சாருவின் முன்னுரை.


***

செக்ஸ் அசிங்கம்.  எனவே பேசப்படக் கூடாதது; விவாதிக்கப்படக் கூடாதது; எழுதப்படக் கூடாதது.  இந்தத் தடை செக்ஸோடு மட்டும் முடியவில்லை; மனிதக் கழிவுகளோடும் சம்பந்தப்பட்டிருக்கிறது.  சமூகத்திலிருந்து விலக்கப்பட்டவர்களே அந்தக் கழிவுகளைச் சுமக்கவும் சுத்திகரிக்கவும் ஒதுக்கி வைக்கப்பட்டார்கள்.  ஆடைகளைச் சுத்தம் செய்தல், மனித உடல்களை சுத்தப்படுத்துதல், இறந்து போன மனித உடல்களை எரித்தோ புதைத்தோ அப்புறப்படுத்துதல் என்று எல்லாவிதமான அசுத்த வேலைகளையும் செய்வோர் சமூகத்தில் இடமின்றி அவர்கள் சுமக்கும் மனிதக் கழிவுகளைப் போலவே விலக்கி வைக்கப்பட்டார்கள்.

மனித உடலிலிருந்து வெளியேறும் சளி, ரத்தம், மலம், மூத்திரம், சாண்டை, விந்து போன்ற எல்லாமே விலக்கப்பட்டதாகவும் அசுத்தமாகவும் கருதப்படுகின்றன.  பெரும்பாலும் இவை மனித உடலின் ஜனன உறுப்புகளோடு சம்பந்தப்பட்டிருக்கின்றன. ஜனன உறுப்பைக் குறிக்கும் சொற்கள் எப்படி ‘கெட்ட’ வார்த்தைகளாகவும் ஆபாசமானவையாகவும் அசிங்கமாகவும் கருதப்படுகின்றனவோ அதேபோல் மேற்கண்ட வேலைகளைச் செய்வோரும் சண்டாளர்களாகவும், விலக்கப்பட்டவர்களாகவும், தடை செய்யப்பட்டவர்களாகவும், அசிங்கமானவர்களாகவும் கருதப்பட்டனர். இதே வகையான மற்றொரு தடை செய்யப்பட்ட விஷயம்தான் மரணம்.

ஒரு கட்டத்தில் காமம் பற்றிய அசூயை (repulsion) எப்படி வேட்கையாக (desire) மாறுகிறதோ அதைப் போலவேதான் மரணம் பற்றிய பிரக்ஞையும், வாழ்க்கை குறித்த கொண்டாட்டமாக ஆகிறது என்கிறார் ஜார்ஜ் பத்தாய் (Georges Bataille).  மரணம் இல்லாவிட்டால் ஜனனம் இல்லை; வாழ்வின் தொடர்ச்சி இல்லை. ஆகவே, மரணம்தான் வாழ்வை திரும்பத் திரும்ப புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது. ஆகவே, மரணம்தான் வாழ்க்கையைக் கொண்டாட்டக் களமாக்குகிறது. ஆகவே, மரணம்தான் வாழ்வின் ஜீவ ஊற்று.

‘The laws of general economy’ என்ற கட்டுரையில் The three luxuries of nature என்று உணவு, மரணம் மற்றும் உடலுறவைக் குறிப்பிடுகிறார் ஜார்ஜ் பத்தாய்.  பஞ்சாபிகள் இதை காவோ பீவோ மோஜ் கரோ (சாப்பிடு, குடி, கொண்டாடு) என்றும், இந்தியில் பேட், பேட் கே நீச்சே (வயிறு, வயிற்றுக்குக் கீழே) – இதுதான் உயிர் வாழ்வின் அடிப்படை என்றும் சொல்வார்கள்.  பத்தாய் இதில் மரணத்தையும் சேர்த்துக் கொள்கிறார். இதுவே கு.ப.ரா.வின் எழுத்தின் அடிப்படையாக இருந்ததால்தான் பத்தாம்பசலிகளான தமிழ் எழுத்தாளர்களுக்கு கு.ப.ரா. கசந்தார். இதையே தன் எழுத்தின் அடிப்படையாகக் கொண்டதால்தான் தஞ்சை ப்ரகாஷ் இன்னமும் போர்னோ எழுத்தாளராகக் கருதப்படுகிறார்.  என்னுடைய எழுத்துக்கும் இதே மரியாதைதான் கிடைத்தது.

தொடர்ந்து அதே கட்டுரையில் வில்லியம் ப்ளேக்கின் புகழ் பெற்ற கவிதையான The Tyger-இலிருந்து ”In what distant deeps or skies; Burnt the fire of thine eyes?” என்ற வரிகளை மேற்கோள் காட்டுகிறார் பத்தாய். புலி ஒரு உயிரைக் கொன்று தின்கிறது; ஒரு உயிரின் பசி இன்னொன்றின் மரணம்.  அதே சமயம், தகிக்கும் அக்கினி ஜுவாலையைக் கக்கும் புலியின் கண்கள் வாழ்வின் ஒளியாகவும் விளங்குகிறது. மரம் செடி கொடிகளின் இலைதழைகள் மக்கி மக்கி புதிய இலைகள் உருவாவதைப் போலே ஒரு உயிரின் மரணத்திலிருந்து எண்ணற்ற உயிர்கள் பிறந்து கொண்டே இருப்பதற்கு மரணம் திறவுகோலாய் விளங்குகிறது. ஜார்ஜ் பத்தாயின் இந்தத் தத்துவப் பின்னணியோடு அணுகினால் சாதனாவின் கதைகள் நமக்கு பலவிதமான அர்த்தத் தளங்களை உருவாக்கிக் கொண்டே போகின்றன.

***

தொகுப்பின் முதல் கதையான ’சிறுமி கத்தலோனா’ இப்படித் தொடங்குகிறது:  ”துண்டை எடுத்துக்கொண்டு குளிக்கப் போனார் சிலோன் நாதன். அவருடைய அடர்ந்த தலைமயிர்க் கற்றைக்குள் நுழைந்த வெதுவெதுப்பான நீர் தேகம் முழுவதும் படரத்தொடங்கிய போது தற்கொலை எண்ணம் அவருள் மீண்டும் கிளர்ந்தெழுந்தது. இந்த எண்ணம் இன்று நேற்று அல்ல, கிட்டத்தட்ட வருடக்கணக்கில் அவருக்குள் கிடந்து படுத்தியது. சாவதென்பது அவ்வளவு கடினமான விடயமல்ல. ஒரு உத்தரமும், நான்கடி கயிறும் போதும். முதலில் உத்தரத்தில் கயிற்றைத் தொங்கவிட்டு அது உறுதியாக இருக்கிறதா என ஒன்றுக்கு இரண்டு தடவை இழுத்துப் பார்த்து, திருப்தியில்லையாயின் மறுபடியும் இறுக்கிக் கட்டி, பின்னர், கயிற்றின் மறுமுனையில் ஒரு சுருக்கைப் போட்டு அதில் உங்கள் கழுத்தைக் கொடுக்க வேண்டும். முதலில் உங்கள் குரல்வளையானது இறுகி…”

”ஒருமுறை, தூக்கு மாட்டிக்கொண்டு தற்கொலைக்கும் முயற்சி செய்தார். கழுத்தைச் சுற்றி இறுக்கியிருந்த கயிற்றை இரண்டு கைகளினாலும் இறுக்கிப்பிடித்துக்கொண்டு, தான் நின்றுகொண்டிருந்த கதிரையிலிருந்து கால்களைத் தொங்க விட்டார். கயிறு, கைகளோடு சேர்ந்து அவர் கழுத்தையும் இறுக்கியது. கண்கள் இருண்டு, மூச்சுத் திணறி, தொண்டை நசிய, ஒரு வினாடியோ இரண்டு வினாடியோ இன்னும் கொஞ்சநேரத்தில் செத்துவிடுவோமென்று தோன்றியபோது, ரொம்பவும் பிரயத்தனப்பட்டு, என்னவெல்லாமோ செய்து நல்லவேளையாக…கதிரையில் கால்களை ஊன்றிக் கொண்டார்.”

”முன்புபோல் இல்லாமல் இப்போதெல்லாம் என்ன காரணத்திற்காகவோ பேருந்து வருவதற்குக் குறைந்தது ஒரு மணித்தியாலம் இருப்பதற்கு முதலே தரிப்பிடத்திற்குச் சென்று விடுவார். அது அவருக்குப் பிடித்திருந்தது. வீட்டிலிருப்பதை விட இப்படி எதற்கோ காத்துக்கொண்டிருப்பது சந்தோஷம் தருவதாகவும், வெறுமை படர்ந்திருந்த மனதிற்கு உற்சாகம் தருவதாகவும் தோன்றியது. ஒருவகையில், இப்படி பேருந்துக்காகக் காத்திருத்தலும், மரணத்திற்காகக் காத்திருத்தலும் ஒன்றெனவே அவர் நினைத்தார்.”

”மரணம் அவருள் மிகப் பெரும் குழப்பத்தையும், அயர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தது. வாழ்வுக்கும், மரணத்திற்கும் இடையில் ஒன்றுமேயில்லை என்றவாறாகப் பட்டது. அந்த இடைவெளியென்பது வெறும் பிரம்மை. சூனியங்களினால் நிரப்பப்பட்ட மாயவெளி.”

”வாழ்க்கை என்பது என்ன? மரணத்திற்காகக் காத்துக்கொண்டிருப்பதுதான் வாழ்க்கை. மரணத்தை விடுத்து இந்த லௌகீக வாழ்க்கையில் வேறெதுவுமேயில்லை.”

”மரணம்தான் எல்லாவற்றுக்கும் தொடக்கமாக இருக்கிறது. இன்பம், துன்பம், காதல், காமம், கோபம், அன்பு, அபூரணம், புண்ணியம் இவையெல்லாமே மரணத்தை நோக்கித்தான் நம்மை இழுத்துச் செல்கின்றன. வாழ்க்கையென்பது வெறும் பயணம் மட்டுமே. இப்பயணத்தின் முடிவுதான் மரணம். தெரிந்தோ, தெரியாமலோ நாமெல்லோரும் மரணத்தை நோக்கிப் பிரயாணம் செய்யும் பிரயாணிகளாய் இருக்கின்றோம்.”

இவ்வாறாக மரணத்தைப் பற்றியே யோசித்துக் கொண்டிருக்கும் சிலோன் நாதன் தன் பழைய வாழ்க்கையை நினைத்துப் பார்க்கிறார்.  அந்தப் பகுதிகளில் அவர் ஒரு ராணுவக் கொட்டடியில் அடைத்து வைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டதும் பிறகு ஒரு வேசியிடம் போனதும் விவரிக்கப்படுகின்றன.

”பெண் ஒரு புதிர். எந்தக் காலத்திலும் புரிந்து கொள்ளவே முடியாத புதிர்தான் பெண்ணின் தேகம். சிலோன் நாதன் வேசியின் தொடைகள் இரண்டினையும் விரித்துவைத்து அதன் பக்கமாய்த் தாழிட்டு அமர்ந்துகொண்டார். சுத்தமாக மழிக்கப்பட்ட வேசியின் பளபளப்பான யோனிவாசல் சற்றே அகண்டிருந்தது. வேசியின் தொடைகளிரண்டையும் தூக்கிக்கொண்ட சிலோன் நாதன் அதன் மையத்தில் தன் முகத்தைப் புதைக்கலானார்.

அப்போது என்னவென்றே தெரியாதவொரு இன்பம் தனக்குள் படர்வதைப் போல் உணர்ந்த அவர் அந்த இன்பம் தன் மரணம் வரை தன்னைப் பின்தொடரவேண்டுமென்று நினைத்துக்கொண்டார்.”

அதன் பிறகு சிலோன் நாதன் இந்தக் கதைசொல்லியைச் சந்தித்துத் தன் கதையை விவரிக்கிறார்.  கதையின் முடிவு எதிர்பாராதது என்பதால் அதைப் பற்றி இங்கே குறிப்பிடவில்லை.

***

“ராணுவத்தில் சேருவதற்காக வர்ஸாவுக்கு வந்து கொண்டிருக்கும் என்னிடம் ஒரு அழுக்குப் படிந்த சிறிய அளவிலான ஆடைப் பையொன்றும், அதைவிடச் சிறிய அளவிலான தோல் பை ஒன்றும் இருந்தன”  என்று தொடங்கும் ஒரு தமிழ்க் கதையை நாம் மொழிபெயர்ப்புக் கதை என்றுதானே நினைப்போம்?  இல்லை. சாதனாவின் கதைகள் யாவும் நாம் இதுகாறும் பழகியிருந்த நிலங்களிலிருந்து விலகி இந்தப் பூமிக் கோளத்தில் நம்மைப் போலவே சிரித்து நம்மைப் போலவே கண்ணீர் விட்டு நம்மைப் போலவே துரோகம் செய்து நம்மைப் போலவே கொலைகள் செய்து நம்மைப் போலவே புணர்ந்து நம்மைப் போலவே சுரண்டப்பட்டு வாழும் வேற்று நில மனிதர்களின் கதைகளைச் சொல்கின்றன. இதுதான் இந்தக் கதைகளின் விசேஷம்.  இதுதான் முதலில் என்னை ஆச்சரியப்படுத்தியது. சாதனாவை கவனிக்கவும் வைத்தது.

மேலே குறிப்பிட்ட கதைதான் தொகுப்பின் தலைப்புக் கதையான ’தொலைந்து போன சிறிய அளவிலான கறுப்பு நிற பைபிள்’.  அந்தக் கதையில் வரும் ஒரு பாத்திரமான விளாமிடின் தன் காதலி இன்னொருவனோடு படுத்திருப்பதைப் பார்த்து விட்டு அவளைக் கொலை செய்ய நினைத்து, மனம் வராமல், மனப்பிறழ்வு ஏற்பட்டு, மனநலக் காப்பகத்தில் ஐந்தரை ஆண்டுகள் இருந்து விட்டுக் கடைசியில் தற்கொலை செய்து கொள்கிறான்.  அப்படியெல்லாம் பிரச்சினை எதுவும் இல்லாத கதைசொல்லி இப்போது ஒரு கொலை செய்தாக வேண்டும். அது ஒரு கரடி. அந்தக் கரடியைக் கொல்வதன் மூலம்தான் ராணுவத்தில் அவனுடைய எதிர்காலம் நிச்சயப்படும். ஒரு உயிரை எடுத்தால்தான் அவன் உயிர்வாழ்வு சாத்தியம். ”ஆகவே கரடியே, என்னை மன்னித்து விடு! இப்போது உன்மீது எனக்கு எந்தவித முன் விரோதங்களும் இல்லையெனிலும் உன்னைக் கொன்றாக வேண்டுமென்பதே இப்போது எனக்கிருக்கும் ஒரே வழி.”

”ஓர் உயிரின் சாவு என்பது இன்னோர் உயிரைப் பிறப்புவிக்கிறது; அல்லது அவ்வுயிரைக் காக்க உதவுகிறது. சாவு என்பது ஒரு அகண்ட வெளி – அது ஒரு பிரபஞ்சம் அளவிற்குப் பெரியது – ஒரு புள்ளியில் தொடங்கும் உயிரின் வாழ்வு இந்த வெளிகளில் மிக நிதானமாக சஞ்சரித்து வெளியின் விளிம்புக் கோட்டில் முடிந்து போகின்றது.  பிரபஞ்சத்தின் மாயவெளிகளில் மிதந்து வந்த இந்தக் கரடியின் உயிர், இந்தத் கணமே விளிம்பை அடைகின்றது. அப்போது இன்னோர் உயிர் பிரபஞ்ச வெளியில் – அதாவது மேற்குறிப்பிட்ட மாயவெளிகளில் கரைந்து போகும் அபாயம் கொண்ட – தான்தோன்றியாகப் புலப்பட ஆரம்பிக்கின்றது. முடிவில் அந்த உயிரின் மரணமும் கரடியின் மரணத்தைப் போலவே அல்லது அதனை விடக் கொடுமையானதாகவும் நிகழ்ந்தேறி விடுகிறது.

என்னால் கொல்லப்படவிருக்கும் இந்தக் கரடியின் வாழ்வு இன்னும் சில கணங்களில் முடிந்து விடுமென்பது எதன் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது? கற்பனைவாதத்திலா? அல்லது யதார்த்தவாதத்திலா? கற்பனைவாதம் என்பது கடவுளை அடிப்படையாகக் கொண்டது. யதார்த்தவாதம் என்பது அ-கடவுளை அடிப்படையாகக் கொண்டது.  இதில் எது உண்மை என்பது அறிஞர்களினால் கூட இந்தக் கணம் வரை கண்டறிய முடியவில்லை.”

இவ்வாறு ஒரு மண்புழுக் கணக்காக நேரம் நகர்ந்து கொண்டிருக்க ‘ஏன் தயங்குகிறாய்? சுடு’ என்றார் ட்ரான்ஸ்கி.  ஒரே முயற்சியில் இம்மி பிசகாமல் சுட்டு விட்டதற்காக அதிகாரி அவனை அழைத்துப் பாராட்டுகிறார். கடைசியில் உனக்கு இயேசுவில் நம்பிக்கை இருக்கிறதா என்று கேட்கிறார்.  அதற்குக் கதைசொல்லி இப்படிச் சொல்கிறான்:

”இயேசு. இந்த உலகிலே என்னை அதிகம் பரவசமூட்டும் வார்த்தையாக அவர் இருக்கின்றார். தனித்திருக்கும் பொழுதுகளில் கண்களை மூடித் தியானிக்கும் போது நித்திய இயேசுவின் முகமும், அவரின் சாத்வீகமான குரலுமே என்னை முழுவதுமாய் ஆட்கொள்கின்றது.

ஓர் இனிமையான சங்கீதத்தைக் கேட்பதுபோல், ஒரு சிறந்த ஓவியரால் தீட்டப்பட்ட விலைமதிப்பற்ற ஓவியத்தை ரசிப்பது போல், ஒதுக்கப்பட்ட கிராமமொன்றின் மையத்திலிருக்கும் ஆற்றுப் பகுதியில் அமர்ந்து  இயற்கையை உணர்வது போல் இயேசுவானவர் என்னைத் தன்னுள் ஈர்த்துக் கொண்டேயிருக்கிறார். தேவாலயத்தில் அமர்ந்து சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் முகத்தைப் பார்ப்பது போல் வேறெதுவும் எனக்கு அமைதியைத் தந்துவிடப் போவதில்லை.

அது ஒரு சுகம், தாயின் கர்ப்பப் பையில் இருப்பதைப் போல அது ஒரு இனிமை.”

இதே கதையில் மற்றொரு இடம்:

”இன்றைய யுத்தத்தில் நாஜி அணியினருக்கு பலத்த சேதம். உறைபனிக்குள் முக்கோண வியூகம் அமைத்து எங்கள் தாக்குதலை நடத்தியிருந்தோம். அதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ஆரம்பத்திலேயே தடுமாறிப்போனார்கள். செய்வதறியாது திகைத்தார்கள். அவர்களின் அந்தச் சூழ்நிலையை எங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு, பன்றிகளையும் நாய்களையும் காக்கைகளையும் சுடுவதைப் போல் அவர்கள் ஒவ்வொருவரையும் நாங்கள் சுட்டு வீழ்த்தினோம். நகரெங்கும் பிசிறிய ரத்தமாகவும், ரவைகளினால் துளையுண்ட கபாலங்களையுடைய உடல்களாகவும் சிதறிக் கிடந்தன. பின்னர் அவ்வுடல்கள் எங்கள் கண்ணெதிரேயே கழுத்து மழிக்கப்பட்ட கழுகுகளாலும் செந்நிற இறக்கைகளைக் கொண்ட வல்லூறுகளினாலும் கொத்திக் கிழிக்கப்பட்டன…

ஒவ்வொரு உடலாக எடுத்து எல்லாவற்றையும் ஓரிடத்தில் குவித்துக் கொண்டிருந்தோம். சில உடல்கள் தலையில்லாமல் முண்டமாயிருந்தன. சில உடல்கள் கைகளில்லாமலிருந்தன. சில உடல்கள் கால்களில்லாமலிருந்தன. இன்னும் சிலவற்றில்  தலைகள் மட்டுமே கிடந்தன. அப்போதுதான் அவனைப் பார்த்தேன். அவன் கண்கள் என்னையே நேராக ஊற்றுப் பார்த்துக் கொண்டிருந்தன. பயங்கரமாக மூச்சு வாங்கினான். நான் அவனருகில் சென்று லாவகமாகத் தூக்கி மடியில் கிடத்தினேன். தாகமாய் இருக்கிறது, தண்ணீர் கொடுங்கள் என்றான். என்னுடைய தண்ணீர் நிரப்பப்பட்ட குடுவையை எடுத்து அவனைப் பருகச் செய்தேன். களைப்பு தீர்ந்ததும் ஒருவாறாகத் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவன், கண்களால் நன்றியென்றான்.

ஒரு கையால் அவன் மார்பை நீவி விட்டுக் கொண்டே மறு கையால் என் சப்பாத்துக்குள் ஒளித்து வைத்திருந்த மண்ணிறக் கத்தியை எடுத்து நேராக அவன் கழுத்தில் குத்தினேன். ஆரம்பத்தில் கத்தியின் அந்தக் கூரான முனை அவன் தோலைக் கிழித்துக் கொண்டு உள்ளே இறங்கியது. இருண்டு போன கண்களால் என்னை வெறித்துக் கொண்டே கால்களை பலமாக நிலத்தில் உதைத்தான். அவன் கைகள் என்னுடைய கைகளை உந்தித் தள்ள முயன்றன. நான் இன்னும் ஆவேசம் கொண்டவனாகக் கத்தியின் மீது என் கையைப் பரப்பி மற்றொரு கையால் அவன் கழுத்தில் குத்தினேன். கத்தி இன்னும் ஆழமாக உள்ளே சென்று இறங்கியது. பையொன்றிலிருந்து சேமித்து வைத்திருந்த தண்ணீர் வெளியேறுவதைப் போல இரத்தம் குபுகுபுவென்று அவன் கழுத்திலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தது.”

போர் முடிவுற்ற நிலையில் கதைசொல்லி பெர்லினின் சிதைவுற்ற கட்டிடம் ஒன்றில் ஒரு பெண்ணைப் பார்த்து அவளை வன்கலவி செய்கிறான்.  அந்தப் பகுதியை நான் மேற்கோள் காட்ட விரும்பவில்லை. உலகின் மிகச் சிறந்த கதைகளில் ஒன்று என நிச்சயமாகச் சொல்லக் கூடிய கதை இது.  இந்த அற்புதமான கதைக்காகவே சாதனாவை எத்தனை பாராட்டினாலும் தகும். இதே போன்ற மற்றொரு மகத்தான கதை, ’யூதாஸின் முத்தம்’. துரோகத்தின் வலியை உலக இலக்கியம் வெகு அரிதாகவே பேசியிருக்கிறது.  சமகாலத் தமிழ் இலக்கியத்தில் அது இன்னும் அரிது. ’தாய்’ என்ற மற்றொரு கதையிலும் துரோகம்தான் பாடுபொருள். வரலாறு முழுக்கவுமே நாம் சிலுவையில் அறையப்பட்டவர்கள், கல்லால் அடிபட்டவர்கள், விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டவர்கள், துரோகத்தால் குத்திக் கொல்லப்பட்டவர்கள் – சுருக்கமாகச் சொன்னால் – தியாகிகளின் கதைகளையே கேட்டு வந்திருக்கிறோம்.  துரோகிகளின் கதை நமக்குத் தெரியாது. துரோகிகளைப் பற்றியுமே கூட நமக்கு தியாகிகள்தான் சொல்லியிருக்கிறார்கள். அந்தக் கதைகளைக் கேட்டு தியாகிகளின் மீது நம் அன்பு கூடியிருக்கிறதே தவிர துரோகிகளின் கதையை துரோகிகளே சொல்ல நாம் இதுவரை கேட்டதில்லை. சாதனாவின் ‘தாய்’, ‘யூதாஸின் முத்தம்’ ஆகிய இரண்டு கதைகளிலும் நாம் அதைக் கேட்கிறோம்.

அது தவிர, குறிப்பிட்ட இந்த இரண்டு கதைகளும் எனக்கு பெர்க்மனின் சினிமாவைக் காண்பது போல் இருந்தன.  அப்படிப்பட்ட உன்னதத் தருணங்களையும் காட்சிப் படிமங்களையும் கொண்ட கதைகள் அவை. அந்த வகையில் இந்த இரண்டு கதைகள் மட்டும் அல்லாமல் சாதனாவின் எல்லா கதைகளுமே உலகத் திரைப்படங்களாக ஆகக் கூடிய கதைக் களனையும் காட்சிகளையும் கொண்டிருக்கின்றன.   கதை சொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் போதே காட்சிகளாய் விரிவது சாதனாவின் விசேஷத்தன்மையாகத் தெரிகிறது.

ரஷ்ய இசை மேதை ட்சைக்காவ்ஸ்கியின் (Tchaikovsky) ஸிம்ஃபனிகளைக் கேட்கும் போது நம்மால் பனிப் பொழிவை உணர முடியும்.  இதை ட்சைக்காவ்ஸ்கியின் இசைப் பிரியர்கள் அத்தனை பேரும் பதிவு செய்திருக்கின்றனர். அதேபோல் சாதனாவின் கதைகளில் என்னால் உறைபனியையும், பனிப் பாலைகளையும், பஞ்சு மலர்களாய்ப் பெய்யும் பனிப் பொழிவையும் உணர முடிந்தது.

இது போன்ற கதைகள் இன்னும் தமிழில் எழுதப்பட்டதில்லை.  இந்தக் கதைகள் ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டால் சாதனாவை உலகம் கொண்டாடும்.  அந்த இளைஞனுக்கு என் வாழ்த்துகளும் அன்பும்.

மைலாப்பூர்

4.7.2018.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Scroll to Top