக்களும் சரி விடுதலைப்புலிகளும் சரி அடுத்தது என்னவோ என்கின்றவொரு நிர்க்கதி நிலையில் இருக்கின்றனர். அப்படிப்பட்டவொரு நிலையில் வி.புலிகளின் தலைவர் பிரபாகரன் எப்படிப்பட்டவொரு மனநிலையில் இருந்திருப்பாரென உங்களாலும் சரி என்னாலும் சரி ஒரளவு ஊகித்துக் கொள்ளவே முடிகின்றது. ஆனால் அவ்வாறான ஒரு இடர்பாடான சூழ்நிலையில் தலைவர் பிரபாகரனால் சுத்தமாகத் தாடியை மழிக்க முடிந்தது எப்படி?

சாதனா, பிரபாகரன் அவர்களின் இறப்புப்பற்றி எனது பதிலை முன்னைய கேள்வியில் தெளிவாக வழங்கியிருக்கிறேன். என்னை பொறுத்தவரை அவர் இல்லை. அவரது மரணித்திருப்பார் என்பது அவரது போராட்ட வாழ்வின் அடிப்படையில் நான் நிச்சயமாக நம்பும் விடயம்.

அவரது உடல் என்று காட்டப்பட்டதும் தொடர்ச்சியாக வெளிவந்த முன்னுக்கு பின முரணான பல தகவல்களும் இவ்வளவு காலமும் பலவிதமான சந்தேகங்களை மாத்திரமே வளர்த்துச்சென்றிருக்கின்றன. அப்படியான குழப்பத்தைத்தான் சிறிலங்கா தரப்பினரும் தமிழ் மக்களின் மத்தியில் வளர்த்துக்கொள்வதற்கு விரும்பினார்கள். அதேபோல எமது மக்களும் குழம்பினார்கள். இன்னமும் பலர் குழம்பிப்போய்தான் உள்ளார்கள்.

கடந்த ஏழாண்டு காலத்தில் நாம் தெளிவாக கற்றிருக்கவேண்டிய விடயம், தமிழர்களது விடுலை அல்லது அவர்களுக்கான தீர்வு என்பது இனிமேல் பிரபாகரன் அவர்களது இருப்பு தொடர்பான விவாதங்களையும் சந்தேகங்களையும் தாண்டி முழுவீச்சுடன் முன்னெடுக்கப்படவேண்டும் என்பதாகும். கடைசியான காண்பிக்கப்பட்ட பிரபாகரனின் உடலம் எனப்படுவதின் மீது நாம் தொடர்ச்சியாக பிரதேச பரிசோதனைகளை நடத்திக்கொண்டிருப்பதில் எந்தப்பயனும் இல்லை. தாய்-சேய் உறவுபோல தளிர்த்து வளர்ந்து பருத்த மாபெரும் விடுதலை இயக்கமானது கண்முன்னாலேயே துவம்சமாகிப்போனதையும் அதன் ஒற்றை சக்தியாக இயங்கிய தலைவர் இல்லாமல் போனதையும் எவராலும் ஜீரணிக்கமுடியாதுதான். ஆனால், போராட்டத்தின் நீட்சிக்கு ஒப்பாரிகள் பயன்தருவதில்லை. தாயக மக்கள் இந்த தெளிவுக்கு வந்துவிட்டார்கள். புலம்பெயர்ந்த மக்களில் குறிப்பிட்ட பகுதியினரைவிட மீதிப்பேர் தெளிந்துவிட்டார்கள்.

உங்களது இரண்டு கேள்விகளுக்கும் இதவே பதிலாக அமையும் என்று நம்புகிறேன்.

7,தாமதத்திற்கு மன்னிக்கவும்.முதலில் சரத் பொன்சேகா,பிறகு மைத்திரிபால ஶ்ரீசேனா.இவர்களை வைத்து மேற்குலகம் ஏதோ திட்டம் போடுகின்றது என உங்களின் ஒரு கட்டுரையில் வாசித்திருந்தேன்.மேற்குலகு என நீங்கள் எதையெதைக் குறிப்பிட்டுச் சொல்லுகின்றீர்கள்?அவர்களின் இந்தத் திட்டம் எதுவரையானது?

அமெரிக்காவும் அதன் ஆதரவு சக்திகளுக்கு சாமரம் வீசும் அனைத்து தரப்புக்களும் மேற்குலகம் என்ற வகையறாவுக்குள் அடங்கும். சொல்லப்போனால், ஐக்கிய நாடுகள் சபையைக்கூட இப்போதெல்லாம் இந்த வகைக்குள்தான் அடக்கவேண்டியிருக்கிறது. இலங்கையில் எண்ணை இல்லாவிட்டாலும் இந்து சமுத்திரத்தில் அது அமைந்துள்ள கேந்திரமுக்கியத்துவம் எனப்படுவது பன்னெடுங்காலமாக தெற்காசியாவில் ஆழமாக காலூன்றுவதற்கு திட்டமிடும் தரப்புக்களுக்கு கவர்ச்சிமிக்க தளமாக அமைந்திருக்கிறது. தெற்காசிய பிராந்தியத்தினை தமது ஆளுகைக்குள் வைத்திருக்கவேண்டும் என்பதை நிகழ்ச்சிநிரலாக கொண்டு செயற்படும் எந்த சக்திக்கும் இலங்கை இன்றியமையாத தேவையாக இருந்துவந்திருக்கிறது. இனியும் அந்த நிலைதான் தொடரும். அந்த வகையில், வளச்சியடையும் புதிய வல்லரசானா சீனாவின் அரசியல் – இராஜதந்திர உறவுருவாக்கத்திற்கு இலங்கை பிரதான தேவையானது. இது இந்தியாவுக்கு பெரும் இக்கட்டான சூழ்நிலையை உருவாக்கியது. சீனாவை தனது பிராந்தியத்திலிருந்து சுத்திகரிப்பதற்கு எதையும் செய்யத்தயார் என்ற நிலையில் சிறிலங்கா அரசுடன் உறவுகொண்டாட இந்தியா முயற்சித்தது. ஆனால், இந்தியாவின் இந்த முயற்சியை தனக்கு சார்பாக பயன்படுத்திக்கொண்டு சீனாவுடன் தனது ஏக நெருக்கத்தை வளர்த்துக்கொண்ட மகிந்த, இந்திய – சீன பகைப்புலத்தை பயன்படுத்தி மிகச்சாதுரியமாக புலிகளை அழித்தார்.

அதுவரை, தனது உபதேவை ஒன்று மகிந்தவினால் பூர்த்தி செய்யப்படுவதற்கு காத்துக்கிடந்த இந்தியா, இனியும் மகிந்தவின் கால்களை பிடிப்பதை விடுத்து நேரடியாக இந்த விடயத்தில் அமெரிக்காவின் கால்களிலேயே சரணாகதி அடைந்துவிடுவது என்று முடிவெடுத்தது. இதன்பிரகாரம், மேற்குலகினதும் இந்தியாவினதும் கூட்டுமுயற்சியின் உச்ச விளைவுதான் இன்று இலங்கையில் ஏற்பட்டிருக்கும் ஆட்சிமாற்றம். யுத்தக்களிப்பால் நாட்டுமக்களை போதையேற்றிவிட்டு அவர்களை மயக்கநிலையில்வைத்துக்கொண்டே தனது ஏகபோக ஆட்சியை தொடர்ந்து நடத்தலாம் என்ற திட்டத்துடனிருந்த மகிந்தவுக்கு பதிலடி கொடுப்பதற்கு – அந்த போதைநிலையை குழுப்பாமலேயே மகிந்தவுக்கு எதிரான ஒரு மாபெரும் வெற்றியை அடைவதற்கு – அவர் தரப்பிலிருந்த பொன்சேகாவை உருவி எடுத்து மகிந்தவின் மீது பலம் பார்க்கும் சோதனையை ஆரம்பத்தில் முயற்சித்துப்பார்த்த மேற்குலகம் அதில் படுதோல்வியடைந்தது.

சற்றும் தளராமல், அடுத்து மைத்திரி என்ற அம்பினை எய்து அதில் வெற்றிகண்டுவிட்டது. பொன்சேகாவின் தோல்விக்கு பின்னர் மைத்திரியின் தெரிவுவரை மகிந்த வேறேதாவது உபாயங்களுக்குள் கவனம் செலுத்திவிடாமலிருப்பதற்குத்தான் சிறிலங்கா மீதான போர்க்குற்ற விசாரணை, அனைத்துலக அழுத்தம் போன்ற கருவிகளை மேற்குலகம் தொடர்ந்து பிரயோகித்து வந்தது. இப்போது ஆட்சிமாற்றம் என்ற தனது தேவை தீர்ந்தபின்னர், எல்லாவற்றையும் தணித்துவிட்டு சற்று தள்ளிநின்று வேடிக்கை பார்க்கிறது நீங்கள் கேட்ட மேற்குலகம்.

ஆனால், தாங்கள் ஏற்படுத்திய ஆட்சி மாற்றத்தின் விளைவுகளால் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மேற்குலகம் பெரிதாக திருப்தியடைந்தது போல தெரியவில்லை. மைத்திரி அரசு சரியான பாதையில் பயணித்த தூரத்தைவிட மகிந்த தரப்பினர் தவறான பாதையில் பயணித்த தூரம் அதிகமாக காணப்படுகிறது என்ற யதார்த்தத்தை மேற்குலகம் உணர்ந்திருக்கிறது. ஆகவே, மகிந்தவின் மீளெழுச்சி ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக தற்போது பொன்சேகாவை களமிறக்கி, நாடாளுமன்றம் தொடக்கும் நடைபாதை வரை மகிந்தவுக்கு எதிராக குற்றப்பத்திரிகையை தொடர்ந்து வாசிக்கப்பண்ணி பெரும்பான்மை மக்கள் மத்தியில் மகிந்தவின் பிரபலத்துவத்தை அடியோடு துடைப்பதில் ஓயாது செயற்பட்டுவருகிறது. மகிந்தவை தொடர்ந்து சீண்டிக்கொண்டிருக்கவேண்டும், அவரை ஒரு சரியான திட்டமிடலுடன் செயற்படுவதற்கு அனுமதிக்கக்கூடாது என்ற நோக்கத்துடன்தான் அவர் குடும்பத்தில் அடிக்கடி மேற்கொள்ளப்படும் கைதுகள்கூட அழகாக நெறிப்படுத்தப்படுகின்றன.

இப்போதைக்கு ஒவ்வொரு தரப்பினரும் தத்தமது நலன்களை முன்னிறுத்தி முடிந்தவரை பலாபலன்களை அறுவடைசெய்துகொள்கிறார்கள். இந்த களேபரத்திற்குள் தமிழர் தரப்பின் நிலைதான் மிகப்பரிதாபகரமாக உள்ளது. பெரியவர்களின் சண்டையின்போது சிறுபிள்ளைகளுக்கு ஏதாவது விளையாட்டுப்பொருட்களை கொடுத்து அதில் கவனத்தை திசைதிருப்புவது போல, தமிழர்தரப்புக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியை வழங்கியுள்ள இந்த அரசியல் சூதாட்டத்தில் தற்போதையநிலை இன்னமும் தொடருமானால், தமிழர்தரப்பின் அரசியல்பிரதிநிதித்துவம் ஜோக்கராக மாறும்நிலைதான் உருவாகும். கிங் மேக்கர்களாக மக்களால் உருவாக்கிவிடப்பட்டவர்கள் ஜோக்கர்களாக மாறிநிறகும் அந்தநிலையை மக்கள் மன்னித்தாலும் வரலாறு மன்னிக்காது.

மறுபடியும் மகிந்த சகோதரர்கள் ஆட்சியமைத்துவிடுவார்களோ என்கின்ற பயம் மேற்குலகிற்கு இருக்குமானால் ஒருகட்டத்தில் அவர்களைப் பிடித்து தூக்கிலிடக்கூடிய நிலை இருக்கின்றதா?

சிறிலங்காவை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்காக இந்தியாவுக்கு ஒரு காலத்தில் தமிழ் ஆயுதக்குழுக்கள் எவ்வாறு தேவையாக இருந்தார்களோ அதுபோல, மேற்குலகுக்கு தற்போது மகிந்த சகோதரர்கள் தேவைப்படுகிறார்கள். இவர்களை அவ்வளவு இலகுவாக உள்ளே தூக்கிப்போடுவதன் மூலம் இவர்களுக்கு இருக்கும் பெறுமதியை குறைத்துவிடுவதற்கு மேற்குலகம் ஒருபோதும் முயற்சிக்காது.

மறுபுறத்தில், என்னதான் ஆட்சி மாறினாலும் புலிகளை அழித்தொழித்தவர்கள் என்ற பெருமை இன்னமும் மகிந்த சகோதரர்களுக்கு மட்டுமே உண்டு என்ற தென்னிலங்கை மக்களின் மனோநிலையை மேற்குலகம்; நன்றாகவே அறியும். ஆகவே, மகிந்த சகோதரர்கள் சிறிலங்காவின் மிகப்பெரிய வில்லன்கள் என்று தென்னிலங்கை மக்களே நம்பும்வரைக்கும் இந்த விளையாட்டு தொடரும். இது மகிந்த சகோதரர்களுக்கும் நன்கு புரிகிறது. அண்மையில் மகிந்த வெளிப்படையாகவே தன்னை கவிழ்த்தது மேற்குலகம்தான் என்று குமுறியிருந்தார்.

ஆக மொத்தம், மேற்குலகத்தின் சரியான கடிவாள நாணில் மகிந்த சகோதரர்கள் வகையாக மாட்டியிருக்கிறார்கள். தனது தேவை நாளையே அதிகமானால், நீங்கள் குறிப்பிட்டது போல இவர்களை போர்க்குற்ற விசாரணைக்குக்கூட உட்படுத்தி உள்ளே தூக்கிப்போடுவதற்கு மேற்குலகம் தயங்காது. எல்லோரும் சேர்ந்து முடித்த போருக்கு மகிந்தவே ஒற்றைப்பொறுப்பு என்றும் அதில் இடம்பெற்ற குற்றங்களுக்கும்கூட அவர்தான் பொறுப்பு என்று உலகுக்கு அறிவித்துவிட்டு எல்லா வசனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கக்கூடும். அவை எல்லாம் மேற்குலகமும் இந்தியாவும்கூட தன்நேசப்பின்னணியுடன் மேற்கொள்ளும் நடவடிக்கைகளாக இருக்குமே தவிர தமிழ் மக்களுக்கு நீதி வழங்கவேண்டும் என்ற நோக்கத்துடன் நிறைவேற்றப்பட்டதாக இருக்காது.

8, எதிர்காலத்தில் தமிழர்களின் வாழ்வு எவ்வாறான ஒரு அரசியலுக்குள் இருக்குமென நீங்கள் உணர்கின்றீர்கள்?

தமிழர் அரசியல் எனப்படுவது மிகச்சிக்கலான புள்ளியில் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்தும் சிக்கலான பாதையிலேயே பயணப்பட்டிருக்கும் ஒரு விவகாரம் ஆகும். முன்னைய அரசியல் தலைவர்களால் ஈழப்பிரச்சினை எனப்படுவது இனப்பிரச்சினையாக வெளிக்காட்டப்பட்ட புள்ளியிலேயே எமது போராட்டம் இன்னொரு இனத்துக்கு எதிரானது என்ற பிழையான கருத்துருவாக்கமாக வெளிக்காட்டப்பட்டுவிட்டது. இனவாத அரசுக்கு எதிரான நியாயமான போராட்டத்தை சிங்கள இன மக்களுக்கும் எதிராக கோஷப்படுத்தியதுதான் எமது அரசியல் போராட்டத்தின் ஆரம்பச்சிக்கல். பின்னர் வந்த விடுதலைப்புலிகளின் தொடர்ச்சியான போராட்ட நியாயப்பாடுகளும் சிங்கள மக்களை நோக்கி நேசக்கரம் நீட்ட மேற்கொண்ட முயற்சிகளும் எந்த விதத்திலும் பயனளிக்கவில்லை. ஆயுத வழியிலான போராட்டத்தின் மீது சுமத்தப்பட்ட வன்மமாக குற்றச்சாட்டுகளும் சிங்கள தேசத்தில் சமாந்தரமாக மேற்கொள்ளப்பட்ட இனவாத பிரச்சாரங்களும் இரு இனங்களுக்கிடையில் நிரந்தர பிரிவுகளையும் பிளவுகளையும் ஏற்படுத்திவிட்டது.

தற்போது சிங்கள மக்களுடன் என்ன, முஸ்லிம் மக்களுடன்கூட ஆழமான அரசியல் காயங்களை அடைந்துள்ள தமிழினம், மிகப்பெரிய நல்லிணக்க நடவடிக்கைகளை ஆழ – அகல மேற்கொள்ளவேண்டிய நிலையில் உள்ளது. உணர்வுவயப்பட்ட நிலையில் விடயங்களை அணுகாமல், யதார்த்தபூர்வமாக பயணப்படவேண்டிய காலகட்டத்தில் தமிழினத்திடம் பொறுப்புக்கள் குவிந்துள்ளன.

மறுபுறத்தில், தமிழர்களின் அரசியல் என்பது எதிர்காலத்தில் எவ்வாறு பயணப்படவேண்டும் என்பதும் இலங்கையை தாண்டி வெளியே தீர்மானிக்கப்படவேண்டிய விடயமாகிவிட்டது. உதாரணத்துக்கு இன்று சிறிலங்கா அரசே விரும்பினால்கூட தமிழ்மக்களுக்கு தமிழீழத்தை கொடுக்கமுடியாத நிலையில் ஈழத்தமிழர் பிரச்சினை சர்வதேசமயப்படுத்தப்பட்டுவிட்டது. இந்த பிரச்சினையில் கைநனைத்தவர்கள் எல்லோரது நலன்களின் அடிப்படையிலும்தான் ஒரு தீர்வை பெற்றுக்கொள்ளவேண்டிய நிலையில் தமிழ்மக்கள் உள்ளார்கள். எமக்கான பேரம்பேசும் சக்தி அனைத்தும் உருவியெடுக்கப்பட்ட நிலையில், அநாதரவாக நிற்கும் இன்றைய நிலையில் அடுத்தவன் தீர்ப்பைத்தான் நமக்கான தலைவிதியாக ஏற்றுக்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

இதனை எவ்வாறு மாற்றியமைப்பது? விடுதலைப்புலிகள் என்ற பெரும் சக்தியினால் கவசப்பட்டிருந்தது போன்ற பின்புலத்தை தமிழ்மக்கள் மீண்டும் எவ்வாறு பெறுவது? என்ற தூரநோக்க இலக்குடைய பயணங்களின் காத்திரத்தன்மைகள்தான் எதிர்காலத்தில் தமிழர்களின் அரசியலை தீர்மானிக்கப்போகின்றன. இதனை மாற்றியமைக்கக்கூடிய பெரும்திறன் புலம்பெயர்ந்தவர்களிடம்தான் உண்டு. ஆனால், அது நிச்சயம் தற்போது பயணிக்கும் பாதையில் மருந்துக்கும் கிடைக்கப்போவதில்லை. இதனை புலம்பெயர்ந்த சக்தி என்று உணர்கிறதோ அன்று எம்மக்களுக்கு அது அருமருந்தாகும்.

அதேவேளை, முன்புபோல அரசியல் எனப்படுவது ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்கான ஆயுளை கொண்டிருப்பதில்லை. ஓரிரு நாட்களிலும் ஓரிரு வாரங்களிலும்கூட தடாலடி மாற்றங்களுடன் தலைகீழ் மாற்றங்களை கொண்டுவருபவையாக உள்ளது. போர்முடிந்து ஏழாண்டு காலப்பகுதியில் சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் ஏற்படுத்தியுள்ள அதிர்வுகளை உற்றுநோக்கினால் இதன் தாற்பரியம் புரியும். அதற்காக, இந்த அதிஷ்டங்கள் எப்போதும் எமக்கானவை என்று எதிர்பார்த்து காத்திருப்பதும் தவறு.

9, ஆக்காட்டியென்றில்லாமல் தனிப்பட்ட சாதனா என்கிற முறையில் சொல்லுகின்றேன். விடுதலைப்புலிகள் இருந்த காலத்திலும் சரி, அவர்களில்லாத இந்தக் காலத்திலும் சரி நானொரு தீவிரமான விடுதலைப் புலி ஆதரவாளனே. தலைவரை அதிகப்படியாக நேசித்தவர்களில் நானுமொருவன். ஆனால் அவர்களின் ஜனநாயக மீறல்களை மாத்திரம் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாமலிருக்கின்றது. நீங்கள் கூட ஒருதடவை உங்கள் கட்டுரையொன்றில் விடுதலைப் புலிகளை நியாயப்படுத்துவேன் என்று கூறியிருந்தீர்கள்.அப்படியானின் அவர்களின் ஜனநாயக மீறல்கள் பற்றி உங்களுக்கு அக்கறையில்லையா?

இந்த விடயத்தில் எனக்கு விசாலமான தெளிவு இருக்கிறது. ஆகவே, இதற்கு பதிலளிப்பதில் எனக்கு எந்த சபலமும் இருக்கப்போவதில்i.

விடுதலைப்புலிகளின் போராட்ட பாதையின்போது பல்வேறு மனித உரிமைகள் இடம்பெற்றது உண்மையே. ஆனால், அந்த மனித உரிமைகளை நிகழ்த்துவதும் அந்த வலிகளை கொள்கைகளாக சுமந்ததாகவும் அவர்கள் இலக்கை வரிந்துகொள்ளவில்லை. இலட்சியத்தை நோக்கிய முழுவீச்சான பயணத்தின்போது நீங்கள் கூறுவதைப்போல பல அகோரங்கள் இடம்பெற்றன. அவை தவறுதான். அதில் இரண்டாம் கேள்விக்கே இடமிருக்க முடியாது. எந்த ஆயுதப்போராட்டமும் மனித உரிமை மீறல்கள் இல்லாமல் நடைபெற்றதில்லை. ஒரு உண்ணாநிலை போராட்டத்தையே முழுமையான பாதுகாப்புடன்தான் நடத்தவேண்டியிருக்கும் இன்றைய உலகில், ஒரு ஆயுதப்போராட்டத்தை மனித உரிமை மீறல் இல்லாமலும் உயிரனம் எதற்கும் கீறல் இல்லாமலும் நடத்துவது என்பது சாத்தியமற்றதே ஆகும். ஆனால், நான் முதலில் குறிப்பிட்டது போல, அந்த போராட்டத்தின் நோக்கம் என்ன? எந்த இலக்கை நோக்கிய பாதையில் இடம்பெற்றது என்பதே இங்கு தெளிவேற்படுத்துவதற்கான ஆதார வினாவாக இருக்கமுடியும்.

அத்துடன், அப்போதைய சூழ்நிலையில் இந்த மீறல்களையெல்லாம் மீறி விடுதலைப்புலிகளை ஆதரிப்பதுகூட சமானியர்கள் செய்யவேண்டிய காலம் கருதிய தேவையாக இருந்தது. தெய்வ சித்தி வேண்டி எல்லோரும் சேர்ந்து இழுத்த தேரின் சில்லுக்குள் அப்பாவி பக்தன் அகப்பட்டுக்கொண்டால் யார் குற்றம்? தேரின் குற்றமா? தெய்வத்தின் குற்றமா? முதலில் அது குற்றமென்ற வகையறைக்குள் வருமா?

மனித உரிமை மீறல்களை கொள்கையாக கொண்டு இயங்கும் இன்றைய பயங்கரவாதம் கார் குண்டுவெடிப்புக்களாகவும் தற்கொலை தாக்குதல்களாகவும் அப்பாவிகளை நோக்கிய முழுமையான இரத்தக்காட்டேரியாக அலைந்து திரியும் உலகில் விடுதலைப்புலிகள் அமைப்பை சமாந்தரமாக நிலைநிறுத்தி எடைக்கு எடை போட்டு பார்த்தால், உலகின் விடை காணமுடியாத கேள்விகளுக்கும் வரைவிலக்கணங்களுக்கு உட்படுத்த முடியாத பல சொற்களுக்கும் அர்த்தங்களை சேகரிக்கலாம்.

தொடரும்…!

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Scroll to Top