யூதாஸின் முத்தம்


‘நாங்கள் இந்நகரத்தின் பாதுகாவலர்கள். மாட்சிமை பொருந்திய பிலாத்துவின் சேவகர்கள். இன்று அவரின் கட்டளைப்படி உம்மைப் பிடித்துப் போக வந்திருக்கின்றோம். ஆகவே முரண்படாமலும், தாமதியாமலும் எம்மோடு வாரும்.’
அதைக் கேட்டு இயேசுவின் சீடர்களில் ஒருவனான யூதாஸ் இஸ்காரியோத்து என்பவன் கோபப்பட்டான். அவன் அவர்களை நோக்கி, இவர் எங்களின் தலைவர், தேவனின் குமாரன், மாத்திரமல்லாது பரிசுத்தமானவரும் ஆவார். இவரைக் கைது செய்ய நாங்கள் அனுமதியோம். ஆகவே இந்த இடத்தைவிட்டுப் போய்விடுங்கள். அதுவே உங்களுக்கு நல்லது என்றான். பதிலுக்கு யூத வீரர்கள் அனைவரும் ஒருவரையொருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டார்கள். இந்தச் சூனியக்காரனா உங்கள் தலைவன், புரிந்துகொள்ளுங்கள். இவன் தேவனின் குமாரனுமல்ல, பரிசுத்தமானவனுமல்ல.  மாறாக இவனொரு வித்தைக்காரன், மாயமந்திரங்கள் தெரிந்தவன். அவற்றை வைத்துக்கொண்டு தன்னைத் தானே தேவனின் குமாரனென்றும், உங்களை இரட்சிக்க வந்தவனென்றும் ஏமாற்றிக்கொண்டு அலைகிறான். ஆகவே தயவுசெய்து அவனை எங்களோடு அனுப்ப அனுமதியுங்கள். நாம் இவனைக் கைது செய்து பிலாத்துவின் முன்னால் ஒப்புக் கொடுக்கின்றோம். அவர் இவனை விசாரணை செய்து தண்டனை வழங்குவார் என்றார்கள்.

யூத வீரர்கள் கூறியதைக் கேட்டு மேலும் கோபப்பட்டவனான யூதாஸ் ஓரடி முன்னால் வந்து, தன்னுடைய இரண்டு கைகளையும் பலமாக விரித்துக் கொண்டான். யூதாஸ் அவ்வாறு செய்வதைக் கண்ட மற்றைய சீடர்களும் யூத வீரர்களை நோக்கி அடியெடுத்து வந்தார்கள். கூடியிருந்த பெத்தலகேம் நகர மக்கள் அனைவரின் மூஞ்சிகளிலும் கொஞ்சம் அரவம் அப்பியிருந்தது. இப்பொழுது யூதாஸ் யூதர்களை நோக்கி பிசாசுகளே, மரியாதையாகச் சென்றுவிடுங்கள்; இல்லையேல் உங்கள் உயிர் உங்கள் உடலில் தங்காது. எங்கள் தலைவர் மேல் எவனொருவன் கை வைக்கின்றானோ அவன் கை எலும்பை முறித்து அவனிடமே கொடுப்போம். தன்னுடைய கையின் சுற்றளவையும், நீளத்தையும் அறிய விரும்புபவன் மாத்திரம் முன்னால் வாரும் என்றான்.

நிலைமை படுபயங்கரமானது என்பதை யூதர்களின் தலைவன் மோசேயு புரிந்து கொண்டான். யூதாஸையே முறைத்துப் பார்த்த அவன், மற்ற வீரர்களை நோக்கி திரும்பிப் போகும்படி கட்டைளையிட்டான். யூத வீரர்கள் தோல்வியுற்று கலைந்து போவதைப் பார்த்துக்கொண்டிருந்த பெத்தலகேம் நகர மக்கள் கூட்டம் கையசைத்து ஆரவாரம் செய்தது. அந்தக் கூட்டத்தில் தன் கண்களை மாத்திரம் தெரியும்படி விட்டு, மற்ற அங்கங்கள் அனைத்தையும் வெண்ணிற ஆடையோன்றினால் மறைத்திருந்த சாராவும் நின்று கொண்டிருந்தாள். அவள் யூதாஸின் காதலி.

எப்பொழுதும் வெண்ணிற ஆடைகளையே அணியும் சாரா பார்ப்பதற்கு தேவதை போலிருந்தாள். எரியும் மெழுகுகளின் வெளிச்சம் பட்டு மினுமினுக்கும் தொழுவத்தில் இருக்கும் தங்க நிற ஓலைகளின் நிறம்போல் அவள் தேகமிருந்தது. அன்பும் கருணையும் கொண்ட அவளை பார்த்த மாத்திரத்திலேயே யூதாஸ் காதலிக்க ஆரம்பித்தான். அதை அவன் அவளிடம் சொன்னபோது சாராவும் மறுப்பேதும் சொல்லாமல் ஆமோதித்தாள்.

நான் உங்களுக்குச் சொல்லுகின்றேன், தேவனை நம்புங்கள், யாரையும் நிந்தியாதீர்கள். உதவி செய்வர்களுக்கு மாத்திரம் பிரதி உதவி செய்யாதீர்கள். நன்றியென்பது அதுவல்ல. எவன் ஒருவன் உங்களுக்கு உதவி செய்கிறானோ, அதை நீங்கள் மரணிக்கும் வரை மறவாதிருங்கள். அவர்கள் செய்ததை விடப் பலமடங்கு பிரதியுதவிகளை நீங்கள் செய்திருக்கலாம். ஆனால் அது ஒரு நாளும் நன்றியாகாது. நன்றியென்பது மறவாதிருத்தலே என்று இயேசு பிரசங்கம் செய்து கொண்டிருந்தார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த யூதாஸின் கண்கள் ஒளிர்ந்தன. அவன் இயேசுவையையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான். இயேசுவின் வாயிலிருந்து உதிர்ந்த ஒவ்வொரு வார்த்தையும் அவனைப் பரவசமூட்டின. தனிமையில் இருப்பதை விட இயேசுவோடிருத்தல் இன்பமென்று அவன் வாய் முணுமுணுத்தது.  உண்மையில் தனிமையென்பது மரணமென்பதை அவன் உணர்ந்திருந்தான். தனித்திருக்கும் பொழுது அவன் தானொரு சவப்பெட்டிக்குள் மூடப்பட்டிருப்பதாகவே நினைத்துக் கொள்வான். யாருமற்ற அந்தச் சாமமும், கொறித்துக் கொண்டிருக்கும் எலிகளின் வாடையும் அவனை உண்மையிலேயே ஒரு சவம் போலாக்கியது.

இயேசுவோடு கூடவிருந்த நாட்களில் தன்னுடைய அம்மாவைப் பார்த்துவர முடிவெடுத்தான். யூதாஸ் கடைசியாக வீட்டைவிட்டு வெளியேறிய போது அம்மா படுத்த படுக்கையாகவே கிடந்தாள். யாருடனும் அதிகமாகப் பேசமாட்டாள். அவள் அறையில் எப்பொழுதும் ஒரு இருண்மை சூழ்ந்திருக்கும். அறையின் திரைச்சீலைகளை விலக்கிக் கொள்ளவும் அவள் அனுமதியாள். சகோதரிகள் இருவருமே அம்மாவை கவனித்துக் கொண்டார்கள். அதுவும் தனக்கான உணவு வேளையிலும், தேனீர் வேளையிலும் மாத்திரமே. மற்றபடி அவள் எப்பொழுதுமே தனிமையில்தானிருந்தாள்.

யூதாஸ் இந்த மண்டபத்தில் அமர்ந்திருப்பதற்கு இன்னொரு காரணமுமிருந்தது. கடைசியாக யூதாஸ் சாராவைச் சந்தித்த போது அவள் இவனிடம் தன்னுடைய அண்ணன் இப்ராகிம் ஏழு பேர் கொண்ட ஒரு புரட்சிப் படையை ஆரம்பித்திருப்பதாகவும், இந்த நகரின் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக அவர்களொரு மறைமுக யுத்தத்தினை ஆரம்பிக்கப் போவதாகவும், அதனால் அவசரமாக ஒரு முப்பது வெள்ளிக்காசுகள் வேண்டுமென்றும் கேட்டிருந்தாள். யூதாஸ், இப்ராகிமைப் பற்றியும், அவனுடைய புரட்சிப்படை பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறான். முதலில் சிறு குழுவாக ஆரம்பித்து, பின்னர் படிப்படியாக மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற ஒரு பெரிய இயக்கமாகத் தன்னுடைய படையை உருவாக்குவதே இப்ராகிமின் திட்டம். ஆனால் அதுவொன்றும் அவ்வளவு லகுவான காரியமாக யூதாஸுக்குத் தோன்றவில்லை. அரசுக்கு எதிராகப் போராட்டம் செய்வதென்பது மரணத்தை நோக்கிச் செல்வதென்பதை அவன் அறிந்தே வைத்திருந்தான். பிலாத்துவின் வீரர்கள் அவ்வளவு முட்டாள்களல்ல. எப்படியும் இவர்களைக் கண்ணி வைத்துப் பிடித்து விடுவார்கள். இதை அவன் சாராவிடம் சொல்லிப் பார்த்தான். ஆனால் அவளோ தான் இப்ராகிம் மீது அளவு கடந்த அன்பு வைத்திருப்பதாகவும், முப்பது வெள்ளிக் காசுகள் மாத்திரம் அவனிடமிருக்குமானால் அவன் தன்னுடைய இயக்கத்தைக் கூடிய சீக்கிரமே ஆரம்பித்து விடுவானென்றும், ஆகவே எப்படியாவது ஒரு முப்பது வெள்ளிக் காசுகளை தனக்குத் தந்துதவுமாறு அழுது மன்றாடினாள். அவள் கண்களிலிருந்து பிரவாகித்த கண்ணீரைக் கண்ட யூதாஸ், அவள் மேல் இரக்கப்பட்டவனாக அவள் தலையின் உச்சியில் மெல்ல முத்தமிட்டு, பயப்படாதே நான் உனக்கு உதவுவேனென்று சத்தியம் செய்தான்.

சாராவின் மீதிருந்த காதலினால் சத்தியம் செய்திருந்தானேயொழிய , உண்மையில் முப்பது வெள்ளிக் காசுகளை எப்படிப் புரட்டுவதென்று அவனுக்குத் தெரியவில்லை. அப்பாவிடம் கேட்கலாமா என்று யோசித்தான். ஆனால் நான் இயேசுவோடு இருப்பது அவருக்குப் பிடிக்கவில்லை. அந்தப் பைத்தியக்காரனோடு சுற்றாதேயென்று பலமுறை சொல்லியிருக்கின்றார். இந்த நிலையில் அவரிடம் போய் காசு கேட்பது உத்தமமல்ல. அத்தோடு முப்பது வெள்ளிக்காசுகளுக்கு அவரெங்கே போவார்? ஏற்கனவே படுத்த படுக்கையாய்க் கிடக்கும் அம்மாவின் மருத்துவச் செலவுக்கே அப்பாவின் முக்கால்வாசி சொத்து கரைந்துவிட்டது.

தன் அம்மாவின் ஒன்றுவிட்ட சகோதரியான கைலாவின் மகனான பேதுருவிடம் கேட்டுப் பார்த்தான். ஆனால் அவனோ தன்னிடம் இல்லையென்று மூஞ்சியில் அடிக்குமாற்ப்போல் பதில் சொன்னான். பேதுரு பொய் சொல்கிறானென்பது யூதாஸுக்கு விளங்காமலில்லை. ஊரிலேயே மிகப் பெரிய ஈச்சம்பழ வியாபாரி. போன கிழமைகூட அவன் நிலத்தில் விளைந்த ஈச்சம் பழத்திற்கு அதிக கிராக்கி ஏற்பட்டு சில்லறை வியாபாரிகள் மூட்டை மூட்டையாய் வாங்கிப் போனார்கள். ஆனால் அவன் பேதுரு மீது கிஞ்சித்தும் கோபம் கொள்ளவில்ல. நல்லவனென்றால் யார்? எவனொருவன் எங்கள் தேவைகளை நிறைவேற்றுகின்றானோ அவனே நல்லவன் என்ற எங்களுடைய சிந்தனை சரியானதுதானா? முதலில், அது எங்களுடைய சிந்தனையா, அல்லது புரிதலா?

ஸ்தேயம் செய்யலாமா என்று கூட யோசித்தான். ஆனால் ஸ்தேயம் செய்து அவனுக்குப் பழக்கமில்லையென்பதால் அந்த யோசனையையும் கைவிட்டான். தவிர, ஸ்தேயம் செய்வதற்குக் கூடுதல் பலம் வேண்டும். பொய் சொல்ல வேண்டும். பொய் சொல்வதாக இருந்தால் கண்டதையும் ஞாபகம் வைத்திருக்க வேண்டும். யூதாஸுக்குப் பொய் பேசவும் வராது, அத்தோடு, ஒன்றை நினைவில் வைத்திருக்கும் ஆற்றலும் குறைவு.

யாவற்றையும் விட மேலான சாராவிற்கு,

உண்மையில் நேற்றிரவு நான் இறந்து விட்டேனென்றுதான் நினைத்தேன். உனக்கு நினைவிருக்கிறதா, கடந்த வாரமேன்று நினைக்கிறேன், நீ என்னைச் சந்தித்துவிட்டுச் சென்றிருந்த மறுநிமிடம் நீ கூறியவற்றை நான் மீளவும் யோசித்துப் பார்த்தேன். அதில் அவ்வளவாக உடன்பாடில்லை. ஏனென்று உன்னை நேரில் சந்திக்கும் பிறிதொரு சந்தர்ப்பத்தில் சொல்கிறேன். இலைகளுக்கும், கிளைகளுக்கும் எவ்வாறு முடிச்சுப் போடுவது சொல். அல்லது காய்களுக்கும் இலைகளுக்கும்தான் முடிச்சுப் போட இயலுமா? உண்மையைச் சொல்வதாக இருந்தால், நீ எனக்குக் கிடைத்த மிகப் பெரிய சொர்க்கம். அந்த சொர்க்கத்தை இழக்க நான் விரும்பவில்லை. அதன் மடியிலேயே வாழ விரும்புகிறேன், அதன் மடியிலேயே இறக்கவும் விரும்புகிறேன். நான் பின்பற்றும் எங்களுடைய ஓசானாவை நீ அறிவாய் என்று நினைக்கிறேன்.  அவரும்  ஓரிரு சர்ந்தப்பங்களில் உன்னைப் பற்றி என்னிடத்தில் விசாரித்தும் இருக்கிறார்.

ஒருதடவை அவரைப் பார்ப்பதற்கு குஸ்ட நோயினால் பீடிக்கப்பட்டிருந்த மனுஷியொருத்தி வந்திருந்தாள். அவளுக்கு வயது ஐம்பது இருக்கலாம். அவள் முகத்திலிருந்து சீழ் வடிந்து கொண்டிருந்தது. வந்தவள் நேராக ஒசானாவைப் பணிந்து அவர் கரங்களை வருடிக் கொடுத்தாள். தான் கொண்டுவந்திருந்த பரிமளத் தைலத்தினால் அவர் பாதங்களைப் பூசித்தாள். கூடியிருந்தவர்கள் குஷ்ட நோய்க்காரியைப் பார்த்து அப்பால் போ பிசாசே என்று கத்தினர். அப்போது இயேசு கூடியிருந்தவர்களை நோக்கி அப்படிச் சொல்லாதீர்கள் இவள் நோய் பிடிக்கப்பட்டவளாகவிருக்கலாம். ஆனால் இவள் பரிசுத்தமானவள். இவள் இதயம் பஞ்சைப் போன்று மென்மையானது. புறத்தைப் பார்த்துக் கணக்கிடாதீர்கள். அவர்களின் அகம் அந்த மேகத்தினைவிட அழகான ஒன்றாக இருக்கலாம். அவள் அந்த அறையைவிட்டு வெளியேறியபோது அவள் முகத்தில் சீழ் வடிவது நின்றிருந்தது.

உன்னுடைய காமத்தில் நான் பெரும் பங்கு கொள்கின்றேன். உன் உடல் என் தேகத்தை வெப்பம் கொள்ள வைக்கிறது. சிலநேரங்களில் அது ஒரு தீமலையைப் போல் பெரும் சத்தத்துடன் எனக்குள் உழன்று கொண்டிருக்கிறது. வெடித்து விடுமோ என பயமாகவும் இருக்கிறது. தவறாக நினைத்துவிடாதே சாரா, உன்னோடு இருந்த நாட்களில் என் காமம் எழுச்சி கொள்கிறது. ஒரு ஆட்டு மந்தையைப் போல் உன்னை மேய வேண்டுமெனத் தோன்றுகிறது. நீ அகண்ட பச்சைப் புல்வெளியாக இருக்கிறாய். நானோ ஒரு புடைத்துக்கொண்டிருக்கும் குறியினையுடைய மறியாக மாறி உன்னை மேய்ந்து கொண்டிருக்கிறேன். விடாய் எடுத்தபோது உன்னைப் பருகுகின்றேன்.

மீண்டும் என்னைத் தவறாக எண்ணி விடாதே. காமம் என்னையும் மீறி என் உடலின் துவாரங்கள் வழியே ஒரு புகையைப் போல் கசிந்து கொண்டிருக்கிறது. மூச்சு முட்ட முட்ட உன் தேகம் முழுவதும் முத்தமிட வேண்டும். நேரில் ஓரிரு வார்த்தைகளையே உதிர்த்து விடுகின்ற நீ, நேற்றைய என் கனவில் நிறைய கெட்டவார்த்தைகள் பேசினாய். ஆம், அது அற்புதமாக இருந்தது. உண்மையில் கலவியின் உச்சமே கெட்டவார்த்தைகளை உச்சரிப்பதுதான். அதுவும் ஒரு பெண் நாணமில்லாமல் கெட்டவார்த்தை பேசுவதென்பது தேன்கூட்டிலிருந்து இறக்கப்பட்ட தேனின் சுவையைப் போன்றது. அன்புடன் யூதாஸ்.

இந்தக் கடிதம் எழுதி இரண்டு நாட்களின் பின் சாராவிடமிருந்து பதில் கிடைக்கப்பெற்றது. அதில் பின்வருமாறு எழுதியிருந்தது.

யூதாஸ்,

வாழ்க்கையின் சகல பாடுகளையும் கண்டுவிட்டேன். மரணமானது என்னைத் துரத்துவதாக எண்ணுகிறேன். நேற்று, நீண்ட முடியினையும், பெருத்த உடலையும் கொண்ட ஒரு மனிதரைச் சந்தித்தேன். அவர் கூறிய விடயங்கள் என்னை அதிர்ச்சியுற வைக்கவில்லை. அது என்னவென்று உன்னை நேரில் சந்திக்கும் பிறிதொரு நாளில் தெளிவுபடுத்துகிறேன்.

காமத்தை விட்டொழி யூதா; ஏனெனில், இப்போதைய சூழ்நிலையில் அவை தற்போது நம்மிருவருக்கும் வேண்டாமென்றே எண்ணுகிறேன். நேற்றிரவு ஒரு கொடும்கனாக் கண்டேன். இப்ராகிம் யூத வீரர்களிடம் பிடிபட்டுவிட்டான். அவனுடைய கபாலமானது உடைக்கப்படுவதை நேரில் கண்டேன். அவனுடைய கபாலம் மாத்திரம் என்றல்ல. இயக்கத் தோழர்கள் அனைவரின் கபாலங்களும் உடைக்கப்பட்டிருந்தன. எங்கு பார்த்தாலும் துண்டு துண்டாய்ச் சிதறியிருந்த மூளையின் குருணித் தசைகளும், பிசிறிய ரத்தமுமாகவே இருந்தது. நிஜமாகவே அப்படி நிகழ்ந்துவிடக் கூடிய சாத்தியம் ஏறக்குறைய இருக்கிறது. ஐயமாக இருக்கிறது யூதாஸ்.  நாம் என்ன செய்துவிடப் போகிறோம். நாளையே என்னுடைய கபாலமும், உன்னுடைய கபாலமும் உடைக்கப்படலாம் அல்லவா. நிகழப்போவது எதுவாகவும் இருக்கலாம். ஆனால் விழித்திருப்பது உத்தமமல்லவா.

இப்படியாக யூதாஸ் முப்பது வெள்ளிக் காசுகளுக்காக அலைந்து கொண்டிருந்தபோது அவன் தாயையும், தகப்பனையும், சகோதரிகளையும் யூத வீரர்கள் சிலர் பிடித்துப் போனார்கள். இதைத் தன் நண்பர்கள் மூலமாக அறிந்துகொண்டிருந்த யூதாஸ் மிரட்சியடைந்தவனாக சாராவைப் பார்க்கக் கிளம்பினான். வீடு மங்கலான வெளிச்சத்தில் கொஞ்சம் இருண்மையாக இருந்தது. வீட்டின் இடது மூலையில் அறையை வெப்பமாக வைத்திருப்பதற்காகக் கணல் அடுப்பு ஒன்று எரிந்து கொண்டிருந்தது. யூதாஸைக் கண்ட சாரா அவனைக் கட்டியணைத்து முத்தமிட்டுக் கொண்டாள். இருவர் கண்களும் நனைந்திருந்தன. சாராவின் தலையில் அன்போடு கை வைத்திருந்த யூதாஸ் தன் கைகளை அவளின் இடுப்பை நோக்கி நகர்த்தியபோதுதான் சாராவின் வீட்டுக் கதவு தட்டப்பட்டது.

அந்தப் பெரிய அறையில் எட்டு தூண்கள் இருந்தன.  ஒவ்வொரு தூண்களிலும் எட்டுத் தீப்பந்தங்கள் எரிந்து கொண்டிருந்தன. அந்தத் தீப்பந்தங்களின் வெளிச்சம் பட்டு யூதாஸின் முகம் மஞ்சள் நிறமாக இருந்தது.  சிகப்பு நிறக் கம்பளித் துணியொன்றினால் தன் தலையை இறுகச் சுற்றி மூடியிருந்தான்.  அவன் முகம் அலங்கோலமாக இருந்தது. சிறிது நேரத்தில் அந்தப் பெரிய மண்டபத்தின் கதவைத் திறந்துகொண்டு பிலாத்துவும், அவரைப் பின் தொடர்தவர்களாக ஐந்து யூத வீரர்களும் உள்ளிட்டார்கள். வந்தவர்கள் யூதாஸின் தோள்மூட்டைப் பிடித்துத் தூக்கி பிலாத்துவின் முன் மண்டியிட வைத்தார்கள். அப்போது பிலாத்து அவனை நோக்கிச் சம்மதமா என்றார்

இவன் பதிலேதும் பேசாமல் நிலத்தைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான்.

அவர்கள் கடைசி இராப்போசனத்தில் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் முன்னே ஒரு விசாலமான மேசையும், சில கதிரைகளுமிருந்தன. அந்த விசாலமான மேசையில் சில ரொட்டித் துண்டுகளும், திராட்சை ரசங்களினால் நிரப்பப்பட்ட கோப்பைகளுமிருந்தன. அப்போது இயேசு கதையொன்றைச் சொல்ல ஆரம்பித்தார்.

மதுச்சாலை ஒன்றில் ஒருவன் மது அருந்திக் கொண்டிருந்தான். அவன் முன்னே நீல நிறக் கம்பளித் துணியால் போர்த்தப்பட்ட ஒரு கிழவனின் பிணம் கிடத்தப்பட்டிருந்தது. கிழவனுக்கு எழுபது வயது இருக்கலாம். அதன் முகம் வெளிறிப் போயிருந்தது. மது அருந்திக் கொண்டிருந்தவன் அப்போதுதான் பிணத்தை முழுவதுமாகப் பார்த்தான். அந்தப் பிணம் அவன் தந்தையினுடையது. அவன் தாயும், சகோதரனும் இந்தப் பிணத்தை இப்போதுதான் இவனிடம் ஒப்படைத்து விட்டுப் போயிருந்தார்கள். பிணத்தின் வலது கையின் நான்காவது விரலில் ஒரு தங்க மோதிரம் மினுமினுத்தது. மது அருந்திக் கொண்டிருந்தவன் கோப்பையிலிருந்த கடைசிச் சொட்டு மதுவையும் உறிஞ்சிவிட்டு வெற்றுக் கோப்பையை பலமாக மேசையில் வைத்தான். இருக்கையை விட்டு மெதுவாக எழுந்தான். போதையில் சற்று அசைந்தான். பின் தன் தந்தையின் பிணத்துடன் இடுகாட்டுக்குச் சென்ற அவன் பிணத்தைப் புதைப்பதற்கான இடமொன்றைத் தேர்வு செய்தான். அந்த இடத்திலேயே ஆறடி குழி ஒன்றைத் தோண்டினான். வலது கையின் நான்காவது விரலில் அணியப்பட்டிருந்த தங்க மோதிரத்துடன் பிணம் குழியில் இறங்கலாயிற்று.

வானம் நீல நிறத்திலிருந்தது. இயேசுவானவர் ஆலிவ் தோட்டமொன்றின் மத்தியில் நின்றுகொண்டு தேவனை நினைத்து மன்றாடினார். பின்பு தன்னோடு கூட வந்திருந்த சீடர்களை நோக்கி ஜெபம் பண்ணுங்களென்றார் .
பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படிச் செய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல; உம்முடைய சித்தத்தினாலே அது ஆகக் கடவது.

ஜெபம் முடிந்ததும் ஆலிவ் மலையை விட்டுக் கீழிறங்கிய இயேசு தன்னுடைய சீடர்கள் அனைவரும் நித்திரை செய்வது கண்டு, அவர்களை எழுப்பி நீங்கள் நித்திரை கொள்வது ஏனோ, எழுந்து ஜெபம் பண்ணுங்கள் என்றார்.

அப்போது ஆயர்களும், மூப்பர்களும், யூத சேவகர்கள் சிலரும் இயேசுவைக் கைது பண்ணும் பொருட்டு ஆலிவ் தோட்டத்தை நோக்கி வந்தார்கள். அவர்களில் யூதாஸ் இஸ்காரியோத்துவும் கூட இருந்தான். வந்தவன் நேராக இயேசுவை நோக்கிச் சென்று அவரின் வலது கன்னத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்த முத்தத்தையிட்டான்.

அப்பொழுது இயேசு யூதாஸை நோக்கி மென்மையாகச் சிரித்தார். பின்பு அவர் தன்னைச் சுற்றியிருந்த ஆயர்களையும, மூப்பர்களையும் நோக்கி ஒரு கள்ளனைப் பிடிக்கப் புறப்பட்டு வருவது போல் நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துப் புறப்பட்டு வந்தீர்களே என்றார்.

அப்போது யூத வீரர்களிலே ஒருவன் பேசாமல் எம்மோடு கூட வாரும் என்று கூறி அவரைக் கைது செய்தான்.

நான் யாரை விடுதலை செய்ய வேண்டுமென்று நீங்கள் எண்ணுகிறீர்கள். பரபாஸ் என்னும் இவனையா அல்லது இயேசு என்னும் இவனையா என்று பிலாத்தானவன் தனக்கு முன்னால் கூடியிருந்த மக்களிடம் கேட்டுக் கொண்டிருந்தான். பரபாசையே விடுதலை செய்யுங்கள் என்று அலறிய அந்த மக்கள் கூட்டத்துக்கிடையில் இருந்துகொண்டுதான் யூதாஸ் இயேசுவையே விடுதலை செய்யுங்கள், இயேசுவையே விடுதலை செய்யுங்கள் என்று கண்ணீர்விட்டுக் கதறியழுதான். அவன் கூறியது அங்கிருந்த யாருக்குமே கேட்கவில்லை. அவன் வாயிலிருந்து வெளிவந்த சொற்கள் காற்றில் படபடத்து அடங்கிப் போயின.

பிலாத்துவும் ஆயர்களும் மூப்பர்களும் கூடியிருந்த அந்த மண்டபத்துக்குள் உள்ளிட்ட யூதாஸ் தன் கையிலிருந்த வெள்ளிக் காசுகளடங்கிய பையினை கோபத்துடன் நிலத்தில் தூக்கியெறிந்தான். அப்போது வெள்ளிக்காசுகளானது சிதறத் தொடங்கிற்று. அவன் அவ்வாறு செய்வதைக் கண்ட பிலாத்து உனக்கு இவைகள் வேண்டாமா என்றார்

வேண்டாம், என்னுடைய ஓசானா தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்வாரென்று நினைத்துத்தான் நான் இவைகளை உங்களிடமிருந்து பெற்றுக்கொண்டேன். ஆனால் என்னுடைய ஓசானா இறக்கப்போகின்றார். அதுவும் என் மூலமாக, என்னுடைய துரோகத்தினால். என்னுடைய ஓசானாவின் இறப்பினால் உண்டாகும் பணம் எனக்கு வேண்டவே வேண்டாம். இப்பொழுது அரைப்பாவியாக இருக்கும் நான் இப்பணங்களைப் பெற்றுக் கொள்வதன் மூலம் முழுப்பாவியாகி விடுவேன்.

யூதாஸ் வனாந்திரத்தையடைந்தபோது வனாந்திரமானது இருள் மண்டிக் கிடந்தது. மரங்களும், செடிகளும், கொடிகளும், நிலவும் அவனோடு கூட நடக்கலாயின. தான் செய்த காரியத்தை நினைத்து யூதாஸ் கலங்கினான். அப்பொழுது அவனை நோக்கி ஊர்ந்துவந்த சர்ப்பமொன்று இப்பொழுது நீ செய்யப்போவதென்னவோ என்றது. சர்ப்பத்தை கண்டு திடுக்கிட்டவனான யூதாஸ் சர்ப்பத்தை எட்டி உதைத்தான். சர்ப்பமானது ஒரு ஓநாயாக உருமாறிற்று.

அதைப் பார்த்து மேலும் கலங்கியவனான யூதாஸ் கற்சரடுகளின் மேல் மண்டியிட்டு உட்கார்ந்தான். தன் இரு கைகளையும் பொத்திப் பிடித்தவாறே ஓசானாவை நினைத்து மன்றாடினான்.

‘பிதாவே, நான் செய்த காரியத்தைத் தயவு செய்து நீர் மன்னியும். எனக்கு அதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.’

அப்பொழுது ஓநாய் பேசத் தொடங்கிற்று. ‘உன்னை நீயே நிந்தியாதே, கர்த்தர் எதற்காகப் படைக்கப்பட்டாரோ அதற்காகவே கொல்லப்படுகின்றார். தேவனின் எழுத்தும் அதுவே. நீ கர்த்தரைக் காட்டிக் கொடுக்கவில்லை. தேவனின் எழுத்தே காட்டிக் கொடுத்தது. ஆனால் அது உன் வழியாக நிகழ்ந்து முடிந்தது அவ்வளவே.’

யூதாஸ் இப்பொழுதும் நிலத்தைப் பார்த்தவாறே அமர்ந்திருந்தான். அவன் கண்கள் கலங்கியிருந்தன. பெத்தலகேம் சிறுவர்கள் அவனையொரு பைத்தியக்காரனென்று நினைத்து கற்களால் அடித்திருந்தார்கள். கசிந்துகொண்டிருந்த ரத்தம் நின்றபாடில்லை. வடிந்துகொண்டிருந்த ரத்தத்தால் அந்த வனாந்திரம் முழுவதுமே நனைந்து கொண்டிருந்தது.

மறுபடியும் ஓநாயே பேசத் தொடங்கிற்று. இப்பொழுது நீ செய்யப்போவதென்னவோ.

யூதாஸ் மறுபடியும் எழுந்து வனாந்தரத்தின் மையப் பகுதியை நோக்கி ஓட ஆரம்பித்தான். ஆனால் ஓநாயின் குரலோ அவனை விடாது பின் தொடரலாயிற்று.

நீ நினைப்பது அவ்வளவு சுலபமில்லை. குற்றவுணர்ச்சி உன்னைத் துன்புறுத்துகின்றதென்பதை நான் அறிவேன். ஆனால் அதற்காக நீ சாகலாகாது. அது உன்னதமுமில்லை. உன்னைப் பற்றி யார் அறிவார். உலகம் முடியும்வரை நீ துரோகியாகவே இருக்கப்போகின்றாயா. அந்த வார்த்தையின் கொடூரத்தினை நீ விளங்கிக் கொள்வாயா. காயங்களோடு இறப்பதென்பது சுலபம். உன் உடலானது உக்கிப் போனவுடன் காயங்கள் மறைந்து போகின்றன. ஆனால் இது அப்படியல்ல. உடல் உக்கினாலும் நீ எடுத்த பெயர் உக்காது. ஓடாதே யூதாஸ், நீ துரோகியல்ல என்பதையும் உணர்ந்து கொள். காலம் உன்னை அவ்வாறு செய்யத் தூண்டியுள்ளது. கர்த்தருக்கு யாவும் தெரியும். நீ பதற்றமடையாதே. சாரா ஒரு சொர்க்கம். அவள் உனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறாள். அவளின் மென்மையான கைகள் உன் தலைமுடியினைக் கோதத் தயாராக இருக்கின்றன. வாழ்க்கையின் சகல இன்பங்களையும் அவள் உனக்குத் தருவாள். விடாய்க்கும் போது நீ அவளையே அள்ளிப் பருகலாம். அதன் ருசியானது அற்புதமானதாக இருக்கும்.

ஆனால் யூதாஸ் இவை யாவற்றையும் செவிமடுத்தானில்லை. அவன் கால்கள் வனாந்தரத்தின் மையத்தினை நோக்கி ஓடுவதிலேயே குறியாக இருந்தன. அவன் வனாந்தரத்தின் மையத்தை அடைந்த போது அங்கே சாரா நின்று கொண்டிருந்தாள். சாராவைக் கண்ணுற்ற யூதாஸ் அவள் கண்களை நேராகப் பார்ப்பதற்கு அஞ்சி மையத்தில் நின்றிருந்த அடர்த்தியான மரமொன்றைத் தேர்ந்தெடுத்தான். இருள் படிந்திருந்த நிலத்தைத் துழாவிய அவன் கண்கள் மொத்தமான கயிறு ஒன்றைக் கண்டுபிடித்தது. குனிந்து கயிற்றை எடுத்த அவன், கயிற்றில் படிந்திருந்த மண் சரடுகளைச் சுத்தப்படுத்தினான். பின்பு அந்த அடர்த்தியான மரத்திலேறி பெலமான கிளை ஒன்றினை ஆராய்ந்து கண்டுபிடித்தான். அந்தக் கிளையிலேயே கயிற்றின் ஒரு பகுதியை இறுகக் கட்டினான்.

அப்பொழுது இருளானது அவன் செய்வதையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் யூதாஸின் உயிரற்ற உடலானது வனாந்தரத்தின் மையப் பகுதியில் தொங்கலாயிற்று.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Scroll to Top