சிறுமி கத்தலோனா


எத்தனை மணிநேரமென்று சரியாகத் தெரியவில்லையென்றாலும் நேற்றிலிருந்து மழையானது ஒரு பிடிவாதத்துடன் கொட்டிக்கொண்டிருக்கிறது. அதன் காரணமாகத்தான் நத்தையும் வந்திருக்கவேண்டும். இந்த வருடத்துக்கான மழைக்காலம் தொடங்கி இது மூன்றாவது நத்தை. முதலில் வந்தது இதைவிட சற்றுப் பெரியது. உடல் முழுவதும் ஒருவித பச்சை நிறமாயிருந்தது. கூடும் பெரிது. இரண்டாவது நத்தை, இதனைப் போன்றே அளவுடையது. ஆனால், அதன் உணர்கொம்புகளானது சம அளவிலில்லாமல் ஒன்று பெரிதாகவும், மற்றது சிறிதாகவுமிருந்தன.

சிலோன் நாதன், தன் வீட்டிலிருந்த கண்ணாடிப்பெட்டியொன்றில் ஒரேயொரு நத்தையை வளர்த்து வந்தார். இது மூன்றாவது வருடம். இதேபோன்றதொரு மழைநாளில்தான் குட்டியாக இருந்த இந்த நத்தையைக் கண்டுபிடித்து அதற்கு அடைக்கலமும் கொடுத்திருந்தார். என்ன காரணமோ? அந்த நத்தைக்கு சிலோன் நாதனெனத் தன் பெயரையே வைத்திருந்தார்.

துண்டை எடுத்துக்கொண்டு குளிக்கப் போனார். அவருடைய அடர்ந்த தலைமயிர்க் கற்றைக்குள் நுழைந்த வெதுவெதுப்பான நீர் தேகம் முழுவதும் படரத்தொடங்கிய போது தற்கொலை எண்ணம் அவருள் மீண்டும் கிளர்ந்தெழுந்தது. இந்த எண்ணம் இன்று நேற்று அல்ல, கிட்டத்தட்ட வருடக்கணக்கில் அவருக்குள் கிடந்து படுத்தியது. சாவதென்பது அவ்வளவு கடினமான விடயமல்ல. ஒரு உத்தரமும், நான்கடி கயிறும் போதும். முதலில் உத்தரத்தில் கயிற்றைத் தொங்கவிட்டு அது உறுதியாக இருக்கிறதா என ஒன்றுக்கு இரண்டு தடவை இழுத்துப் பார்த்து, திருப்தியில்லையாயின் மறுபடியும் இறுக்கிக் கட்டி, பின்னர், கயிற்றின் மறுமுனையில் ஒரு சுருக்கைப் போட்டு அதில் உங்கள் கழுத்தைக் கொடுக்க வேண்டும். முதலில் உங்கள் குரல்வளையானது இறுகி…

வாஸ்தவம்தான். எல்லாம் சரிதான். ஆனால் செத்துப்போவதில் ஒரு மிகப்பெரிய கொடுமை யாதெனில், நாம் செத்துப்போனது எமக்கே தெரியாமல் போய்விடுவதுதான். மரணத்தில் உள்ள உச்சபட்ச வலியே அதுதான். சாவின் வலியைவிடக் கொடூரமானது.

இந்தச் சிந்தனைதான் சிலோன்நாதனை அதிகமும் துன்புறுத்தியது. ஒருமுறை, தூக்குமாட்டி தற்கொலைக்கும் முயற்சி செய்தார். கழுத்தைச் சுற்றி இறுக்கியிருந்த கயிற்றை இரண்டு கைகளினாலும் இறுக்கிப்பிடித்துக்கொண்டு, தான் நின்றுகொண்டிருந்த கதிரையிலிருந்து கால்களைத் தொங்க விட்டார். கயிறு, கைகளோடு சேர்ந்து அவரின் கழுத்தினையும் இறுக்கியது. கண்கள் இருண்டு, மூச்சுத் திணறி, தொண்டை நசிய, ஒரு வினாடியோ இரண்டு வினாடியோ இன்னும் கொஞ்சநேரத்தில் செத்துவிடுவோமென்று தோன்றியபோது, ரொம்பவும் பிரயத்தனப்பட்டு, என்னவெல்லாமோ செய்து நல்லவேளையாக…கதிரையில் கால்களை ஊன்றிக் கொண்டார். கழுத்து வலிப்பதுபோல் பட்டது. ஒரு அந்தரமான நிலையொன்றில் தள்ளாடிக் கட்டிலில் சரிந்தவர், தொடர்ந்து பத்து நிமிடங்கள் வரை பெருக்கெடுத்த இருமலினால் அவஸ்தைப்பட்டார். ஒருவாறாகச் சமாளித்து கண்ணாடியில் கழுத்தைப் பார்த்தவர், அதில் மெல்லிய இரத்தக்கோடுகள் இருப்பதைக்கண்டு கைகளினால் தொட்டுப் பார்த்தார். எரிந்தது. எரியட்டும் என்பதைப் போல அவர் மறுபடியும், மறுபடியும் கழுத்தினைத் தடவிக் கொடுத்தார்.

ஆகவே, செத்துப்போவதில் சிலோன் நாதனுக்கு சிக்கலில்லையெனினும், தான் செத்துப்போனபின் அதைத் தனக்கு அறிவுறுத்தப்போவது யாரென்பதை நினைக்கும்போதுதான் சிக்கல் ஏற்பட்டது.

குளித்து முடித்து, சுற்றி துண்டு கட்டிய தேகத்துடன் அரைநிர்வாணமாக வெளியே வந்த அவர், நேராக கண்ணாடிப்பெட்டிக்குச் சென்று, காய்ந்துபோன குச்சியொன்றில், தன்னுடைய மென்மையான, ஈரலிப்பு நிறைந்த தேகத்துடன் ஊர்ந்து செல்லும் நத்தையை மறுபடியும் பார்த்துக் கொண்டார்.

பின்னர், நத்தையென எழுதப்பட்டு, அதன் கீழ் நத்தையொன்றின் உருவப்படமொன்றும் வரையப்பட்டிருந்த கொப்பியொன்றினையெடுத்து சில பக்கங்களைப் புரட்டி அதில் எழுதப்பட்டிருந்ததைப் படித்தார். அது கீழ்வருமாறு இருந்தது.

  • நான் நத்தையொன்றினை வளர்த்து வருகின்றேன். அதற்கு சிலோன் நாதனென என் பெயரையே வைத்திருக்கின்றேன்.
  • தலையில் இரண்டு உணர்கொம்புகளைக் கொண்ட வயிற்றுக்காலிகள் வகுப்பினைச் சேர்ந்த ஒரு உயிரியே நத்தையாகும்.
  • “PULMONATA” எனப்படும் நத்தைகள் நுரையீரல்களின் மூலம் சுவாசிக்கும் தன்மையும், “PARAPHYLY” எனப்படும் நத்தைகள் செவுள்களின் மூலம் சுவாசிக்கும் தன்மையும் கொண்டவை.
  • நத்தைகள் குறித்து இன்னும் சொல்லவேண்டுமென்றால் அவை தன் வீட்டைத் தானே சுமக்கும். மழைக்காலங்களிலோ, அல்லது தனக்கு ஒவ்வாத காலநிலையைக் கொண்ட காலங்களிலோ தன் முதுகிலுள்ள ஓடு போன்ற கூட்டினுள் தன்னை மறைத்துக் கொள்ளும். தன்னுடைய இந்தத் தன்மையை எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளவும் அவை பயன்படுத்துகின்றன.

படித்து முடித்த பின் மேற்கண்டவாறு எழுதப்பட்டிருப்பதின் கீழ் கீழ்க்கண்டவாறு எழுதினார்.

  • நத்தை ஒருகிலோமீட்டர் அளவிலான தூரத்தைத் தாண்டுவதற்கு ஒரு கிழமைவரை எடுத்துக்கொள்ளும்.

சிலோன் நாதனின் அறையின் மேற்கு மூலையிலிருந்த அலமாரியொன்றில் அவருடைய புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்தன. அந்தப் புத்தக அலமாரியின் மையப்பகுதியில் முழுவதுமாய் வெள்ளையாயிருந்த புத்த பெருமான் பெருத்த மவுனத்தோடு குந்தியிருந்தார்.

௨.

முன்பு போலில்லாமல் இப்போதெல்லாம் என்ன காரணத்திற்காகவோ பேருந்து வருவதற்குக் குறைந்தது ஒரு மணித்தியாலம் இருப்பதற்கு முதலே தரிப்பிடத்திற்குச் சென்று விடுவார். அது அவருக்குப் பிடித்திருந்தது. வீட்டிலிருப்பதை விட இப்படி எதற்கோ காத்துக்கொண்டிருப்பது சந்தோஷம் தருவதாகவும், வெறுமை படர்ந்திருந்த மனதிற்கு உற்சாகம் தருவதாகவும்தோன்றியது. ஒருவகையில், இப்படி பேருந்துக்காகக் காத்திருத்தலும், மரணத்திற்காகக் காத்திருத்தலும் ஒன்றெனவே அவர் நினைத்தார். தான் மற்றவர்களைப் போலில்லையென்றும் அவருக்குத் தெளிவாகவே தெரிந்தது. ஏதோ ஒன்று தன்னை விடாமல் இம்சிப்பதாகவும், அது எப்போதும் தன் பக்கத்திலேயே இருப்பதாகவும் ஒரு மாய ஆவியைப் போல் தன்மீது படர்ந்திருப்பதாகவும் அவர் நினைத்தார். சரணாகதி என்று சொல்வார்களே அதைப்போல், என்னவென்றே தெரிந்துகொள்ள முடியாத ஒரு வஸ்துவிடம் தான் அடைக்கப்பட்டுள்ளோமோ எனவும் அபத்தமாக சிந்திக்கத் தோன்றியது.

பேருந்தின் கடைசி இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டார். அந்த இருக்கைக்கு முன்னால் ஒரு கண்ணாடி போடப்பட்டிருந்தது. சிலவேளைகளில் அவர் தனக்குள்ளே பேசிக்கொள்வதை மற்றவர்கள் அறியாதபடி அந்தக் கண்ணாடி தன்னை மறைத்துக்கொள்ளுமென அவர் நம்பினார். அந்த நம்பிக்கையினூடே தனக்குள் பேசவும் ஆரம்பித்தார். அப்படியான நேரங்களில் சிலோன் நாதனின் தேகமானது ஒரு இரும்பினைப் போல் இறுகத் தொடங்கி, கால்கள் உதறிப் படபடக்கும். மண்டை கனத்து மூளை நரம்புகள் வெடித்துவிடுமாற் போலிருக்கும். கத்தியொன்றினை எடுத்து நேராக நடு மண்டையில் இறக்கினால் தேவலாம் என்றிருக்கும்.

தன்னை மறந்து, சுற்றியிருப்பவர்களை மறந்து, ஏன் உலகத்தையே மறந்து அடித்தொண்டையில் பிதற்ற ஆரம்பிப்பார். நேரக்கணக்கெல்லாம் கிடையாது. எப்போது தன்னினைவு வந்து பிரக்ஞை ஏற்படுகின்றதோ அப்போது பதறியடித்து சுற்றுமுற்றும் பார்ப்பார்.

இப்படித்தான் ஒருதடவை, இவர் தனக்குள் பேசிக் கொண்டிருந்தபோது எதிரிலிருந்த வெள்ளைக்காரப்பெண் அதைக் கவனித்துவிட்டாள்.  சிலோன் நாதனுக்கு பெருத்த அவமானமாகப் போய்விட்டது. இரண்டாம் தடவை அந்தப் பெண்ணைச் சந்திக்க நேர்ந்தபோது இவரையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தவள், சட்டெனக் கண்ணாடிப் பக்கமாய் பார்வையைத் திருப்பி ‘களுக்’ கென்று சிரித்தாள். மறுபடியும் அதே புன்னகையோடு சிலோன் நாதனைப் பார்த்தாள். இப்போது சிலோன் நாதன் பார்வையை மறுபுறமாகத் திருப்பிக் கொண்டார். அன்றிலிருந்து சிலோன் நாதன் அந்தப் பேருந்தில் போவதை விடுத்து அதற்கு அடுத்ததாக வரும் பேருந்தில் ஏறி, சென்ராஃல்ப் புங்டில் இறங்கி, இன்னொரு பேருந்து பிடித்து… அதையே வழக்கமாக்கிக் கொண்டார்.

இவ்வாறாக மரணம் அவருள் மிகப்பெரும் குழப்பத்தினையும், அயர்ச்சியினையும் ஏற்படுத்தியிருந்தது. வாழ்வுக்கும், மரணத்திற்கும் இடையில் ஒன்றுமேயில்லை என்றவாறாகப் பட்டது. அந்த இடைவெளியென்பது வெறும் பிரம்மை. சூனியங்களினால் நிரப்பப்பட்ட மாயவெளி. ஒருவகையில் வாழ்வென்பது பைத்தியக்காரத்தனம் என அவர் நினைத்தார். சுற்றியிருப்பவர்கள் எல்லோரும் பித்தர்கள். வாழ்வு நிலையானதல்ல; மரணம் மட்டுமே நிலையானது. இறப்பிற்குப் பின் நாம் ஒன்றுமேயில்லை. தேகம், உயிர், ஆன்மா உட்பட அனைத்துமே அழிந்து விடுகின்றது. எங்களுடைய இறப்பை எங்களாலே அறிந்து கொள்ளமுடியாதெனில் வாழ்வதன் அர்த்தம்தான் என்ன? நினைத்துப் பார்த்தபோது வேடிக்கையாகயிருந்தது. சிலோன் நாதன் தனக்குள் சிரித்துக் கொண்டார். வாழ்க்கை என்பது என்ன? மரணத்திற்காகக் காத்துக்கொண்டிருப்பதுதான் வாழ்க்கை. மரணத்தை விடுத்து இந்த லௌகீக வாழ்க்கையில் வேறெதுவுமேயில்லை.

மரணம்தான் எல்லாவற்றுக்கும் தொடக்கமாக இருக்கிறது. இன்பம், துன்பம், காதல், காமம், கோபம், அன்பு, அபூரணம், புண்ணியம் இவையெல்லாமே மரணத்தை நோக்கித்தான் நம்மை இழுத்துச் செல்கின்றன. வாழ்க்கையென்பது வெறும் பயணம் மட்டுமே. இப்பயணத்தின் முடிவுதான் மரணம். தெரிந்தோ, தெரியாமலோ நாமெல்லோரும் மரணத்தை நோக்கிப் பிரயாணம் செய்யும் பிரயாணிகளாய் இருக்கின்றோம்.

அப்படியெனில் மறுபிறப்பு? அதெல்லாம் சுத்தப்பொய். சுயலாபத்திற்காக யாரோ ஒருவன் அவிழ்த்துவிட்ட தகிடுதத்தம். இறப்புதான் மனிதனின் கடைசி முடிவு. அதைத் தாண்டி எதுவுமேயில்லை. வாழ்விற்கும், இறப்பிற்கும் இடையிலான ஒரே வேறுபாடு… வாழ்வு, அடுத்த க்ஷணமே, எதிர்பாராத நேரத்தில், நினைத்தேயிராத சூழ்நிலையொன்றில் எம்மைக் கைகழுவி விட்டு விடும். ஆனால் மரணம் அப்படியல்ல; அது எப்போதும் நம்மைக் கை விடாது. நாம் நடந்துகொண்டிருக்கின்றோம், நம்மெதிரே ஒரு அகண்ட குகையிருக்கின்றது; அந்தக் குகைதான் மரணம். நடந்துகொண்டிருக்கும் அனைவரும் என்றோ ஒருநாள் அந்தக் குகைக்குள் செல்வது நிச்சயம். ஒரு மாபெரும் மிருகத்தின் பிளந்த வாயினைப் போல் இருக்கின்றது அந்தக் குகை.

தலைமுடியைப் படியவிட்டிருக்கும் இந்தப் பெண்தான் இன்றைய நாளின் முதல் வாடிக்கையாளர். இரண்டு கறுப்பு நிறப் பாண்களும், ஆலிவ் விதைகள் தூவப்பட்ட குண்டுப் பாண்கள் நான்கும் வாங்கினாள். சிலோன் நாதன், வெள்ளை நிறத்தில் நீலக் கட்டம் போட்ட துணியை எடுத்து நெஞ்சுப்புறமாக வைத்து நேராக இருக்கிறதா எனப் பார்த்து அதன் கயிறுகளை முதுகுப்புறமாக எடுத்தார். பின் மறுபடியும் அதை நெஞ்சுக்கே எடுத்து, லேசாக இறுக்கி, பின்னர் மறுபடியும் முதுகுக்கே கொடுத்து கட்டினார். திரு. மைக்கல் பாஸ்பேர்க் ஏற்கனவே பிசைந்து வைத்திருந்த மாப்பிண்டத்தை எடுத்து, மேசையில் கிடத்தி, அதை ஒரு தேர்ந்த கலைஞனைப் போல் சிறு சிறு துண்டுகளாக வெட்ட ஆரம்பித்தார்.

அரைமணி நேரத்தில் எல்லா வேலையையும் முடித்தாயிற்று. இனி இயந்திரம் சத்தம் எழுப்பும்போது அதை நிறுத்தி, தயாராகியிருக்கும் பாண்களை வகை பிரித்து அடுக்கியில் அடுக்கினால் சரி. இரண்டாவதாக வந்தவருக்கு வயது அதிகமிருக்கும். ஆமை ஊருமாற் போல் ஊர்ந்து பாஸ்பேர்க்கை அணுகியவர், வயதானவர்கள் உண்ணும் கறுப்புப் பாண்கள் ஆறு வங்கினார். அவர் போனதும் சிலோன் நாதன் பாஸ்பேர்க்கை அணுகி வணக்கம் தெரிவித்தார்.

”மரணத்தை விரும்பும் மனிதனே, எப்படியிருக்கின்றாய்?” 

பாஸ்பேர்க் இப்படிச் சொன்னதும் சிலோன் நாதன் மெதுவாகச் சிரித்து பின், பாண்கள் கணப்பில் வேகின்றன என்றும் முடிந்ததும் அவைகளை வகைபிரித்து அடுக்குகின்றேனென்றும் சொன்னார். பதிலுக்கு பாஸ்பேர்க் தலையை ஆட்டி நன்றி தெரிவித்தார். பின்னர், தன் பின்னாலிருந்த சிகப்பு நிற குண்டு மெழுகுத்திரிகள் ஆறையும் பற்ற வைத்தார். பன்றி வடிவ உண்டியலையெடுத்து கல்லாவின் மீது வைத்தவர், அன்றைய தன்னுடைய பங்காக ஐந்து யூரோத் தாளொன்றினை அதற்குள் தள்ளினார். சிலோன் நாதன் மேசையின் மீது அடுக்கப்பட்டிருந்த கதிரைகளை எடுத்துக் கீழே வைத்தார். அது முடிந்ததும், மேசைகளை ஈரத் துணியொன்றினால் துடைத்து சுத்தப்படுத்தினார்.

அதன் பின் ஐம்பது வயது மதிக்கத்தக்க மனுசியொருத்தி வந்து பத்துத் துண்டு பாண்களும், சுடச் சுடச் கோப்பி குவளையொன்றும் வாங்கினாள். பாஸ்பேர்க் மீதிக் காசுகளை சில்லறைகளாகக் கொடுத்தபோது நானொன்றும் உன்னிடம் பிச்சையெடுக்க வரவில்லையென முணுமுணுத்துவிட்டுச் சென்றாள்.

௩.

கால் எலும்பு முறிந்து தொங்கும் சிறுமியொருத்தியை அவர்கள் இரத்தம் சொட்டத்சொட்டத் தூக்கிக் கொண்டு வந்தார்கள். அலறிக்கொண்டிருந்த சிறுமியை நான் கைகளில் வாங்கி நிலத்தில் கிடத்தினேன். வெளியே மழை பெய்து கூரை பெயர்ந்த ஆஸ்பத்திரி மண்டபத்தில் ஒழுகிக் கொண்டிருந்தது. கூடவே மக்களின் தீராத ஓலம். நான் இவை எவற்றையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் சிறுமியின் காலைப் பாதுகாப்பதிலேயே குறியாகயிருந்தேன். பாதி எலும்பு உடைந்து விட்டது. இரத்தம் வேறு ஒழுகிக் கொண்டிருக்கிறது. முதலில் உடைந்துபோன கால் எலும்புகளைப் பொருத்த வேண்டும். விலகியிருந்த எலும்புகளை ஒன்றாகப் பொருத்தி அது அசையாதவாறு கட்டை ஒன்றையும் வைத்துத் துணியால் கட்டினேன். இரத்தம் வெளியேறுவது குறைந்திருந்தது. சிறுமியின் தலையை ஆறுதலாக வருடிக் கொடுத்து வலிக்கிறதா என்றேன். அவள் பதிலேதும் சொல்லாமல் தன் தேகத்தை ஒரு பாம்பினைப் போல் அசைத்து, உதடுகள் இரண்டையும் இறுக்கக் கடித்தாள். பெத்தடின் இருக்கிறதா என்று பார்த்தேன். மோர்ஃபீன் தான் இருந்தது. உண்மையில் மோர்ஃபீன் கொஞ்சம் ஆபத்தானது. கஞ்சா அடித்ததைப் போன்று ஒருவித மயக்க நிலையை உருவாக்கும். வலி தெரியாது.

கொடுப்பதா இல்லையா என்று யோசித்துக்கொண்டிருக்கும்போதுதான் அந்த மண்டபத்தின் பிரதான கதவைத் திறந்துகொண்டு உள்ளிட்டார்கள். அவர்கள் இராணுவப் பெண்கள். பச்சை நிற சீருடையும், சற்றே பெரிய சப்பாத்தினையும் அணிந்திருந்த அவர்கள், எங்கள் எல்லோரையுமே கைது பண்ணி அழைத்துப் போனார்கள்.

பெயர் தெரியாத முகாமொன்றில் நாங்கள் அடைக்கப்பட்டிருந்தோம். விசாலமான மண்டபம். உயரத்தில் பெட்டி பெட்டியாக ஜன்னல்கள் இருந்தன. அதிலிருந்து மாலை நேரத்துச் சூரிய வெளிச்சம் கசிந்தபடி இருந்தது. அப்போது, வளைவாக இருந்த படிகளில் இறங்கியபடி அவர்கள் வந்தார்கள். அவர்களில் தலைவி போல் இருந்தவளுக்கு நாற்பது வயதுக்கு மேலிருக்கும். அவளின் தேகத்தினை விடவும் மார்புகள் தள்ளிக்கொண்டு பெரிதாக இருந்தன. ஒரு மிடுக்குடன் நடந்து தொப்பியைக் கழற்றி மேசையில் எறிந்தாள்.

”இந்தியாவெ இதலா ரஸ்சாவ ஒயாகென ஆபு பிஸ்சொன்ட லங்காவ ஓனெத?”1

முழங்காலில் நிற்க வைக்கப்பட்டிருந்த எங்களை நோக்கி அவள் அவ்வாறு கூறியபோது, ஏதோ ஒன்று – ஆனால் கனதியான, வஜ்ரத்திண்மை கொண்டு – என் தொண்டையில் தொக்கி நின்று வெளியே வர மறுத்தது. எதிர்காலம் குறித்த பயம் அந்த ‘ஏதோ ஒன்றை’ என் வாயிலிருந்து வெளிவராமல் தடுத்தது. என்னருகில் வந்து ”கோமத”2 என்றாள்.

அவள் பற்கள் மஞ்சள் கறை படிந்திருந்தன. பேசும்போது அவள் வாயிலிருந்து தாங்கிக்கொள்ளவே முடியாத ஒருவித நாற்றம் வந்தது. எனக்கு வாந்தி வரும் போலிருந்தது. சிரமப்பட்டு மூச்சை அடக்கி வைத்திருந்தேன். அந்த சிங்களப் பெண் என் முகத்துக்கு அருகாக, ரொம்ப அருகாக, ரொம்ப ரொம்ப அருகாகத் தன் முகத்தைக் கொணர்ந்து பற்களைக் காட்டிச் சிரித்தாள். கோரம் நிரம்பிய சிரிப்பு. இன்னொருவிதமாகச் சொல்வதாகயிருந்தால், வெற்றியின் சிரிப்பு. நான் அவள் பார்வைக்கு அஞ்சி என் தலையை வேறுபக்கமாகத் திருப்ப எத்தனித்தபோது வேகம்கொண்டு என் நாடியைப் பற்றினாள். இரும்புப் பிடி. ஒரு பெண்ணின் கையில் இத்தனை பெலம் இருக்குமென்பதை அப்போதுதான் உணர்ந்து கொண்டேன். வெடிச் சிரிப்பு சிரித்தவள், திடீரென்று அதை நிறுத்தி ”உம்ப கவுத?”3 என்றாள்.

குப்பென்று வாந்தியெடுத்தேன். சளிபோல் ஏதோ வந்தது. அவள் மறுபடியும் என் நாடியைத் தாங்கிப் பிடித்து முறைத்தாள். ”டொக்ட்டர்” என்றேன்.

பூதம் சிரித்தாற் போலச் சிரித்தவள், திரும்பி தன் தோழிகளைப் பார்த்து ”மேஹ மே மனுஸ்சயா வைத்தியவரயெக்லு”4 என்றாள். அவள் இப்படிச் சொன்னதும் மற்ற இராணுவப் பெண்கள் ஏதோ பெரிய பகிடியைக் கேட்டது போல் என்னையே பார்த்துக்கொண்டு கொல்லென்று சிரித்தார்கள். அது தாங்க முடியாத ஆத்திரமாகவும், அவமானமாகவும் எனக்குள் இறங்கியது. இப்போது தலைவி தன் கால்களினால் என்னை எட்டி உதைத்தாள். நிலத்தில் சரிந்து, உருண்டு விழுந்தேன். வலி ஏதோ செய்தது.

பின் மெதுவாக நடந்து வந்தவள், காறி உமிழ்ந்து இப்படிச் சொன்னாள்.  ”வைத்யவரயெக் உனாம மொகத ரடக விதுஹல்பதிதுமா உனாம மொகத? அபிட தெமல அய ஒக்கம பல்லா தமய் உத்தோ.”5

தூக்கிவாரிப்போட்டது. உத்தோவா? அல்லது உம்பெர்த்தோ எக்கோவா? உம்பெர்த்தோ எக்கோவுக்கும் இவளுக்கும் என்ன சம்பந்தம்? சந்தேகமேயில்லை… அவள் என்னைப் பார்த்து உத்தோ என்றுதான் சொன்னாள். என் தேகம் பஞ்சாட்டம் ஆனதைப் போலிருந்தது. ஒரு கிரகத்திலிருந்து அப்படியே இன்னொரு கிரகத்திற்கு மாறி மாறி, குறைந்த பட்சம் இரண்டு தடவைகளோ, அல்லது மூன்று தடவைகளோ இங்கிருந்து அங்கும், அங்கிருந்து இங்குமாக தூக்கியெறியப்படுவதைப் போல் உணர்ந்தேன். எப்படியென்று சொல்லிவிட முடியாதபடி தன்னினைவு இழந்து சுற்றியிருப்பவர்களைப் பார்த்தேன். கையறு நிலையில், கண்களில் அச்சம் தெரியுமாறு கூட்டம் நிற்க, அவர்களில் ஒரு இளம் பெண் – காதலோ? என்ன கண்றாவியோ? – என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள். நான் பெரும் லஜ்ஜையுடன் தலையைத் தாழ்த்தித் தரையைப் பார்க்கலானேன். ஆனாலும் அந்த வார்த்தை – உத்தோ – ஒரு கொடூரப் பிணம்தின்னிப் பறவையாக மாறி என் தலையைச் சுற்றிச் சுற்றி வந்தது. அதன் கர்ணகடூரமான குரல் இதயத்தில் ஊடுருவி இரத்தக் குழாயை அடைத்தது.

பின் வந்த நாட்களில், நான் பாதாள அறையொன்றில் அடைக்கப்பட்டிருந்தேன். தேகம் நிர்வாணமாயிருந்தது. குளிரில் தேகம் நடுங்கிக்கொண்டிருக்க குறண்டிப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருப்பேன். என் எதிரே உத்தோ உட்கார்ந்திருந்தார். முழு அம்மணமாய்க் கால்களைப் பரப்பி அவர் உட்கார்ந்திருக்கும் தோரணையே எனக்குப் பலவேளைகளில் எரிச்சலைக் கிளப்பும். அத்தோடு நின்றிராமல் அவர் தினந்தோறும் என்னைப் பார்த்து உத்தோ உத்தோ என்று சீண்டிக்கொண்டேயிருந்தார். நான் அவரைக் காலால் எட்டி உதைப்பேன். அப்போதும் கூட அவர் என்னைப் பார்த்து உத்தோ என்று கூறிக்கொண்டேயிருந்தார். காலப்போக்கில் உத்தோ என்ற அந்தச் சொல் அந்தப் பாதாள அறை முழுவதும் நிரம்பியிருப்பதாய் எனக்குப் பட்டது. அதன் பிறகே அவர் என்னைத் தற்கொலை செய்துகொள்ளச் சொன்னார்.

சரியாக மூன்று மாதங்களின் பின் நான் விடுதலையானேன். விடுதலையாகும் அந்தத் தருணத்தில் கூட இராணுவப் பெண் என்னைப் பார்த்துப் பல்லிளித்தாள். தன் இடது கையினால் என் ஆண்குறியை பிடிக்க வருவதுபோல் பவ்வியம் செய்தாள். நான் சடுதியாக அவளை விட்டு விலகி, ஓரமாய்ப் பாய்ந்தபோது அவள் மறுபடியும் தன்னுடைய கோரமான பற்களைக் காட்டிச் சிரித்து, ”உத்தோ” என்றாள்.

௪.

இவையனைத்தையும் மாமாவிடமிருந்து ‘தோரின்’ கதையைக் கேட்கும் ஒரு குழந்தையின் தோரணையுடன் கேட்டுக்கொண்டிருந்தவர் எழுந்து கழிப்பறைக்குச் சென்றார். அவர் திரும்பி வரும்போது திராட்சை ரசப் போத்தலொன்று அவர் கையிலிருந்தது. இரண்டு குவளைகளை எடுத்தவர் இருவருக்குமாக ஊற்றி ஒன்றை சிலோன் நாதனிடம் கொடுத்தார். தன்னுடைய குவளையிலிருந்த திராட்சை ரசத்தை ஒரே மடக்கில் குடித்து முடித்தவர் மறுபடியும் அதை நிரப்பிக் கொண்டார். பின் சிலோன் நாதனைப் பார்த்து இப்படிச் சொன்னார்.

”நல்லவர்கள் எப்போதும் அவமானப்படுத்தப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், அவற்றையெல்லாம் நினைத்துக்கொண்டிருப்பது மகா அபத்தம். ஒரு வாடிக்கையாளன் என்னை சூத்தோட்டையெனத் திட்டினான். உன்னைப்போன்றுதான் நானும்  நித்திரையற்றுத் திரிந்தேன். ஆனால் அதெல்லாம் கொஞ்ச காலம்தான். என் மனைவி என்னை ஆறுதல்படுத்தினாள். அவளின் வார்த்தைகளில், ஸ்பரிசத்தில் எல்லாமுமிருப்பதாக நான் உணர்ந்தேன். ஒரு பெண்ணின் அரவணைப்பினைப் போல் சிறந்தது எதுவுமில்லை.”

அப்போது ஒரு பதினெட்டு வயதுப் பெண்ணொருத்தி பாஸ்பேர்கிடம் நலம் விசாரித்து இனிப்புப் பாண்கள் சிலவற்றை வாங்கிச் சென்றாள். அவள் போனதும் மறுபடியும் பாஸ்பேர்க் குடிக்கத் தொடங்கினார். சிலோன் நாதனுக்கு பாஸ்பேர்க் பற்றி நினைக்கும்போது ஆச்சர்யமாக இருந்தது. கடை திறந்ததிலிருந்து இந்த நிமிஷம் வரை குறைந்தது ஒரு ஏழேட்டு பேரே வந்திருப்பார்கள். சிறப்பான வியாபாரமென்று சொல்வதற்கில்லை. இன்று என்றல்ல, தினந்தோறும் இதுதான் வாடிக்கை. ஆனால் அது குறித்து பாஸ்பேர்க் துன்பப்பட்டதாகவும் தெரியவில்லை. மாதம் பிறந்தால் தன்னுடைய ஊழியப் பணத்தை எந்தவொரு முகச்சுளிப்புமற்று கொடுத்துவிடும் அவரை சிலோன் நாதன் ஒரு தேவ ஊழியக்காரனாகவே நினைத்துக் கொள்வார்.

பாஸ்பேர்க் மறுபடியும் மறுபடியும் குடித்துக்கொண்டே இருந்தார். சிலோன் நாதன் தன்னுடைய முதலாவது குவளையை ஒருவாறாகக் குடித்து முடித்தார். மறுபடியும் மரணம் பற்றியே அவர் சிந்தித்தார். பின்னந்தலையை உலுப்பி விடாப்பிடியாக உலகுக்குள் நுழைத்தால் வெளியே இருண்மை கண்டிருந்தது. மா படிந்திருந்த தட்டுகளை ஒவ்வொன்றாகக் கழுவித் துடைத்து அடுக்கினார். திராட்சை ரசத்தின் போதை அவரைச் சற்றே தள்ளாட வைத்தது. நெஞ்சில் படிந்திருந்த துணியை அவிழ்த்து கதவின் பின்பக்கமாய்க் கொழுவியபோது பாஸ்பேர்க் அவரை அழைத்து நடனமாடினார். சிலோன் நாதனின் குவளை மீண்டுமொருமுறை நிரப்பப்பட்டது. பழைய ஜெர்மானியப் பாடலொன்றைத் தன் வானொலியில் ஒலிக்கவிட்ட பாஸ்பேர்க் ஒரு உற்சாகத்துடன் ஆடத் தொடங்கினார். சிலோன் நாதனின் கைகளைப் பிடித்து, உயர்த்தி தன்னையே சுற்றி ஆடியவர், பின் அதை நிறுத்தி சிலோன் நாதனின் தோள்களைக் குலுக்கி கீழே விழுந்தார். தொட்டுப் பார்த்தபோது பாஸ்பேர்க் உயிரற்றிருப்பது தெரிந்து.

௫.

திரு. மைக்கல் பாஸ்பேர்க்கின் பிணம் கிடத்தப்பட்டிருந்தது. வெள்ளைச் சட்டையும் கத்தரிக்கப்பட்ட முடியைக் கொண்டவளுமான பெண்ணொருத்தி தன்னுடைய அகண்ட கண்களால் அழுது கொண்டிருந்தாள். அவளை ஆறுதல் படுத்திக்கொண்டிருப்பவன் அவள் கணவனாயிருக்க வேண்டும். ஒடுசலாக, வதங்கியிருந்தான். பெருத்த தேகமும், சராசரிக்குக் கொஞ்சம் உயரம் குறைந்தவருமான – நான்கடி ஐந்தங்குலம் – கிறிஸ்தவத் தந்தையொருவர் அப்பால் நின்று ஜெபித்தார். அப்போதும் மழை தூறிக்கொண்டிருந்தது. சிலோன் நாதன் உயிரற்றிருக்கும் பாஸ்பேர்க்கின் உடலையே பார்த்துக் கொண்டிருந்தார். கைகளைப் பொத்திப் பிடித்திருந்த பாஸ்பேர்க்கின் முகமானது வெளிறியிருந்தது. எல்லாமே ஒரு க்ஷண நேரத்தில் முடிந்துவிட்டது. இதுதான் இறப்பு. நேற்றுவரை உயிரோடிருந்தவர் இன்று உயிரோடில்லை. அவர் மரணத்தின் குகைக்குள் சென்றுவிட்டார்.

சிலோன் நாதனுக்கு உயிரற்றிருக்கும் பாஸ்பேர்க்கினைத் தட்டியெழுப்பி நீங்கள் இறந்து விட்டீர்களெனக் கூறவேண்டும் போல் தோன்றியது. ஆனால் அடுத்த க்ஷணமே தான் அப்படி நினைத்ததிலுள்ள முரணை நினைத்துச் சிரித்தார். இறந்தவர்களை மறுபடியும் எழுப்புதல் சாத்தியம்தானா? இருந்தாலும் ஏதோ ஒன்று பாஸ்பேர்க்கினை மறுபடியும் எழுப்பு என்று அவருக்குள் சொல்லிக்கொண்டேயிருந்தது.

பாஸ்பேர்க்கின் உடல் குழியில் இறங்கும்போது வாழ்க்கையின் கோட்பாடு பற்றி எண்ணத் தோன்றியது. வாழ்தலை அறிதலே வாழ்வின் கோட்பாடு. ஆனால் இறப்புக்கென்று ஒரு மயிர் கோட்பாடும் கிடையாது. இறப்பினை யாராலும் அறிய முடியாது. அப்படியெனில், சப்தரிஷிகள் இறப்புக்குப் பின்னரான வாழ்வு பற்றிச் சொல்லியிருக்கின்றார்களே? ‘யமுத்தின பத்திர ரிஷி’ இறந்த பிறகும் வாழ்ந்தாரெனச் சொல்லப்பட்டிருக்கின்றதே?

உண்மையில் சிலோன் நாதன் குழப்பமாக இருந்தார். வாழ்வு இறப்பு, இறப்பு வாழ்வு என்றவாறாக எதிலும் தீர்மானமில்லாமல் இருந்தார். சைமன் ரிச்சர்ட் எழுதிய வாழ்க்கைத் தத்துவம் பற்றி பின்னர் மீண்டுமொருமுறை படித்துப் பார்க்கவேண்டுமென நினைத்தார். கண்டதையும் வாசித்தால் இப்படித்தான் மண்டை வெடித்துச் சுக்குநூறாகிவிடும். வாழ்க்கையைப் பற்றி மாத்திரமே யாரும் புஸ்தகம் எழுதியிருக்கின்றார்களா எனப் பார்த்து நூலகத்திலோ அல்லது பணம் கொடுத்தோ கண்டிப்பாக ஒரு பிரதி வாங்கிவிடுவதெனத் தீர்மானித்தார். அதுவரை என்ன செய்யலாம்?

௬.

இப்போது அவர் மொத்தமாக நான்கு போத்தல் பியரை அருந்தியிருந்தார். கண்கள் இருண்மையடைவதாய்ப் பட்டபோது எழும்பி நடக்க ஆரம்பித்தார். வெளியே இன்னமும் மழை தூறிக்கொண்டிருந்தது. சிலோன் நாதன், பாதையின் ஓரமாய் நடந்தார்.  கால்கள் தள்ளாடுவதைப் போல் உணர்ந்த அவர் விழாமல் இருப்பதற்குப் பிரயத்தனப்பட்டார். ஊசி குத்துவதைப் போல் முகத்தில் அடித்தது மழை. ஒற்றைக்கையால் முகத்தில் படிந்திருந்த மழைநீரை வழித்துத் துடைத்த அவர் வீட்டுக்குப் போக மனமில்லாமலும், எங்கே போவதென்ற உத்தேசமில்லாமலும் மழையோடு சேர்ந்து நடந்தார்.  அதுவொரு முடிவற்ற பயணமாயிருந்தது. கால்கள் வலிக்க ஆரம்பித்தபோது எதிரே வரும் கதிரையில் உட்கார்ந்துகொள்வார். பிறகு மீண்டும் தன் பயணத்தைத் தொடங்குவார். இப்படியாக நடந்துகொண்டிருக்கும்போதுதான் சிலோன் நாதனுக்கு வேசி வீட்டுக்குப் போகலாமென்று தோன்றியது.

மினுக் மினுக்கென்று முழுநிர்வாணமாயிருக்கும் பெண்ணின் உடலை அப்போதுதான் முதல்முறையாகப் பார்த்தார் சிலோன் நாதன். மார்புக்குக் கீழே சதை கண்டிருந்தது. விரிந்த இடுப்பும், பெருத்த தொடையுமாக வேசி சிலோன் நாதனைப் பார்த்துச் சிரித்தபோது அவர் தரையைப் பார்த்து சிரித்துக் கொண்டார். அப்போது அந்த வேசி முழங்காலினால் நடந்து சிலோன் நாதனை அரவணைத்து அவரின் உதடுகளில் முத்தமிடத் தொடங்கினாள். அவளின் வலது கையின் விரல்கள் சிலோன் நாதனின் அடர்ந்த தலைமுடிக் கற்றைக்குள் ஒரு ஐந்து தலைப் பாம்பினைப் போல் நுழைந்துகொண்டிருந்தது. சிலோன் நாதனின் தேகம் நடுங்கத் தொடங்கியது. அவரின் உதடுகள் வார்த்தைகளற்று குழறியன. முதுகின் நடுப்பக்கமிருந்து வழிந்தோடிய வியர்வைத்துளியொன்று அவரின் பிருஷ்டம் வரை சென்று பின் அப்படியே நின்றுகொண்டது. வேசியின் இடதுகை சிலோன் நாதனின் ஆண்குறியைத் தீண்டியபோது சடாரென்று அவளின் கையைத் தட்டிவிட்ட அவர், வேண்டாம் அதில் எனக்கு விருப்பமில்லையென அறுந்துவிழுந்த வார்த்தைகளினால் சொல்லி முடித்தார். அப்போதும் அவர் கண்கள் தரையைப் பார்த்தவாறேயிருந்தன. தன்னுடைய விரல்களினால் சிலோன் நாதனின் தலையைத் தூக்கிப்பிடித்த வேசியானவள் முதல்முறையா என்று கேட்டபோது அவள் விரல்களின் அழுத்தத்தையும் மீறி தலையைத் தாழ்த்திக் கொண்ட அவர் ஆமாமென்பது போல் தலையசைத்தார்.

என்னிடமிருந்து உனக்கு எதுவுமே வேண்டாமா என்று வேசி கேட்டபோது அவளை அப்படியே கட்டிலின் மீது படர்த்தி கொஞ்ச நேரம் அவளின் நிர்வாணத்தையே பார்த்துக்கொண்டிருந்தார். பெண்ணின் உடல்தான் எத்தனை விசித்திரம் நிரம்பியது. உண்மையில் பெண்ணின் உடலைப் போல் சுவாரஸ்யமான விஷயம் வேறில்லை என்பதைப் போல் பட்டது. பெண் ஒரு புதிர். எந்தக் காலத்திலும் புரிந்து கொள்ளவே முடியாத புதிர்தான் பெண்ணின் தேகம். சிலோன் நாதன் வேசியின் தொடைகள் இரண்டினையும் விரித்துவைத்து அதன் பக்கமாய்த் தாழிட்டு அமர்ந்துகொண்டார். சுத்தமாக மழிக்கப்பட்ட வேசியின் பளபளப்பான யோனிவாசல் சற்றே அகண்டிருந்தது. வேசியின் தொடைகளிரண்டையும் தூக்கிக்கொண்ட சிலோன் நாதன் அதன் மையத்தில் தன் முகத்தைப் புதைக்கலானார்.

அப்போது என்னவென்றே தெரியாதவொரு இன்பம் தனக்குள் படர்வதைப் போல் உணர்ந்த அவர் அந்த இன்பம் தன் மரணம் வரை தன்னைப் பின்தொடரவேண்டுமென்று நினைத்துக்கொண்டார். வாழ்வில் ஒரு அர்த்தமிருப்பதாகப் பட்டது. மின்சாரம் ஏற்றப்பட்ட உடலினைக் கொண்ட ஒரு மிருகமாய் வேசியைப் புணர ஆரம்பித்தார். அப்பொழுதும் அவள் இவரைப் பார்த்து சாயமடிக்கப்பட்ட உதடுகளினால் புன்னகைத்துக் கொண்டாள். பச்… என்ன பெண் இவள்? வெறும் நாணயங்களுக்காக எப்படி இவளால் இப்படிப் புன்னகைக்க முடிகிறது? ஒரேயொரு சிரிப்பின் மூலம் – அது போலியோ அல்லது நிஜமோ – ஒரு பெண் தான் நினைத்ததைச் சாதிக்கும் விந்தையை நினைத்து வியந்தார். இவர்களிடம் ஒரு அசாத்தியமான திறமை இருக்கிறது.

போதை தெளிந்து விழிப்பு வந்தபோது அதிகாலையாயிருந்தது. சிலோன் நாதனுக்குத் தான் வேசி வீட்டுக்குப் போனது நிஜமா அல்லது கனவா எனப் பெரும் குழப்பமாக இருந்தது. நிஜம்தான் எனத் தெரியவந்தபோது தொண்டையடைத்து தேகமெல்லாம் உதறியது. சில நிமிடங்கள் அப்படியே வெறித்த பார்வையுடன் அமர்ந்திருந்த அவர் பின் காற்றில் நடப்பதுபோல் நடந்து கழிவறைக்குச் சென்றார். தேகத்தின் படபடப்பு நின்றபாடில்லை. கண்ணாடியில் முகத்தைப் பார்த்தவரான அவர் கண்கள் சிகப்பேறியிருப்பதைக் கண்டு முகத்தில் தண்ணீர் அடித்துக்கொண்டார். மறுபடியும் கட்டிலில் விழுந்தவருக்கு, வேசியின் ஒப்பனை செய்யப்பட்ட முகமும், ததும்பிய புன்னைகையும் நினைவு வந்து அவஸ்தை கொடுக்க “ஓ”வென்று வாய்விட்டு அலறினார். வேசியின் நினைவு தன் மூளையின் ஒவ்வொரு திசுக்களிலும் தங்கியிருப்பதாக அவருக்குப் பட்டது. இந்த நினைவுகளிலிருந்து மீள்வது சிரமமென்றும் தோன்றியது. ஆகவே மறுபடியும் அவருக்குத் தற்கொலை எண்ணம் வந்தது.

தொட்டியில் தண்ணீரை நிரம்ப விட்டு அதற்குள்ளேயே படுத்துக் கிடந்தார். என்ன நடந்தாலும் சரி, தொட்டியை விட்டு எழுவதில்லையென்று தீர்மானமாக இருந்தார். சிலோன் நாதனின் மூக்கிலிருந்து நீர்க்குமிழிகள் வெளியேறலாயின. நுரையீரல் அடைத்துக்கொண்டு உப்புவதுபோலிருந்து. அப்பொழுதும் கூட சிலோன் நாதனுக்கு வேசியின் நினைவே வந்தது. மூடிய கண்களைத் திறந்து பார்த்தபோது வேசியும் தன் முகத்தை நீருக்குள் அமிழ்த்தித் தன்னைப் பார்த்துச் சிரிப்பதாகப்  பட்டது. அந்தச் சிரிப்பின் ஒளி, உருவம்கொண்டு, ஆடையுடுத்தி, எங்கும், எதிலும் வியாப்பித்திருப்பதாக நினைத்தார். ஒரு பாம்பின் சிவந்த நாக்கினைப் போன்று வேசியின் நாக்கானது தன் உலர்ந்த உதடுகளைத் தீண்டுவது போலவும், அவள் இடுப்பில் முகம் புதைத்திருப்பது போலவும், வியர்வை வடியும் தேகத்தோடு வேசியைப் புணர்வது போலவும், அதீதமானவொரு இன்பத்தில், வேசியானவள் தன்னுதடுகளைத் தானே கடித்துக் கொள்வது போலவும் காட்சிகள் படிமங்களாகி அவருள் விரிந்தன. அதற்கு மேல் சிலோன் நாதனால் மூச்சை அடக்க முடியவில்லை. தொட்டியை விட்டுக் குபீரென்று எழுந்தார். நீர்த் திவலைகள்  அறையெங்கும் பிசிறியடித்தன.

இப்படியாக எதிலும் பிடிப்பற்று சில நாட்கள் அலைந்தார். இப்பொழுது வேசியின் சிந்தனை வருவது குறைந்திருந்தாலும் நாளுக்கு மூன்று தடவையோ, நான்கு தடவையோ நினைத்தால் மயிர்க்கூச்செறியும் அந்த எண்ணம் வரத்தான் செய்தது. பகல் நேரத்தில் அறைக்குள்ளேயே முடங்கியிருந்தவர் சாமத்தில் திக்கற்று அலைந்தார். சிலநேரங்களில் நத்தையைப் பற்றி எழுதினார். சிலநேரங்களில் ஓவியம் தீட்டினார். ஓவியத்தைத் தீட்டியவருக்குக் கைகள் உதறத் தொடங்கும். சடாரென்று தூரிகையைத் தூக்கியெறிவார். கைகளால் முகத்தை மூடி விரலிடுக்குகளின் வழியே முடிக்கப்படாமலிருக்கும் ஓவியத்தைப் பார்ப்பார். ஆக்ரோசமெடுத்துக் கத்துவார். ஃப்ரான்ஸ் காஃப்காவின் புத்தகங்களையும், மிலன் குந்தேராவின் புத்தகங்களையும் பைத்தியம் பிடிக்குமளவிற்கு வாசிப்பார். மிலன் குந்தேராவின் சிந்தனாசக்திக்கு எதிரான கோட்பாடு பற்றி விவாதம் செய்வார். காலீம் சைபரின், ‘நான் என்பது உண்மையில் ஒன்றல்ல; நாம் இறந்த பின் அது இன்னோர் நானாகிறது’ என்ற கருத்தோடு ரொம்பவும் குழம்பி எக்கச்சக்கமான தர்க்கங்களைப் புரிந்து அவராக ஒரு முடிவுக்கு வந்து எதேச்சையாக அலக்சாந்தர் புக்கோனவின், “ஹாண்ட்டில் மைன்ஷ் மைண்ட்” புத்தகத்தை கையிலெடுத்தால் அண்ணளவாகப் பைத்தியமே பிடித்துவிடும்.

மது அருந்தலாமா? அருந்தினால் பழையபடி வேசியின் எண்ணம் வரும். வந்தாலென்ன? மறுபடியும் அவள் வீட்டுக்குப் போகத் தோன்றும். போனாலென்ன? ஆமாம், அதனாலென்ன?

மதுச்சாலைக்காரன் இவரைப் பார்த்துச் சிரித்துவிட்டு நுரை வடிய கோப்பை பியரைக் கொணர்ந்து வைத்தான். ஒரு மிடறு குடித்தவர், பின்பு வாயில் படிந்திருந்த நுரையை அழுத்தித் துடைத்தார். அகண்ட யன்னலின் வழியே வெளியே பார்த்தவர், முகம் முழுவதும் சுருக்கம் விழுந்த கிழவியொருத்தி வயலின் வாசிப்பதைக் கண்டார். அவள் முன்னால் வெள்ளைத்துணி ஒன்று விரிக்கப்பட்டு அதில் சில யூரோ நாணயங்கள் சிதறிக் கிடந்தன. அதற்கு அப்பால், கிளிங்கன் தெருவை ஒட்டி கடைக்காரர் ஒருவர் தன் சிறிய பெட்டிக்கடையைத் திறந்து அன்றைய நாளிதழ்களை அடுக்கிக் கொண்டிருந்தார்.

பாஸ்பேர்க் சொன்னது உண்மைதான். ஒருவன் தன்னுடைய எதிரியை வெற்றிகொள்வதைக் காட்டிலும் அவர்களை அவமானப்படுத்துவதன் மூலமே முழுத் திருப்தியடைகிறான். அவனைப் பொறுத்தவரை அவமானப்படுத்தல் என்பது கொலைசெய்வதை விட குரூரமானது. அது ஒருவிதமான மனநிலை. சூழ்நிலையும், அதிகாரமும் அதைத் தீர்மானிக்கின்றன. ஒருவனிடம் கெஞ்சிக்கொண்டிருக்கும் இன்னொருவன் நாளையே ஒரு அக்கிரமக்காரனாக மாறி மற்றொருவனை அவமானப்படுத்தக் கூடும். நல்லவன், கெட்டவனென்பது அவனுக்கு இருக்கும் அதிகாரத்தினை அடிப்படையாகக் கொண்டது. பெரும்பாலான நேரத்தில் அதிகாரமென்பது ஒருவனை கெட்டவனாகவே மாற்றுகிறது. அதையும் மீறி நல்லவர்களாக இருப்பது ஒருசிலரே.

சிலோன் நாதன், இன்னோர் கோப்பை பியரை வாங்கி ஒரே மூச்சில் குடித்து முடித்தார். மிதமான போதை வந்ததும், எழும்பி நடக்க ஆரம்பித்தார். லேசான தலை சுற்றலும், கூடவே மண்டைக் கிறுகிறுப்புமாயிருந்தது. நேரே வீட்டுக்குப் போனவர், கட்டிலில் விழுந்தார். வேசியின் நினைவும், இராணுவப் பெண்ணின் நினைவும் வந்தது. இராணுவப் பெண்ணின் நினைவிலிருந்து விடுதலையடைய நினைத்தவர், வேசியை நினைத்து சுயமைதுனம் செய்தார். போதையில் ஆண்குறி விறைக்கவில்லை. யன்னலைத் திறந்து தெருவைப் பார்த்தார். பதின்வயதுச் சிறுமியொருத்தி தொடைதெரிய விளையாடிக்கொண்டிருப்பது தெரிந்தது. சிலோன் நாதனின் ஆண்குறி புடைத்து விறைத்தது. அவர் கை இயந்திர கதியில் இயங்க ஆரம்பித்தது. விந்து வெளியேறியபோது ஆசுவாசமாயிருந்தது.

௭.

இதைப்போன்றதொரு பனி கொட்டும் கிறிஸ்துமஸ் தினமொன்றில்தான் நான் முதல் முதலாக சிலோன் நாதனைச் சந்தித்தேன். ஒரு உற்ற நண்பனிடம் சொல்வதைப்போன்று அவர் தனது சகல பாடுகளையும் சொல்லிமுடித்தபோது நான் உங்களுடைய சகல பாடுகளையும் கர்த்தரானவர் பார்த்துக்கொள்வார் என்றே சொன்னேன். சிறிதுநேரம் அப்படியே தலைகுனிந்து உட்கார்ந்திருந்தவர் திடீரென்று என் கரங்களைப் பற்றி என்னுடைய பாடுகளை ஒரு கதையாக எழுத முடியாதா என்றார். பதிலுக்கு அவர் கரங்களை இறுக்கிப் பிடித்துக்கொண்ட நான் இன்றில்லையெனினும் சர்வ நிச்சியமாக உங்கள் கதையை ஒருநாள் எழுதுவேனென்றேன்.

இது நடந்து இரண்டு மாதங்களின் பின்பு நான் சிலோன் நாதனின் பாடுகளை மேற்கண்டவாறு ஒரு கதையாக எழுதி, கதையின் முடிவென்று இரண்டு பத்திகளையும் இணைத்து அந்தக் கதைக்கு உத்தோ என்று தலைப்புமிட்டு ஒரு நண்பருக்கு அனுப்பி வைத்தேன். அவர் கதையினை வாசித்துவிட்டு “படித்துவிட்டேன். கதையாகக் கூடிவரவில்லை என்றுதான் நினைக்கிறேன். இனி உங்கள் உத்தேசம் போலச் செய்யுங்கள்என்றவாறாக ஒரு மின்னஞ்சலை அனுப்பியிருந்தார்.

ஆகவே, சிலோன் நாதனின் இந்தக் கதையை ஒரு கதையாக எழுதி முடிப்பதற்கு நான் மீண்டுமொருமுறை சிலோன் நாதனைச் சந்திக்க வேண்டும். அவர் என்னைச் சந்தித்துவிட்டுச் சென்ற பிறகு அவருக்கு என்ன நடந்தது என்பதைப் பற்றி அறிந்தால்தான் இந்தக் கதையை என்னால் பூர்த்தி செய்ய முடியும். நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவரைத் தேடி அலைய ஆரம்பித்தேன். கண்டவர், தெரிந்தவர் என எல்லோரிடமும் அவரைப் பற்றி விசாரித்தேன். ஒருவருக்கும் அவரைப் பற்றித் தெரிந்திருக்கவில்லை. ஜெர்மனியில் தமிழர்கள் அதிகளவாய் கடை வைத்திருக்கும் தெருவிற்குச் சென்று கூட சிலோன் நாதனின் அங்க அடையாளங்களைக் கூறி அவரைப் பற்றி கேட்டுப் பார்த்தேன். ம்ஹூம்…யாருமே அவரைப் பற்றி அறிந்திருக்கவில்லை.

இவ்வாறாக நான் சிலோன் நாதனைத் தேடி அலைந்துகொண்டிருக்க ஒருநாள், தொலைக்காட்சியில், நான் வசிக்கும் நகரத்தினைக் குறிப்பிட்டு செய்தியொன்றினை ஒளிபரப்பினார்கள். நான் ஆவல் மிகுதியால் செய்தியை நுணுக்கமாகக் கேட்க ஆரம்பித்தேன். பிணமொன்று கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும், அதீதமான குளிரினால் அந்தப் பிணமானது உறைந்து போயுள்ளதெனவும், இலங்கையிலிருந்து வந்து, போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து வதிவிட உரிமையைப் பெற்றுக்கொண்ட இலங்கைச் சிங்களவர் ஒருவரின் உடலே அப்பிணமெனவும் அதில் தெரிவித்தார்கள். சிங்களவர் என்றதும் நான் எனக்குள்ளிருந்த ஆவல் அனைத்தையும் அடக்கிக்கொண்டு செய்தியை மேற்கொண்டு பார்க்க விரும்பாமல் தொலைக்காட்சியை அணைத்தேன்.

அதன் பின்னான நாட்களில், சிலோன் நாதன், நத்தையெனப் பெயரிட்டு அதன்கீழ் நத்தையின் உருவப்படமும் கீறப்பட்டிருந்த ஒரு குறிப்புப்புத்தகத்தினை எனக்கு அனுப்பியிருந்தார். அப்போதுதான் கடைசியாக நான் அவரைச் சந்தித்தபோது என்னுடைய முகவரியை அவருக்குக் கொடுத்திருந்தது நினைவுக்கு வந்தது. குறிப்புகளால் நிரம்பியிருந்த அந்தப் புத்தகத்தின் எண்பத்திநான்காம் பக்கத்தில், ஒரு குறிப்பு மாத்திரம் சிகப்புநிற மையினால் எழுதப்பட்டிருந்தது. அதற்கு ஏதும் விசேஷ காரணமிருக்குமென்பதால் அக்குறிப்பினை ஒரே மூச்சில் வாசித்து முடித்தபோது கால்கள் உதறத் தொடங்கின. மூளை நரம்புகள் வெடித்து மண்டைக்குள் குருதியானது வடிந்துகொண்டிருப்பதைப் போல் தோன்றியது. அந்தக் குறிப்பு கீழ்வருமாறு :

௮.

நான் மரணத்தினை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் ஒரு மனிதன். ரேமன் ரிச்சர்ட் எழுதிய நாவலொன்றில் லூதன் தன்னுடைய மரணத்துக்காக இருபது ஆண்டுகள் வரை ஒரு மலையுச்சியிலேயே காத்துக்கொண்டிருப்பான். அதைப்போல் மலையுச்சியில் இல்லையென்றாலும் நானும் மரணத்தை விரும்பும் மனிதன்தான். லூதன் சாவினை விரும்பியதற்கு ஒரு காரணமுமில்லையெனினும் அதை அவன் ஒரு சுய விருப்பத்துடனே செய்து வருவான். ஆனால் நான் அப்படியல்ல; நான் மரணத்தை விரும்புவதற்கு ஒரு காரணமிருக்கின்றது. அன்று அந்த பாதாள உலகத்தில் என்னோடு சேர்த்து கால் உடைந்திருந்த சிறுமியான கத்தலோனாவையும் அடைத்திருந்தார்கள். ஏற்கனவே பாதியாய் உடைந்திருந்த கத்தலோனாவின் காலினை அவர்கள் முழுதாக உடைத்து எடுத்தார்கள். மூன்று நாட்களாய் மயக்கமாகவே இருந்த சிறுமி கத்தலோனா, நான்காம் நாள், ”என்னை விட்டுப் போய்விடாதேயுங்கோ, என்னை விட்டுப் போய்விடாதேயுங்கோ” என்று கதறிக்கொண்டேயிருந்தாள். நான் சொல்வதற்கு வார்த்தைகளற்றுத் தரையிலேயே முடங்கிக் கிடந்தேன். நடுச்சாமத்தில் அவர்கள் என்னை மறுபடியும் அடித்தார்கள். அப்போது முள்ளந்தண்டானது விலகிற்று. வலியில் நான் பெருங்குரலெடுத்து அலறினேன். அவர்கள் அப்போதும் என்னை அடித்துக்கொண்டேயிருந்தார்கள். எனக்கு இதற்கு மேல் தாங்கமுடியாது எனத் தோன்றியபோது எந்த நிலைமையிலும், எந்தக் காரணத்தைக் கொண்டும் சொல்லவே கூடாது என நான் நினைத்திருந்த ஒரு விஷயத்தை அவர்களிடம் கூறினேன். ”கருணாகர கஹன்ன எபா. மம தனிகர சிங்கள மினியெக். மகே முழு நம விக்கிரமபாகு கருணாரட்ன. லங்காவே கமக உபன் உன மம அன்திம வசர தெகக் தெகக் வன்னியே இன்னவா..மே மினிச்சு கேன மட தன்னெ னே… மகே அம்மா பத் எடத் எக்க பலாகென இன்னவா..ஏ நிசா மாவ நிதஹஸ் கரன்ன…”6

நான் அவ்வாறு கூறியதும், ”சிங்ஹல மினியெக் வெலா இதலா மேஹம தெமலுன்ட பஸ்ஸ பென்னனவானே…”7  என்று அவர்களில்  ஒருத்தி என்னை முதலில் அடித்தாள். பின் அந்தக் கும்பலே என்னை அடித்தது. கண்கள் சொருகி, இருண்மையடைந்து மயங்கி விழுந்தேன். இரண்டு மாதங்களின் பின் அந்தப் பாதாள அறையிலிருந்து நான் விடுதலை செய்யப்பட்டபோது சிறுமி கத்தலோனா என் கால்களைப் பற்றிப்பிடித்து ”என்னை விட்டுப் போய்விடாதேயுங்கோ, என்னை விட்டுப் போய்விடாதேயுங்கோ” என்றாள். நான் அவள் முகத்தைப் பார்ப்பதற்குத் திராணியற்று என் கால்களோடு சேர்த்து அவளையும் இழுத்துக்கொண்டு நடந்தேன். அப்போது இராணுவச் சிப்பாய் அவளை எட்டி உதைத்தாள். என் கால்களைப் பற்றியிருந்த சிறுமி கத்தலோனாவின் பிடி கொஞ்சம் கொஞ்சமாய் விலகிற்று. ஆனால் அப்போதும் கூட ”என்னை விட்டுப் போய்விடாதேயுங்கோ, என்னை விட்டுப் போய்விடாதேயுங்கோ” என்ற அந்தக் குரல் என் பின்னாலிருந்து ஒலித்துக்கொண்டேயிருந்தது.

௯.

நான் நிதானமிழந்து குறிப்புப் புத்தகத்தை படாரென்று மூடியபோது என் கால்களுக்குக் கீழாக நத்தையொன்று ஊர்ந்துகொண்டிருப்பதைக் கண்டு “ஆ”வென்று வீறிட்டுக் கத்தினேன்.

முற்றும். 

1. இந்தியாவிலிருந்து பஞ்சம் பிழைக்க வந்த பரதேசிகளுக்கு ஈழம் கேட்கின்றதா? 

2. எப்படி இருக்கின்றாய்? 

3.  நீ யார்? 

4. இதோ…! இந்த மனிதர் மருத்துவராம்.

5. மருத்துவராகயிருந்தாலென்ன? ஒரு நாட்டின் அதிபராக இருந்தாலென்ன? எங்களைப் பொறுத்தவரை தமிழர்களெல்லோருமே நாய்கள் தான்… புண்டை.

6. தயவுசெய்து அடிக்காதீர்கள்… நானொரு கலப்பில்லாத தூய சிங்களவன்; என்னுடைய முழுப்பெயர் விக்கிரமபாகு கருணாரட்ன; இலங்கையின் தென்பகுதியிலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவனான நான் கடந்த இரண்டு வருடங்களாகவே வன்னியில் இருக்கின்றேன். புலிகளையோ, இந்த மக்களையோ நான் அறிந்தவனில்லை; எனக்காக என் தாய் சோற்றுப் பருக்கைகளுடன் காத்துக்கொண்டிருக்கின்றாள்; ஆகவே என்னை விடுதலை செய்யுங்கள். 7. ஒரு சிங்களவனாக இருந்துகொண்டு தமிழர்களுக்குக் குண்டி கொடுக்கிறாயே…

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Scroll to Top