கரித் தெமலோ…!

‘நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்’ என்கிற பாடல் வில்வரட்னத்தின் காதுகளில் விழுந்தபோது அவரின் கண்கள் கலங்கத் தொடங்கின. சிறிது நேரம் அந்த ஒலிபெருக்கியையே பார்த்துக்கொண்டிருந்தார்.  

 வில்வரட்னம் கடவுளின் மீது எவ்வளவு பக்தி கொண்டவரோ அதைவிட இயக்கத்தின் மீதும், இயக்கத் தலைவர் மீதும் அசலான பக்தி கொண்டவர். இரண்டாயிரத்து ஒன்றில், ரணில் – பிரபாகரன் சமாதான ஒப்பந்தம் கைச்சாத்தாகியபோது, இன்னும் இரண்டு ஆண்டுகளிலோ அல்லது மூன்று ஆண்டுகளிலோ தமிழீழம் கிடைத்துவிடுமென்றே அவர் நம்பினார். தமிழ் மக்கள் இனி நிம்மதியாக இருப்பார்களென்றும் தானும் தன் குடும்பத்தோடு இந்த நாசமாய் போன கொழும்பை விட்டுப்போய் அங்கேயே நிரந்தரமாய் தங்கிவிடலாமென்றும் நினைத்தார்.  

இது, வில்வரட்னம் கலந்து கொள்ளும் முதலாவது மாவீரர் நாள். ஏ-9 பாதை திறக்கப்பட்டதும் முதல் வேலையாக அவர் வன்னிக்கே வந்தார். முதல் முறை என்பதால் தேவியையும் பிள்ளை குட்டிகளையும் அவர் அழைத்து வந்திருக்கவில்லை. அதோடு தான் பங்குபற்றும் முதலாவது மாவீரர் நாளை தேவியின் கிள்ளல், பிள்ளைகுட்டிகளின் சிணுங்கல் இவை எதுவுமில்லாமல் அவர் தனியே அனுபவிக்கவே விரும்பியிருந்தார். தேகம் என்றுமில்லாதவாறு உற்சாகமாக இருந்தது. 

ஒலிபெருக்கியில் ஒலித்துக் கொண்டிருக்கும் புலிப்பாடலும் காந்தள் மலர்களுடன் கூடிய வண்ணக் கொடிகளும் அவரைக் குதூகலிக்க வைத்தன. கைகள் இரண்டையும் பின்னால் கோர்த்துக்கொண்டு நிமிர்ந்த நடையுடன் அவர் பாட்டுக்கு உலாத்தித் திரிந்தார். இயக்கப் பொடியனொருவன் இவரைப் பார்த்துப் புன்னகைத்தபோது சடாரென்று நின்றவர், அதே வேகத்தோடு இடது கையை நெற்றிக்குக் கொடுத்து ‘சல்யூட்’ அடித்தார்.  

 வில்வரட்னம் தமிழீழம்தான் தமிழர்களின் இறுதித் தீர்வென நம்பியதற்கு ஏகப்பட்ட வலுவான காரணங்கள் உண்டெனினும் ஒரு சில காரணங்கள் வில்வரட்னத்தால் என்றுமே மறக்க முடியாதவை.  

வில்வரட்னம் பிறந்தது யாழ்ப்பாணத்தில் உள்ள தீவுப் பகுதியாக இருந்தாலும் சிறு வயதிலிருந்தே அவர் கொழும்பில்தான் வசித்து வருகிறார். அதுவும் முழுக்க முழுக்கத் தமிழர்கள் வாழும் பிரதேசத்தில். ஆகவே, அவருக்குச் சிங்களம் சுட்டுப் போட்டாலும் வராது. கூடவே, அவருக்கு அந்த மொழியின் மீது ஒரு ஒவ்வாமையும் இருந்தது. இவரின் தந்தை அய்ந்தாம் குறுக்குத் தெருவிலுள்ள ஒரு மொத்த வியாபாரக் கடையில் நிர்வாகியாக வேலை செய்து வந்தார். இவர், அதே கடையில் காசாளராக வேலை பார்த்தார்.  

அவரின் முதலாளிகூட எத்தனையோ தடவைகள் சொல்லிப் பார்த்தும் வில்வரட்னம் சிங்கள மொழியைக் கற்றுக் கொண்டாரில்லை. தனக்குத் தெரிந்த ஓரிரு சிங்கள வார்த்தைகளை வைத்தே அவர் அத்தனை வருடங்களையும் கழித்திருந்தார்.  

இப்படித்தான் ஒரு தடவை. காலை ஆறு மணியிருக்கும். வேலைக்குப் போவதற்காகக் கொச்சிக்கடையிலிருந்து வந்து கொண்டிருந்தவரை முருகன் தியேட்டருக்கு அருகில் நின்றுகொண்டிருந்த இரண்டு இளம் ஆமிப் பொடியன்கள் பிடித்து விட்டார்கள்.    

‘ மாத்தையா எங்கே போறது?’ 

‘ வெர்க்கிங் போறேன்’

‘ மாத்தையா என்ன வேலை செய்யுறது?’  

‘ரைட்டிங் பில்’

ஆமிக்காரப் பொடியன்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டவர்கள், பின்பு, ‘மொக்கத பில்’ என்றார்கள். அவர்கள் அப்படிக் கேட்கும்போது அவர்களின் கண்கள் போலியாகக் குறுகியிருந்தன. வில்வரட்னத்துக்கு இவர்கள் தன்னுடன் விளையாடுகிறார்கள் என்பது புரிந்து விட்டது. இருந்தாலும், அவர் அதைக் காட்டிக் கொள்ளாமல் தன்னுடைய கைகளிலொன்றை தாள்களைப் போல் விரித்து, மற்றைய கையை பேனா போலாக்கி எழுதி எழுதிக் காண்பித்தார். அப்படி அவர் பாவனை செய்யும் போது அனிச்சையாக அவருடைய உதடுகள் ‘பில்லு, பில்லு’ என்றவாறாகச் சொல்லிக்கொண்டன.  

ஆமிக்காரப் பொடியன்களில் மூத்தவன் போலிருந்தவன் தன்னுடைய கண்களை இன்னும் குறுக்கிக்கொண்டு ‘மொக்கத… பில்லு கப்பனவத?’ என்றான்.  

வில்வரட்னத்தின் கண்கள் குழப்பமடைந்தன. ஆனால், அதே நேரம் எழுதுவதற்குச் சிங்களத்தில் கப்பனவத போலிருக்கிறது என்றும் அவருக்குப் படவே முகத்தைத் தூக்கிக் கொண்டு ‘ஒவ் ஒவ் கப்பனவா’ என்றார்.  

வில்வரட்னம் இப்படிச் சொன்னதும் அந்த மூத்த ஆமிக்காரப் பொடியன் பின்வருமாறு வினவினான்.  

‘மொக்கதக் கப்பனவா; கல்லுக் கப்பனவத?’  

இவ்வாறு வினவி விட்டு அந்த இரண்டு இளம் ஆமிக்காரப் பொடியன்களும் பின்பக்கமாய் திரும்பிச் சிரி சிரியென்று சிரித்தார்கள். வில்வரட்னம் அவமானத்தினாலும், கோபத்தினாலும் துடித்தார். குனிந்து நிலத்தையே பார்த்துக்கொண்டிருந்தவர், அதற்கு மேல் ஒரு சொல் பேசினாரில்லை. அவரின் தேகமானது நடுங்கிக் கொண்டிருந்தது.  

ஆணும் ஆணும் உறவில் ஈடுபடுவதைத் தமிழில் ‘கல்லு வெட்டுதல்’ என நக்கலாகக் குறிப்பிடுவார்கள். அதையே சிங்களத்தில் ‘கல்லுக் கப்பனவா’ என்பார்கள். தங்கள் நாட்டில் வாழும் சகல பிரஜைகளுக்கும் பாதுகாப்பாக இருக்க வேண்டிய இராணுவமே இப்படியான அவமானப்படுத்தும் கேள்வி கேட்டதை வில்வரட்னம் பெரும் மரியாதைக் குறைவாகக் கருதினார்.  

இன்னொரு தடவை, நோன்புப் பெருநாளுக்கு முந்திய தினமொன்றில் தாவு தீர்ந்து விடுமளவுக்குக்  கடையில் பயங்கர வேலை. கடையை அடைப்பதற்கே  இரவு ஒருமணியாகி விட்டது. அன்று அவர் வீட்டுக்குப் போகவில்லை. இவரும் இன்னும் இரண்டு பேரும் கடையை அடைத்துவிட்டுக் கடைக்கு  உள்ளேயே படுத்துக்கொண்டார்கள். அதிகாலை நான்கு மணி வாக்கில் யாரோ கடையின் வாசலைத் தட்டுவது கேட்டது. மூவருக்கும் பயங்கர அசதி. எழும்பி யாரென்று பார்ப்பதற்கு முடியாத அளவுக்கு அசதி. எழும்ப மனமில்லாமல் படுத்தே கிடந்தார்கள். இப்போது கதவு ஒரு மூர்க்கத்தனத்துடன் தட்டப்படுகிறது. விட்டால் உடைத்து விடுவார்களோ என்கிற அளவுக்கு அதன் சத்தமானது அதிர்கிறது. 

இறுதியில் அவர்கள் கதவை உடைத்தும் விட்டார்கள். வந்தவர்கள் இராணுவம். தூங்கிக்கொண்டிருந்த மூவரையும் வெளுத்து வாங்கினார்கள். கடையில் வேலை செய்த பதினெட்டு வயதுப் பையனையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. இராணுவம் அடித்த அடியில் அவன் முகமானது கன்றிப்போய் சிவக்கத் தொடங்கிற்று. வில்வரட்னம் வெட்கத்தாலும், அசிங்கத்தாலும் கூனிக் குறுகிப் போய் நிற்கலானார். இராணுவ வீரனொருவன் அவர் கன்னத்தைப் பொத்தி அடித்திருந்தான். கடை முழுவதையும் அங்குலம் அங்குலமாக சல்லடை போட்டுத் தேடியவர்கள், தாங்கள் தட்டும்போது கதவைத் திறக்காத காரணத்தைக் காட்டி மீண்டும் மீண்டும் அடித்தார்கள். அப்போது, அவர்களிலொருவன், வில்வரட்னத்தைப் பார்த்துக் கீழ்க்கண்டவாறு உரைத்தான்.

‘கரித் தெமலோ!’

வில்வரட்னத்துக்கு மேற்கூறிய வார்த்தைகளைக் கேட்டதும் அவரின் இதயமானது கனக்கத் தொடங்கியது. அது ஏதோ முழு அம்மணமாக நிற்பது போலவும் அவருக்குத் தோன்றிற்று. அவர் தேகமானது விக்கித்து அந்த இராணுவ வீரனையே சில கணங்கள் பார்த்துக்கொண்டிருந்தார். பின்பு, தலையைக் குனிந்து கொண்டவர் சுவரின் ஒரு பக்கமாகப் போய் நின்று கொண்டார். 

இவையெல்லாம் ஒரு சொற்ப நிமிடங்கள் தான். ஆனால், வில்வரட்னத்துக்குத்தான் வாழ்வு வெறுத்து விட்டது. அவர் எத்தனையோ தூஷண வார்த்தைகளைக் கேட்டிருக்கிறார். ஏன் அவர் கூட தன்னுடைய பதின்ம வயதுகளில் நிறையவே தூஷணம் பேசியிருக்கிறார். ஆனால், அந்த இராணுவ வீரன் இவரைப் பார்த்து உரைத்த ‘கரித் தெமலோ’ என்கிற வார்த்தை அவரை முழுவதுமாக ஏதோ பண்ணிற்று. அதெப்படி என்னைப் பார்த்து அவன் அதுவும் ஒரு சிங்களவன் கரித் தெமலோ எனச் சொல்லலாம்? நானென்ன கரித் தமிழனா? அல்லது என் இனம் கரித் தமிழ் இனமா? 

வில்வரட்னத்துக்கு வாழ்வும் கூடவே கொழும்பு நகரமுமே வெறுத்து விட்டது. அவர் சீக்கிரமாகவே அந்த மனிதர்களையும், நகரத்தையும் துறந்துவிட எண்ணினார். யுத்தம் எப்போது முடியும்? தமிழீழம் எப்போது மலருமென அவர் கனவு காணலானார். 

//இப்போது, அவர் தனித் தமிழீழத் தேசத்தில் நின்று கொண்டிருக்கிறார். ஆறுகளும் நதிகளும் பெருக்கெடுத்து ஓடுகிறன. எங்கும் பச்சைப் பசுமைவெளிகள். சூழ்ந்திருக்கும் காற்றில் சுத்தமும், நறுமணமும் தெரிகிறது. வில்வரட்னம் ஆழ்ந்து மூச்சை இழுத்து விட்டுக் கொள்கிறார். தூய்மை நிரம்பிய வானத்தின் கீழே மனிதர்கள் நடமாடுகிறார்கள். அத்தனை மனிதர்களின் முகங்களிலும் மகிழ்ச்சி நிரம்பியிருக்கிறது. குண்டுச் சத்தங்கள் கிடையாது. ஆனால், மழை தாராளமாகப் பொழிகிறது. துவக்குகள் கிடையாது. ஆனால், வண்டுகள் ரீங்காரித்துப் பாடல் இசைக்கின்றன. மொத்தத்தில், ‘கரித் தெமலோ’  என்கிற வார்த்தை அங்கு கிடையவே கிடையாது.//

 இரண்டாயிரத்து ஒன்பதில் யுத்தம் முடிந்ததும், தலைவர் இறந்து போனதாக வெளிவந்த தகவல் வில்வரட்னத்தை என்றுமில்லாதவாறு பாடாய் படுத்தியது. இரவில் தூக்கமின்றித் தவித்தார். நாங்கள் என்ன பாவம் செய்தோமென்றும், எதற்காக எங்களுக்கு இவ்வளவு பெரிய உத்தரிப்பைக் கொடுத்தாய் என்றும் கடவுளிடம் வாய் விட்டுக் கேட்பார். இலங்கையிலிருப்பதே அவருக்கு அவமானமாக இருந்தது. கூடவே, அந்த ‘கரித் தெமலோ’. அவர், அவ்வார்த்தையை நினைக்கும்போதெல்லாம் அவர் தேகமானது படபடக்கத் தொடங்கிற்று. கம்பளிப்பூச்சிகளும், பாம்புகளும், பூரான்களும் மட்டுமல்லாமல் தவளைகளும், தேரைகளும், கறையான்களும் அவர் இதயத்தைச் சூழ்ந்துகொண்டு அரிக்கலாயின.

அடுத்த ஆண்டு, மனைவியிடமும் சொந்தங்களிடமும் சொல்லிவிட்டு அவர் ஃபிரான்சுக்கு விமானம் ஏறினார்.  

ஒரு பிரமுகரை அழைத்துப் போவது போல் தன்னையும் அவர்கள் அழைத்துப் போவார்கள் என்றே வில்வரட்னம் நினைத்தார். ஆனால், பரிசோதனைக் குழாய்க்கு அருகில் வந்தவுடனே குடிவரவு, குடியகல்வு அதிகாரிகள் அவரைச் சூழ்ந்துகொண்டார்கள். வில்வரட்னத்துக்கு நாடி நரம்பெல்லாம் திரவமாகியது. தொண்டை வறண்டு போனதைப்போல் உணர்ந்தார். 

வந்தவர்களில் இருவர் வில்வரட்னத்தை நடுவில் விட்டு, தங்கள் கைகளைக் கோர்த்துக்கொண்டு அழைத்துச் சென்றார்கள். வில்வரட்னத்துக்கு இந்த உலகமே தன்னை உற்று நோக்குவது போலிருந்தது. ஒருவரையும் திரும்பிப்பாராமல் நகர்ந்துகொண்டிருந்தார். 

முதலில், அவரின் கடவுச்சீட்டு ஆராயப்பட்டது. கடவுச்சீட்டின் பிரகாரம் வில்வரட்னம் இலங்கையர் கிடையாது. இந்தோனேசியர். அந்த நீலநிறக் கடவுச்சீட்டையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த அதிகாரி, கடவுச்சீட்டின் விளிம்பில் கார்பன் படித்திருப்பதைக் கண்டுபிடித்து, கொடுப்புக்குள் சிரித்து, வில்வரட்னத்தை உற்று நோக்கினான். வில்வரட்னத்துக்கு இப்போது தன்னுடைய முகவரின் மீது தாங்கொணக் கோபம் வந்தது. அறுவான்… முன் காசாக ஏழு லட்சத்தைச் சிரித்துக்கொண்டே வாங்கியவன், இப்படியா நடுவழியில் தவிக்கவிட்டுப் போவான்… பேயன் ! என்று வாய்க்குள் முணுமுணுத்தார். 

தன்னையே பரிதாபமாகப் பார்த்துக்கொண்டிருந்த வில்வரட்னத்தை நோக்கி அதிகாரி உன்னுடைய பெயர் என்னவென்று ஆங்கிலத்தில் கேட்டான். 

அவன் கேட்டத்தில் ‘நேம்’ என்பது மாத்திரமே வில்வரட்னத்துக்கு விளங்கியது. மற்றையது ஒன்றுமே விளங்கவில்லை. அவர் இப்பொழுதும் அதிகாரியையே பரிதாபமாகப் பார்த்துக்கொண்டிருந்தார். அவன் மறுபடியும் உன்னுடைய பெயர் என்னவென்று கைகளால் வரைந்து காட்டிக் கேட்டான். வில்வரட்னத்துக்கு கொஞ்சமாகப் புரிவது போலிருந்தது. வில்… என்று ஆரம்பித்தவர், தான் இப்போது வில்வரட்னம் இல்லையென்பதும், ஏன் இலங்கையனே இல்லை என்பதும் நினைவுக்கு வரச் சட்டென ‘முகம்மது’ என்று மாற்றிச் சொன்னார். கடவுச்சீட்டில் அவ்வாறுதான் எழுதப்பட்டிருப்பதாக நினைவு. 

அதிகாரி கடவுச்சீட்டை ஒருகணம் தூக்கிப்பிடித்துப் பார்த்துவிட்டு, முழுப்பெயர் என்னவென்று கேட்டான். வில்வரட்னத்துக்கு தன்னுடைய முழுப்பெயர் என்னவென்று தெரிந்திருக்கவில்லை. மறந்துவிட்டது. அதுவும், முகமது இசுமாயில் அபூபக்கர் என்கின்ற ஒரு இஸ்லாமியப் பெயரை அவர் கண்டிப்பாக நினைவு வைத்திருக்கவே மாட்டார். வில்வரட்னம் வந்த ஆத்திரத்தில் கீழ்க்கண்டவாறு பதிலுரைத்தார்.

‘பனங்கட்டி’

அதிகாரிக்கு ஒன்றுமே புரியவில்லை. ‘பனங்கட்டியா? ஆனால், இங்கு உன்னுடைய பெயர் வேறு மாதிரி எழுதப்பட்டிருக்கிறதே’ என்றான். 

வில்வரட்னத்துக்குப் பயம் பிடித்துக்கொண்டால் தலை சுற்றுவது போலிருக்கும். அய்ந்து நிமிடங்களுக்கு முதல் நடந்தது என்னவென்று கூட நினைவிருக்காது. அவர் எதுவும் பேசினாரில்லை. அதிகாரியின் கண்களை நேராகப் பார்ப்பதற்கு அஞ்சி அந்த அறையின் மூலையின் விட்டத்தையே பார்த்துக்கொண்டிருந்தார். அதிகாரியும் அவர் பார்க்கும் திசையை ஒருகணம் தானும் திரும்பிப் பார்த்துக்கொண்டான். வில்வரட்னம் பதில் சொல்வதாகத் தெரியவில்லை. 

அப்போது, அந்த விசாலமான அறையின் கதவைத் திறந்துகொண்டு ஏயார் பிரான்ஸ் விமான சேவையின் நிர்வாகி உள்ளிட்டான். வந்தவனுக்கு முப்பத்தைந்து அல்லது அதனிலும் குறைவான வயதே இருக்கலாம். சாந்தமான முக அமைப்பைக் கொண்டவனான அவன் வில்வரட்னத்தை நோக்கி இவ்வாறு கேட்டான்.  

‘இதோ பாருங்கள், நீங்கள் இந்தோனேசியா நாட்டைச் சேர்ந்தவராக எங்களுக்குத் தோன்றவில்லை; அதை நாங்கள் நம்பவுமில்லை. உங்கள் கடவுச்சீட்டு என்று எம்மிடம் ஒப்படைத்த அந்த நீலநிறப் புத்தகத்தின் ஓரத்தில் கார்பன்கள் படித்திருப்பதை நாங்கள் கண்டுபிடித்துவிட்டோம். ஆகவே உண்மையைச் சொல்லிவிடுங்கள். யார் நீங்கள்? நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்? 

வில்வரட்னத்துக்கு ஒற்றைவரியில் ஆங்கிலம் பேசினாலே மண்டை கிறுகிறுத்துப் போய்விடும். ஆனால் இவனோ பந்தி பந்தியாக ஆங்கிலம் பேசுகின்றான். அவருக்கு உண்மையிலேயே மண்டை கிறுகிறுத்துத்தான் போனது. கூடவே, அந்த இளைஞன் தன்னை ‘கரித் தெமலோ’ என்று திட்டியதாகவும் அவருக்கு சந்தேகம் உண்டாகிற்று. 

தன்னுடைய முள்ளந்தண்டின் மையத்திலிருந்து உஷ்ணமாக ஏதோவொன்று கிளம்புவதைப் போலுணர்ந்த அவர் அந்த அழகிய இளைஞனையே வாய் பிளந்து  பார்த்துக்கொண்டிருந்தார். அவரின் இதயம் சுறுசுறுவென்று வேலைசெய்ய ஆரம்பித்தது. என்ன நடந்தாலும் சரி உயிரே போனாலும் கூட இனி வாய் திறந்து ஒரு வார்த்தை கூடப் பேசப் போவதில்லையென்று முடிவெடுத்தார். இந்த நேரத்தில் அதுவே சிறந்ததென்றும் அவரின் உள்ளுணர்வு அவருக்குக் கூறிற்று. 

அவர் எதுவுமே பேசாமல் தலையைக் குனிந்தவாறு தன்னுடைய கருப்பு நிறச் சப்பாத்தினையே பார்த்துக்கொண்டிருந்தார். சிறிது நேரத்தின் பின் அந்தச் சாந்தமான முக அமைப்பைக் கொண்ட அழகிய இளைஞன் தான் அமர்ந்திருந்த கதிரையைத் தூக்கி ஓங்கி நிலத்தில் அடித்தான். வில்வரட்னம் திடுக்கிட்டு அவனின் சிவப்பேறிய கண்களையே பார்த்துக்கொண்டிருந்தார். 

அந்த மிகப்பெரிய விமானத்தின் இடது பக்க மூலையின் யன்னல் இருக்கையில் வில்வரட்னம் அமர்ந்திருந்தார். அவருக்குப் பக்கத்தில் ஓர் ஆப்பிரிக்க குண்டுப் பெண் அமர்ந்திருந்தாள். இவரைப் பார்த்து ‘கரித் தெமலோ’ என்றாள்.  எதுவுமே புரியாமல் சட்டென அவளைத் திரும்பிப் பார்த்தபோது,அவளும் அதே வேகத்தோடு திரும்பி இவரைப் பார்த்துச் சிரித்துக் கொண்டாள்.  

வில்வரட்னத்துக்கு எதுவுமே புரியவில்லை. அச்சத்தில் அவரின் முகம் விறைத்திருந்தது. தான் மட்டுமே அந்த விமானத்தில் அமர்ந்திருப்பதாக  உணர்ந்தார். விமானம் கிளம்பிப் பதினைந்து நிமிடங்கள் கழிந்த பின், கக்கூசுக்குப் போவது போல் கழிவறையில் வைத்துக் கடவுச்சீட்டைக் கிழித்துப் போட்டுவிட வேண்டும். முகவர் அப்படித்தான் வில்வரட்னத்துக்கு அறிவுறுத்தியிருந்தான். விமானம் ஏறத் தொடங்கியபோது அவருக்கு வயிற்றில் குமட்டுவது போலிருந்தது. பாதங்கள் குறுகுறுத்தன. ஒருகணம் ஓங்காளித்து பின், வந்த எச்சிலை விழுங்கிக் கொண்டார். 

விமானப் பணிப்பெண்ணொருத்தி இவரின் காதுக்கு அருகாக வந்து ‘கரித் தெமலோ’ என்றாள். வில்வரட்னத்துக்குத்  தேகமெல்லாம் நெருப்பாய் எரிந்து கண்கள் சிவந்து கொண்டன. ஒரு வேகத்தோடு இருக்கையை விட்டு எழுந்துகொண்டவர், அதே வேகத்தோடு பணிப்பெண் மீது பாய்ந்து அவளை நிலத்தில் சரித்து அவளின் முகத்தில் சரமாரியாகக் குத்தினார். எங்கும் இரத்தச் சகதி. பணிப்பெண்ணின் முகமானது உடைந்து இரத்தம் கொட்டிக்கொண்டிருந்தது. வில்வரட்னம் பெரும் குரலெடுத்து அகோரமாகச் சிரித்துக்கொண்டார். மட்டுமல்லாமல், இரத்தம் தோய்ந்த கைகளைத் தன் முகத்தில் தடவியும் கொண்டார். அப்போது, திடீரென்று முழித்துக் கொண்ட அந்த விமானப் பணிப்பெண் இவரைப் பார்த்துப் புன்னகைத்து, ‘நீங்கள் உங்கள் தாகம் தீர்த்துக் கொள்ள உங்களுக்கு ஏதும் கொடுக்கட்டுமா?’ என்றாள். 

பதினைந்து நிமிடங்கள் கழித்து, வில்வரட்னத்துக்கு உண்மையிலேயே கக்கூஸ் முட்டியது. அந்த ஆப்பிரிக்கக் குண்டுப் பெண்ணைத் தாண்டிச் செல்லும்போது, இவள் நான் எதற்காக கக்கூஸ் போகிறேன் என்பதை தெரிந்து கொண்டிருக்கக் கூடும் என்று அவரின் உள் மனம் அவருக்குக் கூறிற்று. விமானத்தில் அமர்ந்திருந்த அத்தனை பயணிகளும் தன்னைத்தான் பார்த்துக்கொண்டிருக்கின்றார்களோ என்று கூட கற்பனை செய்தார். அச்சத்தில் காற்றில் நடப்பது போல் நடந்து கழிவறையின் வாசலில் வந்து நின்றார். கதவில் சிகப்பு நிற விளக்கு எரிந்து கொண்டிருந்தது. பச்சை வரும் வரை காத்துக்கொண்டிருந்தபோது, யாராவது வந்து தன்னை ஏதும் கேட்டுவிடுவார்களோ என்று பயந்தார். 

கழிவறையின் கதவு திறக்கப்பட்டபோது வில்வரட்னத்துக்கு கக்கூசும், பயமும் சரிவிகிதத்தில் முட்டிக்கொண்டு நின்றன. உடல் வியர்த்திருந்தது. தன்னுடைய பாரம் சற்றுக் குறைவதைப் போலுணர்ந்தார். ஒரு விறுவிறுப்புடன் கழிவறைக்குள் நுழைந்த அவர், கதவைத் தாளிட்டுவிட்டு தன்னைத் தானே ஆசுவாசப்படுத்திக்கொண்டார். குறைந்த பாரம் மறுபடியும் ஏறுவது போலிருந்தது. பட்டியை தளர்த்திவிட்டு கக்கூசின் தட்டில் குந்திய அவர், நிதானமாக இறக்க ஆரம்பித்தார். முதுகுப்புறத்தின் மையத்திலிருந்து வியர்வைத் துளியொன்று வழிந்தோடி அவரின் குண்டிவரை சென்றது. 

இறக்கி முடித்தவுடன், முகத்தைச் சுளித்தவாறே காகிதத்தால் அடி துடைத்தார்.  பட்டியை மறுபடியும் இறுக்கிக் கட்டிய வில்வரட்னம் தன்னுடைய காற்சட்டை பையிலிருந்த அந்த நீலநிறக் கடவுச்சீட்டை எடுத்தார். துண்டு துண்டாகக் கிழித்தார். மலக்குழியில் இட்டார். ஒரு நிம்மதியுடன் நீரைத் திறந்துவிட்ட அவர் தன்னுடைய மலத்தோடு சேர்ந்து கிழிக்கப்பட்ட காகிதங்களும் மிதந்து செல்வதைக் கண்டார். 

வில்வரட்னம் ஃப்ரான்ஸில் இறங்கியபோது, எல்லாம் சம்பிரதாயமாக நடைபெற்று, அறிவுறுத்தப்பட்டு அதன் பிற்பாடு தஞ்சமளிக்கும் அதிகாரிகள் அவரை விடுவித்தபோது மொத்தமாக இரண்டு வாரங்கள் முடிந்திருந்தன.  

வில்வரட்னத்தின் மனமானது மகிழ்ச்சியாலும், நிம்மதியாலும் நிரம்பித் தளும்பிற்று. அந்த அகன்று விரிந்த தேசத்துக்கு தன்னை முழுவதுமாக ஒப்புக் கொடுத்தார். அத்தேசத்தின் சாலைகளிலும், மலர்களிலும் பரிபூரண சுதந்திரமானது வியாபித்துக் கிடப்பதாக அவர் எண்ணினார். தினந்தோறும் லா-சப்பலுக்குச் சென்று தமிழ்க் கடைகளையும், தமிழ்க் கோயில்களையும், தமிழ் முகங்களையும் தரிசித்தார். ஒவ்வொரு தமிழரையும் பார்த்து அவர் புன்னகைத்தார். கைலாகு கொடுத்தார். உங்கள் கரங்களைப் பற்றிக்கொள்ளும் போது அத்தனை நிறைவாக இருக்கிறது என்றார். அப்பிரதேசத்தில் நிற்கும் ஒவ்வொரு கணமும் தனித் தமிழீழத் தேசத்தில் நிற்பதாகவே அவருக்குத் தோன்றிற்று. 

//ஓய் சிங்கள தேசமே, என் தமிழீழத்தைப் பார்! இங்கு வாழும் அன்பு நிறைந்த தமிழர்களையும் கருணை நிரம்பிய தமிழர்களையும் பார்! என் இனமடா இவர்கள்! இவர்களைப் போன்ற தூய மனிதர்களை உன் தேசத்தில் நீ எங்ஙனமடா காண முடியும்?// 

நாள் தவறாது மனைவியோடும், பிள்ளைகளோடும் அவர் தொலைபேசியில் கதைத்தார். ‘நான் வந்திருப்பது ஃபிரான்ஸ் அல்ல; மாறாக இத்தேசம் நாம் கனவு கண்ட தனித் தமிழீழத் தேசம் போலவே எனக்குத் தோன்றுகிறது. ஆம் நிச்சயமாக இது தமிழீழமேதான்’ என்பார். விரைவிலேயே உங்களையும் இத்தனித் தமிழீழத் தேசத்துக்கு அழைத்துக்கொண்டு விடுவேனென்று சத்தியமும் பண்ணினார். 

வில்வரட்னத்துக்கு தொலைபேசி அட்டைகளை விற்பனை செய்யும் தமிழ்க் கடையொன்றில் வேலை கிடைத்தது. அரசாங்கமும் முந்நுாறு யூரோக்கள் கொடுக்கிறது. இவர்கள் ஒரு எண்ணூறு யூரோக்கள் வரை கொடுத்தாலும் பரவாயில்லையென்று நினைத்துத்தான் வேலைக்குப் போனார். வேலை குறைவுதான். ஒன்பது மணி வாக்கில் கடை திறக்கப்படும். வில்வரட்னம் முதலில் கடையைப் பெருக்கி சுத்தம் செய்வார். பின், நிலத்தைத் தண்ணீர் கொண்டு கழுவித் துடைப்பார். வாடிக்கையாளர்களை தனக்குத் தெரிந்த ஓரிரு ஃப்ரெஞ்ச் சொற்களின் மூலமும் அரைகுறை ஆங்கிலத்தின் மூலமும் வரவேற்பார். ஃபோட்டோ கொப்பி செய்து கொடுப்பார். வயதானவர்கள் இந்த இலக்கத்தை என்னால் அழுத்த முடியவில்லை; உங்களால் அழுத்தித் தர முடியுமா எனக் கேட்கும்போது சிரித்த முகத்துடன் இலக்கத்தை ஒவ்வொன்றாகச் சரி பார்த்து அழுத்திக் கொடுப்பார். எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால், எப்போது முதலாளியின் மனைவியும் கடைக்கு வரத் தொடங்கினாளோ அப்போது வில்வரட்னத்துக்கு சனி பிடித்துக் கொண்டது.   

அவள் பெயர் மரகத மலர். வில்வரட்னத்தைக் காட்டிலும் நான்கு வயது மூத்தவள். மாசு மருவற்ற பொலிவான முகத்தையும், கொஞ்சம் பருமனான தேக வாக்கினையும் கொண்டிருந்தாள்.  

ஒரு காரணமுமில்லை. ஆனால், ஏனோ அவளுக்குத் தன்னைப் பிடிக்கவில்லை என்பதை இரண்டு நாள்களிலேயே வில்வரட்னம் உணர்ந்துகொண்டார். இப்படித்தான் ஒருதடவை, வில்வரட்னம் தானுண்டு தன் பாடுண்டு என்று வேலை செய்து கொண்டிருந்தார். அன்று வெள்ளிக்கிழமை என்பதால் வில்வரட்னம் காலையிலேயே எழுந்து தலைக்குக் குளித்து லா – சப்பலிலுள்ள பிள்ளையார் கோயிலுக்குச் சென்று விபூதி, குங்குமப் பொட்டு சமேதராக அப்போதுதான் வேலைக்கு வந்திருந்தார்.  

அப்போது ஓர் ஆப்பிரிக்க இளைஞன் வந்தான். அவனுக்கு முப்பது வயது இருக்கலாம். கோட், சூட் எல்லாம் அணிந்திருந்தான். பொடியன் எங்கேயாவது பெரிய கம்பனியொன்றில் பெரிய பதவியில் இருப்பானென்று வில்வரட்னம் அவனைப் பற்றி மனதுக்குள் நினைத்துக்கொண்டார். வந்தவன், நேராக வில்வரட்னத்திடம் சென்று ஃப்ரெஞ்சில் ஏதோ கேட்டிருக்கிறான். பதிலுக்கு, வில்வரட்னம், தனக்குப் ஃப்ரெஞ்ச் தெரியாதென்றும் அந்தப் பெண்ணிடம் சென்று – மரகத மலரைச் சுட்டிக் காட்டி – கேளுங்களென்றும் சொல்லி இருக்கிறார். பத்து நிமிடங்களுக்கு மேலாக மரகத மலருடன் பேசிக்கொண்டிருந்த அந்த ஆப்பிரிக்க இளைஞன் வில்வரட்னத்திடம் ‘நீங்கள் உங்கள் கடையில் தொலைபேசிகளை லாக் உடைப்பீர்களா’ என்று ஆங்கிலத்தில் வினவியிருக்கிறான். அதற்கு, வில்வரட்னம் ‘இல்லை… எங்கள் கடையில் நாங்கள் தொலைபேசிகளை லாக் உடைப்பதில்லை’ என்றிருக்கிறார்.  

இதைத் தவறாகப் புரிந்துகொண்ட மரகத மலர் அதாவது, இந்தக் கடையிலிருக்கும் தொலைபேசிகளெல்லாம் லாக் உடைக்கப்பட்டிருக்கிறதா என்று கேட்கப்பட்டதாகவும், அதற்கு வில்வரட்னம் இல்லையென்று பதில் கூறியதாகவும் புரிந்துகொண்டு ‘இங்கே இருக்கும் தொலைபேசிகளெல்லாம் லாக் உடைத்துத்தானிருக்கிறது மிஸ்ஸியு…!’ என்று உடலை உதறி எச்சில் தெறிக்குமாற் போல் கத்தினாள்.  

வில்வரட்னத்துக்கு உடலிருந்த அத்தனை இரத்தமும் அவரின் மூளைக்கு ஏறியது. தேகம் நடுங்குவது போல் படவே வந்த ஆத்திரத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு, நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டு விட்டீர்களென்றும் ஆனால், நடந்தது இதுதானென்றும் மரகத மலரிடம் பொறுமையாக விளக்கிக் கூறினார். மரகத மலருக்குப் பெரும் அவமானமாகி விட்டது. எதுவுமே சொல்லாமல் செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்கக் கூட மனம் ஒப்பாமல் கணினி மவுஸைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருந்தாள். அதன் பிறகு, வில்வரட்னம் அப்பக்கமே போனாரில்லை. 

இரண்டு மாதங்கள் கழித்து, வில்வரட்னத்துக்கு இத்தாலியன் உணவுச்சாலையொன்றில் கோப்பை கழுவும் வேலை கிடைத்தது. அந்த உணவுச்சாலையில் தான் இக்கதையின் கதைசொல்லி வில்வரட்னத்துக்கு அறிமுகமானான். அவன் அங்கு பிரதான சமையல்காரனுக்கு உதவியாளனாக வேலை பார்த்தான். வில்வரட்னம் அவனைக் கூர்ந்து கவனித்தார். வட்ட முகம். தலை முடியைக் குட்டையாகக் கத்திரித்து, தாடியைச் சுத்தமாக மழித்திருந்தான். வில்வரட்னம், தன்னோடு ஒரு தமிழன் வேலை பார்ப்பது குறித்து நிரம்பவே சந்தோசப்பட்டார். 

வில்வரட்னத்துக்குத் தேவையான சமையலறை ஆடைகளையும், தொப்பியையும் ஒரு புன்னகையோடு கொண்டுவந்து கொடுத்த கதைசொல்லியானவன் அவருக்குக் கைலாகு கொடுத்து முகமன் தெரிவித்துக்கொண்டான். வில்வரட்னமும் அவற்றை அவனிடமிருந்து ஒரு புன்னகையோடு வாங்கிக்கொண்டார். மார்பில் அணிந்து கொள்ளும் துணியை அவர் கட்டிக்கொள்ளத் தெரியாமல் நின்றபோது, கதைசொல்லியானவன் தன் புன்னகை மாறாமலேயே அவருக்கு உதவி செய்தான். 

காலை பத்து மணி வாக்கில், அந்த உணவுச்சாலையின் சமையலறைக் கூடத்தில் தன்னுடைய முதல் நாளை தொடங்கினார் வில்வரட்னம். அந்தக் கூடத்தில், பிரதான சமையற்காரன், கதைசொல்லி, வில்வரட்னம் ஆகியோரோடு சேர்த்து இன்னும் இரண்டு பேராக மொத்தம் அய்ந்து பேர்கள் வேலை பார்த்தார்கள். வில்வரட்னம் சமையற்காரனுக்குத் தேவையான பொருட்களை சேமிப்பு அறையிலிருந்து எடுத்துவந்து சமையற்கூடத்தின் ஒரு மூலையில் அடுக்கினார். விதவிதமான இறைச்சிகளையும் ஜாதி ஜாதியான இறால் வகைகளையும் வகைப்படுத்தி பிரித்து வெட்டினார். மரக்கறி வகைகளான காரட், பச்சை முள்ளங்கி, குண்டுத் தக்காளி, குடை மிளகாய் போன்றவற்றைத் தண்ணீரில் சுத்தப்படுத்தி பின் அவற்றைச் சிறு சிறு துண்டுகளாக வெட்டிப் பாத்திரத்தில் அடுக்கினார். இவற்றையெல்லாம், கதைசொல்லி சமையற்கூடத்தின் ஓர் ஓரத்தில் நின்றவாறு புன்னகை மாறாமலேயே பார்த்துக் கொண்டிருந்தான். 

மணி பன்னிரண்டு ஆகிவிட்டபோது அன்றைய வியாபாரம் தொடங்கிற்று. வில்வரட்னம் மலைபோல் குவிந்து கொண்டிருந்த எச்சில் கோப்பைகளை சளைக்காமல் கழுவிக்கொண்டிருந்தார். கரண்டிகளையும், கத்திகளையும் கழுவி மிகத் தூய்மையாகச் சுத்தப்படுத்தினார். 

வில்வரட்னம் பம்பரம் போல் சுழன்று சுழன்று வேலை செய்துகொண்டிருந்தார். தேகம் சிறிது வலித்தாலும் அவருக்கு அங்கு வேலை செய்வது பிடித்திருந்தது. அன்றைய அவரின் வேலை நேரம் முடிந்திருந்தபோது, அவரின் ஆடைகளானது நனைந்தும் அழுக்கேறியும் இருந்தன. இரவில், மனைவியோடு தொலைபேசியில் கதைத்தபோது மறக்காமல் கதைசொல்லியைப் பற்றிக் குறிப்பிட்டு, தான் தமிழ் மொழி பேசும் கர்த்தர் ஒருவரோடு வேலை செய்கிறேனென்று சொன்னார். 

இப்படியாக ஒரு வாரம் கடந்தது. இரவில், வேலை முடிந்து கதைசொல்லியும், வில்வரட்னமும் மெட்ராவில் ஒன்றாகப் பயணம் செய்தபோது வில்வரட்னம் கதைசொல்லியிடம், தான் ஃபிரான்ஸில் முறையான வதிவிட உரிமை அற்றவனென்றும், வேலை செய்வதற்குத் தனக்கு அனுமதி இல்லையென்றும், வேறொருவரின் பத்திரத்திலேயே இங்கு வேலை பார்ப்பதாகவும் கூறிவிட்டார். அதற்குக் கதை சொல்லியானவன் ‘அச்சமடையாதீர்; கர்த்தர் எப்போதும் உம் கூடவே இருந்து உம்மை இரட்சிப்பார்’ என்று தன் புன்னகை மாறாமலுக்குச்  சொன்னான். 

பிறிதொரு நாளன்று,வில்வரட்னத்துக்கு பயங்கர வேலை. முதுகுத் தண்டு கழன்று விடாதது தான் பாக்கி. கதைசொல்லி அவரிடம் வந்து, கரண்டிகளை எதற்குக் குப்பையில் போடுகிறீர்களென்றும் உங்களால் சுத்தப்படுத்த இயலவில்லையென்றால் என்னிடம் கொடுத்தால் நானே சுத்தப்படுத்தி வைத்திருப்பேனே என்றும் சொன்னான். அதற்கு வில்வரட்னம் ‘நான் எதற்காகக் கரண்டிகளைக் குப்பையில் போடப் போகிறேன்; என்னிடம் வரும் கரண்டிகள் எல்லாவற்றையும் மிகக் கவனமாகச் சுத்தப்படுத்தி அதற்குரிய இடத்தில் அடுக்கி விடுவேனே’ என்றார். 

அதற்குக் கதைசொல்லியானவன் ‘வாயைக் குறைத்துக் கொள்ளுங்கள்; இல்லையெனில், உங்கள் மீது சாத்தான் நாயை ஏவி விடக்கூடும்’ என்று தன் புன்னகை மாறாமலுக்குச் சொன்னான்.  

அன்று உணவு அருந்தும்போது, வில்வரட்னம் கொஞ்சமாக வைன் அருந்தினார். இரவு வேலை முடிந்து மெட்ரோவில் பயணம் செய்தபோது, கதைசொல்லி, இவரிடம் ‘இனி எனக்கு எதிரில் வைன் அருந்தாதீர்; அப்படி அருந்துவீராக இருந்தால் எனக்கு வாந்தி வந்து விடும்’ என்று தன்னுடைய புன்னகை மாறாமலுக்குச் சொன்னான். வில்வரட்னம் நான் வைன் அருந்தினால் இவனுக்கு ஏன் வாந்தி வந்துவிடப் போகிறது என்று நினைத்தார். ஆனால், கேட்கவில்லை.

ஒருதடவை, வில்வரட்னம், கோப்பைகளைக் கழுவிக்கொண்டிருந்தபோது, அவரின், எதிரே இருந்த சுவற்றில் கதைசொல்லியானவன் ஒரு பெண்ணின் முழு நிர்வாணப் படத்தை ஒட்டி, இவளை பார்த்துக்கொண்டு கழுவுங்கள்; உங்களுக்குத் தெம்பு வருமென்று சொல்லிவிட்டுத் தன் புன்னகை மாறாமலுக்குப் போனான். 

இரவில், மெட்ராவில் பயணம் செய்தபோது தனக்கு ஏகப்பட்ட சிங்களக் கெல்லோக்கள் இருக்கிறார்களென்றும் அவர்களே தன்னுடைய மேன்மை தங்கிய கட்டியாக்கள் என்றும் கதைசொல்லி சொன்னான். 

இப்போது, வில்வரட்னம் கதைசொல்லியுடன் அவ்வளவாகப் பேசப் பிரியப்படவில்லை. தானுண்டு, தன் வேலையுண்டு என்கிற கணக்கில் அவர் பாட்டுக்குக் கோப்பையும் தண்ணீருமாக இருப்பார். ஆனால், கதைசொல்லிதான் அவரை விடுவதாக இல்லை. எதற்கெடுத்தாலும் எரிந்து விழ ஆரம்பித்தான். எல்லா வேலைகளையும் இவரின் தலையில் கொண்டுவந்து கொட்டினான். ஏதோ கறள் வைத்துச் செய்வதுபோல் செய்தான். 

ஒருதடவை, இவரிடம் வந்து ‘வேலைக்கு வந்தால் வேலை செய்ய வேண்டும்’ என்றான். அதற்கு வில்வரட்னம், நான் நியாயமாகத்தான் வேலை செய்கிறேன்; நீங்கள் தான் எப்போது பார்த்தாலும் சும்மாவே நின்று கொண்டிருக்கிறீர்கள். முதலாளி வரும்போது மாத்திரம் பம்பரமாகச் சுழன்று சுழன்று வேலை செய்கிறீர்கள்’ என்று சற்றுக் கோபமாகவே சொல்லிவிட்டார். அதற்குக் கதைசொல்லியானவன் தன் புன்னகை மாறாமலுக்கு அவருக்குத் தலையில் அடிப்பது போல் பாவனை செய்தான். 

இன்னொரு தடவை, வில்வரட்னம் கடாய் ஒன்றை கழுவி விட்டு அதை அதற்குரிய இடத்தில் தொங்க விடப் போனார். அது கதைசொல்லி வேலை பார்க்கும் இடம். இவர் கடாயை மாட்டிவிட்டு வரும்போது, இவரின் சட்டையைப் பிடித்துக் கழுத்தோடு இழுத்த கதைசொல்லி ‘நீர் மாட்டிய கடாயிலிருந்து சிறிது நீரானது வழிந்து நான் மெனக்கெட்டுச் சுத்தப்படுத்திய இடத்தில் தெறித்து விட்டது. அதை உம்முடைய கைகளாலேயே மறுபடியும் சுத்தப்படுத்திவிட்டுப் போகக் கடவது’ என்று தன் புன்னகை மாறாமலுக்குச் சொன்னான்.

இரவில், மனைவியோடு தொலைபேசியில் கதைத்த வில்வரட்னம், தான் தமிழ் மொழி பேசும் சாத்தானோடு வேலை பார்ப்பதாகக் கூறி, அவர் மேலும் கூறினார். 

‘சிங்கள மக்கள் இன்னொரு மக்களுக்குத்தான் அநியாயம் செய்கிறார்கள்; ஆனால், நாங்களோ எங்கள் சொந்த மக்களுக்கே கொடூரம் செய்கிறோம்.’

இன்னோர் முறை, பொட்டரை அப்போதே மண்டையில் போட்டிருந்தால் எப்போதோ ஈழம் கிடைத்திருக்குமென்றான் கதைசொல்லி. அதற்கு வில்வரட்னம், அதெல்லாம் தேவையில்லை; உன்னைப் போன்ற குண்டி கொடுக்கும் துரோகிகளைப் புண்டையில் போட்டிருந்தாலே ஈழம் கிடைத்திருக்குமென்று மனதுக்குள் நினைத்துக் கொண்டார். 

இப்படியாகப் பல சம்பவங்கள். தான் முறையான வதிவிடப் பத்திரம் அற்றவனென ஏன் தான் கதைசொல்லியிடம் சொன்னோமென வில்வரட்னம் கவலையடைந்தார். வதிவிடப் பத்திரம் கிடைத்தவுடன் இந்தச் சாத்தானை விட்டுத் தூர விலகிப் போய்விட வேண்டுமென்றும் அவர் நினைத்தார். 

இறுதி அத்தியாயம்! 

பனிக்காலம் வசந்தகாலமாயிற்று. கதைசொல்லி வில்வரட்னத்துக்கு ‘இன்று வேலை அதிகமில்லை; ஆகவே, நீர் சும்மாயிராமல் மேசைகளை கழுவித் துடையும்’ என்று ஆணையிட்டான்.  

வில்வரட்னம் கழுவித் துடைத்தார். அங்குலம் அங்குலமாக படிந்திருக்கும் அழுக்குகளைச் சுத்தப்படுத்தினார். குனிந்து மேசையின் கால்களை மிகச் சுத்தமாகக் கழுவினார். அவை பளிங்கு போல் ஆயிற்று. அப்போது, கதைசொல்லி தன்னுடைய புன்னகை மாறாமலுக்குக் கீழ்வருமாறு கூறினான்.

‘என்ன வில்வரட்னம்! கையில் போடுகிறாயா? அப்படிப் போடுவதாக இருந்தால் உன்னுடைய வீட்டில் போய் போடும். இது வேலை பார்க்கும் இடம். இங்கு இப்படி எல்லாம் உன்னுடைய இஷ்டத்துக்குக் கழுவ இயலாது. ஒழுங்காகக் கழுவும் ஐஸே..! பைத்தியம் கிளப்பாதீர் புண்ட!’

வில்வரட்னத்துக்கு அந்த கடைசி வார்த்தையைக் கேட்டதும் கிறுதி போல் ஏதோ ஆயிற்று. கழுவிக்கொண்டிருந்த துணியை மிக மெதுவாகக் கீழே வைத்தார். மிக மெதுவாக எழும்பினார். மிக மெதுவாகக் கதைசொல்லியைப் பார்த்த அவர், மிக மெதுவாகக் கீழ்வருமாறு சொன்னார். 

‘கரித் தெமலோ!’

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Scroll to Top