ஒருதடவை எங்கள் ஊரில் இருந்த நெல்லி என்கிற பையனுக்கு பிசாசு பிடித்துவிட்டது. ஊரிலிருந்த பெருசுகள் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தும் நெல்லியைப் பிடித்திருந்த பிசாசை விரட்ட முடியவில்லை. போகமாட்டேன் என்று அங்கேயே இருந்துவிட்டது. கடைசியில் ஊர்ப் பெருசுகளெல்லாம் ஒன்று கூடி நெல்லியை அவிங்கு தன்யாவிடம் கூட்டிப்போனார்கள். அவிங்கு தன்யா என்பது, எங்கள் கிராமத்திலிருந்து விலகி கொஞ்ச தூரத்தில் தனியாக வாழ்ந்துவரும் ஒரு சூன்யக்காரியின் பெயர். அவள் கழுத்தில் ஒரு பெரிய யானையின் மண்டையோட்டுத் தலை எப்போதும் தொங்கிக்கொண்டிருக்கும். நெற்றியிலும் கன்னங்களிலும் காயத்தின் வடுக்கள் போல் கோடுகள் அமைந்திருக்கும். அது அவள் முகத்தை இன்னும் விகாரமாய்க் காட்டியது. மார்புகள் வறண்ட பாலைவனம் போல் சூம்பிக் கிடக்கும். மேலே தூக்கி விட்டால் ரப்பரைப் போல் கீழே விழும். ‘Y’ வடிவத்தில் அமைந்திருக்கும் தடியொன்றை எப்போதும் வைத்திருப்பாள்.
தன்னையே முறைத்துப் பார்த்துக்கொண்டு குந்தியிருந்த நெல்லியைத் தன் பச்சைக் கண்களால் ஊடுருவியவாறே உதடுகள் இரண்டையும் ‘O’ வடிவில் குவித்து வைத்துக்கொண்டு குய் குய் என்று விநோதமாய் சத்தம் எழுப்பினாள் அவிங்கு தன்யா. அடிக்கொரு தடவை தர்கோ மிளனாறியோ இலைகளை நெல்லி மீது விசிறிக்கொண்டே இருந்தாள். அதுவரை அமைதியாய் இருந்த நெல்லி திடீரென்று அண்ணாந்து பார்த்து, தலையைச் சுழற்றியவாறே பெரும் குரலெடுத்து அலறத் தொடங்கினான். அவன் அலறுவதையே கொஞ்சநேரம் பார்த்துக்கொண்டிருந்த அவிங்கு தன்யா கோழியொன்றை கொண்டுவரச் சொன்னாள். நல்ல பெருத்த பெட்டைக் கோழியொன்று அவளின் முன்னே குந்த வைக்கப்பட்டது. தன் இருக்கையை விட்டு மெல்ல எழுந்துவந்த அவிங்கு தன்யா இரண்டு கைகளையும் நீட்டி கோழியை பத்திரமாய்த் தூக்கினாள். ஒரு குழந்தையைத் தடவுவது போல் அதன் மேனியைத் தடவிக் கொடுத்தாள். கோழி கொஞ்சம் கொக்கரித்தது. பிறகு ஈனமாய் குரல் எழுப்பிக்கொண்டு துடித்தது. செத்துப் போய் விடுமோ என்று ஊர் பெருசுகளெல்லாம் சந்தேகமாய் கிசுகிசுத்துக்கொண்டிருக்க கோழி முட்டை ஒன்றை இட்டது. அதை அப்படியே நெல்லிக்குக் குடிக்கக் கொடுத்த அவிங்கு தன்யா மிச்சத்தை நெல்லி குந்தியிருந்த இடத்தைச் சுற்றித் தெளித்தாள்.
அவ்வளவுதான். நெல்லியைப் பிடித்திருந்த பிசாசு ஓடிப் போய்விட்டதாம். அன்றிலிருந்து எங்கள் கிராமத்திற்கு அந்த சூன்யக்காரியின் பெயரையே பெயராக வைத்துவிட்டார்கள். கதை உண்மையா பொய்யா என்பது பற்றித் தெரியவில்லை. அது பற்றி ஆராயவும் நான் விரும்பவில்லை. இது நடந்து எப்படியும் அறுநூறு வருடங்களுக்கு மேலிருக்கும். இன்றும் அவிங்கு தன்யா அங்குதான் வாழ்ந்து வருகின்றாளாம். நான் பார்த்ததில்லை; என் நண்பர்கள் சிலர் அவளைப் பார்த்ததாக என்னிடம் சொல்லியிருக்கிறார்கள்.
என் தாத்தா, அதாவது என் அப்பாவின் அப்பா, இறக்கும்பொழுது அவருக்கு வயது எண்பத்தியாறு. அவர் எப்படி இறந்தார் என்பதைப் பற்றி சொல்வதற்கு முன்னால் அவரைப் பற்றிக் கொஞ்சம் சொல்லிவிடுகிறேன். என் தாத்தாதான் எங்கள் ஊரின் அரசன் என்று கூட சொல்லலாம். ஊரில் அவருக்குப் பயப்படாத ஒருவரும் கிடையாது. என்னை விட இரண்டு மடங்கு உயரமானவர்; நெடிய வளர்ந்து வயதாகிப்போன மெல்லிய பனைமரம் போல் இருக்கும் அவர் உடல். இறுகிப்போன அவர் முகத்தில் எப்பொழுதும் ஒருவித பழுப்புநிற சாம்பல் அப்பிப்போய் கிடக்கும். அது இயற்கையானதா அல்லது செயற்கையானதா என்று கேட்டபோது அதைத் தெரிந்து என்ன செய்யப்போகின்றாய் என்கின்ற கேள்வியே பதிலாக வந்தது. அதன் பிறகு நானும் கேட்கவில்லை; அவரும் சொல்லவில்லை.
என் பாட்டி, தாத்தாவுக்கு பதினேழாவது மனைவி. என் அப்பா அவர்களுக்கு இருபத்தியாறாவது பிள்ளை. நான் அவர்களுக்கு நாற்பத்து எட்டாவது பேரன். அத்தோடு பதினோரு கொள்ளுப்பேரர்களும் இருக்கிறார்கள். கிட்டத்தட்ட என் தாத்தா பழைய இதிகாச கதைகளில் வருகின்ற மன்னர் போன்றவர். எங்கள் ஊரில் அவர் வைத்ததுதான் சட்டம். மீறியவர்கள் கொல்லப்படுவார்கள். யாரும் எங்கள் தாத்தாவோடு மோதமுடியாது.
ஆனால் சமீப நாட்களாக எங்கள் தாத்தாவுக்கும், மிக்கு பாண்டே என்பவனுக்கும் மோதல். மிக்கு பாண்டே ஆர்ஷிய இனத்தை சேர்ந்தவன். பொதுவாகவே அவர்களுக்கும் எங்களுக்கும் ஆகாது. அது பிரச்சினை இல்லை. ஆனால் அவன் மகள் வாசியா, எங்கள் இனத்தைச் சேர்ந்த மியாங்கு என்பவனைக் காதலித்துவிட்டாள். அவர்களுக்கு எங்கள் தாத்தாதான் அடைக்கலம் கொடுத்திருக்கிறார். திருமணமும் செய்து வைப்பதாக சத்தியம் செய்திருந்தார். இதுதான் பிரச்சினை. ஏற்கனவே அவர்கள் இனத்துக்கும், எங்கள் இனத்துக்கும் ஆகாது. எதற்கெடுத்தாலும் முட்டிக்கொண்டு நிற்போம். இப்படித்தான் ஒருதடவை அவர்கள் இனத்தைச் சேர்ந்த ஹாண்டு என்பவன் எங்கள் இனத்தை சேர்ந்த கூயாவை காதலித்துவிட்டான் என்பதற்காக அவனைக் கொதிக்கும் பாலைவன வெய்யிலில் நிர்வாணமாய்ப் படுக்கவைத்து மூத்திரம் பெய்தார்கள். மலம் கழித்தார்கள். கடைசியில் புழுக்களும், பாம்புகளும் அவன் உடலை மேய ஹாண்டு சீக்கிரமே செத்துப் போனான். அதிலிருந்து அவர்களுக்கும் எங்களுக்கும் ஒத்துவராது. இப்போது மறுபடியும் ஒரு காதல் விவகாரம். மிக்கு பாண்டே கத்தியை தீட்டிக்கொண்டு இருக்கிறான். எப்போது கொலை விழும் என்று சொல்லமுடியாது.
அப்படியிருந்த ஒருசமயத்தில்தான் ஆர்ஷிய இனத்துக்கும் எங்கள் இனத்துக்கும் சண்டை ஆரம்பமாகியது. சகட்டு மேனிக்கு ஒருவரை ஒருவர் திட்ட ஆரம்பித்துவிட்டோம். வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியது. எங்கள்மீதும் தவறில்லை என்று சொல்லமுடியாது. தவறின் தொடக்கமே எங்கள் மீதுதான். நியாயமாகப் பேசிக்கொண்டிருந்த ஆர்ஷிய இனத்தவன் ஒருவனின் மண்டையைக் குறிபார்த்து எறிந்ததே நாங்கள் தான். அதன் பிறகுதான் சண்டையே ஆரம்பமாகியது. கட்டிப்பிடித்து புரண்டார்கள். கற்களாலும்,பொல்லுகளாலும் மாறி மாறி அடித்துக்கொண்டார்கள். கடைசியில் வெற்றி ஆர்ஷிய இனத்தின் பக்கமே போனது. எங்கள்பக்கம் இழப்புகள் அதிகம். வாசியாவைத் தங்களிடம் ஒப்படைக்கும்படி மிக்கு பாண்டே கூறினான். தாத்தா மறுத்துவிட்டார். அந்தச் சமயத்தில் தான் அது நடந்தது. மிக்கு பாண்டேவினால் விசுரப்பட்ட கத்தி எங்கே தாத்தாவின் தோளைக் குறிபார்த்துவிடுமோ என்ற பயத்தில் என் சகோதரன் ஒருவன் தாத்தாவின் மீது பாய, முதல் குத்து சகோதரனுக்கும்,இரண்டாவது குத்து தாத்தாவுக்கும் விழுந்தது. சுட்டெரிக்கும் அந்த மத்தியான வெய்யிலில் இருவரது உடம்புகளும் காய்ந்துகொண்டிருந்தன.
2.
இந்த நேரத்தில் இக்கதையின் கதைசொல்லியும் கதையில் சேர்ந்துகொள்கின்றான். மேற்கண்ட கதையினை இவன் எழுதிக்கொண்டிருந்தபோது தன்னுடைய வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தோடு ஒத்துப்போகின்றதே என்று ரொம்பவும் குழம்பி என்ன செய்வதென்று தெரியாமல் இறுதியில் இந்தக்கதையோடு தானும் பயணிப்பதாகத் தீர்மானித்தான். வயது இருபத்தியெட்டு. தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து பாரிசில் வாழ்ந்து வருகின்றான். இவனுக்கு ஒரு பெரும் பிரச்சனை இருக்கின்றது. எப்போதோ, எங்கேயோ நடந்த விசயங்கள் எல்லாம் இவன் மண்டைக்குள் புகுந்து இரைச்சல் கொடுக்கும். பெரும்பாலும் மற்றவர்களின் கருத்துக்களோடு ஒத்துப்போகமாட்டான். ஒருதடவை இவனுக்கும் இவனின் பக்கத்து அறைக்காரனுக்கும் – தர்க்கம் வருவதற்கு முன்னர் இருவரும் ஒரே கோப்பையில் மது உறிஞ்சும் அளவுக்கு நண்பர்கள் – பலத்த வாய்த்தர்க்கம். இவன் பொதுவாக கெட்டவார்த்தை பேசுபவன் அல்ல என்றாலும் அன்று முழுக்க அதையே சொல்லி அவனைத் திட்டிக்கொண்டிருந்தான். கட்டிடமே இவனா இப்படியெல்லாம் கத்துகிறான் என்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. கடைசியில் எதிராளி இவனைஅடிக்கும் அளவுக்குப் போய்விட சற்று பயம்பிடித்து அடங்கிப்போனான். இருந்தாலும் அன்றைய நாள் முழுக்க கோபத்தோடே இருந்தான். ”தேவடியா பயல், எனக்கு மட்டும் அவனை அடிக்கும் அளவிற்கு தைரியம் இருந்ததென்றால் அவன் முகரையை பெயர்த்திருப்பேன்” என்று இரவு முழுவதும் தூக்கம் இல்லாமல் அரற்றிக்கொண்டே இருந்தான்.
இவன் வேலைசெய்யும் அந்த இத்தாலியன் உணவகத்தில் மாலை மூன்று மணிக்கு வேலைசெய்வோர் எல்லோருக்கும் மதிய உணவு வழங்கப்படும். எல்லோருமே ஒன்றாக அமர்ந்துதான் உணவருந்துவார்கள். மருது என்பவனுக்கு நாற்பது வயது. இவன் வேலைசெய்யும் அந்தக் கடையில் இரண்டு வருடங்களுக்கு முதல் வேலைக்கு சேர்ந்தவன். முதலாளியும் மருது பழைய ஆள் என்பதால் அவன் சொல்வதைத்தான் பெரும்பாலான நேரங்களில் கேட்டுக் கொண்டிருப்பார். அதனால்தான் என்னவோ தனக்குப் பிறகு வேலைக்கு வருபவர்கள் எல்லோரையும் அவன் அதிகாரம் பண்ணிக்கொண்டிருந்தான். அவன் அதிகாரம் பண்ணுவது இவனுக்குப் பிடிக்காது. தங்களை அதிகாரம் செய்வதற்கு அவனுக்கு என்ன உரிமை இருக்கிறதென்றும், எப்படி அவனைப் போன்றவர்களால் மற்றவர்களின் உரிமைகளில் சாவதானமாகத் தலையிட முடிகிறதென்றும் இயந்திரத்தில் கோப்பைகளை அடுக்கும்போதும், தொடரூந்தில் பயணம் செய்யும்போது படிப்பதற்கு ஏதுமில்லாமல் வெறுமனே விட்டத்ததைப் பார்த்துக்கொண்டிருக்கும் போதும் யோசித்துப் பார்ப்பான். அவனைப் போன்றவர்கள் ஒன்றரை லட்சம் அல்ல, ஒன்றரைக் கோடி மக்கள் இறந்து போனாலும் திருந்தவே மாட்டார்கள் என்பது இவனுடைய கணிப்பு.
அன்றும் அப்படித்தான். இவன் சாப்பிடுவதற்கு முதல் கொஞ்சம் வைன் அருந்தினான். வேலைமுடிந்து தொடரூந்தில் பயணம் செய்தபோதுதான், மருது இவனிடம் எனக்கு வைன் அருந்துவது பிடிக்காது என்றும், அப்படியே அருந்துவதாக இருந்தால் நான் இல்லாதபோது அருந்தும், எனக்கு முன்னால் அருந்தாதீர் என்றும் கூறினான். இவன் முஷ்டியை மடக்கி மருதுவின் முகத்தில் குத்தப்போனான். இருந்தாலும், தான் கஷ்டப்பட்டு தேடிய வேலை போய்விடும் என்பதாலும், குடியுரிமை கிடைக்கும்வரை இந்த மாதிரியான காரியங்களில் ஈடுபடக்கூடாது என்று தீர்மானம் எடுத்துக் கொண்டிருக்கின்றபடியாலும் வந்த கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டு சும்மா இருந்துவிட்டான். முதாலாளியே வைன் அருந்துகின்றாயா என்று என்னிடம் கேட்கும்போது, இவன் யார் என்னைக் குடிக்கவேண்டாம் என்று சொல்லுவதற்கு. வேசி மவன்.
அதேமாதிரி இவனுக்குப் பெண்கள் என்றாலும் கொஞ்சம் அலர்ஜி. அவர்களின் பின்புத்தித்தனம். தங்களைப் பெரிய அறிவுஜீவிகளாக நினைத்துக்கொண்டு கடைசியில் எல்லாவற்றையும் கோட்டை விட்டுவிடுவார்கள் என்பது இவன் கருத்து. அவர்களை நம்பி பொறுப்பு கொடுப்பவர்களின் முகத்தில் மலம் கழிக்கவேண்டும் என்றும் தன் நண்பர்களுடன் அளாவுவதுண்டு. இப்படித்தான் ஒருதடவை. முன்னொரு காலத்தில் இவன் தொலைபேசி அட்டைகள் விற்கும் கடையொன்றில் வேலைபார்த்து வந்தான். முதலாளி ஒருபெண். ஆரம்பத்திலேயே இவனுக்கு அவளைக் கண்டால் ஆகாது. எதற்கெடுத்தாலும் நொட்டை சொல்லிக்கொண்டே இருப்பாள். காலில் கொதிநீரை ஊற்றிக் கொண்டவள் போல் ஊளையிட்டுக் கொண்டே திரிவாள். அன்றும் அப்படித்தான் தொலைபேசி அட்டைகளை வாங்குவதற்காக ஆப்பிரிக்கர் ஒருவர் கடைக்குள் நுழைந்தார். வந்தவர் நேராக இவனிடம் வந்து நீங்கள் உங்கள் கடையில் தொலைபேசிகளை லாக் உடைப்பீர்களா என்று கேட்க இல்லை நாங்கள் லாக் உடைப்பதில்லை என்றிருக்கின்றான். அதற்கு அவள் இங்கே இருக்கும் தொலைபேசிகள் எல்லாமே லாக் உடைக்கப்பட்டவைகள்தான் என்று கத்தத் தொடங்கிவிட்டாள். இவனுக்கு வந்ததே கோபம். குண்டியில் ஆரம்பித்து பெண்குறியின் அநாகரிக வார்த்தை வரை வசைச் சொற்களை பாவித்து அவளைத் திட்டிவிட்டு கடையைவிட்டு வெளியேறினவன் தான், அதன் பிறகு அந்தக் கடைப்பக்கமே போனதில்லை.
“பெண்கள் அடுப்பறைப் பக்கமே” என்று தினமலரில் கட்டுரை ஒன்றும் எழுதியிருக்கின்றான். குவிந்திருந்த விமர்சனங்களைப் பார்த்து வாயடைத்துப் போய்விட்டான். ஒருபெண் நீயெல்லாம் ஒரு தாய்க்குத்தான் பிறந்தாயா என்கின்ற அர்த்தத்தில் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தாள். இவன் அவளுக்கு “சமைத்து முடித்துவிட்டாயா,அப்படியெனில் ராத்திரி ஆனவுடன் கட்டிலில் ஏறி முந்தானையை விரி. நீயெல்லாம் அதற்குத்தான் லாயக்கு” என்று அவசரமே இல்லாமல் கடிதம் எழுதி அனுப்பினான்.
பதிலுக்கு அவள் “நீ மனுசனே அல்ல” என்று ஒற்றைவரியில் கடிதம் அனுப்பினாள். இன்னொரு பெண் – பெரிய பெண்ணியவாதி. மூன்று வருடங்களுக்கு முதல் விவாகரத்து பெற்று தனியே வாழ்ந்து வருகின்றாள். புதிய தலைமுறையில் ஆணாத்திக்கம் பற்றி முழங்கியிருக்கின்றாள். உயிர்மையில் சமகாலத்தில் பெண்கள் என்கின்ற பெயரில் பத்தி எழுதியிருக்கின்றாள். – “உன் முகவரியைக் கொடு; வீட்டுக்கு வந்து உதைக்கிறேன்”என்றாள். இவன் அசரவில்லை. தெளிவான கொட்டை எழுத்தில் தன் வீட்டு முகவரியை எழுதி அனுப்பினான். கூடவே டில்டோ ஒன்றையும் சேர்த்து அனுப்பினான். அதன் பிறகு அந்தப் பெண்ணியவாதியிடமிருந்து பதிலே இல்லை.
அன்றிலிருந்து இவன் அவ்வளவாக மற்றவர்களுடன் பழகுவதில்லை. அதுவும் தமிழர்கள் என்றால் – தனக்குப் பிடித்தமானவர்களைத் தவிர – அறவே அளாவுவதில்லை. யாராவது ஒரு தமிழர் நீங்கள் இலங்கையிலிருந்தா வருகின்றீர்கள் என்றால் இல்லை நான் செவ்வாய்க் கிரகத்திலிருந்து வருகின்றேன் என்று முகத்தைத் திருப்பிக்கொண்டு பதில் சொல்வான். அதற்காகவே இவனை இவன் ஒரு மன நோயாளி என்று மற்றவர்கள் பழிப்பதும் உண்டு.
இதனால் இவனை யாரும் வக்கிரபுத்தி கொண்டவன் என்று நினைத்து விட வேண்டாம். அடிப்படையில் அவன் நேர்மையானவன். இரக்க சுபாவம் கொண்டவன். முள்ளிவாய்க்காலில் கொத்துக்கொத்தாக தன்னுடைய இனம் செத்துமடிந்தபொழுது தானும் தற்கொலை செய்து செத்துப் போகலாமா என்று கண்ணீர் விட்டு அழுதிருக்கின்றான். நண்பர்கள் கேட்கும்பொழுது தனக்கு சாப்பிட வழியில்லை என்றாலும் அவர்களுக்குக் கொடுத்து உதவியிருக்கின்றான். தான் குடியிருந்த ஒரு அறையை குடும்பம் ஒன்றுக்குக் கொடுத்துவிட்டுத் தரையடி நிலையங்களில் படுத்துறங்கியிருக்கின்றான். தனியே…சவரம் செய்து குளித்து முழுகி இருப்பதுதான் ஒழுக்கமென்றால், இவனுக்கும் ஒழுக்கத்துக்கும் சம்பந்தமே இல்லை. கிழமைக்கு இரண்டு நாட்கள், மூன்று நாட்கள் குளித்தான் என்றாலே பெரிய விஷயம். தஸ்தயேவ்ஸ்கி மாதக்கணக்காக குளித்ததே இல்லை. அவரிடமிருந்து மலையாடு வாசணை வந்துகொண்டிருக்கின்றது என்று அவரை நேரில் சந்தித்தவர்கள் சொல்வதுண்டு. ஆனால் அவரின் படைப்புகள் ஒவ்வொன்றும் உலகத்தரமானவை. அவரைப் போன்றவன் தான் இவனும். ஒருதடவை தன் பெயரை தஸ்தயேவ்ஸ்கி என்று மாற்றுவதற்காகப் பெயர்மாற்று அலுவலகம் வரை நடையாய் நடந்திருக்கின்றான். கடைசியில், சலித்துப் போய் விட்டுவிட்டான். தன்னுடைய கதைகளில் வரும் கதாபாத்திரங்களின் பெயரை அவருடைய சிறுகதைகளிருந்தும், நாவல்களிருந்துமே எடுக்கின்றான். ஆனால் இந்த சமுதாயம் அவனை வக்கிர புத்தி கொண்டவனாக மாற்றிவிட்டது. கோவில்களையும்,கடவுள்களையும் வெறுத்தான். வேதங்களையும் புராணங்களையும் கிழித்துப்போட்டு அதன் காகிதங்களை குதம் துடைப்பதற்குப் பாவித்தான். தான் வாழும் இந்த உலகம் ஹிட்லரின் வதைமுகாம் என்றும், சுற்றியிருப்பவர்கள் நாஜிக்கள் என்றும் சமூகவலைத்தளங்களில் டுவிட் எழுதினான்.
3.
நடந்து முடிந்த இரட்டைக் கொலைகளுக்கு பிறகு நிலைமை கொஞ்சம் பரவாயில்லை. இனங்களுக்கு இடையிலான வேற்றுமை கொஞ்சம் குறைந்திருந்தது. தாத்தாவின் கொலைக்குப் பிறகு கொஞ்ச நாள் பேசாமல் இருந்த மிக்கு பாண்டே சமாதானமாகத் தொடங்கிவிட்டான். வாசியாவை மியாங்குவுக்கே திருமணம் செய்துவைத்தான். என்ன… தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு, பாட்டிதான் கொஞ்சம் உடைந்து விட்டாள். யாருடனும் அவ்வளவாக பேசுவதில்லை. தான் உண்டு தன் பாடு உண்டு என்று இருந்தாள். தாத்தா இறந்த பிறகு அப்பாதான் இப்பொழுது ஊர் பெருசு. ஒருநாளைக்குக் குறைந்தது பத்துப் பனிரண்டு பஞ்சாயத்துக்கள். காலையில் போனாரென்றால் மதியம்தான் திரும்பி வருவார். பெரும்பாலானவை ஜாதிச் சண்டைகள். அதைத் தீர்த்து வைப்பதற்குள் அப்பாவுக்குப் போதும் போதும் என்றாகிவிடும். இருந்தாலும் அப்பா அதை முழு மனதுடனே செய்துவந்தார். ஜாதியே எங்கள் ஊரில் இருக்கக்கூடாது என்பதுதான்அவரின் ஆசை. அதற்காக தாத்தாவைப்போல் தானும் தன் உயிரையே கொடுக்கத் துணிந்துமிருந்தார்.
எனக்கு ஒரு அக்கா இருந்தாள். எங்கள் ஊரில் அவளைப் போன்ற அழகி கிடையவே கிடையாது. என் மீது அளவுகடந்த பாசம் வைத்திருந்தாள். சின்ன வயதில் நானும் அவளும் ஒன்றாக ஒட்டகத்தில் பால் கறப்போம். கறந்த பாலை சந்தையில் விற்றுவிட்டு கிடைக்கும் பணத்தில் எனக்குக் கடலைப்பொறி வாங்கித்தருவாள். மிச்சமிருக்கும் பணத்தை அம்மாவிடம் கொடுத்துவிடுவாள். அதில் அவள் எல்லோருக்கும் தந்தியொழி செய்துதருவாள். என் அக்கா கொஞ்சம் வித்தியாசமானவள். படித்தவளும் கூட. எங்கள் ஊரில் எல்லோரும் கிடேறு என்கின்ற கற்கடவுளை வணங்கிக்கொண்டிருக்க… இவள் மட்டும் வானத்தைப் பார்த்துத் தொழுது கொண்டிருந்தாள். அங்கேதான் கடவுள் இருக்கின்றாராம். கற்களை நாம் வணங்குவது முட்டாள்தனம் என்றும் அவைகளை வணங்குவதால் ஒரு பிரயோசனமுமில்லை என்றும் கூறிவந்தாள். இதனால் எங்கள் கிராமப் பெருசுகளுக்கும் என் அக்காவுக்கும் சின்ன செல்லப் பகையும் இருந்தது. அப்பாவும் என் அக்கா மீது அன்பு வைத்திருந்தார். ஒருநாள் என் அக்காவுக்கும் அப்பாவுக்கும் சண்டை. அன்றிரவே கோபித்துக்கொண்டு வெளியே சென்றுவிட்டாள். தாமினூ என்ற கிராமத்தில் இருப்பதாக கேள்வி. போய்ப் பார்க்கவேண்டும் என்று ஒவ்வொரு மாதமும் நினைப்பேன். ஆனால் அப்பாவுக்கு பயந்து போவதில்லை. அக்கா எதற்காக சண்டை பிடித்துக் கொண்டு போனாள் என்பது கிராமத்தில் யாருக்கும் தெரியாது.
இன்று புதன்கிழமை. அப்பா வருவதற்குக் கொஞ்சம் நேரமாகும். காலையில் புறப்பட்டேன் என்றால் மதியத்துக்குள் அக்காவின் வீட்டுக்கு சென்றுவிட முடியும். ஒரு மூன்றுமணிநேரம் அவளுடன் உட்கார்ந்து பேசிவிட்டு மாலையில் திரும்பினால் எப்படியும் இருட்டுவதற்குள் இங்கே வந்துவிட முடியும். அடுப்பறையில் இருந்த பானையில் அம்மா தந்தியொழி செய்து வைத்திருந்தாள். அவற்றில் ஒரு ஐந்து துண்டுகளை எடுத்துத் துணி ஒன்றில் சுற்றிக்கொண்டு புறப்பட்டேன். தூரத்தில் அம்மா கிணற்றடியில் தண்ணீர் அடித்துக்கொண்டிருப்பது தெரிந்தது. அம்மாவிடம் சொல்லிவிட்டு போகலாமா. வேண்டாம், சொன்னால் கோபித்துக்கொள்வாள். அக்காவைப் பார்க்கும் ஆசை அவளுக்கும் இருந்தாலும், அப்பாவுடன் சண்டை பிடித்துக்கொண்டு போனது அவளுக்குக் கொஞ்சம் கோபம்.
பாதையில் தெரிந்தவர் ஒருவர் ஒட்டக வண்டியை ஓட்டிக்கொண்டு வந்தார். தாமினூ போகவேண்டும் வருகின்றீர்களா என்றேன். பத்து காசு கொடு வருகிறேன் என்றார். தருவதாகக் கூறிவிட்டு வண்டியில் ஏறி அமர்ந்தேன். வண்டி பாழிமரங்களையும், புகையிலைச் செடிகளையும் கடந்து போய்க்கொண்டிருந்தது. நான்கு சிறுவர்கள் புகையிலைத் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருப்பது நிழல் போல் தெரிந்தது. நானும் சின்ன வயதில் புகையிலைத் தோட்டத்தில் வேலை செய்திருக்கிறேன். புகையிலையைப் பறித்து ஒரு இடத்தில் குவித்துவிட்டு காசு வாங்குவோம். யார் குவியல் பெரிதாக இருக்கிறதோ அவர்களுக்கு அன்று கூடுதல் பணம் கிடைக்கும். புகையிலை பறிப்பது அவ்வளவு இலகுவான விடயமல்ல. அதற்கென்று ஒரு முறை இருக்கிறது. முதலில் கீழ்ப் பகுதியிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். அதிலும் ஓட்டை இல்லாத இலைகளாகப் பார்த்துப் பிடுங்க வேண்டும். ஓட்டை இருக்கும் இலைகள் புகையிலை செய்வதற்கு உகந்ததல்ல. அப்படியே செய்தாலும் அதை ஏற்றுமதி செய்ய முடியாது. உள்ளூர் சந்தைகளில் மாத்திரமே விற்க முடியும். நான் பெரும்பாலும் ஓட்டை இல்லாத இலைகளாகப் பார்த்துத்தான் பிடுங்குவேன். அப்போதுதான் கூடுதல் லாபம் பார்க்கமுடியும். அறுபதிலிருந்து எழுபதுவரை பார்க்க முடியும். இப்போது வளர்ந்து பெரியவன் ஆகிவிட்டபடியால் என்னை யாரும் புகையிலை பிடுங்கும் வேலைக்கு எடுப்பதில்லை. இளைஞர்களுக்குக் காசு கொடுத்துக் கட்டாது. சிறுவர்களாக இருந்தால் கொடுப்பதை வாங்கிக்கொண்டு போய்விடுவார்கள்.
வண்டி ஒரு ஒட்டகத்தைக் கடந்து போய்க்கொண்டிருந்தது. ஒட்டகத்தின் வாயில் நுரை தள்ளியிருந்தது. அது இப்போதுதான் ஏதாவதொரு முட்செடியைச் சாப்பிட்டிருக்க வேண்டும். வாயின் ஓரத்தில் முள்ளு முள்ளாகத் தூள்கள் ஒட்டியிருந்தன. கடைக்கண்ணால் அது என்னைப் பார்க்க நான் அதைப் பார்த்துக் கண்ணடிக்க பதிலுக்கு அது உதடுகள் இரண்டையும் மழித்துக்கொண்டு நே என்றது.
அக்காவின் வீட்டைக் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏதும் இருக்கவில்லை. ஊருக்குள் வந்து வலது பக்கமாகத் திரும்பி இரண்டு நிமிடம் நடந்துவிட்டு பின் இடது பக்கமாகத் திரும்பினால் அதிலிருந்து ஏழாவது வீடு. என்னைக்கண்டதும் அக்காவுக்கு இருப்புக் கொள்ளவில்லை. ஓடிவந்து முத்தமிட்டாள். அக்காவின் உடம்பிலிருந்து தாய்ப்பால் மணம் வந்துகொண்டிருந்தது. குழந்தை பெற்றிருக்கிறாள் போலிருக்கிறது. அக்காவின் தலையைத் தடவிக் கொடுத்துவிட்டு எத்தனை குழந்தைகள் என்றேன். ஒன்றுதான்டா என்றாள். அக்காவின் சிரிப்பில் கொஞ்சம் வெட்கம் தெரிந்தது. ஒருவார்த்தை கூட சொல்லவில்லையே என்றேன்.
”என்னடா செய்வது, அப்பாதான் நான் அங்கே வருவதை வெறுக்கிறாரே.”
“அப்பா வெறுத்தால் என்னக்கா? யாரிடாமாவது சொல்லி அனுப்பியிருக்கலாமே? அம்மாவும் சந்தோசப்பட்டிருப்பார். வரும்போது அவரையும் அழைத்து வந்திருப்பேன்.”
“சரி விடு. அதுதான் வந்து விட்டாயே… வா, வீட்டுக்குள் வா.”
அக்காவின் வீடு பெரிய வீடு. வீட்டின் பின்னால் இரண்டு ஆடுகள் கட்டப்பட்டிருந்தன. அம்மாவுக்குத் தெரியாமல் கொண்டுவந்திருந்த தந்தியோழியை எடுத்து அக்காவிடம் நீட்டினேன். குழந்தையைப் பார்க்கலாமா என்றேன். இப்போதுதான் பால் குடித்துவிட்டு தூங்கிக்கொண்டிருக்கிறாள். இரு, கொண்டு வருகிறேன் என்று விட்டு உள்ளே போனாள். குழந்தை அழும் சத்தம் கேட்டது. தூக்குகிறாள் போலிருக்கிறது. தூங்கிக்கொண்டிருந்தால் விடு, அப்புறமாகப் பார்த்துக்கொள்கிறேன் என்று இங்கிருந்தே அக்காவிடம் சொன்னேன். அவள் விடாப்பிடியாய் குழந்தையைத் தூக்கிக் கொண்டுவந்தாள். குழந்தை பஞ்சு போலிருந்தது. தூக்கவே பயமாக இருந்தது. ஒரு குழந்தையை, அதுவும் பிறந்து சில மாதங்களே ஆன குழந்தையை அப்போதுதான் முதல்தடவையாகத் தூக்குகிறேன். குழந்தை என்னைப் பார்த்து விநோதமாய் சத்தம் எழுப்பி, கையிரண்டையும் பலமாக ஆட்டிவிட்டு விரல்களால் தன் மூக்கைத் தேய்த்துக்கொண்டது.
”அவர் எங்கே அக்கா?”
”வெளியே போயிருக்கிறார். இப்போது வந்துவிடும் நேரம் தான். என்ன குடிக்கிறாய்? ஆட்டுப்பாலில் தேனீர் வைத்துத் தரவா? அல்லது சாப்பிடுகிறாயா?”
”முதலில் குடிப்பதற்கு தண்ணீர் கொடு; தாகமாக இருக்கிறது.”
ஒரு சிறிய மண்குடம் நிறைய தண்ணீர் கொண்டு வந்து தந்தாள். அதை வாங்கி முழுவதுமாகக் குடித்துவிட்டு குடத்தை நான் குந்தியிருந்த கதிரைக்கு கீழே வைத்தேன். நிலம் குளிர்மையாக இருந்தது.
“இனி வர மாட்டாயா?”
“வரவேண்டும் என்று ஆசைதான். ஆனால் அப்பா ஏற்றுக்கொள்ள மாட்டார்.”
அக்கா ஏன் வீட்டைவிட்டுப்போனாள் என்பது எனக்குத் தெரியாது. இன்று எப்படியும் கேட்டுவிட வேண்டும். நான் வந்தது கூட அதற்குத்தானே. கொஞ்ச நேரம் அமைதியாய் அக்காவையே பார்த்துக்கொண்டிருந்தேன். சிறிது நேர அமைதிக்குப் பின் கேட்டேன்.
“அக்கா, நீ எதற்காக வீட்டைவிட்டுப்போனாய்?”
“ஏன், இதை நீ உன் அப்பாவிடமே கேட்டிருக்கலாமே?”
“கேட்டிருக்கலாம்தான். ஆனால் பயம். அதனால் கேட்கவில்லை. தயவுசெய்து சொல், எதற்காக நீ வீட்டை விட்டு வந்தாய?”
“நான் கட்டினவர் முக்கு இனத்தை சேர்ந்தவர். இது அப்பாவுக்குப் பிடிக்கவில்லை. சண்டை வலுத்துவிட்டது. கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு வந்துவிட்டேன்.”
நான் மண்டை கனத்துப் போனவனாய் அக்காவின் கணவரின் வருகைக்காய் காத்திருந்தேன். வீட்டில் மாத்திரமல்ல; உலகம் முழுவதும் அமைதியற்றுப் போனதாய் உணர்ந்தேன்.