குழந்தைகளுக்கு பொம்மைகளைப் பிடிப்பதில்லை.


நான் உனது விளையாட்டை, விதிமுறைகளை அறியாமலேயே விளையாடினேன். அப்போது உனது முகம் ஒளிர, ஒளிர எனது ஆன்மா இருண்டு கொண்டே போயிற்று.

நீ என் கைகளில் திணித்த துப்பாக்கியின் கனம் என்னை நிலைகுலைய வைத்தது.

நாங்கள் உனக்காக இரத்தத்தில் மூழ்கினோம்.

குண்டு துளைக்காத ஆடைக்குள் நீ பதுங்கியிருக்கின்றாய். ஆனால் அங்கே எங்களுக்கு இடமில்லை.

எனது ஆன்மா கேள்விகளை எழுப்பினால் நீ புன்னகைத்துக் கொண்டே என்னைத் தட்டுவதற்கு கட்டளையிடுவாய்.

ஏனெனில் நீ கேள்விகளைக் கண்டு அஞ்சுகின்றாய்!

நீ என்னை எனது நிலத்திலிருந்து துரத்தினாய்!

எனது குரல் உன்னை எட்டுகின்றது. ஆனாலும் நீ உனது காதுகளை மூடிக்கொண்டிருக்கின்றாய்.

எனது நாடு இன்று உனது வேட்டைக் காடாகி விட்டது.

இன்று நீ அதிகாரத்தின் உச்சிக்கு ஏறி விட்டாய். 

எதற்காக பசித்திருந்தாயோ அதை நீ நக்கி விட்டாய்.

ஏன் நாங்கள் இப்போது உன்னுடன் சேர்ந்து விளையாட விரும்பவில்லை என்று எப்போதாவது சிந்தித்திருக்கின்றாயா?

உனக்கு எனது பெயராவது தெரியுமா?

புதிய வாழ்க்கையும், ஒளிரும் எதிர்காலமும் அளிப்பதாக நீ வாக்கு கொடுத்த வாக்குறுதிகளாவது ஞாபகத்திலிருக்கின்றதா?

அவர்கள் உனது வெற்றிகளின் கால்களாயிருந்தபோது நீ அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளாவது ஞாபகத்திலிருக்கின்றதா ? 

களங்களிலும், காடுகளிலும் உனக்காக மாண்டுபோன குழந்தைப் போராளிகளின் எண்ணிக்கையாவது உனக்குத் தெரியுமா?

ஷைனா கெய்ட்ரசி.

“பீட்ஷ் ஆப் தி நோ நேஷன்” திரைப்படத்தைப் பார்த்துக்கொண்டிருந்த போது எனக்கு நான் பல வருடங்களுக்கு முன்னர் உகண்டாவுக்குச் சென்றதும், அங்கு நடந்த ஒரு கோரச் சம்பவமுமே நினைவுக்கு வந்தது. உகண்டாவின் மேற்கிலுள்ள கிராமமொன்றில் நானும் என்னுடைய குழுவும் தங்கியிருந்தோம். மாலை ஐந்து மணியிருக்கலாம், வானம் ஒருவித மஞ்சள் நிறத்திலிருந்தது. எங்களுக்கு தேநீர் கொண்டுவந்து தரும் நபர் எங்களுக்கான தேநீர்க் குடுவைகளை வழங்கிக் கொண்டிருந்தார். அப்போதுதான் நான் அந்தச் சத்தத்தினைக் கேட்டேன். அதுவொரு வெடிச்சத்தம். எங்கள் காதுகளை செவிடாக்குவது போலிருந்தது. அனேகமாக நாங்கள் தங்கியிருந்த முகாமிற்கு நூறு மீட்டர் தொலைவில்தான் அது நடந்திருக்க வேண்டும். நானும், எங்கள் குழுவைச் சேர்ந்தவர்களும் ஆளுக்கொரு பக்கமாக புரண்டு படுத்துக் கொண்டோம். மேலும் இரண்டு வெடிப்புச் சத்தத்தினைத் தொடர்ந்து துப்பாக்கிகள் சத்தம் கேட்டன. கூடவே பெண்கள், மற்றும் குழந்தைகள் அலறும் சத்தம் கேட்டன. நான் மெதுவாக ஊர்ந்து சென்று வெளியில் நடப்பதைப் பார்க்க முயன்றேன். காற்றில் சடசடக்கும் துணியினூடே சில ஆயுதம் தாங்கிய குழுக்களைக் கண்டேன். கண்ணில் தென்படுவோர் எல்லோரையும் அவர்கள் ஈவு இரக்கமின்றி சுட்டுத் தள்ளினார்கள். சிலர் தங்களிடமிருந்த கூர்மையான நீண்ட கத்தியால் வெட்டிச் சாய்த்தனர். பார்க்குமிடமெல்லாம் இரத்தச் சகதியாகவும், உயிரற்ற உடல்களாயும் இருந்தன.

எனக்கு வயிற்றிலிருந்து குமட்டிக்கொண்டு வருவதைப் போலிருக்கவே மெதுவாக நகர்ந்து மேசையொன்றின் அடியில் புகுந்து கொண்டேன். மேசையின் மீது வெள்ளைத் துணியொன்றினை விரித்திருந்தார்கள். அந்தத் துணியை இழுத்து மேசையின் அடியில், நானிருப்பதை அவர்கள் பார்க்காதவாறு என்னை மறைத்துக் கொண்டேன். மற்றவர்களும் தங்களை ஒவ்வொரு இடத்துக்குள் மறைத்துக் கொண்டார்கள். பத்து நிமிடங்கள் கழிந்திருக்கும் சிலரின் காலடி ஓசைகள் கேட்டன. நான், அவர்கள் போராளிகள் தானென்பதை ஊகித்துக் கொண்டேன். காலடி ஓசைகளைத் தொடர்ந்து, உள்ளூர் மொழியொன்றில் அவர்கள் பேசிக் கொள்ளும் சப்தம் கேட்டது. நான் அச்சமடைந்தவனாக நடப்பவை யாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு கரிய நிழல் எனக்கு அருகாக வந்து நின்று கொண்டது. அந்த நிமிடம் எனக்கு உடல் முழுவதும் வியர்த்திருந்தது. வந்தவர்கள் எங்கள் முகாமிலிருந்த சகல பைகளையும் ஒன்று விடாமல் பொறுக்கியெடுத்தார்கள். என்னுடைய பையும், அவர்களிடம் சிக்கிக் கொண்டிருந்தது. பாஸ்போர்ட் உட்பட சில பணங்களும் அதிலிருந்தன. ஆனால் அந்த நிமிடம் என்னால் எதுவுமே செய்யமுடியாத நிலை. அமைதியாக நடப்பவையெல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தேன்.

சிறிது நேரம் கழிந்திருக்கும் வந்தவர்களெல்லோரும் திரும்பிப் போய்க்கொண்டிருந்தார்கள். என க்குப் போன உயிர் திரும்பி வருவதைப்போல் தோன்றவே, மேசையின் அடியிலிருந்து மெதுவாக வெளியே வந்தேன். மற்றவர்களும் ஒவ்வொருவர்களாக வெளியே வரத் தொடங்கினர். எங்களுடைய முகாம் அமைக்கப்பட்ட மைதானம் முழுவதும் இரத்த வாடையாய் இருந்தது.

அடுத்தநாள் காலையில் தான் இராணுவம் வந்து பிணங்களை அப்புறப்படுத்திக்கொண்டிருந்தனர். அதுவரை நாங்கள் மைதானத்திலேயே இருந்தோம். போனவர்கள் திரும்பி வந்துவிடுவார்களோ எ ன்கிற அச்சம் வேறு எங்கள் எல்லோருக்குள்ளுமிருந்தது.  நல்லவேளையாக அவர்கள் வரவில்லை. இராணுவத்தோடு சேர்ந்து யூ .என் ஆட்களும் வந்திருந்தார்கள். இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் இறந்து போயிருப்பதாக அவர்கள் எங்களிடம் அறிவித்தார்கள். நான் யூ .என் ஆட்கள் சொன்ன முழுவிபரத்தையும் ஒரு அறிக்கையாக எழுதி ஜெர்மனிலுள்ள எங்கள் அலுவலகத்திற்கு அனுப்பினேன். கூடவே எங்கள் ஒவ்வொருவரினதும் பாஸ்போர்ட் பறிபோன விஷயத்தை ஒரு கட்டுரையாக எழுதி அனுப்பியிருந்தேன். ஓரிரு நாட்களிலேயே எங்களுக்கான புதிய பாஷ்போர்ட் வந்திருந்தது. நாங்கள் ஜெர்மன் திரும்பி  வருவதில் எந்தச் சிக்கலும் இருக்கவில்லை.  நான் ஜெர்மன் திரும்பியதும் மறுபடியும் ஒரு அறிக்கையை தயார் செய்ய வேண்டியிருந்தது. அந்த அறிக்கையில் ஒரு வரி இப்படி இருந்தது.

“குழந்தையை சுட்டுக் கொன்றவர்களும் குழந்தைகளே”  

                                                                     X 

படம் மேற்கு ஆப்பிரிக்க நாடொன்றில் தொடங்குகின்றது. அந்த நாட்டிலுள்ள சிறிய கிராமமொன்றில் அகூ என்கின்ற சிறுவன் தன்னுடைய குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றான். ஒரு மூத்த சகோதரனும் இரண்டும் இளைய சகோதரங்களும் அவனுடைய உடன்பிறப்புகள். உள்ளூர்த் தலைவரான அகூவின் தந்தை எயிட்ஸ் நோயால் பாதிக்கப்படட குழுவொன்றுக்கு தன்னுடைய நிலத்தில் தங்க அனுமதி கொடுத்துள்ளார். 

அரசாங்கம் கவிழ்கின்றது. நாட்டின் அதிகாரம் இராணுவத்தால் பறிக்கப்படுகின்றது. அகூவின் கிராமமும் இராணுவத்தினால் சுற்றிவளைக்கப்படுகிறது. இராணுவமே அக்கிராமத்திற்கு தலைமை தாங்குகின்றது. மக்கள் தங்களுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தலைநகருக்கு தப்பிச் செல்கின்றனர். அகூவின் தந்தை ஒரு கார்க்காரனிடம் தன்னுடைய குடும்பத்தை ஏற்றிச் செல்லும்படி கெஞ்சுகின்றார். கார்க்காரனோ பணம் கொடு ஏற்றிப் போகிறேன் என்கிறான். அகூவின் தந்தையும் தன்னிடமிருக்கும் பணத்தையெல்லாம் எடுத்துக் கொடுக்கின்றார் ,ஆனால் கார்க்காரனோ இந்தப் பணத்திற்கு இருவரை மாத்திரமே ஏற்றிப் போகலாமென்று கூறி அகூவின் தாயையும், கடைசிச் சகோதரனையும் மாத்திரமே ஏற்றிப்போகின்றான். 

அகூ, அகூவின் தந்தை, அகூவின் மூத்த சகோதரன் மூவரும் இராணுவத்தினரிடம் பிடிபடுகின்றனர்.இராணுவம் அவர்களை போராளிகளெனச் சந்தேகிக்கின்றது. அகூவின் தந்தை எவ்வளவு சொல்லியும் இராணுவம் அவர்களை நம்ப மறுக்கின்றது. கடைசியில் ஒரு கிழவியை வரவழைத்து இவர்கள் இந்த  ஊரைச் சேர்ந்தவர்களா எனக் கேட்கின்றார்கள். கிழவியோ கொஞ்சம் புத்தி மங்கிப் போனவள், அவள் இவர்களை பார்த்ததேயில்லையென்று பொய் சொல்லுகின்றாள். அந்த இடத்திலேயே அகூவின் தந்தை சுட்டுக் கொல்லப்படுகின்றார். அகூவும், அவனுடைய மூத்த சகோதரனும் தப்பி ஓடுகின்றார்கள். அப்படி ஓடும்போது மூத்த சகோதரன் சுட்டுக் கொல்லப்படுகின்றான். ஆனால் அகூ மாத்திரம் எப்படியோ தப்பி ஒரு காட்டுக்குள் ஓடிவிடுகின்றான். 

அங்கே NDF என்னும் கொரில்லா இயக்கமொன்று அவனை தங்களுடன் சேர்த்துக்கொண்டு விடுகின்றது. அந்த இயக்கத்தின் கொமாண்டோ (இத்ரிஸ் எல்பா) அவனுக்கு கொரில்லா இயக்கத்தின் சகல வித்தைகளையும் கற்றுக் கொடுக்கின்றார். முடிவில் அவனை ஒரு முழு கொரில்லாப் போராளியாக மாற்றுகின்றார். 

அந்த இயக்கத்தில் அகூவைப் போலவே இருக்கும் இன்னொரு சிறுவன்தான் ஸ்ரைக்கா. ஆனால் ஸ்ரைக்காவால் வாய்பேச முடியாது. அவனுடன் அகூ ஸ்னேகம் கொள்கிறான். ஒருநாள் இரவு அகூ வை தன்னுடைய அறைக்கு அழைத்துக் கொள்ளும் இத்ரிஸ் அவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்கின்றார். அகூவைப் போலவே ஸ்ரைக்காவும் இத்ரிஷினால் பலாத்காரத்துக்கு உட்பட்டவனே. அகூவை சமாதானம் செய்யும் அவன் அகூவின் மனதினை மாற்ற அவனுக்கு போதைப்பொருளைக் கொடுக்கின்றான். 

அகூவும், ஸ்ரைக்காவும் யுத்தம் செய்கின்றார்கள். பலநகரங்களைப் பிடிக்கின்றார்கள். பெண்கள், குழந்தைகளென ஒருவர் விடாமல் கொலை செய்கின்றார்கள். பலரை கைது செய்து தங்களுடைய இருப்பிடத்துக்கு அழைத்து வருகின்றார்கள். ஒரு நாள் இத்தரிஷும், சில போராளிகளும்  தங்களுடைய மேல்மட்டத் தலைவரை சந்திக்கச் செல்கின்றனர். பல மணித்தியாலங்கள் காக்க வைக்கப்படும் அவர்களை முடிவில் மேல்மட்ட தலைவர் வந்து சந்திக்கின்றார். இத்தரிஷுக்கு லெப்டினன்ட்டாக பதவி உயர்வு கிடைக்கின்றது. அதைக் கொண்டாடுவதற்காக விபச்சாரவிடுதிக்குச் செல்லும் அவர்களை அங்கேயிருக்கும் ஒரு பெண் சுட்டுவிடுகின்றாள். அதில் பலமாக காயமடையும் இத்ரிஸ் அவளை கொன்று விடுகின்றார். முடிவில் தன்னுடைய படையுடன் அந்தக் கிராமத்தை விட்டு வெளியேறியும் விடுகின்றார். 

இப்படியாக யுத்தம் தொடர்கின்றது. அவர்களிடம் இருக்கும் ஆயுதங்கள் குறைந்து போகின்றன. தொடர் தோல்வி, போராளிகள் எல்லோரும் சலித்துக் கொள்கின்றார்கள். ஒருதடவை மறைந்திருந்து தாக்கும்போது ஸ்ட்ரைக்கா இறந்து போகின்றான். தன் நண்பனின் உடலை தன் தோளிலே சுமந்துவரும் அகூ  அவனின் உடலை ஒரு இடத்தில் புதைத்துவிட்டுப் போகின்றான்.

படத்தின் இறுதிக் காட்சி. போராளிகள் குற்றவுணர்வு கொள்கின்றார்கள். ஆயுதங்களும் முடிந்து போகின்றன. காட்டுக்குள்ளேயே இருப்பதால் ஒரு விதமான நோய் அவர்களைத் தாக்குகின்றது. சிலர் இறந்தும் போகின்றார்கள். இத்ரிசிடம் சென்று நாங்கள் திரும்பிப் போய்விடுகின்றோம் என்கின்றார்கள். 

ஆனால் இத்ரிஷ் அவர்களை சமாதானப்படுத்த முயல்கின்றார்.  பொறுங்கள் ஆயுதங்கள் இப்போது வந்து விடும், கூடவே மருந்துகளும் வருகின்றன; நாம் தொடர்ந்து போராடலாம் என்கின்றார். அப்போது இத்ரிசை ஒருவன் எதிர்த்துப் பேச, கோபம் கொள்ளும் இத்ரிஸ்  துப்பாக்கியைக் காட்டி அவனை மிரட்டுகின்றார். இந்தச் சமயத்தில் அகூ தன்னுடைய துப்பாக்கியால் இத்ரிசை குறிவைக்கின்றான். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து கொள்ளும் இத்ரிஷ் மவுனமாக துப்பாக்கியை கீழே இறக்குகின்றார். முடிவில் போராளிகளெல்லோரும் யு . என் நிறுவனத்திடம் சரணடைகின்றார்கள்.

அங்கே இவர்களுக்கு, இத்தனை நாளும் எவ்வாறான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தார்களோ, அவ்வாழ்க்கைக்கு முற்றிலும் மாறான வாழ்க்கையொன்று கிடைக்கின்றது. கல்வியும் கற்றுக் கொடுக்கப்படுகின்றது. அகூ அந்த வாழ்க்கையோடு ஒன்றிப் போகின்றான். 

                                                                X

சமீப ஆண்டுகளாக  யுத்தத்தில் குழந்தைகளைப் பெருமளவில் பயன்படுத்தி வருவது வருத்தமளிக்கின்றது. ஆனால் இது புதிதாக நடந்த ஒன்றல்ல. முதலாம் உலக யுத்தத்தின் போது கூட இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் சிறுவர்களை தன்னுடைய படையில் சேர்த்துக் கொண்டது பிரிட்டன். ஆரம்பத்தில் அவர்களை போர்டர்களாகவும், தகவல்களை கொண்டுவந்து தருபவர்களாகவும் மாத்திரமே பயன்படுத்தியிருக்கின்றது. படையில் ஆட்களின் போதாமை ஏற்பட்ட போதுதான் அவர்களையும் எதிரிகளுடன் சண்டைபோட கட்டாயப்படுத்தியிருக்கின்றது. லண்டன் மாத்திரமென்றல்ல சிரியா ,ரஷ்யா ,ஆப்கானிஸ்தான், ஆசியா, ஆப்பிரிக்கா, இப்படிப் பல நாடுகள் சிறுவர்களை படையில் சேர்த்துக்கொண்டிருக்கின்றது. வரலாறு முழுவதிலும் , ஒவ்வொரு சமூக கலாச்சாரத்திலும் சிறுவர்களை இராணுவமானது மிகவும் தீவிரத் தன்மையுடன் தன்னுடைய படையில் சேர்த்துக் கொண்டதை நாம் பார்க்க முடியும்.  

நான் மேலே முதலாம் உலகப் போரென்று குறிப்பிட்டிருந்தேன் அல்லவா அந்தப் படையிலிருந்த அத்தனை சிறுவர்களும் பதினெட்டு வயதிற்குக் குறைவானவர்கள். ஒரு கட்டத்தில் ஐரோப்பா முழுவதும் அவர்கள் போரிட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள். 1970 சர்வதேச நிறுவனமொன்று இராணுவத்திலுள்ள சிறுவர்களை எண்ணிக்கை அடிப்படையில் குறைக்க முயன்ற போதும் அது அவர்களால் முடியாமற் போனது. ஏனெனில் அப்போதிருந்த இராணுவம், சிறுவர்களையே எல்லாவற்றுக்குமாக நம்பியிருந்ததுயென்று Coalition to Stop the Use of Child Soldiers என்கின்ற தன்னுடைய  அறிக்கையில் கூறியிருந்தது. 

குழந்தைகள் போராளிகளாக இருப்பதற்கு இன்னொரு முக்கிய காரணம் லெதர் வெப்பன்ஸ் எனப்படும் கனமற்ற ஆயுதங்கள். பெரியவர்களை போலவே அவர்களாலும் துப்பாக்கிகளைத் தோளில் மாட்டிக்கொண்டு ஓட முடிகின்றது. சோவியத்தின் ஏ. கே 47 , அல்லது அமெரிக்காவின் எம் – 16 இந்த இரண்டு வகையான துப்பாக்கிகளுமே பயன்படுத்துவதற்கு இலகுவானது. பத்து வயதிற்கு குறைவானவர்களினால் கூட இந்த வகையினான துப்பாக்கிகளை கையாள முடியும். பிரித்துச் சுத்தப்படுத்தி பின் பொருத்துவதும் கூட மிக இலகுவானது. குழந்தைப் போராளிகள் அறிமுகமான காலம் தொட்டு, அதாவது 1947லிருந்து ஆப்பிரிக்காவில் மாத்திரமே ஐம்பத்தைந்து மில்லியன் ஏ.கே 47 துப்பாக்கிகள் விற்பனையாகியுள்ளன. 

ஹிட்லரின் நாசிக் கட்சியில் சிறுவர்களுக்காகவே  “ஹிட்லர் யூத்” என்கின்ற ஒரு பிரிவிருந்தது. ஆரம்பத்தில் இருபத்தி நான்கு வயதுதிற்கு மேற்பட்டவர்களே அந்தப் பிரிவிலிருந்தாலும், சோவியத் யூனியனுக்கு எதிரான நாசிக் படையின் யுத்தம் ஆரம்பமாகிய பிறகு பதினாறு மற்றும் பதினேழு வயதிலிருந்த சிறுவர்களையும் அது  தன்னுடைய அணியில் இணைத்துக் கொண்டது.  Heinz Shuetze என்கின்ற பதினைந்து வயதுச் சிறுவன் ஒரு டாங்கியை தகர்க்கவைத்தான் என்பதற்காகவே அரைநாள் மாத்திரம்  பயிற்சி கொடுக்கப்பட்டு  முன்னணியில் போர் புரிய அனுப்பிவைக்கப்படட கதைகளும் உண்டு. 

கடந்த பத்து வருடங்களில் மாத்திரம், இரண்டு மில்லியன் சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள், ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் அனாதைகளாக்கப்பட்டுள்ளார்கள், ஆறு மில்லியனுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் காயமடைந்தும், அல்லது நிரந்தரமாக முடமாக்கப்பட்டுமுள்ளனர், மற்றும், பத்து மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் தீவிரமான உளவியல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

வடக்கு உகாண்டாவில் இந்த முடிவற்ற போரினால் அதிகமாகப் பாதிக்கப்ட்டது பெண்களும், குழந்தைகளுமே. போராளிகளினால் கொல்லப்பட்ட ஆண்களால் பெருமளவிலான பெண்கள் விதவையாக்கப்பட்டுள்ளனர். அதன் விளைவாக அனாதைகளாக்கப்பட்டுள்ள அவர்களின் கைகளில் பெரும் சுமைகள் சுமத்தப்பட்டுள்ளன. 

“முதலில் உன் குடும்பத்தைக் கொல், அல்லது யாராவது ஒருவரைக் கொல் நீ மாற்றமடைவாய்” என்கின்றது Lord’s Resistance Army. LRA என்பது உகாண்டாவைச் சேர்ந்த ஒரு போராட்டக் குழு. காட்டுக்குள் தமது இருப்பிடத்தை அமைத்திருக்கும் இந்தக்குழு திடீரென்று அருகிலிருக்கும் கிராமத்துக்குள் புகுந்து கொலைவெறியில் ஈடுபடும். அல்லது பெண்களையும், சிறுவர்களையும் கடத்திப் போவார்கள். அப்படிக்கடத்தப்பட்டவர்தான்  Marie Mboligele. காங்கோவைச் சேர்ந்த இளம் தாயான இவரை ஒருநாள் LRA கடத்திச் செல்கின்றது. கூரிய கத்தியொன்றினால் அவருடைய உதடுகளையும் , காதுகளையும் அறுத்தெறிந்துவிட்டு ஒரு வனாந்தரத்தினுள் தனியே விட்டுவிட்டுப்போகின்றது அந்த இயக்கம். எப்படியோ தன்னுடைய கிராமத்துக்கு வந்துவிடும் இவரை அவருடைய குடும்பம் கண்டு கண்ணீர் விடுகின்றது.  இப்படி எத்தனையோ குரூரங்கள் போராளிக் குழுக்களினால் நடத்தப்படுகின்றன. 

உண்மையில் எந்த மனிதனும் பிறக்கும்போது வன்முறையாளனாகப் பிறப்பதில்லை. சூழலும், அதிகாரமுமே ஒருவனை பைத்தியக்காரத்தனமான அளவிற்கு வன்முறையாளனாக மாற்றுகின்றது. சகிப்புத்தன்மையின்னை கூட ஒருவகையில் வன்முறையே என்கின்றார் காந்தி. 

பீட்ஷ் ஆப் தி நோ நேஷன் திரைப்படத்தில் வரும் போராளிகளிடம் ஒரு அப்பாவி மனிதன் பிடிபட்டு விடுகின்றான். அவனைக் கொலை செய்யச் சொல்லி அவனிடம் ஒரு கத்தியைக் கொடுக்கின்றார் இத்ரிஸ். முதலில் தயங்கும் அவன் இத்ரீஸின் வற்புறுத்தலினால் அந்த மனிதனின் தலையைக் குறிவைத்து கத்தியால் வெட்டுகின்றான். ஒருதடவையல்ல, இருதடவையல்ல பலதடவைகள் அந்த மனிதனின் தலையை வெட்டு வெட்டென்று வெட்டுகின்றான். குருதி அவனின் முகத்தில் பிசிறியடிக்கின்றது. ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பிள்ளைக்கு இத்தனை மூர்க்கம் எங்கேயிருந்து வந்தது. தந்தையின் பிரம்படிக்கும், கண்டிப்புக்கும் பயந்து வளர்ந்த சிறுவனால் எப்படி ஒரு கொலையை இப்படிச் சர்வ சாதாரணமாகச் செய்ய முடிந்தது. எல்லாமே ஒரு அதிகாரம் தான். தன்னுடைய கையில் எல்லாமே இருக்கின்றது; எது செய்தாலும் யாருமே கேட்கமாடடார்களென்கின்ற வீம்பு. அந்த வீம்புதான் அவனை அப்படிக் கொடூரமாகக் கொலை செய்ய உந்தியிருக்கின்றது. 

இன்னொரு காட்சியில் போராளிகள் தங்களிடம் பிடிபட்ட பெண்களை வன்புணர்கின்றனர்.  அந்தக் கும்பலில் அகூவும் இருக்கின்றான். போராளிகளில் ஒருவன் ஒரு பெண்ணை ஆவேசமாக வன்புணரும் போது அகூ அவளின் தலையைக் குறிவைத்துச் சுடுகின்றான். எதற்காக இப்படிச் செய்தாயென கேட்டபோது அவள் என்னுடைய அம்மாவின் சாயலிலிருக்கின்றாள் , அவள் அழுவதை பார்க்க என்னால் சகிக்க முடியவில்லை, அதனால் அப்படிச் செய்தேன் என்கிறான். 

சுஜாதாவின் “இருள் வரும் நேரம்“ நாவலில் இரண்டு ஜோடிகள் தேனிலவு கொண்டாடி விட்டு மாலையில் வீடு திரும்புகின்றார்கள். அப்போது இரண்டு இளம் குற்றவாளிகள் கணவனை அடித்துப் போட்டுவிட்டு பெண்ணை கடத்திச் சென்று வன்புணர்கின்றார்கள். போலீசில் புகார் செய்யப்படுகின்றது. குற்றவாளிகளைத் தேடும் படலம் தொடங்குகின்றது. இப்போது நாவல் அந்த இரண்டு இளம் குற்றவாளிகளின் வாழ்க்கையையும், அவர்கள் வாழும் சூழலையும் பற்றிப் பேசுகின்றது. இளம் குற்றவாளிகள் இருவருமே பாதிலேயே பள்ளிப் படிப்பை முடித்தவர்கள். அவர்களும் சரி, அவர்களின் பெற்றோர்களும் சரி சேரியிலேயே பிறந்து, சேரியிலேயே வளர்ந்தவர்கள். அவர்களின் தாய் உட்பட அருகிலிருப்பவர்களனைவரும் தாராளமாக கெட்ட வார்த்தை பேசுகின்றார்கள். குடித்துவிட்டு ரகளை செய்கின்றார்கள். 

இப்படியானவொரு சூழலில் வளரும் ஒருவன் எப்படி சுயஒழுக்கமுடைய ஒருவனாக சமுதாயத்தில் வரமுடியுமென்பதே “இருள் வரும் நேரம்” நாவலின் அடிச்சரடு. 

நாவலின் இறுதியை “ தவறு அவர்களின் மீதல்ல ; அவர்களின் சமூகத்தின் மீதே” என்றவாறாக முடித்திருப்பார் சுஜாதா. 

ஆப்பிரிக்கா, இந்தியா, இலங்கை போன்ற மூன்றாம் தர நாடுகளில் பாலியல் வன்முறைகள் அதிகரித்தளவில் காணப்படுவதற்கு மிக முக்கிய காரணம் அந்தச் சமூகங்களுக்கிடையிலிருக்கும் பாலியல் வறட்சி. அல்லது அதுபற்றிய அறிவு. எந்தவொரு மனிதனுக்கும் உடலுறவு என்பது மிக முக்கிய தேவைகளிலொன்று. இயலாதவர்களின் காமம் தீயை விட உக்கிரமானது என்று ஒருதடவை ஜெயமோகன் எழுதியிருப்பார். இந்த உக்கிரம் தான் ஒரு மனிதனை மிக மோசமான பாலியல் வன்முறையாளனாக மாற்றுகின்றது. ஐரோப்பா போன்ற தாராளவாத முதலாளித்துவ நாடுகளில் பாலியல் தேவையென்பது மிக இலகுவில் கிடைக்கக்கூடிய ஒன்றாகும். 

                                                                     X

ஒரு குழந்தைப் போராளியாகவிருப்பது மோசமானது, அதிலும் பெண்களாகயிருப்பது மிகவும் மோசமானது. ஏனெனில் நாங்கள் அதிகமான யுத்தங்களில் பங்குபெறவேண்டியிருந்தது. நாங்கள் எங்கள் ஆயுதங்களோடு, எங்கள் ஆன்மாக்களை இணைத்து யுத்தம் செய்தோம். எங்கள் தலைவர்கள் எங்களுக்கு எவ்வாறு கட்டளையிடுகின்றார்களோ அவ்வாறே நாங்கள் யுத்தம் செய்தோம். பதிலுக்கு அவர்கள் எங்களை துஸ்பிரயோகம் செய்தார்கள். அத்தோடு அவர்கள் எங்களைப் போன்று இளையவர்களல்ல. எல்லோருமே நாற்பத்தைந்து வயதிற்கு மேற்பட்டவர்கள். நாங்களெல்லோருமே அவர்களை எங்கள் தந்தையர்களாக நினைக்க அவர்களோ எங்களுக்கு துரோகமிழைத்தார்கள். நான் மொத்தமாக மூன்று யுத்தங்களில் பங்குபற்றியிருப்பேன். ஒவ்வொன்றிலும் வெற்றி. அதன் பிறகு உயரதிகாரியொருவருக்கு மெய்பாதுகாவலராக நியமிக்கப்பட்டேன். அதற்கு அடுத்தபடியாக இராணுவக் காவற்துறையில் சார்ஜண்டாக பணிபுரிந்தேன். அப்படி சார்ஜண்டாக இருந்தபோது எனக்கு வெறும் பதின்நான்கு வயதுகள் மட்டுமே நிரம்பியிருந்தது என்று கூறும் ஷைனா கெய்ட்ரசி தற்போது பெல்ஜியத்தில் அகதியாக வாழ்ந்து வருகின்றார். அவரை ஜூதியா வூட்ஸ் என்கின்ற பத்திரிக்கையாளர் சந்தித்துப் பேசினார்.  அது வருமாறு.

எங்கள் இருவருக்குமிடையிலான சந்திப்பு புரூஸ்லஸ் உணவுவிடுதியொன்றில் ஏற்பாடாகியிருந்தது. அந்தப் பெண் மிகவும் மெலிவாகவும், லேசாகவுமிருந்தார். வெள்ளைச் சட்டையும், ஜீன்சும் அணிந்திருந்த அவரின் தோல்கள் கறுப்பாகயிருந்தன. நாங்கள் இருவரும் கைகளைக் குலுக்கி  அறிமுகமாகிக் கொண்டோம். நான் சூடான கோப்பியொன்றை எடுத்துக் கொள்ள,  அவர் சிகப்பு நிற திராட்சை மதுக்கோப்பையொன்றை  எடுத்துக் கொண்டார். 

தன்னுடைய நீலநிறக் கண்களை அடிக்கடி சிமிட்டிக்கொண்டிருந்த அவர் பேசலானார். நான் முதல் முறையாக துப்பாக்கியைத் தூக்கி என் முதுகில் சுமந்தபோது எனக்கு ஒன்பது வயது. உண்மையில் கொலைசெய்வதோ அல்லது காயப்படுத்துவதோ எனக்கு என்றுமே பிடித்தமான காரியமாக இருந்ததில்லை. மனதளவில் கூட அப்படிச் சிந்திப்பதற்கு அச்சம் கொண்டவள் நான். ஆனால் அதையும் மீறி நான் கொலைகளையும்,காயப்படுத்தல்களையும் செய்திருந்தேனென்றால் அது என் தலைவரின் விருப்பத்திற்காக மாத்திரமே. 

                                                                          X

ஷைனா தன்னுடைய சிறிய வயதில் பாட்டியிடம் வளர்கின்றாள். அப்பா ஷைனாவின் தாயைப் பிரிந்து வேறொரு பெண்ணை மணம் செய்து கொள்கின்றார். சின்னச் சின்ன தவறுகளுக்குக் கூட பாட்டியினால் தண்டிக்கப்படும் ஷைனா இளம் வயதிலேயே மனம் வெறுத்துப் போகின்றாள். பாட்டியிடமிருந்து  தப்பி மறுபடியும் தன் தந்தையிடமே சென்றுவிட விரும்புகின்றாள். ஆனால் பாட்டி விடுகின்றாளில்லை. இரவுநேரங்களில் ஒரு அறைக்குள் அவளை அடைத்துவிடுகின்றாள். ஆனாலும் அவள் பாட்டியிடமிருந்து தப்பி அப்பாவுடன் சேர்ந்து விடுகின்றாள். அவளுடைய வாழ்க்கை வேறுவிதமாக மாறுகின்றது. ஆனாலும் அவள் நினைத்த வாழ்க்கை அதல்ல. பாட்டியிடம் எவ்வளவு

துன்பங்களையும், கொடுமைகளையும் அனுபவித்தாளோ அதைவிட இரண்டு மடங்கான கொடுமைகளை அவளின் அப்பாவின் வீட்டில் அனுபவிக்க நேருகின்றது.  

ஆரம்பத்தில் தன்னுடைய இரண்டாவது தாயின் பிள்ளைகளோடு அன்பாகயிருக்கும் ஷைனா அவர்களின் மூலம் தனக்கு ஏற்படும் ஏச்சுக்களினாலும், அடி உதைகளினாலும் அவர்களை வெறுக்கின்றாள். அங்கிருந்து தப்பி தன்  நிஜமான அம்மாவைத் தேடித் போகின்றாள். ஒரு கட்டத்தில் தன் அம்மாவை கண்டுபிடித்துவிடும் அவள், தான் எதிர்பார்த்த அம்மாவாக அவள் இல்லாததினால் மறுபடியும் ஓடத் தொடங்குகின்றாள். 

அங்கேதான் ஷைனாவின் இரண்டாம் கட்ட வாழ்க்கை தொடங்குகின்றது. ஒரு போராளிக்கு குழுவில் தன்னை இணைத்துக் கொள்ளும் அவள் தன்னுடைய பதின்ம வயதிலேயே சகல பாடுகளையும் பட்டுவிடுகின்றாள். 

தன்னையொத்த குழந்தைகளுடன் சேர்ந்து தாக்குதல் நடத்தவும், சண்டையிடவும், முன்னேறித்தாக்கவும், பதுங்கியிருக்கவும் கற்றுக் கொள்கிறாள். போராளிகள் ஆட்சியைப் பிடித்தவுடன் அவளுக்கு அரசு அலுவலகம் ஒன்றில் காவலாளியாக வேலை கிடைக்கிறது. மீண்டும் தாயிடமே சென்று அவளுக்கு ஒரு நிலம் வாங்கிக் கொடுக்க ஆசைப்படுகின்றாள். இச்சமயத்தில் அவளுடைய வேலை பறிபோக இன்னொரு வேலையில் சேருகின்றாள்.அங்கே இவளொரு முன்னாள் போராளியென்கின்ற விஷயமும், அவளுடைய மூர்க்கத் தனங்கள் பற்றியும் தெரியவர அங்கு பணிபுரிபவர்களெல்லோரும் அவளையிட்டு அச்சமடைகின்றனர். ஒரு வகையில் இது  ஷைனாவிற்குப் பிடித்துப் போகின்றது. மதுச்சாலையிலும், அங்காடிகளில் பொருட்கள்  இலவசமாகவே கிடைக்கின்றன. இது இப்படியிருக்க போராளிகளுக்கு எதிராக ஆட்சியாளர்கள்  நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கின்றனர்.  ஷைனாவிற்கு எதிராகவும் வழக்குத் தொடரப்படுகின்றது. 

கருவுற்றுருக்கும் ஷைனா ஆட்சியாளர்களிடமிருந்து தப்பி அமெரிக்கா செல்லத் திட்டமிடுகின்றாள். அதற்கிடையில் குழந்தை பிறந்துவிட, தன் சகோதரியிடம் அக்குழந்தையை ஒப்படைத்துவிட்டு தென்னாப்பிரிக்காவில் தஞ்சமடைகின்றாள். ஆனால் உகாண்டா ஆட்சியாளர்கள் ஷைனாவைத் தேடி அங்கும் வந்துவிட முடிவில், ஐக்கிய நாடுகளிடம் சரணடைகின்றாள் அவள். 

உண்மையில் வன்புணர்வென்பது அதிகாரத்திமிரின், ஆணவத்தின் இன்னொரு படிமம். இந்த அதிகாரத்திமிரும், ஆணவமும் அதனை அதாவது வன்புணர்வினை எதிராளிக்கு கொடுக்கும் அதிக உட்சபட்சத் தண்டைனையாகப் பார்க்கின்றது. அதுவும் பெண்களின் மீது மிக மோசமான அளவிலேயே பிரயோகிக்கின்றது. இன்னொன்று, இந்த வன்புணர்வின் மூலம் எதிராளியைத் தான் அவமானப்படுத்திவிட்டதாக நினைக்கிறது. அதிகாரத்திமிரும், ஆணவமும் எப்போதும் – கொல்வதைவிட- அவமானப்படுத்தலையே தன்னுடைய முதற்குறியாக கொண்டுள்ளது எனலாம். 

இப்படித்தான் ஒருதடவை ஷைனா முகண்டாச் சிறுவன் ஒருவனோடு உரையாடிக்கொண்டிருக்கின்றாள். அப்பொழுது ரொனால்ட் என்கின்ற சார்ஜண்ட் இவளைப் பார்க்க வருகின்றார். வந்தவர் ஷைனாவையே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கின்றார். ஷைனாவிற்குப் பயம் பிடித்துக் கொள்கின்றது. சிறிது நேரத்தில் அந்த முகண்டாச் சிறுவனை வெளியே அனுப்பிவிடும் ரொனால்ட் ஷைனாவைத் தூக்கி கட்டிலில் போடுகின்றார். இதற்கு முதல் அவள் யாருடனாவது படுத்திருக்கின்றாளாயென்பதை அறிவதற்காக அவளுடைய அல்குலை பிடித்துப் பார்க்கின்றார். வலியில் கதறும் ஷைனாவை அந்தயிடத்திலேயே வன்புணர்கின்றார். அவர் போனபிறகு திரும்பிவரும்  முகண்டாச் சிறுவன் ஷைனாவை ஆறுதல்ப்படுத்துகின்றான். ஆனால் ஷைனாவால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. 

அடுத்தநாள் காலை ஷைனா,  தான் நல்ல மனிதரென்று நம்பியிருக்கும் நாற்பது வயதுடைய சார்ஜண்ட் ஒருவரைச் சந்தித்து நேற்றிரவு நடந்ததனைத்தையும் சொல்லுகின்றாள். அவள் மீது இரக்கம் கொள்ளும் அந்த மனிதர் அவளை தன்னுடைய மனைவியிடம் அழைத்துச் சொல்லுகின்றார். முதலில் அச்சமடையும் அவர் மனைவி,  பின்பு அவளை தன்னுடைய வீட்டில் தங்க அனுமதிக்கின்றாள். அவர்களின் வீட்டில் பொந்து போன்றிருந்த சிறிய அறையொன்றில் மறைத்து வைக்கப்படும் ஷைனா மூன்று நாட்கள் கழித்து அவளின் தாயிடம் அனுப்பப்படுகின்றாள். 

ஷைனா காட்டின் வழியே நடந்து போகின்றாள். கூடவே இன்னொருவன் பாதுகாப்பிற்கு வருகின்றான். இருவரும் காட்டின் நடுப்பகுதியை அடைகின்றனர். அப்போது பாதுகாப்பிற்கு வந்தவன் அவளை மறித்து, இப்பொழுதே இங்கேயே நீ என்னுடன் படுத்தாக வேண்டுமென்கின்றான். மறுத்தால் கொலை செய்துவிடுவேனெனவும் மிரட்டுகின்றான். நடுங்கிப் போகும் ஷைனா, அவனிடமிருந்து தப்பிப்பதற்காக தானொரு “சிபிலிஸ்” நோயாளியெனப் பொய் சொல்லுகின்றாள். அவள் சொல்லும் பொய்யை உண்மையென நம்பிவிடும் அவன் அவளை அப்படியே விட்டுவிட்டுப் போகின்றான். 

இன்னோர் இடத்தில் கசிலிங்கி என்பவனின் வீட்டில் காவலாளியாக வேலைக்குச் சேர்கிறாள் ஷைனா. ஒருநாள் தன்னிடம் அறிவிக்காமல் இரவு நேரத்தில் வெளியே போனதற்காக ஷைனாவைத் தண்டிக்கும் கசிலிங்கி, தன்னுடைய விருப்பத்திற்கு அவளை பயன்படுத்துகின்றான். துயரம் தாங்காமல் தன்னை வேறொரு முகாமுக்கு மாற்றச் சொல்கின்றாள். ஆனால் கசிலிங்கியோ அவளை விடாமல் வன்புணர்கின்றான். மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஷைனா கர்ப்பம் தரிக்காமலிருக்க வைத்தியமும் செய்கின்றான். நாள்தோறும் துன்பப்படும் ஷைனா “வலிக்கிறது” என்று கூறும்போதெல்லாம் , “பயப்படாதே இனிமேல் செய்யும்போது மெதுவாகச் செய்கிறேனென்கின்றான்” .

இப்படித் தன் வாழ்நாள் முழுவதும் ஷைனா வன்புணரப்பட்டுக்கொண்டேயிருக்கின்றாள். அதுவும் அவள் நல்லவர்களென்று நம்பியிருந்தவர்களாலேயே அப்படியொரு சம்பவம் நடந்தது பெரும்துயரம்.

குழந்தைகள் தெய்வத்திற்குச் சமனானவர்கள். ஆனால் அவர்களோ தவறான மூளைச் சலவை மூலம், அல்லது வழிகாட்டலின் மூலம் துப்பாக்கி ஏந்தப் பழகிவிட்டார்கள்.  இதற்கு ஏதோவொரு வகையில் பெரியவர்களாகிய நாங்களும் காரணமாயிருக்கின்றோம். 

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Scroll to Top