நூல்விமர்சனம்- தொலைந்து போன சிறிய அளவிலான கறுப்புநிற பைபிள்- உமையாழ்


மேலே ஈழப்பரப்பு எனக் குறிப்பிடப்பட்டது நிலம் சார்ந்தல்ல. மாறாக பரம்பல் குறித்தானது. ஏனெனில் புலத்திற்கு வெளியே இருந்து புலம்பெயர் இலக்கியம் என வகைப்படுத்தப்பட்ட மாதிரியில்தான் இலங்கையின் முக்கியமான தமிழ் படைப்பாளிகள் பலரும் அடங்குவர். இதில் எஸ்பொ முதல் இன்றைக்கு எழுதிக்கொண்டிருக்கும் அனோஜன் வரை பலரையும் பட்டியலிட முடியும். இந்தப் பட்டியலில் புதிய வரவாக ஜேர்மனியில் இருந்து எழுதிக்கொண்டிருக்கும் சாதனா தனது ‘தொலைந்து போன சிறிய அளவிலான கறுப்புநிற பைபிள்’ புத்தகத்தின் பிரசுரத்துடன் அறிமுகமாகி இருக்கிறார். அவரது அறிமுகம் எழுத்தாளர்(!) சாருநிவேதிதாவின் வானளாவ வாழ்த்தி எழுதப்பட்ட முன்னுரையுடனும், ‘வெறும் குப்பை’ என புத்தகத்தின் மேல் வைக்கப்பட்ட கடுமையான காரசாரமான  விமர்சனங்களுடனும் அரங்கேறி இருக்கிறது. எப்படிப் பார்த்தாலும் ஒரு அறிமுக எழுத்தாளனுக்கு இந்த வாழ்த்துக்களும் விமர்சனங்களும் உவப்பானதாகத்தான் இருக்க வேண்டும்.

000000000000000000000000000000

சாருநிவேதிதா எனும் ஒரு எழுத்தாளர்(!) மீதோ, அல்லது அவரது பரிந்துரைகள் மீதோ துளியும் நம்பிக்கை இல்லை. அடிப்படையான இலக்கியப் புரிதலோ, விமர்சன அறிவோ பின்னணியோ அறவே இல்லாத  ஒரு எழுத்துச் செயற்பாட்டாளர் அவர் என்பது எனது புரிதல். அதீதமான பாவனைகளும், இன்னும் அதீதமான நாடகத்தன்மையும் கொண்ட ஒருவரிடம் இருந்து நல்விமர்சனம் ஒருபோதும் விழையாது. பொய்யும் போலியும் இரண்டறக் கலந்து, அதேயே வாழ்வாகவும் எழுத்தாகவும் கொண்ட ஒருவர், தீவிரமான இலக்கிய வாசகர்களை ஒருபோதும் சென்றடைவதில்லை. தீவிரமான அவரது வாசகர்வட்ட நண்பர்கள் எனக் காட்டிக்கொள்கிற சிலர் என்னிடம் தனிப்பட்ட முறையில் அவரது புனைவுகள்(!) குறித்து காறி உமிழ்ந்த கதை ஏராளம் ஏராளம்.

நரி நல்லவன் வேசம் போட்டு ஊரை ஏமாற்ற, நம்பிய பலர் கூட நடக்க, வான் பெய்த மழை நரி வேசங்கலைத்த பொழுதொன்றில், கூட நடந்தோர் நம்பிக்கையின் பெயரில் ஏற்கனவே குறுடாக்கப்பட்டிருந்த கதை பைபிளில் சொல்லப்பட்டதன்று உறவே. இங்கே நிறுத்தி ‘நரி இன்னமும் நம்மிடையே நல்லவன் வேடமிட்டே நடந்து திரிகிறது காண்’ என சத்தமிட்டுச் சொல்லத்தான் முடியும்.

சாருவின் இலக்கியப் பரிந்துரைகள் பெருநகைப்புக்குரியன. ஏதாவது ஒரு முனையைப் பிடித்துக்கொண்டு குய்யோ முய்யோ எனக் கத்தி அதை ஒரு ‘பிரான்ட்’ ஆக ஆக்கி விடலாம் என்பது போன்ற அவரது நடவடிக்கைகளை கற்றோர், அறிவந்தவர் தெரிந்தவர் காண நேரிட்டால் எங்கனம் முகஞ்சுழிப்பர் எனுஞ் சொறணை  துளிகூட இல்லாது தொடர்ந்து அதையே செய்துகொண்டிருக்கிற அவரது அறியாமையின் மீது கழிவிரங்கங் கொள்ளல் ஆகுமானதுதான்.

உதாரணஞ்  சொல்கிறேன்;

‘தஞ்சைப் பிரகாஷ் உலக மஹா இலக்கியவாதி. ஏனென்றால் அவரது புறா சோக்கு கதை போல உலக இலக்கியப்பரப்பில் இதுவரை எழுதப்படவே இல்லை. அதில் ஒரு காட்சி, அந்த இஸ்லாமிய முதியவர் தனது வாயினுள் புறாத்தீனியை வைத்துக்கொண்டு புறாக்களை அழைக்கிறார். அவை வந்து அவரது வாயில் இருந்து கௌவித்  தின்றுகொள்கின்றன. இப்படி ஒரு காட்சி உலக இலக்கியப் பரப்பில் எங்கும் எழுதப்படவில்லை. இந்த ஒரு காட்சி போதும் பிரகாஷைக் கொண்டாட’

இதை சாருநிவேதிதா எழுத்திலும் பேச்சிலும் பதிவுசெய்திருக்கிறார். இந்த உளவியலை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. இலக்கிய விமர்சனம் இவ்வளவு மலிவானதா என்ன? உப்புச் சப்பில்லாத விடயங்களை- குறிப்பாக சம்பவங்களை- பிடித்துக்கொண்டு உலக இலக்கியம், உலக இலக்கியத்தில் கூட யாரும் இப்படி எழுதியதில்லை போன்ற இரைச்சல்கள் எவ்வளவு கேவலமானது என்பதை சாரு உணரவே மாட்டாரா? அறிந்தோ அறியாமலோ  கூவித்திரியும் போலியான கொண்டாட்டக் கேளிக்கைகள் ஒரு இலக்கியவாதியை அதைவிட யாரும் மலினப்படுத்திவிட முடியமா?

இதைப் போன்ற ஒரு போலியான கொண்டாட்ட விடயத்தையே சாதனாவையும் மதிப்பிடக் கையாண்டிருக்கிறார் சாரு. ‘மரணமும் காமமும்’

சிரித்தே கடந்துவிட வேண்டிய முன்னுரை.

ஒரு இலக்கியவாதியை கொண்டாட முடிவெடுத்துவிட்டால் ஆழ அகலமான பார்வை எதுவும் இல்லாமல், இங்கனமாய் மேலோட்டமாக காக்கா விரட்டும் சாருவின் இந்த நடவடிக்கைகள் மீது கடுமையான கண்டனங்கள்!

00000000000000000000000000

சாதனாவின் இந்தத் தொகுதி ஏழு சிறுகதைகளைக் கொண்டது. இவற்றை ஆறாண்டுகால இடைவெளியில் எழுதியதாகச் சொல்லி இருக்கிறார். முதாலாவது சிறுகதைத்தொகுதி; அத்தனை குறைகளுடனும் வரவேற்கப்படவேண்டியதே. அதனால் முடிந்தவரை நிறைகளை முன்நிலைப்படுத்த முனைகிறேன்.

சாதனாவிற்கு வாய்ததிருக்கும் மொழி அலாதியானது. தெளிந்த நீரோடை போல, பிசிரற்ற ஒரு மொழியில் எழுதிச் செல்கிறார். சம்பவங்களை அடுக்கடுக்காக அடுக்கி, கதையை ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு நகர்த்துவதில் ஆசிரியருக்கு இருக்கும் சாமர்த்தியம் ஒரு தேர்ந்த கசைசொல்லிக்கே உரிய அப்பியாசம். பலருக்கும் பல ஆண்டு கால பயிற்சிக்கும் பின்னரே கைகூடும் இந்த வசப்படுத்தப்பட்ட மொழி சாதனாவிற்கு முதல்தொகுதியிலே வெளிப்பட்டிருப்பது ஒரு எழுத்தாளராக அவர் நீண்ட தூரம் பயணிப்பார் என்பதையே கூறி நிற்கிறது. ஆனால் மொழி மட்டுமே ஒரு சிறுகதையை எழுதிவிடப் போதுமானதா என்றால், இல்லை. அப்படி என்றால் சாதனாவின் கதைகள் மீதான எதிர்மறையான விமர்சனங்கள்தான் என்ன?

இதுதான் ‘சிறுகதை’ என வரையறுத்துக் கூறக்கூடிய எந்த வரைவிலக்கணங்களும் சிறுக்கதைக்கு இல்லை. இன்னும், இதைத்தான் எழுத வேண்டும் இதை எழுதக்கூடாது என்கிற வரையறைகூட சிறுகதைகளுக்கு இல்லை. ஆனால் தேர்ந்த சிறுகதை எழுத்தாளர்கள் தங்களுக்கென ஏதோ ஒரு வரையறையை முன்வைத்து எழுதிக்கொண்டிருந்தனர். உதாரணமாக மாப்பசன் கதையில் திடீர் திருப்பங்களை நம்புவராக இருந்தார். பதினேழாம், பதினெட்டாம் நூற்றாண்டுகளின் ஐரோப்பிய சிறுகதை ஆசிரியர்கள் பலரிடமும் இந்தத் தன்மையை அவதானிக்க முடியும்.  அதைக்கொண்டு அவர்களுடைய சிறுகதைகளுக்கான வரைவிலக்கணத்தை தொகுத்துவிட முடியும். இதுவே சுந்தர ராமசாமியின் சிறுகதைகள் குறித்தான பார்வை இவ்வாறு இருந்தது;

“சிறுகதை என்பது சமூக மதிப்பீடுகளை ஆதரிக்க மறுக்கிற ஒரு இலக்கிய உருவம். அது சமூக விமர்சனம் சார்ந்தது. அது அப்படித்தான் இருக்கும். உண்மை வெல்லும் என்பதை வலியுறுத்தும் என்பது ஒரு கதையாக இருக்கும்போதுகூட அது ஒரு சிறுகதையாக இருப்பதில்லை. இது அறவியல் சார்ந்த ஒரு கதை. ஆனால் சிறுகதை அறவியலை வற்புறுத்தாது. நேற்றைய நம்பிக்கைகளை அது வற்புறுத்தவில்லை. வாழ்க்கை சம்பந்தமான போதாமைகளைச் சொல்கிறது அது. நெருக்கடிகளைச் சொல்கிறது அது. உண்மையைச் சொல்லியும் தோற்றுப் போனேனே என்று முடிவடைவது ஒரு சிறுகதையாக இருக்க முடியும். ஆனால் உண்மை இறுதியில் வெல்லும் என்று முடிவடைவது பெரும்பாலும் சிறுகதையாக இராது. கதையின் முடிவாக அது இருக்கலாம். சிறுகதையினுடைய முடிவாக அது இருக்க முடியாது. பழைய சம்பிரதாயங்கள், பழைய மரபுகள் இவற்றை யார் மறுபரிசீலனைக்கு உட்படுத்துகிறாரோ, யார் எல்லாவற்றையும் கேள்விக்கு உட்படுத்துகிறார்களோ, இதுவரை நாம் சரி என்று நம்பிய ஒன்றை, இதுக்கு மேல் உண்மை கிடையாது என்று சொல்லப்பட்டு வந்த ஒன்றை, மேலானது என்று சொல்லபட்டு வந்ததை இன்றைய வாழ்க்கை ஏற்கவில்லை என்ற உண்மையை யார் வெளிப்படுத்துகிறார்களோ அவர்கள் சிறந்த சிறுகதை என்ற உருவத்தை அறிந்தவர்கள்”

இந்தப் பார்வை மீது முற்றான ஏற்பு வேண்டியதில்லைதான் என்றாலும் இதன் சிலபகுதிகளை எல்லா இலக்கியவாதிகளும் ஏற்றுக்கொள்வர் என்பதில் ஐயமில்லை. இந்த வரைவிலக்கணங்களின் வறையறைகளுக்குள் நின்றே சாதனாவின் சிறுகதைகள் மீதான விமர்சனத்தைப் முன்வைத்துவிட முடியும் என எண்ணுகிறேன்.

இந்தத் தொகுதியின் தலைப்புக்குரிய கதையான ‘தொலைந்து போன சிறியளவிலான கறுப்பு நிற பைபிள்’ சிறுகதை ரஷ்யப் பின்னனியில் எழுதப்பட்டிருக்கிறது. பன்றியைக் கூட சுட தயங்கியவனை போர் சூழலும் போர்களங்களும் கொடூரமானவனாக மாற்றிவிடுகிறது. இரண்டாம் உலகப் போரில் நாசிப் படைகளுக்கெதிராக கடுமையாக களமாடுகிறான். பலரையும் சுட்டுக்கொல்கிறான். பேர்லினில் (ரஷ்யப்படை பேர்லினில்!!) இரக்கமே இல்லாமல் குற்றுயிராய் கிடந்த ஒரு வீரனின் கழுத்தில் கத்தியைச் சொருகி கொன்றுவிடுகிறான். சற்றே நாடகத்தன்மை உடனான விவரிப்புகள்தான் என்றாலும், இதுவரையும் கதை சொல்லல் ஒரு நேர்த்தி உடனேயே நகர்கிறது. ஒரு நல்ல கதைக்கான எல்லா வாய்ப்புகளுடனும் கட்டி எழுப்பப்பட்ட கதையில் வரலாற்றுப் பின்னனி பற்றிய தெளிவின்மை, தனக்கு நேரடியான பரீட்சயமில்லாத அந்நியமான களத்தில் கட்டியமைக்கப்பட்ட கதை எனச் சில பல காரணங்களால் தேங்கிவிடுகிறது.  இதற்குப் பிறகு எழுதப்படதெல்லாமும் சமூக மதிப்பீடுகளை நியாயப்படுத்த எழுதப்பட்ட புளிச்ச ரசமும், பழைய சோறும்தான். பெண்ணை கற்பழிப்பதும், அறம் போதிக்கும் பைபிள் காணமல் போவது எனவுமாக கட்டமைக்கப்பட்ட போலி விம்பமும் முழு நேரக் காமடிதான். நவீன இலக்கியத்தில் இந்தக் காமடி ஒரு ‘கதையாக’ நிற்குமே தவிர, ஒரு போதும் நல்லா சிறுகதையாக ஆகிப் போகாது. இந்தத் தொகுயில் உள்ள எல்லா கதைகள் மீதுமான எனது பொதுவான குற்றச்சாட்டாக இதுவே இருக்கிறது. ஆனால் இந்தப் போலித் தன்மைதான் ஒரு கதையை கொண்டு நிறுத்துகிறது என சாதனா நம்பியதைப் போல சாருவும் நம்பியிருப்பதுதான் ஆகப் பெரிய காமடி.

சாதனா ஒரு பயிற்சிக்காக சுரேஷ்குமார இந்திரஜித்தின் சந்திப்பு, அலமாரி போன்ற கதைகளை வாசித்துப் பார்க்க வேண்டும் என விரும்புகிறேன். அவை புனைவின் சாத்தியங்களை பரிசோதித்துப் பார்த்த களங்களை சாதனாவிற்கு விளக்கும்.

போர்காலப் பின்னணி கொண்டு ஒரு கதை எழுத, அரைநூற்றாண்டு காலப் போர் நடந்த ஒரு நாட்டின் ஒரு எழுத்தாளனுக்கு பனிகொட்டும்  ரஷ்யா தேவைப்படுவதன் பின்னனி பற்றி சிந்திக்கிற போது இந்தக் கதைகளின்  மொத்தமான தோல்விக்கான காரணங்களை கண்டடைய முடிகிறது. சாதனா எனும் எழுத்தாளன், தான் வாசித்துத் தெரிந்துகொண்ட, அவனது வாசிப்பு கட்டமைத்த ‘அவனில்’ இருந்து தனது கதைகளை உருவாக்க நினைக்கிறார். அதனால்தான் ரஷ்யாவின் வாங்கோழியும் வாட்டிய பன்றியும் வட்காவும், பனியும் அவரது கதைகள் அனைத்திலும் தவறாமல் ஆஜராகி இருக்கிறது. ஷோபாசக்தி வேறு அநியாயத்திற்கு இழுத்துவிடப்பட்டிருக்கிறார், எல்லாக் கதைகளிலும். கதையும், கதைகூறல் முறையும் வரிக்கு வரி பிரதிபண்ணப்பட்ட  பிரதியாக சாதனாவின் இந்தத் தொகுதியைப் பார்க்கிறேன்.

ஓ, தாவீது ராஜா, தாய் என எல்லாக் கதைகளும், ஏற்கனவே எழுதப்பட்ட புனைவுகளின் மீது புனைந்து எழுதப்பட்ட தோற்றப் பிரதிகள் என்பதாகவே இருக்கிறது.

புனைவைப் புனைந்தெழுதுதல் மிக அரிதாகவே வெற்றியளிக்கும் என அறிந்திருந்ததால்தான் இருபதாம் நூற்றாண்டின் மகத்தான இலக்கிய விமர்சகர் TS Eliot சொல்கிறார், ‘தனித்துவமானது என இலக்கியத்தில் எதுவுமில்லை. எல்லோரும் யாரோ ஒருவருடையதோ, அல்லது லருடையதோ ஆன தொடர்சியாகவும் நீட்சியாகவும் இருந்து ஒரு மொழியை முன்நகர்த்திகிறோம். ஆனால் இந்தத் தொடர்ச்சியில் சிலர், பிரதி எடுத்தலில் முழுக் கவனங்கொண்டு, மொழியை பின்நகர்த்துகின்றனர்’

சாதனா தன்னைப் பரிசீலித்துக்கொள்ள வேண்டும்.

சாதனா, சாரு போன்ற மேம்போக்கான, போலியான இலக்கியவாதிகளிடம் இருந்து விலகி, அவரது கதைகளின் விமர்சனங்களின் மீதான நியாயங்களை உணர்ந்து தன்னைப் புதுபித்துக்கொண்டு தொடர்ந்து இயங்கி, எழுதமுனையும் நாளில், தமிழிற்கு மிக முக்கியமான ஒரு எழுத்தாளர் கிடைப்பதற்கான சாத்தியங்கள் நிச்சயம் ஆராயப்படும். அதுவரையும், தனது தொகுதிக்கு இத்தனை பேர் விமர்சனம் எழுதி இருக்கிறார்களே என்பதை சாதனா கொண்டாட வேண்டும். அந்தக் கொண்டாட்டம் அவரை தொடர்ந்து இயங்க வைக்க வேண்டும்.

சாதனாவிற்கு வாழ்த்துக்கள்!

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Scroll to Top