சாத்தானின் கால்கள்.


நான் மௌனமாக ஏசுவையே கவனித்துக் கொண்டிருந்தேன். அவனுடைய உதடுகள் வழக்கத்துக்கு மாறாக இறுகியிருந்தன. உன்னிப்பாக அவதானித்தபோது அவன் உதடுகள் எதையோ உச்சரித்துக் கொண்டிருப்பதையும் கவனித்தேன். அவன் ஏதோ குழப்பத்திலிருக்கிறான் என்பதை யூகித்துக்கொண்ட நான், அவனாக வாய் திறந்து பேசும் வரை ஒரு சொல்லாகினும் நானாகப் பேசுவதில்லையெனத் தீர்மானித்துக் கொண்டேன்.  

அது கோடை காலமென்பதால், நாங்களிருவரும், எனது அடுக்குமாடிக் குடியிருப்புக்குக் கீழிருந்த சிறிய தோட்டத்தில் இரண்டு ‘பிளாஸ்டிக்’ கதிரைகளைப் போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தோம். சுற்றிலும் மரங்கள் இருந்தபடியால் நல்ல காற்றாகவும் இருந்தது. நான் என் இரண்டு கால்களையும் ஒன்றோடொன்று பொருத்தி வசதியாக நீட்டிக் கொண்டேன். அப்போது, என் தேகமானது அனிச்சையாக பின்னால் சாய்ந்து கொள்ளலாயிற்று.  

ஒருவாறாக, ஏசு, அன்றைய தனது வார்த்தையை “புதிதாக ஏதும் எழுதினீர்களா?” என்பதாக உதிர்த்துக்கொண்டான். நான் என்னுடைய புதிய கதை பற்றி அவனுக்குக் கூறினேன். கதை குறித்துச் சில விஷயங்களையும் சொன்னேன். எல்லாவற்றையும் மிகக் கூர்மையாகக் கேட்டுக் கொண்டிருந்தவன், “வழக்கம்போல் இக்கதையும் ரஷ்ய நிலப்பரப்பில் நிகழும் கதையோ” எனக் கேட்டான். நான் அது குறித்து அவனுக்கு ஏதும் சொல்லாமல் “அப்போது உன் உதடுகள் துடித்துக் கொண்டிருந்ததே” என்றேன்.   

இவ்வளவு நேரமும் உடலைக் குறுக்கி அமர்ந்திருந்த ஏசு, நான் அப்படிக் கேட்டதும் தன் இரண்டு கைகளையும் கோர்த்தியவாறு நிமிர்ந்து உட்கார்ந்தான். “வரும் வழியில் ஒரு பிச்சைக்கார மனிதன்” என வேகமாகச் சொன்னான். ஏசு அப்படிச் சொன்னபோது அவன் உதடுகளில் ஒரு புன்னகை அரும்பி பின் மறைந்தது. நான் ஏதும் புரியாதவனாக “நீயும் கதை எழுதத் தொடங்கி விட்டாயா; ‘இது’ அதனுடைய தலைப்பா?” என்றேன். சிரித்துக் கொண்டான். அவன் அப்படிச் சிரித்தபோது அவன் மூக்கிலிருந்து விசுக்கென்ற சப்தத்தோடு மூச்சுக்காற்று இறங்கியது.  சிறிது நேரம் எதுவுமே பேசாமல் தன் முழங்கையின் மூடியை தடவி விட்டுக் கொண்டிருந்தான் ஏசு. பின், கொண்டு வந்திருந்த திராட்சை ரசப் போத்தலை திறந்து ஆளுக்கு இரண்டு குவளைகளில் ஊற்றினான். தன்னுடைய குவளையை எடுத்து ஒரே மூச்சில் குடித்து முடித்தான். என்னையும் குடிக்கச் சொன்னவன், அந்தப் பிச்சைக்காரன் மட்டும் இப்போது என் கையில் கிடைத்தால் இந்தப் போத்தலை முழுவதுமாக அவன் குண்டிக்குள் அதக்கி விடுவேனென்று திராட்சை ரசப் போத்தலை சுட்டிக் காட்டியவாறு சொன்னான்.  

எனக்கு அதற்கு மேலும் பொறுமை இல்லாமற் போகவே… சட்டென்று, “என்ன நடந்தது என்பதை முழுமையாக புரிவது போல் சொல்ல முடியுமா?” எனக் கேட்டேன்.   

“விவகாரம் அவ்வளவு பெரிதல்ல” என்ற ஏசு ஒரு சிறிய மிகச் சிறிய கதையை எனக்குச் சொல்லலானான். கதை இதுதான். வழக்கம்போல் வேலை முடிந்து ஏசு என் வீட்டுக்கு வந்திருக்கிறான். வரும் வழியில், ஒரு ருமேனியப் பெண் அவனிடம், அட்டையில் பிரைடா கெய்லாவின் படம் அச்சிடப்பட்டிருந்த மாத இதழொன்றை வாங்கும்படிக்குச் சொல்லியிருக்கிறாள். இவன் இதழை உற்றுப் பார்த்துவிட்டு “இவ்விதழ் ஒரு வருடம் பழமையானது” என்றிருக்கிறான். பதிலுக்கு அந்த ருமேனியப் பெண், “நீ இந்த இதழை வாங்காவிடினும் பரவாயில்லை; ஒரு ஒரு யூரோ இருந்தால் கொடுத்துவிட்டுப் போ” என்றாளாம்.  

கொடுக்க மறுத்த ஏசுவை பக்கத்தில் நின்றுகொண்டிருந்த அவளின் காதலன் கொடுமையான தூஷண வார்த்தைகளால் திட்டியிருக்கிறான். அப்போது சனம் பூராவும் தன்னையே பார்த்துக் கொண்டிருந்ததாகவும் அதனால், தனக்குப் பெரும் லஜ்ஜையாகப் போய்விட்டதாகவும் கூறி… இறுதியில், ‘ஆஷ்லொக் பெனா’ என ஒரு ஜெர்மானிய வசை சொல்லை சொல்லி அந்த மிகச் சிறிய கதையை ஏசு முடித்துக்கொண்டான். எனக்குச் சிரிப்பதா அழுவதா எனத் தெரியவில்லை.  

“போனால் போகிறது… ஒரு யூரோ தானே… கொடுத்திருக்கலாமே” என்றேன். ஒரு யூரோ என்று அவ்வளவு அசட்டையாகச் சொல்லி விட்டீர்கள்… ஆனால், அதை உழைப்பதற்காக நான் படும் பாடு இருக்கிறதே அது எனக்குத்தான் தெரியும்” என்றான். நான் எதுவும் சொல்லாமல் குவளையை எடுத்து முதல் மிடறு அருந்தினேன். பிறகு, ருமேனியாவிலிருந்து அகதிகளாக வருபவர்களை இங்கு யாரும் வேலைக்கு எடுப்பதில்லை என்றும் அப்படியே எடுத்தாலும் அவர்களை யாரும் நம்புவதுமில்லை என்றும் ஆகவே, அவர்கள் இரக்கத்துக்குரியவர்கள்; அவர்களுக்காகக் கருணை கொள்வதால் நாம் பெரிதாக ஒன்றையும்  இழந்து விடப் போவதில்லை என்றும் கூறினேன்.   

“நீங்கள் சொல்வது எனக்கும் தெரியும். ஆனால், இவர்களைப் போன்றோர்களுக்கு பணம் கொடுக்க என் மனம் ஒருபோதும் ஒப்பாது” என்றவன் மேலும் சொன்னான். “அவர்களை போன்றவர்கள் நாய்க்குச் சமனானவர்கள்.” 

நான் கையில் வைத்திருந்த குவளையையே பார்த்துக்கொண்டு அதில் ஒற்றை விரலால் தொடர்ச்சியாகத் தட்டிக் கொண்டிருந்தேன். அப்படித் தட்டும்போது எழும் ஒலியானது ஒரு சீரான இடைவெளியோடு என் காதுகளுக்குள் ஊடுருவியபடி இருந்தன. “அப்படியெனில் போனமாதம் நானுன்னிடம் நூறு யூரோக்கள் கேட்டபோது மறுப்பேதும் கூறாமல் உடனேயே தூக்கிக் கொடுத்தாயே…!” 

என்னை நேராகப் பார்த்து உடலை குறுக்கியவன் சற்றே குனிந்த வாக்கில் “நீங்களும் அவர்களும் ஒன்றா அண்ணன்… அத்தோடு நான் இப்படி இருப்பதற்கு காரணமே நீங்கள் தானே…  அதை எப்படி நான் மறப்பேன்… நன்றி மறப்பது நன்றன்று அண்ணன்.” என்றான்.  

அதன் பிறகு அவனுடன் அதைப் பற்றி நான் எதுவும் பேசவில்லை. அங்கலிக்கு எழுதிய ரேபாலியன் பற்றிக் கேட்டேன். இன்னும் பதினெட்டுப் பக்கங்கள் மிச்சமிருப்பதாகவும் சிலாகித்துப் பேசக்கூடிய அளவுக்கு ரேபாலியன் திறமான புத்தகமில்லையென்றும் சொன்னான். அதைவிட காப்ரியேல் கார்சியா மார்க்கோஸ் எழுதிய முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம் நிரம்பவும் பிடித்திருக்கிறதெனவும் சொன்னான்.  

எனக்கு லேசாகத் தலை சுற்றுவது போல் தோன்றியது. தலையை கழுத்துக்குப் பின்னால் சரித்து இருண்டிருந்த வானத்தைப் பார்த்தேன். ஒரு விமானம் மின்னி மின்னிச் செல்வதைக் கண்டேன். பிறகு, ஏசுவிடம், இரண்டு மாதங்களுக்கு முன் ஒரு கதை எழுதினேன்; அதை உன்னிடம் சொல்லலாமா? என்றேன். தாராளமாகச் சொல்லுங்கள்; உங்களிடம் கதை கேட்பது எனக்கு மிகவும் பிடிக்கும் என்ற ஏசு கதை கேட்பதற்கு ஏதுவாகத் தன்னை கதிரையில் சரித்துக்கொண்டான். கால்களை முன்னுக்கு நீட்டிக் கொண்டு கைகளை கோர்த்துக்கொண்டு நான் கூறப் போகும் கதையைக் கேட்பதற்கு ஆயத்தமானான்.  

கதையை நன்றாகக் கேள்! உனக்கு இந்தக் கதை புரியுமா என எனக்குத் தெரியவில்லை. கதையின் சாரம் குறித்து நானும் உனக்கு புரிய வைக்கப்போவதில்லை. ஆனால், கதையை நீ புரிந்து கொள்வதற்கு ஒன்றைச் சொல்லலாம். உன்னுடைய பிச்சைக்காரனின் கதைக்கும் இதற்கும் ஒரு சம்மந்தமுண்டு. இதற்கு மேல் கதை குறித்து எதுவும் சொல்ல மாட்டேன் என்றுவிட்டு பின்வருமாறு ஒரு கதையை நான் ஏசுவுக்கு கூறலானேன்.  

 
2, 

முதலில், இடி இறங்கியதைப் போல் தான் சாத்தான் உணர்ந்தான். எதிராளி இரண்டாவது மூன்றாவது என விடாமல் தொடர்ச்சியாகக் குத்தியபோதுதான் அவனுக்கு நிஜம் விளங்கியது. கிடைத்த வாய்ப்பில், எதிராளியின் கையைப் பிடித்துக் கொண்ட சாத்தான், பலம் கொண்ட மட்டும் கால்களால் உதைந்து தள்ளினான். எதிராளி தன்னையிழந்து ஒரு வேகத்தோடு அப்பாற் சென்று விழுந்தான். சாத்தானின் மூக்கிலிருந்து வடிந்த இரத்தம் மேலுதட்டை அடைந்தபோது அவன் அதை நாக்கால் நீவித் துடைத்தான். வேர்வையோடு கலந்திருந்த இரத்தத்தின் ருசி அவனுக்கு அவஸ்தையை  ஏற்படுத்தியிருக்க வேண்டும். முகத்தைச் சுளித்து காறி உமிழ்ந்தான். முதுகால் ஊர்ந்து பெருத்திருந்த மரமொன்றில் தன்னைச் சாய்த்து பலமாக மூச்சு வாங்கினான். அவனுடைய கன்னத்திலிருந்து இரத்தமானது வழிந்து கொண்டிருந்தது. தன் கன்னத்திலிருந்து ஏதோ வழிவது போல் படவே அந்த இடத்தை விரல்களால் தடவிக் கொண்டான். எரிந்தது. ‘ஸ்ஸ்ஸ்’ என்ற முனகளோடு விரலை எடுத்தவன் பிறகு மறுபடியும் அழுத்தினான். விரல்களில் பிசுபிசுத்த இரத்தத்தைச் சருகுகளில் தேய்த்துத் துடைத்தான்.  

தேகம் முழுவதும் வலித்தது. கண்களை மூடி என்ன நடந்தது என்பதை நினைத்துப் பார்த்தபோது ஒரு பெரும் யுத்தம். எங்கும் பிசிறிய இரத்தமும், உடல் துண்டங்களும். காற்றில் பயங்கரமான இரத்த நெடி. குண்டுகள் வெடித்தபோது கற்கள் சிதறி சிறு துணுக்களாகி இவன் மேல் மழை பொழிவதைப் போல் பொழிந்தது. துப்பாக்கிகள் சுட்டுக்கொண்டபோது அவற்றின் முனையிலிருந்து மச்சள் நிறத்தில் தீக்கங்குகளும், ‘டப, டப’ சப்தங்களும் எழுந்தன. இவையாவும் ஒன்றன் பின் ஒன்றாக இடை வெட்டுவது மாதிரி சாத்தானுக்கு வந்து வந்து போயின. சட்டென்று கண்களைத் திறந்தான். பிறகு மறுபடியும் மூடினான். இப்போது அவன் மலையொன்றிலிருந்து உருள்கிறான். ஓங்கி வளர்ந்திருந்த மரங்களில் மோதுண்டுகிறான். கிளையொன்றைப் பற்றுவதற்குப் பிரயத்தனப்பட்டு என்னவெல்லாமோ செய்து… இறுதியில், அது முடியாமற் போகவே பதினாறு அடிகள் கொண்ட பள்ளத்துள் தன்னை விழுத்திக் கொள்கிறான்.   

கண்களை திறந்தபோது தூரத்தில் எங்கேயோ – அநேகமாக அவன் பின்னாலிருந்து தான் – செல்லொன்று கூவி வெடிப்பது கேட்டது. தரை சிறிது அதிர்ந்ததாகவும் சாத்தானுக்குப் பட்டது. விழிகளை உருட்டி அப்பாற் பார்த்தான். தன் முகத்தைப் உடைத்துப் போட்டவன் அவனும் சோர்ந்து போய் கிடப்பதாய் சாத்தானுக்குப் பட்டது. எழுந்து சென்று அப்படியே அவன் கழுத்தை இறுக்கி முடியாமற் போனால் கல்லொன்றைத் தூக்கிப் போட்டாவது அவனைக் கொன்று போடலாமாயென்று நினைத்தான். ஆனால், தேக நோவு அவனைப் படுத்தியது. தாடையில் விண்னென்று வலிப்பது போலவும் பட்டது. மட்டுமல்லாமல், தன் முள்ளந்தண்டு உடைந்திருப்பதாகவும் அவன் நினைத்தான். கைகளை அசைக்க முடியாமல்… இருப்பினும், தன்னை வருத்தி கைகளை அசைக்க முற்படும்போதெல்லாம் அவனுள் பெரும் வலி புகுந்து அப்படிப் புகும்போது பெரும் குரலெடுத்துக் கத்தினான். அப்படியே உறங்கியும் போனான்.  

  •  

சாத்தானுக்கு விழிப்பு வந்தபோது  அதிகாலையாய் இருந்தது. கண்களை திறக்க முடியாத அளவுக்கு நோவுமிருந்தது. எதிராளி இப்போதும் அதே  தினுசில்தான் படுத்திருந்தான். செத்து விட்டானா? சாத்தானுக்கு முதலில் அப்படித்தான் தோன்றிற்று. தன்னைத் தானே அசைக்க முற்பட்டான். முடிந்தது. அப்படியே சரிந்து முழங்கைகளால் தரையில் தேய்த்து முன்னேறினான். தன் உடலுக்குப் பின் பக்கமாயிருந்து ‘புஷ்ஷு, புஷ்ஷு’ என்று சப்தம் வரவே தலையைத் திருப்பி அது என்னவென்று பார்த்தான். உடல் முழுவதும் கருமையாயிருந்த ஒரு மெலிய பாம்பு சாத்தானையே பார்த்துக்கொண்டு படம் பிடித்தாடியது. சாத்தானுக்கு உடல் குறுகுறுத்ததைப் போல் பட்டது. மயிர்கற்றைகள் குத்திட்டு நின்றன. பாம்பையே வெறித்துப் பார்த்துக்கொண்டு அசையாமல் அப்படியே கிடந்தான்.   

மெல்ல ஊர்ந்து வந்த பாம்பு அவன் உடலில் ஏறி அவன் மார்பில் நின்றுகொண்டு அவன் முகத்தைப் பார்த்து இரண்டாகப் பிளந்திருந்த தன் கருஞ் சிகப்பு நாக்கினை நீட்டி சப்தம் உண்டாக்கியது. சாத்தான் கண்களை இமைக்காமல் பாம்பையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் இமைப் பகுதிலியிருந்து வியர்வைத் துளியொன்று உருவாகி கீழ் நோக்கி வழிந்தது. சாத்தானின் முகத்துக்கு நேராக தன் தலைப்பகுதியைக் நீட்டிய பாம்பு சிறிது நேரம் அப்படியே நின்று விட்டு பின், சட்டென்று தன் பின்னால் எடுத்துக்கொண்டது. பின், மறுபடியும் நீட்டி நாக்கினை அசைத்து சப்தம் எழுப்பியது. இம்முறை எப்படியும் தன்னைத் தீண்டி விடுமெனச் சாத்தான் நினைத்தபோது பாம்பானது தன் தலையை அவன் உதட்டுக்கு மேலாகக் கொண்டு சென்று அப்படியே அவன் முகத்தின் மேல் ஊர்ந்தது. சாத்தான் கண்களை மூடிக் கொண்டான். பாம்பின் கால்கள் அவன் முகத்தை உரசிச் சென்றபோது சாத்தானின் தேகத்திலுள்ள அத்தனை மயிர்களும் குத்திட்டு நின்றன. அருவருப்பாகவும், குறுகுறுப்பாகவும் உணர்ந்தான். பாம்பு சாத்தானின் தலையிலிருந்து இறங்கி அப்படியே ஊர்ந்து போனது.  

மூச்சு விடாமல் படுத்திருந்த சாத்தான், சிறிது நேரம் கழித்து, மெதுவாகத் தலையைத் தூக்கிப் பார்த்தான். பாம்பைக் காணோம். கைகளால் தரையைத் தேய்த்து எதிராளியை நெருங்கியபோது எதிராளி இப்போதும் எவ்வித அசைவுமற்று அப்படியே கிடந்தான். சாத்தான் கையை நீட்டி ஒரு பதற்றத்தோடு எதிராளியை தொட்டபோது எதிராளி திடீரென்று உயிர் பெற்ற ஒரு தவளையை போல் விழித்துப் பார்த்தான். சாத்தானைக் கண்டதும் பதறிப்போய் தடதடவென்று எழுந்து கொண்டான். அவன் உதடுகள் வீங்கியிருந்தன. எதிராளி தன் வீங்கிய உதடுகளை விரலால் தேய்த்தபோது அதிலிருந்து லேசாக இரத்தம் கசிந்தது. இப்போது அவர்களிருவரும் எதிரெதிராகயிருந்த இரண்டு மரங்களில் தங்களை சாய்த்துக்கொண்டு அமர்ந்திருந்தார்கள். எதிராளிக்கு எல்லாம் புரிந்திருக்க வேண்டும். தன்னை முழுமையாகச் சாஸ்வதப்படுத்திச் சீராக மூச்சு விட ஆரம்பித்தான்.  

மதியம் வரை அவர்களிருவரும் எதுவுமே பேசிக் கொண்டார்களில்லை. தனக்கு முன்னால் மரங்களுக்கு அப்பால் இரண்டு முயல் குட்டிகள் துள்ளிச் செல்வதைத் சாத்தான் கவனித்தான். ஓடிச் சென்று பிடிக்கலாமா என்று பட்டது. ஆனால், அது அத்தனை சுலபமில்லை என்பதால் அந்தச் சிந்தனையை கை விட்டான். இருந்தாலும், பசி அவனைப் படுத்தியது. இறுதியாக எப்போது சாப்பிட்டோம்? வாட்டிய இறைச்சித் துண்டொன்றும் அவித்த உருளைக்கிழங்கும் அவன் நினைவில் வந்தன. தனக்காக தன் நண்பன் அதை எடுத்து வந்ததையும் அவன் நினைவு கூர்ந்தான். அப்போது, எதிராளி, இவனிடம், பெயர் என்ன என்று கேட்டான். 

ஆரம்பத்தில், அதற்கு அதாவது, எதிராளியின் கேள்விக்கு பதில் சொல்ல சாத்தான் பிரியப்படவில்லை. நேரம் கிடைக்கும்போது எதிராளியுடன் மோதுண்டு அவனை விழுத்திவிடவே அவன் நினைத்திருந்தான். ஆனால், முந்தின தினம், அவனிடம் வாங்கிய அடி நினைவுக்கு வரவே ‘அது’ அத்தனை லகுவல்ல என்பதையும் அவன் தெரிந்தே வைத்திருந்தான். சில வினாடிகள் கழித்து, ஆனால் அப்போதும்கூட எதிராளியின் முகத்தைப் பார்க்க விரும்பாமல் வேறு எங்கேயோ பார்த்துக்கொண்டு சாத்தான் என்றான். 

தனக்கு முன்னால் இருப்பவன் தன்னோடு பேச விரும்பவில்லை என்பதை எதிராளி புரிந்து கொண்டான். அவனுக்குப் பெரும் லஜ்ஜையாகப் போயிற்று. நேற்று நான் உன் தாடையை உடைத்ததற்காக என்னை மன்னித்துவிடு; அதை நான் வேண்டுமென்று செய்யவில்லை; ஆனால், அப்போதிருந்த மனநிலையில் எனக்கு அதைத் தவிர வேறு வழியும் தெரியவில்லை என்றான்.  

எதிராளி அப்படி வெளிப்படையாகப் பேசியது சாத்தானுக்கு அவன் கோபத்தை இன்னும் அதிகப்படுத்தியது. என் தாடையை பெயர்த்துவிட்டு… அதைச் சொல்லியும் வேறு காட்டுகிறாயா; எவ்வளவு தடிப்பு உனக்கு? என்று வாய்க்குள் புறுபுறுத்தான். அவன் உதடுகள் துடித்துக் கொண்டிருந்தன.  

தன்னுடைய பெயர் ஜீசஸ் என்றும் தான் குழந்தையாக இருக்கும்போது பார்ப்பதற்கு அச்சு அசலாக ஜீசஸ் போலவே இருந்ததாகவும் அதனாலேயே அந்தப் பெயரை தன் தாய் தனக்குச் சூட்டியதாகவும் சாத்தானிடம் கூறிய எதிராளி மேலும் சொன்னான். “உண்மையில், ஜீசஸும், சாத்தானும் ஒருவருக்கொருவர் எதிர் எதிரானவர்கள். முதலமானவர் நன்மைக்காகவும், இரண்டாமானவர் தீமைக்காகவும் செயற்படுகிறவர்கள். அதேபோன்று இங்கு நான் ஜீசஸாகவும் நீ சாத்தானாகவும் இருக்கிறோம். ஆனால், அதற்காக நான் உன்னை ஒருபோதும் சாத்தானென்று நினைக்கப் போவதில்லை. நீயும் என்னை ஜீசஸாக நினைக்க வேண்டிய கட்டாயமில்லை.”  

சாத்தான் விசுக்கென்று சிரித்துக்கொண்டான். இப்போது சாத்தானுக்கு எதிராளி மீது கோபத்தோடு சேர்ந்து ஏளனமும் கூடியிற்று. இல்லையென்றால் மாத்திரம் நான் உங்களை ஜீசஸ் என்று நினைத்துவிடுவேனாக்கும் என்றான். அவன் அப்படிச் சொன்னது எதிராளிக்கு ஒருமாதிரித்தான் இருந்தது. இருந்தாலும் அதை வெளிப்படுத்திக் கொள்ளாமல் வேறொரு திசையில் பார்த்துக்கொண்டு உன்னுடைய சித்தம் எப்படியோ அப்படியே ஆகக் கடவது என்றான்.  

 சாத்தானின் தொடைப்பகுதியிலிருந்த காயத்திலிருந்து இரத்தம் கொட்டுவது நின்றிருந்தது. அவன் பிரயத்தனப்பட்டு எழுந்துகொள்ள முயன்றான். முடியாமற் போகவே மறுபடியும் உட்கார்ந்து கொண்டான். ஆனால், எதிராளிக்கு அவ்வளவு கஸ்டம் இருக்கவில்லை. தானும் எழுந்துகொண்டு சாத்தானையும் எழுப்பி விடும் பொருட்டு அவனுக்கு உதவ தன் கையை நீட்டினான். முதலில் நிராகரித்த சாத்தான், பின்பு தோல்வியை ஒப்புக்கொண்டு எதிராளியின் கையைப் பற்றிக்கொண்டு எழுந்தான். ஆனாலும், அவனுடைய இருதயமானது வஞ்சனையாலும், சினத்தாலும் பெருகிக் கொண்டிருந்தது.  

  •  

இப்போது, அவர்களிருவரும் வனாந்தரத்தில் ஆற்றுப்படுக்கை ஒன்றில் இருந்தார்கள். நதியின் இரு ஓரங்களிலும் மலர்கள் ஏதோ புதிதாகத் தோன்றியது போல் பூத்துக் குலுங்கின. தொடுவானம் மிக அருகில் இருப்பது போல் பட்டது. தூரத்தில் நீர்விழ்ச்சி ஒன்று பெரும் இரைச்சலாய் கொட்டிக்கொண்டிருந்தது. அப்போது, எதிராளி இதைப் பார்க்கும்போது ஜோர்தான் நதிக்கரை நினைவு வருகிறதென்றான். ஆற்றில் இறங்கி ஞானஸ்தானம் எடுத்துக்கொள்ளுங்கள் என்ற சாத்தான் மேலும் சொன்னான். “முதலில் இந்த வனாந்தரத்த்திலிருந்து எப்படி மீள்வது என்று யோசிப்போம். மற்றதைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம்! 

எதிராளி சாத்தான் கூறியதைச் செவிமடுத்தானில்லை. ஓடிச்சென்று ஆற்றில் குதித்தான். அப்படி அவன் குதித்தபோது நீர்த்திவலைகள் தெறித்தன. அவற்றில் கொஞ்சம் சாத்தானின் முகத்திலும் பட்டது. தன் முகத்தில் தெறித்திருந்த துளிகளை விரல்களால் வழித்துக்கொண்ட சாத்தான், இந்த ஜீசஸுக்கு பைத்தியம் பிடித்து விட்டதென்று வாய்க்குள் முணுமுணுத்தான்.  

ஆற்றிலிருந்த எதிராளி தேகத்தை மல்லாக்கப் போட்டுக்கொண்டு கைகளை சவட்டி நீந்தினான். பின்பு, அப்படியே புரண்டு, அடியில் சென்று, நிலத்தைத்தொட்டு, ஒற்றை விரலால் கோடு கீறி… பின், ஆற்றின் வேறொரு மேற்புறத்தில் எழும்பினான். அப்போது, மத்யமகாலம் சாயங்காலமாய் மாறிற்று.   

இப்போது, எதிராளியும் சாத்தானும் மீன்கள் சிலவற்றைப் பிடித்து நெருப்பில் வாட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு எதிரே ஏற்கனவே வாட்டப்பட்டிருந்த சில மீன் துண்டுகளுமிருந்தன. அப்போது சாத்தான் அவ்மீன்களில் ஒன்றை எடுத்து முகர்ந்து பார்த்தான். அவனுக்குத் திருப்தியாய் படவே அதிலிருந்து ஒரு சதையை பிய்த்தெடுத்து வாய்க்குள் அதக்கிக் கொண்டான். “ஜீசஸ் மேல் அத்தனை நம்பிக்கையோ” என்றான்.  

அவரை விடுத்து வேறு எவர் மீதும் அத்தனை நம்பிக்கை இல்லையென்றவன் மேலும் சொன்னான். “ஜாதி ஜாதியான பறவைகளும் ஜாதி ஜாதியான விலங்குகளும் சண்டையிட்டுக் கொள்வதில்லை; ஒரே ஜாதியாகிய மனுஷராகிய நாம் தான் சண்டையிட்டுக் கொள்கிறோம்”    

“யுத்தம் என்பதும் ஒரு மாதிரியான பசிதான்.” என்ற சாத்தான் இன்னொரு தசையை பிய்த்து வாய்க்குள் அதக்கிக்கொண்டான். அதை மென்று விழுங்கியவன் “அப்படியெனில், எதற்காக நீங்கள் இராணுவ வீரன் ஆகினீர்களாக்கும்” என்றான்.  

“வேறு வழியில்லை; இளைஞனாக இருந்தபோது நகரம் நகரமாகச் சென்று பிரசங்கம் செய்தேன். எல்லோரும் என்னைப் பைத்தியம் என்றார்கள். சிலர், கற்களால் கூட வீசினார்கள். சிறிது காலம் கழித்து உண்மையிலேயே பைத்தியம் பிடித்தவனானேன். பெரும்பாலான நாட்களை பைபிளிலும், தேவாலயங்களிலும் கழித்தேன். அவையிரண்டும் என்னை சொஸ்தப்படுத்தலாயிற்று” என்ற எதிராளி இடையில் நிறுத்தி தானும் மீனொன்றைப் பிய்த்து அதன் தசையை உண்டான். உப்பும், எலுமிச்சைச்சாறும் இருந்தாலும் இன்னும் பிரமாதமாக இருக்குமென்றவன் மேலும் சொன்னான். “பிறகு போக்கற்று அலைந்தேன். மதகலோனாவை பெண் கேட்கச் சென்றபோது அவளின் தாய் இரண்டு வருடங்கள் இராணுவத்தில் இருந்துவிட்டு வா; பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்றாள்.” 

“நாட்டுக்காக வரவில்லை; பெண்ணுக்காக வந்திருக்கிறீர்கள்” என்ற சாத்தான் திடீரென்று, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்துக்கொண்டு எதிராளி மீது பாய்ந்தான். தன்னை நோக்கி வந்த ஆபத்திலிருந்து மிக இலாவகமாகத் தப்பித்துக்கொண்ட எதிராளி, ஒருக்ஷணம், திக்கெற்று நின்றான். பிற்பாடு ஒரு நிலைக்கு வந்த அவன், ஒரு மூர்க்கத்தனத்துடன் சாத்தானோடு சண்டை பிடிக்கலாயினான். தன்னை நோக்கி வந்த சாத்தானை அவன் கையில் பற்றிக்கொண்டு வயிற்றில் முழங்காலால் உதைத்தான். பின்பு, அவன் கையிலிருந்த கத்தியைப் பறித்து அப்பால் எறிந்தான். விரல்களைப் பின்பக்கமாக நெரித்து அப்படியே அவனைச் சுற்றி முதுகுப் பக்கமாகக் கொடுத்தான். பின், தானும் சுற்றிக்கொண்டு சாத்தானை நிலத்தில் கிடத்தினான். மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அவனைக் குறி பார்த்தான். ‘டுஸ், டுஸ்’ என்று வாயால் சப்தமெழுப்பி சுடுவது போல் பாவனை செய்தான். பிறகு இப்படிச் சொன்னான். 

“மனித மனங்களை அறிந்து கொள்ள முனையும் அந்தத் தருணம் சுவாரஸ்யமானது என்பதை நீ அறிவாயா? என்னைக் கொன்று விடுவதால் உனக்கு என்ன கிடைக்கப்போகிறது? இந்த வனாந்தரத்தில் உன்னுடைய எதிர்காலமுமல்லவா நிச்சயமற்றிருக்கிறது.” 

சாத்தானுக்குப் பெரும் லஜ்ஜையாகப் போயிற்று. எதிராளியின் முகத்தைப் பார்ப்பதற்குத் திராணியற்று வேறு எங்கேயோ பார்த்துக்கொண்டு எச்சில் உமிழ்ந்தான். தன்னை எழுப்பிவிடும் பொருட்டு எதிராளி நீட்டிய கையை பற்றிக்கொள்ள மனமில்லாமல் அப்படியே கிடந்தான். அப்போது, எதிராளி மேலும் சொன்னான். “என்னைக் கொல்வதுதான் உனக்குத் திருப்தி தருமாயின் இதோ இந்தத் துப்பாக்கியை எடுத்துக் கொள்! இக்க்ஷணமே என்னைக் கொன்று போடு…!” 

 எதிராளி தன் துப்பாக்கியைத் தூக்கி சாத்தானின் மார்பில் எறிந்தான். பின், மரங்களோடு மரங்கலானான். பின், அப்பெருவுருவம் சிறுதுளியானது. பின், புள்ளியானது. சாத்தான் இவை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தபோது அப்புள்ளியானது தேய்ந்து மறைந்து போயிற்று.  

  •  

தன் தொடைப்பகுதியில் நான்கு இன்ச் அளவுக்கு கிழிந்திருந்த பகுதியை மருத்துவர், விரைப்பு மருந்து ஏதும் கொடுக்காமலே தைத்துக் கொண்டிருப்பதை சாத்தான் பற்களை பொறுமியபடிக்கு பார்த்துக் கொண்டிருந்தான். முதுகை நிமிர்த்தி தன் இரண்டு கைகளாலும் தொடையை இறுகப் பிடித்திருந்தவன்… பின்பு, கட்டிலில் சாய்ந்து படுத்துக் கொண்டான். அவனுக்கு மயக்கம் வருமாற் போல் தோன்றிற்று. அப்போது சாத்தானை நெருங்கிய படைவீரனொருவன் சிறிது நேர இளைப்பாறலுக்குப் பிறகு என்னுடன் வர முடியுமா என்றான். எதுவாக இருப்பினும் இரண்டு மணித்தியாலத்துக்குப் பிறகு பார்த்துக்கொள்ளலாம்; ஏனெனில், நான் சிறிது உறங்க வேண்டுமென்ற சாத்தான் கண்களை மூடி அயர்ந்து போனான்.  

விழிப்பு வந்த சாத்தானுக்கு நடக்க முடியாமலிருந்து. ஒற்றைக் காலால் மற்றக் காலை கெந்தியபடிக்கு நடந்தான். அவனுக்கு அகோரமாகப் பசி எடுத்தது. நேராகச் சமையலறைக் கூடத்துக்குச் சென்றவன், பசிக்கு அங்கிருந்த பயத்தங் களியை சாப்பிட்டும், தாகத்துக்குப் பன்றிக்கால் சூப்பையும் அருந்தினான். அப்போது, முன்னைய படைவீரன் அவனை நெருங்கி, இப்போது உங்களால் வர முடியுமா என்றான். சாத்தான் இராணுவச் சீருடையை அணிந்து கொண்டு அவனோடு கூட நடக்கலானான்.  

அவ்வளவாக வெளிச்சமற்றிருந்த ஒரு சிறிய அறையில் கைகளும் கால்களும் கட்டப்பட்டவாறு எதிராளி தேகத்தைக் குறுக்கியவாறு கிடந்தான். அவன் முகமானது உடைக்கப்பட்டும், உடலானது பாலம் பாலமாய் வெடிக்கப்பட்டுமிருந்தன. சாத்தானுக்கு அக்க்ஷணம் திக்கென்றாயிற்று. அவன் எதுவும் பேசாமல் படைவீரனைப் பார்த்தபோது அவன், இவனிடம், உங்களை மீட்ட அதேநாளில், வனாந்தரத்தின் இன்னோர் மத்தியில் வைத்து இவரை நாங்கள் கைது செய்தோம் என்றான்.  

அவன் மேலும் சொன்னான். “இப்போது இவரைக் கொலை செய்துவிடும்படிக்கு தளபதி எங்களுக்குக் கட்டளை ஒன்றை அனுப்பியுள்ளார். ஆகவே, இவரை மேற்கேயிருக்கும் வனாந்தரத்தின் மய்யத்துக்கு அழைத்துச் சென்று கொலை செய்துவிடும் பொறுப்பை உங்களிடம் ஒப்படைக்கிறோம்” 

சாத்தான் எதிராளியின் அருகில் சென்று கால்களால் அமர்ந்துகொண்டு அவனை உற்றுப் பார்த்தான். அவன் முகம் முழுவதும் இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அவன் கண்கள் நேராக எதிராளியையே பார்த்துக்கொண்டும், கூடவே இரக்கத்துக்குரியவையாகவுமிருந்தன. அப்போது, முன்னைய படைவீரன் “எங்களுக்குப் போதிய அவகாசமில்லை; நாங்கள் சீக்கிரமாகவே இந்த முகாமைக் காலி செய்து கிளம்பியாக வேண்டும். ஆகவே, நீங்கள் இந்த மனிதரை உற்றுப் பார்ப்பதை விடுத்து வனாந்தரத்தின் மய்யத்துக்கு அழைத்துச் சென்று சூரிய அஸ்தமனத்துக்கு முன்னால் கொன்று விடுங்கள்” என்றான். 

சாத்தான் எதிராளியை முழந்தாழிடப் பணித்தபோது வனாந்தரம் முழுவதும் இருள் சூழத் தொடங்கியிற்று. காட்டு விலங்குகளும், காட்டுப் பட்சிகளும் பெரும் குரலெடுத்து அலறத் தொடங்கின. சர்ப்பங்கள் முழுவதும் சாத்தானை நோக்கியும் பறவைகளும், துள்ளித்திரியும் முயல்களும் எதிராளியை நோக்கியும் ஓடின. அப்போது, சாத்தான் எதிராளியிடம் “நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்; நான் உங்களை கொலை செய்துவிடுவேனா அல்லது விட்டு விடுவேனா?” என்றான். 

“நிச்சயமாகக் கொலை தான் செய்வாய் !”  

“ஏன் அப்படி நினைக்கிறீர்கள்?, நேற்று என்னைக் கொலை செய்து விடுவதற்கான அத்தனை சாத்தியங்களிருந்தும் மாறாக என்னைக் கொலை செய்யாமல் விடுத்து, மன்னித்துப் போக விட்டீர்களல்லவா. ஆகவே….” 

“ஆகவே…” 

“ஆகவே, அதன் பிரதி பலனாக உங்கள் மன்னிப்புக்கு நன்றிக் கடனாக நானும் உங்களைக் கொலை செய்யமால் விட்டு விடுவேனென நீங்களேன் எண்ணவில்லை?” 

“ஏனெனில், நீ சாத்தான் அல்லவா…!” 

எதிராளி இப்படிக் கூறியதைக் கேட்ட சாத்தான் கைகளைக் கோர்த்துக்கொண்டு முன்னும் பின்னுமாக உசாத்தித் திரிந்தான். அவனுக்கு மண்டை கனப்பது போல் படவே புகை பிடித்தான். பின்பு, அதைக் காலில் போட்டு மிதித்தவன், தன்னுடைய ஆடைப் பையிலிருந்து வளையம் போன்றிருந்த ஒரு பொருளை வெளியில் எடுத்தான். அதுவொரு முட்கிரீடம். அந்த முட்கிரீடத்தை எதிராளியின் தலையில் வைத்து கீழ்கண்டவாறு சொன்னான்.  

“ஏனெனில், நீங்கள் ஜீசஸ் அல்லவா…!”  

பின்பு, துப்பாக்கியை எடுத்தவன் ஏதோ நினைத்தவனாக அதை மறுபடியும் உள்ளே வைத்துக்கொண்டான். இப்போது, அவன் கையில் ஒரு சிறிய கூரான கத்தி இருந்தது. இதைக் கண்ணுற்ற எதிராளி தன் கடைசி வார்த்தையை மூன்று தடவைகள் கீழ்வருமாறு உதிர்த்துக்கொண்டான். 

“ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி” 

“ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி” 

“ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி” 

சாத்தான் தன் கையிலியிருந்த கத்தியை வைத்துக்கொண்டு ஒரு பன்றியின் தலையை அறுப்பது போல் எதிராளியின் கழுத்தைச் சரசரவென்று அறுக்கத் தொடங்கியபோது எதிராளியின் கழுத்திலிருந்து இரத்தமானது கொப்பளிக்கத் தொடங்கிற்று. எதிராளியின் தலையை கைகளில் ஏந்திக்கொண்டு சாத்தான் பெரும் குரலெடுத்து அந்த வனாந்தரமே அதிர்ந்துபோகும் படிக்கு எக்காளமிட்டுச் சிரித்தான். 

அப்போது, அந்த அடர்ந்த வனாந்தரத்தைக் கரு மேகங்கள் சூழ்ந்து கொண்டன. நிலம் அதிர்ந்து இரண்டாகப் பிளவுபட்டுப் போயிற்று. விலங்குகள் ஒன்றோடொன்று தங்களை இடித்துக்கொண்டும், பறவைகள், பட்சிகளாவன கடுமையான நிலத்து பகுதியில் தங்கள் அலகுகளையும், தலைகளையும் மோதி மோதியும் மாண்டு போயின.  

3,  

நான் இந்தக் கதை முழுவதையும் ஏசுவிடம் சொல்லி முடித்தபோது அவன்  எனக்குக் கேட்காதபடிக்கு எதையோ முணுமுணுத்தான். அவனுக்குக் கதை பிடிக்கவில்லையென்பது எனக்குத் தெரிந்து போயிற்று. அடிக்கடி உடலைக் குறுக்குவதும், பின் நிமிர்வதுமாக அவன் இருந்தான். திடீரென்று, ஒரு வேகத்தோடு எழுந்து கொண்டவன், அதெப்படி எதிராளியைச் சாத்தான் கொலை செய்யலாமென்றான்.  

நான் எதுவுமே சொல்லாமல் மவுனமாக ஏசுவையே பார்த்துக் கொண்டிருந்தேன். சிறிது நேர இடைவெளிக்குப் பின்பு, ஏன் கதை புரியவில்லையா என்றேன். ஏசு என்னுடைய இந்தக் கேள்விக்குப் பதிலேதும் சொல்லாமல் கொஞ்ச நேரம் உசாத்தித் திரிந்துவிட்டு மறுபடியும் கதிரையில் உட்கார்ந்து கொண்டான். “என்னயிருந்தாலும் சாத்தான் எதிராளியைக் கொலை செய்திருக்கக் கூடாது; ஏனெனில், எதிராளி அவனை மன்னித்து விட்டவன் அல்லவா?” 

“அது கிடக்கட்டும். சாத்தான் எதிராளியைக் கொலை செய்ததற்கு ஒரு காரணமிருக்கிறது. அதை உன்னால் கண்டுபிடிக்க முடிகிறதா?” 

இப்போது மறுபடியும் எழுந்துகொண்ட ஏசு மறுபடியும் உசாத்தித் திரிந்தான். என்னைப் பார்த்து ‘சைஸ’ என்றவன், அந்தக் காரணத்தை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றான். “நீ தானே சொன்னாய் உங்களுடைய கதைகள் இலகுவில் புரிந்து கொள்ளப்படுகின்றன; வாசக இடைவெளியே இல்லையென்று. இதோ… இப்போது ஒரு கதை எழுதியிருக்கிறேன்! இந்தக் கதையின் பெயர் சாத்தானின் கால்கள். கதையில் எல்லாவற்றுக்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது; குறியீடுகளால் நிரம்பியிருக்கிறது. இவை எல்லாவற்றையும் விட சாத்தானின் கால்களுக்கு ஒரு கருவும் இருக்கிறது. ஆனால், மிக ஆழத்தில் ஒளிந்திருக்கிறது. ஒரு நல்ல வாசகன், எழுத்தாளன் எப்படி எழுதினாலும் அதன் அழகியலையும், கூறுகளையும் கண்டடைவான்.“  என்றுவிட்டு நான் ஏசுவையே கண் வெட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.  

“என்னயிருந்தாலும் எதிராளியை சாத்தான் கொலை செய்திருக்கக் கூடாது. அப்படிச் செய்ததன் மூலம் அவன் நன்றி அற்றவன் ஆகிறான். சாத்தான் எதிராளியை மாத்திரம் கொலை செய்யவில்லை; தார்மீகத்தையும், அன்பையும், அறத்தையும் சேர்த்தே அவன் கொலை செய்திருக்கிறான்” என்ற ஏசு மேலும் சொன்னான். “குற்றவுணர்வு என்னும் பெரும் நரகத்திலிருந்து அவன் எப்படித் தப்புவிப்பான்?” 

“அப்படியெனில், எதிராளி சாத்தானை மன்னிக்கவில்லையென்று வைத்துக்கொள். அவன் இவனைக் கொலை செய்ய முற்படும்போது இவன் எப்படியோ தப்பித்து விடுகிறானென்றும் வைத்துக் கொள். இப்போது சாத்தானின் முறை. எதிராளி அவன் முன் மண்டியிட்டு இருக்கிறான். எந்தத் தயக்கமுமில்லாமல், குற்றவுணர்வுமில்லாமல் சாத்தான் அவனைக் கொன்று போட்டு விடலாமா? அவ்வாறெனில், சாத்தானின் இந்தச் செய்கையில் நீ குறிப்பிட்ட அறமும், தார்மீகமும் உள்ளதா?”  

“சர்வ நிச்சயமாக…!” 

“மொத்தக் கதையும் இந்த உன்னுடைய ‘சர்வ நிச்சயத்தில்’ ஆழப் புதைந்திருக்கிறது. தேடிக் கண்டடைந்து கொள் ஏசு. இப்போது நேரமாகி விட்டது; நாம் இன்னொரு நாள் சந்திக்கலாம்” நான் இப்படிச் சொன்னதும் ஏசுவுக்கு ஒரு மாதிரி இருந்திருக்க வேண்டும். என்னையே கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்தவன், காலியாகியிருந்த வைன் போத்தலை உறையில் வைத்துச் சுற்றினான். பின்பு, என்னைப் பார்த்து, எல்லாவற்றையும் கண்டடைந்து விட்டு அதன் பின்னர் உங்களிடம் வருகிறேன் என்றான். அவன் போகும் திசையையே பார்த்துக்கொண்டிருந்த எனக்கு, திடீரென்று, இவனுடைய நானூறு யூரோக்களை சீக்கிரமாகவே திருப்பிக் கொடுத்துவிட வேண்டுமென்ற சிந்தனை வரலாயிற்று.  

முற்றும்.  

  •  

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Scroll to Top