ஓ,,,தாவீது ராஜாவே!


ஒரு இருபத்திரெண்டு வினாடிகளிருக்கும். முழு வீச்சோடு எம்பிக் குதித்த சுறா நேராகக்  கடலுக்குள்ப் போய் விழுந்தது. படகுக்கு அடியில்ச் சென்று படகினை ஒரு உலுப்பு உலுப்பியது. தடுமாறிக் கீழே விழுந்ததில் தலையில் படகின் விளிம்பு  தாக்கி மயக்கமானார் தாவீது. விழிப்பு வந்தபோது வானத்தில் பறந்துகொண்டிருந்த கிட்டிவேக்ஸ் பறவையொன்று அரைமயக்கத்திலிருந்த தாவீதுவின் கண்களுக்கு ஒரு நிழலைப் போலத் தெரிந்தது. மீன் பிடித்துக் கொண்டிருந்த தன்னுடைய படகுக்குள் சுறா வந்ததும், தன்னைத் தாக்கியதும், படகினில் கிடந்து துடித்ததும், தான் சரிந்து விழுந்ததும் அறுந்த கனவுகள் மீண்டும் ஒன்று சேர்ந்து வருவதைப் போல் ஒவ்வொன்றாய் நினைவுக்கு வர, பெருமூச்சொன்றை இழுத்துவிட்ட தாவீது மெதுவாக எழும்பி படகின் திட்டில் உட்கார்ந்தார். தலையின் பின்பக்கமாய் வலிப்பது போலத் தோன்றவே கைகளினால்த் தேய்த்துக் கொண்டார். 

ஸ்கண்டிநேவியாவின் மேற்குப்பக்கமாயிருக்கும் புற நகரான ஃஅத்தியூஸை சுற்றியே இந்தக் கடலிருக்கின்றது. பெரும் இரைச்சலோடு விழுங்க வரும் பூதமொன்றின் உருவத்தைப் போன்று  எப்போதும் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் இந்தக் கடலை நம்பித்தான் மொத்த நகரவாசிகளுமே இருக்கின்றார்கள். மீனவர்களான இவர்களுக்கு ஃஅத்தியூஸை அண்டியிருக்கும் சிற்றூர்வாசிகளே வியாபாரிகள். சிவப்பு நிறச் செங்கற்களினால் கட்டப்பட்டு விரல் விட்டு எண்ணப்படக்கூடிய குடியிருப்புகளைக் கொண்ட நகரம்தான் ஃஅத்தியூஷ். அதில் தாவீதுவின் குடியிருப்பே மிகச்சிறியது. சரியாக இரண்டு கட்டில்களைச் சேர்த்தாற்போல் அளவுகொண்ட ஒரு விறாந்தையும், கல்லறை போன்று புகைபிடித்து மங்கிப் போன குசினியும் அவர் வீடாயிருந்தது. மனைவி இறந்த பின் இருபதாண்டுகளாக தனிமையிலேயே வாழ்ந்து வரும் அவருக்கு சொத்தென்று இருப்பது இந்த வீடும், அந்தப் படகும்  தான். 

கடுமையான மஞ்சள் நிற சூரியக் கதிர்கள் தாவீதுவின் தேகத்தில் பட்டபோது, அவரின் தேகமானது மினுமினுத்தது. தளர்ந்து போன உடலும், இறுகிய கைகளும் அவருடையதாயிருந்தன. பழுப்பேறியதும்,  அழுக்கடைந்ததுமான தொப்பியொன்றினை அவர் அணிந்திருந்தார். நீல நிற மேற்சட்டையும்,  வெள்ளைநிறத்திலான கால்சராயும் அவருக்குத் தோதாகவேயிருந்தன.

தாவீது வலையை கடலில் வீசியபோது அதுவொரு அழகான குடைபோன்று விரிந்து பின் கடலில் படர்ந்தது. எப்போதும் கடலின் கிழக்குப் பக்கமாயிருக்கும் இந்த இடம்தான்  தாவீதுவின் மீன் பிடிக்கும் இடமாயிருந்து வருகின்றது. அவருடைய தந்தையான மோசேயும்  கூட இந்த இடத்திலேயே மீன் பிடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தேவதைகள் குடியிருக்கும் சொர்க்கமென்றும், இந்த இடத்திலேயே ஒரு காலத்தில் மீன்களுக்கு ராஜாவான சாலமோன் வாழ்ந்து வந்தாரென்றும் ஏராளமான கதைகள் இந்தக் கடல் குறித்து நிலவி வந்தன. 

தாவீது மீன் பிடிக்க வரும்போதெல்லாம் வலையைக் கடலில் வீசிவிட்டு மிக நீண்ட நேரம் படகிலேயே அமர்ந்திருப்பார். முன்பு போல் அவ்வளவு சீக்கிரத்தில் மீன் கிடைப்பதில்லை. மீன்களின் எண்ணிக்கை குறைந்திருக்க வேண்டும், அல்லது எல்லா மீன்களும் சொல்லி வைத்தாற்போல் இடமாறியிருக்க வேண்டும். ஒரு சிறிய மீன் சிக்குவதற்கே குறைந்தது இரண்டு மணித்தியாலங்களாவது தேவைப்படுகின்றது. அப்பொதெல்லாம் தாவீது தன் தந்தையைப் பற்றியோ, அல்லது மனைவியைப் பற்றியோ யோசித்துப் பார்ப்பார். 

2.

அவருக்கு பத்து வயதாகவிருந்த போது ஒருநாள் மோசேயு அவரை கடலுக்கு அழைத்துச் சென்றார். இப்போதிருப்பது போல் இல்லாமல் அப்போது மோசேயிடம் ஒரு பெரிய படகிருந்தது. தினம்தோறும் மீன்களை அள்ளிவிடும் மோசேயு, இந்தப்  படகினை தேவனே தனக்கு அன்பளிப்பாக கொடுத்தாரெனவும்,  மிகவும் அதிஷ்டமான படகெனவும் சொல்லிக்கொள்வார். 

நடுக்கடலுக்கு வந்துவிட்டிருந்தார்கள். மோசேயு இதுதான் சரியான இடமென தனக்குள்ச் சொல்லிக்கொண்டார். படகின் கொடியை இறக்கிக் காட்டினார். நங்கூரத்தை போட்டார். படகிலிருந்து எட்டிப்பார்த்து கண்களினால் கடலினைத் துழாவினார். மீன்கள் சலசலத்து ஓடுவதைக் கண்ட அவர், திருப்தியடைந்தவராக… வலையையெடுத்து கடலுக்குள்த் தூவினார்.   அவர்களின் படகை கடலானது  நவட்டி, நவட்டி  எடுத்துக் கொண்டிருந்தது. 

தாவீதுவுக்கு காற்றில் கலந்திருந்த உப்பின் மணமும், அவ்வப்பொழுது தன்மீது தெறித்தது போல்  வந்து விழும் கடலின் குளிர்ந்த நீரும் நிரம்பவே பிடித்திருந்தது. கூட்டமாக பறக்கும்  கிட்டிவேக்ஸ் பறவைகளைக் கண்டு ஆச்சர்யப்பட்டான்.  கடலின் அசைப்பில் அசைந்துகொண்டிருந்த படகுடன் சேர்ந்து தானும் அசைவது போல் அசைந்து  கொடுத்தான். அப்பா இவனைப்பார்த்து சிரித்தது தாவீதுவுக்கு கொஞ்சம் வெட்கமாயுமிருந்தது.  விளையாடுவதை விட்டுவிட்டு அப்பாவுக்குப் பக்கத்தில் போய் அமர்ந்து கொண்டான். 

மோசேயுவிடம் இரண்டேயிரண்டு வலைகள் மாத்திரமேயிருந்தன. ஒன்று செவுள் வலை. மற்றது சுருக்கு வலை. இப்போது கடலுக்குள்ளிருப்பது செவுள் வலை. அதற்கு ஒரு காரணமுமிருந்தது. பொதுவாக கடலின் இந்தப்பகுதியில் அளவில்ப் பெரிய மீன்களே ஓடித்திரியும். செவுள் வலையை கடலின் அடிமட்டத்திலேயோ, அல்லது மத்தியிலேயோ விரித்து விடுவார்கள். அளவில்ச் சிறிய மீன்கள்,  பெருத்த இடைவெளிகள் கொண்ட செவுள் வலைக்குள் மாட்டிக்கொண்டால் இலகுவாகத் தப்ப முடியும். ஆனால் அளவில்ப் பெரிய மீன்கள் அப்படியல்ல. சிக்கினால்ச் சிக்கினதுதான். தப்பவே முடியாது. 

தான் படகினை நிறுத்தியிருப்பது பெரிய மீன்கள் ஓடித்திரியும் கடலின் கிழக்குப்பகுதியென்பது மோசேயுக்கு தெரிந்தேயிருந்தது. இந்த முறையும் மீன்களை அள்ளிவிடலாமென்று அவர் நினைத்தார். அவரிடமிருந்த மற்றுமொரு வலையான சுருக்கு வலை ஒரு இடத்தில் முடிச்சு அவிழ்ந்து போயிருந்தது. அதை மறுபடியும் சரிசெய்ய வேண்டும். கடைசியாக அந்தச் சுருக்கு வலையைப் பாவித்து, சிறிய மீன்களைப் பிடித்ததும், வலையினை கடலுக்குள் இழுத்தபோது சிக்கியிருந்த மீன்கள் சடசடத்து வலையிலிருந்து தப்பிக் குதிக்கப் பார்த்ததும் நினைவுக்கு வந்தது. முடிச்சு அவிழ்ந்து போயிருந்ததை அப்போதே மோசேயு கவனித்துத்தானிருந்தார். நினைவு வரும் போது முடிச்சை இறுக்கிக் கட்ட வேண்டுமென்றும், அல்லது அதைவிட சிறப்பான புதிய வலையொன்றை  வாங்கிவிடவேண்டுமென்றும் நினைத்திருந்தார். ஆனால் அடுத்த நொடியே புதிய வலை வாங்குவதாகயிருந்தால் பணத்திற்கு எங்கே போவதென்றும், இப்பேர்ப்பட்ட ஒரு கொடிய வறுமையில தான்  வாழ்ந்துகொண்டிருக்கும் போது புதிய வலை வாங்கிவிடவேண்டுமென்று நினைத்தது குறித்தும் நினைத்து தன்னைத் தானே நொந்து கொள்வார். 

மோசேயுவின் கைகள் வலையை பக்குவமாக ஆராய்ந்து கொண்டிருந்தன. அநேகமாக வலையிலிருந்த எல்லா முடிச்சுகளிலும் மஞ்சள் நிறத்தில் திட்டுகளிருந்தன. வலையின் சில இடங்களில் நைலான் நார்கள் நொய்ந்து போயிருந்தன. மோசேயு அவற்றை படகின் தரையில் படர்த்தி கைகளால் மேவினார். தாவீதுவுக்கு மரத்துப் போயிருந்த அப்பாவின் கைகளைத் தொட்டுப் பார்த்து ஸ்பரிசிக்க வேண்டும்போல்த் தோன்றியது. வலை பழுதடைந்திருப்பது தாவீதுவுக்கும் தெரிந்திருந்தது. மேவிக்கொண்டிருக்கும் மோசேயுவைப் பார்த்து, நாங்களேன் புதிய வலையொன்றை வாங்கக்கூடாது என்றான். 

மேவிக்கொண்டிருந்த மோசேயு மேவுவதை நிறுத்திவிட்டு இரண்டு கைகளினாலும் வலையைத் தூக்கிப் பார்த்தார். இருக்கும் சுறுக்குகளில் அவிழ்ந்து போயிருக்கும் சுருக்கு எதுவென ஆராய்ந்தார். வலையின் மய்யப்பகுதியில் சுருக்கு தளர்ந்துபோயிருப்பதைக் கண்டுபிடித்தார். பின்பு இப்படிச் சொன்னார்.

>> வாங்கலாம் தான் என் தாவீது ராஜாவே, ஆனால் தற்போது என்னிடம் அதற்கான பணமில்லையே. என்ன செய்வது?  கருணை கொண்ட தேவன் எங்களிருவர் மீது மாத்திரம் கருணை கொள்கிறாரில்லையே. <<

தாவீது ராஜா. மோசேயு தன் மகனை எப்போதுமே இப்படித்தான் அழைப்பார். தன் அப்பா தன்னை “அப்படி”  அழைப்பது தாவீதுவுக்கும் பிடித்தேயிருந்தது. அவன் அப்பாவைப் பார்த்து எதற்காக எனக்கு தாவீது எனப் பெயர் வைத்தீர்களெனக்  கேட்டபோது, உன்னுடைய கண்களும்  தாவீதுவினுடைய கண்களைப் போன்றே ப்ரகாசமானவையாக இருக்கின்றன அதனாலேயே தாவீதுவெனப் பெயர் வைத்தேன் என்றார். 

தன்னுடைய கண்கள் ப்ரகாசமானவையென மோசேயு கூறிய போது தாவீது பரவசமடைந்தான். அப்பாவைப் பார்த்து ஒரு சிறு புன்னகையை உதிர்த்து விட்ட அவன், தாவீது என்பவர் யாரென தான்  அறிந்து கொள்ளலாமா எனக் கேட்டான்.

>> நிச்சியமாக நீ அறிந்து கொள்ளலாம் என் தாவீது ராஜாவே << என்ற மோசேயு பின்வருமாறு ஒரு கதையைச் சொல்லத் தொடங்கினார். 

மேய்ப்பனான தாவீது கடவுள் மீது அதீதமான நம்பிக்கை கொண்டவன். ஒருநாள் கோலியாத் என்பவனை கல்லால் அடித்துக் கொலை செய்கின்றான். இந்த விஷயம் சவுலுக்குத் தெரியவர தாவீதுவை அழைத்து அவனை மகிழ்வித்து தன்னுடைய படைத் தலைவனாக ஆக்குகின்றான். அதற்கு முன்பு உனக்கு இப்போது ஏதும் தேவையோ எனக் கேட்க தாவீது எனக்கு மிகுந்த பசியாய் இருக்கின்றது என்றும் புசிப்பதற்கு ஏதும் இருக்கின்றதாவெனவும் கேட்கிறான். 

அடுத்த நிமிடம் தாவீதுவுக்கு சவுலின் அரண்மனைப் பெண்கள் உணவு பரிமாறுகின்றார்கள். உயர்ந்த திராட்சை ரசமும், வறுத்த வான் கோழியும் தாவீதுவின் முன்னால் வைக்கப்படுகின்றன. இன்னும் எத்தனை எத்தனையோ உணவு வகைகள். மலைத்துப் போகும் தாவீது அவையனைத்தையும்  ஆசைதீர புசித்தான். இரவில் படுப்பதற்கு பஞ்சு மெத்தையும், பட்டு ஜமுக்காளமும். பூரித்துப் போகும் தாவீது சந்தோசமாக நித்திரை கொள்கின்றான். 

பல போர்களில் வெற்றியீட்டும் தாவீது, தேவனின் கட்டளைப்படி சவுலினைக் கொன்று அந்த நகரத்திற்கே ராஜாவாகின்றான். ராஜாவான அன்றைய தினத்தில்க் கூட அவன் பலவகையான உணவுகளைச் சாப்பிட்டுக் கொண்டேயிருந்தான். 

காற்றின் வேகம் சற்றுப் பலமாக இருந்தபோதே நினைத்திருக்க வேண்டும். இப்போது  தலைக்கு மேல் தண்ணீர் வந்துவிட்டது. மோசேயு நங்கூரத்தை படகின் உள்ளே தூக்கிவிடப் பார்த்தார். நங்கூரம் கடலுக்குள்ளேயே கிடக்குமானால் படகானது காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல்ச் சரிந்துவிடும்.  கடல் அவர்களின் படகை விழுங்குமாற் போல் உள்ளிழுத்து பின் அப்படியே உந்தி வீசியது. தாவீது பறந்து வீழ்ந்தான். பெரல், மற்றும் கயிற்றோடு சேர்த்து அவனும் சறுக்கிப் படகின் விளிம்பில்ப் போய் மோதினான். பளிச்சிடும் மின்னலைக் கண்டும், பெருங்குரலெடுத்து அலறும் பூதத்திற்கு ஒப்பான இடியோசையைக் கேட்டும் மிகப் பயந்தான். தந்தையைப் பார்த்தபோது அவர் நங்கூரத்தோடு பிரயத்தனப்படுவது தெரிந்தது. வாழ்க்கை இவ்வளவுதானா, நாம் மூழ்கிவிடப் போகின்றோமா, படகு உடைந்துவிடுமோ என்றெல்லாம் கற்பனை செய்தான். ஓடிப்போய்  மோசேயுவை பின் பக்கமாய் அணைத்துக் கொண்டவன் இப்படிச் சொன்னான். 

>> அச்சமாயிருக்கின்றது தந்தையே, இந்தப் பூதமானது எங்களை நிஜமாகவே விழுங்கிவிடுமா? <<

ஒருவாறாக  நங்கூரத்தை மேலே எடுத்துக் கொண்ட மோசேயு குனிந்து முழம்கால்களினால் அமர்ந்து கொண்டார். தாவீதுவைக் கட்டியணைத்த அவர் அவனின் தலைமுடியைக் கோதிவிட்டபடி  

>> பயப்படாதே என் தாவீது ராஜாவே, தேவன் ஒரு நாளும் எம்மைக் கைவிட மாட்டான். << என்றார். 

அப்போது எங்கிருந்தோ வந்த இராட்ஷச அலையொன்று இவர்களின் படகுக்கு மேலால் தன்னுடைய ப்ரமாண்டமான கரங்களினால் உள்ளிழுத்துக் கொல்லுமாற் போல் வந்து பின் அடங்கியது. மோசேயுவும், தாவீதுவும் நனைந்து போனார்கள். காற்றின் ஆக்ரோஷமான படபடப்பில் கொடிமரம் முறிந்து விழுவதைப் போன்று ஆடியது. இத்தனையாண்டுகளாக கடலென்றால் மிகவும் அமைதியானவொன்று, ஒரு தாயைப் போன்றோ அல்லது தந்தையைப் போன்றோ எங்களை அரவணைக்கக் கூடியது என்று நினைத்திருந்தவனுக்கு கடலின் இத்தனை மூர்க்கத்தனங்களையும் பார்த்தபோது வேதனையும் அதேசமயம் கோபமும் உண்டாயிற்று. 

ஒருவாறாக கடல் தனது உக்கிரத்தை அடக்கிக் கொண்டபோது இரவாகியிருந்தது. தாவீதுவிற்கு ஒரு கொடும் கனவிலிருந்து மீண்டதைப் போலிருந்தது. இனிமேல் என்னை கடலுக்கு அழைத்து வராதீர்கள் அப்பா என்றான். மோசேயு அவனை அழைத்து முட்டாள்களையும், குழந்தைகளையும் தேவன் காப்பாற்றுவார். நீ குழந்தை, நான் முட்டாள் ஆகவே எதற்கும் பயப்படாதேயென்றார். 

இராப்போசனத்தின் போது, மோசேயு தாவீதுவிற்கு ஒரு காகிதக் கிரீடத்தை பரிசாகக் கொடுத்தார். இது தாவீது ராஜாவினுடைய கிரீடம்; இனி நீ ஒவ்வொரு இராப்போசனத்தின் போதும் இதை அணிந்து கொள்ள வேண்டுமென்றார். தாவீது அதைத் தலையில் அணிந்து கொண்டு தந்தையைப் பார்த்து சிரித்தான். மோசேயு அவனின் நாடியினைத் தடவி அச்சு அசலாகத் தாவீது ராஜாவைப் போலவேயிருக்கின்றாய் என்றார். 

தாவீதுவிற்கு பசிப்பது  போற் தோன்றவே படகின் மூலையிலிருந்த உணவுப் பொட்டலத்தை கையிலெடுத்தார். இரண்டு மீன் துண்டுகளிருந்தன. அவற்றை மூக்கின் அருகில்ப் பிடித்து முகர்ந்து பார்த்த அவர் மீன் இன்னும் கெட்டுப்போகவில்லை என்பதையறிந்து சிறிது மகிழ்ச்சியடைந்தார்.   கையின் முதல் இரண்டு விரல்களினால் இரண்டாகயிருந்த மீன் துண்டுகளில் ஒன்றை எடுத்து மீனின் தலைப்பகுதியை வாய்க்குள் அதக்கினார்.  நிரம்பவே முட்கள் கொண்ட சிறிய வகை “அக்கிரோப்செட்டைடீ” மீனது. சற்றே கவனம் பிசகினாலும் தொண்டையில் சிக்கிவிடக்கூடிய அபாயமிருக்கின்றது. தாவீது மீனின் தலையை மெதுவாக கடித்துக்கொண்டே முண்டமாயிருந்த மீனின் உடலிலிருந்து அதன் இறைச்சியைத் தனியாகப்  பிய்த்தெடுத்தார். கடல் நீரில் தன்  கைகளை அளைந்து கொண்ட அவர் கையிலிருந்து வழிந்தோடிய நீரை மீனிறைச்சியில் தெளித்தார். பின்பு அவற்றை ஒவ்வொன்றாக எடுத்து மென்று விழுங்கினார். எலுமிச்சைச் சாறுமிருந்திருந்தால் மீனின் சுவை இன்னும் நன்றாகவிருந்திருக்குமென நினைத்தார். 

தகமெடுக்குமாற் போற் படவே தண்ணீர் நிரப்பப்பட்டிருந்த குடுவையின்  மூடியை கைகளினால் இறுக்கித் திறந்தார். ஆனால் அதை அவரால் முன்பு போல் அவ்வளவு இலகுவில்ச் செய்ய முடியவில்லை. பலமாக மூச்சு வாங்கியது. திறக்கும் போது பற்களை ஒன்றோடொன்று கடிக்கவேண்டியிருந்தது. அப்படியான நேரங்களில் காலம்தான் எத்தனை விசித்திரமானது, அப்போதெல்லாம் ஒரு முழு மரத்தையே ஒரே வீச்சில் தரித்துவிடக் கூடிய பலம் எனக்கிருந்தது. ஆனால் இப்போது ஒரு குடுவையைக் கூட என்னால்த் திறக்க முடியவில்லை. முழு பலத்துடன் பிறந்து அதே பலத்துடன் ஏன் சாக முடிவதில்லை. தேவனின் படைப்பில் முழுமையில்லை. ஆம், தேவனின் படைப்பில் எதுவுமே முழுமையில்லை என்றவாறாக நினைத்துக் கொள்வார். பின் ஸை,,, என்னவொரு அபத்தமான  நினைப்பு காலமென்றொன்றிருந்தால் அது போகத்தான் செய்யும், அதோடு கூடவே வயதும் ஏறும். இதில் தேவனின் பிழை என்னயிருக்கின்றது என்றும் முணுமுணுத்துக் கொள்வார்.

2;1

எத்தனை மணிநேரங்கள் இப்படியே உட்கார்ந்திருப்பாரென தாவீதுவிற்கு கூடத் தெரியவில்லை. வானத்தில் வெள்ளி தெரிகிறதாவெனப் பார்த்தார். பொதுவாக வெள்ளி காலையில்த் தான்  தெரியும். இப்போதென்ன காலையா? மதியம் தாண்டி, மாலையும் ஆயிற்றே. தாவீது விரல்களினால் கணக்குப் போட்டுப் பார்த்தார். மட்டுமட்டாக  ஒன்பது இருக்கலாம். தாவீது தனக்குள்ளே சொல்லிக் கொண்டார். வலை அசையுமாற் போலத் தெரியவே  உரமேறிய கைகளினால் அதன் கயிற்றை இழுக்கத் தொடங்கினார். படகுக்குள் முழு வலையினையும் இழுத்துப் போட்டு ஏதாவது சிக்கியிருக்கின்றதாவெனப் பார்த்தார். ஒரேயொரு மீன். நல்ல கொழுத்த சிவலை. வலையிலிருந்து மீனை லாவகமாகப் பிரித்தெடுத்தவர் அதனை மடித்து  படகின் ஓரமாகய் வைத்தார். கையிலிருந்த மீனைக் கவனித்தவருக்கு அது தன்னையே வைத்த கண் வாங்காமல்ப் பார்ப்பதாய்த் தோன்றிற்று. 

கால்களுக்கு கீழே வைத்துக் கொண்டவர், துடுப்பினை வலித்து வீட்டுக்குத் திருப்பி விடுவோமாயென யோசித்தார். உண்மையில் தாவீதுவிற்கு வீட்டிலிருப்பதைக் காட்டிலும் கடலினுள் இருப்பதே பிடித்திருந்தது. குளிர்ந்த காற்றும், உப்பின் வாடையும் எப்போதும் அவரை கிளர்ச்சியுறவே செய்தன. இன்னும் சிறிது நேரம் கழித்துப் போவோமென முடிவெடுத்தவராய் மீண்டுமொருதடவை மீனைப் பார்த்துக் கொண்டார். 

அப்போதும் கூட மீனானது தன்னையே உற்றுப் பார்ப்பதாகப் பட்டது. சிறிது நேரம் தலை குனிந்து உட்கார்ந்திருந்தவர் ஓரக்கண்ணால் மறுபடியும் மீனைப் பார்த்தார். இப்போது அது அவருக்கு வேறேங்கேயோ பார்ப்பதாகப் பட்டது. ஆசுவாசமடைந்தவராக தலையை நிமிர்த்தி நேராகவே மீனைப் பார்த்தார். மீனும் தலையைத் திருப்பி மறுபடியும் தன்னைப் பார்ப்பதாக அவருக்குத் தோன்றிற்று. சிறிது அச்சமடைந்தவரான தாவீது, யேகோவா கூறியதை நினைத்துப் பார்த்தார். மனித உணர்வுக்கும், அறிவுக்கும் நிறையவே வித்தியாசமிருக்கின்றது. அறிவு மாற்றமடையலாம்,  ஆனால் உணர்வு ஒருபோதும் மாற்றமடையாது. மீன் என்னைப் பார்ப்பது என்னுடைய உணர்வே ஒழிய அறிவு கிடையாது. உணர்வுகள் சஞ்சலமடையும் போது நம்மை நாமே குழப்பிக் கொள்கின்றோம். ஆமாம் அதுதான் உண்மை. மீன் என்னைப் பார்க்கவில்லை. அப்படியானால் அது என்னைப் பார்ப்பது போல் தோன்றுவது அது வெறும் பிரம்மை, அல்லது கற்பனை. இவ்வாறு தாவீது தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டார். இந்தப் பிரம்மையிலிருந்து தப்பித்துக் கொள்ள ஒரே வழி கொஞ்ச நேரத்திற்கு மீனைப் பார்க்காமல் இருப்பதுதான். ஆமாம்…அதுதான் சரி. இப்படியாக முடிவெடுத்துக் கொண்ட தாவீது எழுந்து பின்பக்கமாக இருந்து கொண்டார். மனதுக்கு நிம்மதியாக இருப்பது போற் படவே சற்று ஆசுவாசமடைந்து தன் முன் பிரமாண்டமாய் விரிந்திருந்த கடற்பரப்பை கண்களினால் துழாவினார். ஒருவிடத்தில் எக்கச்சக்கமான கிட்டிவேக்ஸ் பறவைகள் பறப்பது கண்டும், துள்ளிக் குதிக்கும் டால்பின்களைக் கண்டும்  விசிலடித்தார். தானும் அவ்வாறே மாறி அவற்றோடு கூடப் பயணிப்பது போற் கற்பனை செய்தார். அப்போதுதான் மீன் அவரை அழைத்தது. 

>> மனிதா! <<

திடுக்கிட்டுப்போன தாவீதுவிற்கு முதலில் எதுவுமே விளங்கவில்லை. ஒரு மீன் எப்படிப் பேசும்?. அதுவும் மனிதாவென்று. நான் மனித இனத்தைச் சேர்ந்தவனென்பதை எந்த அறிவின் மூலம் கண்டுபிடித்தது. மனிதர்களைப் போன்றே அதற்கும் ஆறறிவா?  ….இருக்காது, ஆனால் தன்னுடைய அறிவின் பொருட்டு என்னை ஒரு மனிதனாக அது உணர்ந்திருக்கின்றது. 

>> என்ன மனிதா ஒரு மீன் எப்படிப் பேசும் என்று யோசிக்கின்றாயா? << மறுபடியும் மீன் கேட்டது. 

தாவீதுவிற்கு தூக்கிவாரிப் போட்டது. உண்மையாகவே மீன் தான் பேசுகின்றதா?

ஆம், உண்மையாகவே மீன் தான். சந்தேகமே இல்லை. தாவீதுவிற்கு வியப்போடு சேர்த்து சிறிது அச்சமும் ஏற்பட்டது. மீனையே உற்றுப் பார்த்த தாவீது,  அதன் உதடுகள் பிரிந்திருப்பதையும், அதன் கண்கள் மிகச் சரியாகத் தன்னையே உற்றுப் பார்ப்பதையும் அவதானித்தார். சிரமப்பட்டு மூச்சு விடுவது அப்பட்டமாய்த் தெரிந்தது. முதுகின் ஓரமாயிருந்த அதன் இறக்கைகள் அடிக்கடி துடித்துக் கொண்டன. 

>> உண்மையாகவே நீதான் பேசுகின்றாயா மீனே? <<

>> ஆமாம், நான்தான் பேசுகின்றேன். உனக்கு நம்பிக்கை இல்லாவிடின் என்னுடைய உதடுகளைப் பார். அது அசைவது உனக்குத் தெரிகின்றது தானே? <<

>> ஆமாம் நீதான் பேசுகின்றாய்,  சந்தேகமேயில்லை. ஆனால், ஒரு மீன் எப்படிப் பேசும் என்று எனக்கு இன்னமும் ஆச்சரியமாகவேயிருக்கின்றது << என்ற தாவீதுவிற்கு உண்மையில் மீனுடனான இந்த உரையாடல் பிடித்தேயிருந்தது. ஒரு மலைப்பாம்பினைப் போற் தன்னை விழுக்கிக் கொண்டிருக்கும் இந்தத் தனிமையிலிருந்து கொஞ்ச நேரத்திற்கு விடுதலை கிடைக்கப் போவதையெண்ணி அவர் மகிழ்வடைந்தார். 

>> உன்னைப் பார்த்தால் தனிமையில் இருப்பவனைப் போற் தெரிகின்றதே. உன் மனைவி எங்கே? <<

>> இறந்துவிட்டாள்…ஒரு இருபது வருடங்களிருக்கலாம்.<< தாவீது அப்படிச் சொல்லியபோது அவரின் கண்கள் படகின் தரையைப் பார்த்தவாறு பணிந்திருந்தன. மேற்கொண்டு எதுவும் பேசாமல் அமைதியாகவேயிருந்தார். மீனே மீண்டும் தொடரலாயிற்று. 

>> அதன் பிறகு நீ வேறு மணமே செய்துகொள்ளவில்லையா? << 

>> இல்லை, ஒருவேளை உணவிற்கே பெரும்பாடுபட்டுக்கொண்டிருக்கும் நான் எவ்வாறு இன்னொருவருக்கு உணவு தர முடியும்ச் சொல்? நான் தோற்றுப்போனவன். ஆமாம்… நான் தோற்றுப் போனவன். தோல்வி ஒரு மனிதனை நிலைகுலையச் செய்கிறது. நிலைகுலைந்து போவது மிகவும் சுலபம் ; ஆனால் அதிலிருந்து மீள்வதோ மிகக் கடினம்.<<

>> தவறான புரிதலின் அடிப்படையில் பேசிக்கொண்டிருக்கின்றாய் மனிதா,<< 

இவ்வாறு கூறிவிட்டு தாவீதுவையே உற்றுப்பார்த்த மீனானது பின்னர் வேறொரு பக்கம் திரும்பி மீண்டும் தொடர்ந்தது. 

>> உன் வாழ்வு இத்தோடு முடிந்துவிடப்போவதில்லை; ஏதோவொன்று மிச்சமிருக்கின்றது. அதன் மீது நம்பிக்கையாயிரு. ஷைத்தானை விட தேவனே பெலம் பொருந்தியவரென பைபிளில் எழுதப்பட்டுள்ளது தானே? <<

ஆறுதலாக மூச்சை இழுத்து விட்ட தாவீது, >> உண்மைதான்… ஆனால் என்னைக் கொஞ்ச நேரம் பார்.  தளர்ந்து போன உடல், ஒரு வேளை ஆகாரத்திற்கே நீண்ட நேரம் காத்திருக்கின்றேன். தேய்க்காத ஆடை என் வாழ்க்கை இப்படித்தான் போகின்றது. உலகத்திலிருந்து ஒதுக்கப்பட்டவனைப் போலாகிவிட்டேன். இப்படியானவொருவன் தன்னுடைய சாவினைத் தவிர வேறெதை எதிர்பார்க்க முடியும்? << என்றார். 

>> அப்படியில்லை மனிதா !  மரணம் நம்மைத் தழுவிக் கொள்ளும் கடைசி நொடியில்க் கூட நாம் மீண்டும் உயிர் வாழ்வதற்கான சாத்தியம் இருக்கின்றது. தஸ்தாயெஸ்கியின் கதை உனக்குத் தெரியும் தானே ? தலை துண்டிக்கப்படும் கடைசி நிமிடத்திலிருந்து அவர் காப்பாற்றப்படவில்லையா? <<

>> இறப்பின் இறுதி நொடியிலிருக்கும் நீ என்னிடமிருந்து தப்பி மீண்டும் உயிர்வாழ்வதற்கான சாத்தியம் இருக்கின்றதா? <<

>> நான் அப்படி எண்ணவில்லை. ஆனால் ஏறக்குறைய சாத்தியம் இருக்குமெனவே நம்புகின்றேன். <<

>> என்னை மன்னித்துவிடு மீனே, அகோரப்பசியிலிருக்கும் நான் எக்காரணத்தைக் கொண்டும் உன்னை மீண்டும் கடலில் விடுவதாயில்லை. << 

>> நான் உன்னிடம் எப்போதாவது உயிர்ப்பிச்சை கேட்டேனா? << மீன் சற்றுக் கோபமாகவே தாவீதுவிடம் இப்படிக் கேட்டது. 

தன்னுடைய வார்த்தைகளின் மூலம் மீனைச் சங்கடப்படுத்திவிட்டேனா என்று தாவீது நினைத்தார். அது எப்போதாவது என்னிடம் உயிர்ப்பிச்சை கேட்டதா, இல்லையே பிறகேன் என் வாயிலிருந்து இப்படியானவொரு அநாகரிகமான வார்த்தை உதிர்ந்தது. மீனோ, மனிதனோ வார்த்தைகளை அவர்களின் மனது புண்படாமல் பயன்படுத்தவேண்டுமென்று மோசேயு எனக்குச் சொல்லியிருக்கின்றாரே. தாவீது தொடர்ந்து இருக்கப் பிடிக்காமல் எழுந்து நின்று கொண்டார். வயிற்றிலிருந்து ஏதோ பிசைவதைப் போலப் பட்டது. தனக்குள்ளிருக்கும் பசிதான் இத்தனைக்கும் காரணமென அவருக்குப் புரிந்தது. மீனின் முகத்தைப் பார்க்கத் தயங்கியவர் வேறொரு திசையில் பார்த்துக் கொண்டு இப்படிச் சொன்னார்.

>> மீனே நானுன்னை என்னுடைய வார்த்தைகளின் மூலம் எரிச்சலூட்ட விரும்பவில்லை. நீ அப்படியெண்ணவும் மாட்டாய் ; ஏனெனில் தன்னுடைய கதையினைக் கூறும் ஒருவர் இன்னொருவரின் கதையினைக் கேட்பதற்கும் தயங்க மாட்டார். <<

இப்போது முகத்தைத் திருப்பி மீனைப் பார்த்த தாவீது, அதனிடம் மன்னிப்புக் கேட்பதைப் போல் >> நான் பேசியது பிழையே, உன்னை அப்படிச் சங்கடப்படுத்தியிருக்கக் கூடாது. என்ன செய்வது வயது போகப் போக அறளையும் பெயர்கிறதல்லவா? << என்றார். 

தன் இரண்டு கைகளினாலும் மீனைத் தூக்கிக் கொண்டவர், அதனுடலில் மெல்ல முத்தமிட்டார். அப்படியே அதனை கடலில் இறக்கிய தாவீது, மற்றக் கையினால் நீரினை அள்ளியெடுத்து மீனின் முதுகில் ஊற்றினார். மீனானது முதுகிலிருந்து சிறகினையும், வாலினையும் அடித்துக் கொண்டது. மீனின் பிடியினை மெதுவாகத் தளர்த்திய தாவீது, அது கடலுக்குள்ச் சென்று மறைவதையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தார். 

3.

தாவீது வீட்டையடைந்தபோது பின்னிரவாகியிருந்தது. கதவைத் திறக்கும்போது வயிறு மறுபடியும் சத்தம் போட்டது. சரியாகக் கதவுக்கு எதிரே மாட்டப்பட்டிருந்த இயேசு இவரைப் பார்த்துச் சிரித்தார். தாவீதுவிற்கு இயேசுவின் மேல் சற்றுக் கோபம் வந்தது. உன்னுடைய சகல பாடுகளிலும் இயேசு பங்கெடுத்துக்கொள்வார் என்கின்ற பைபிள் வசனம் அவருக்கு நினைவாய் வர எங்கே ஒரு தடவைகூட வரவில்லையேயென முணுமுணுத்தார். நேராகக் கழிவறைக்குச் சென்றவர் ஆறுதலாக மூத்திரம் பெய்தார். அடிவயிற்றிலிருந்த வலி குறைவது போற் தெரியவே நிம்மதியாக மூச்சினை இழுத்து விட்டார். ஆனால், அப்படிப் பெய்யும்போது கூட வயிற்றிலிருந்து சத்தம் வரவே செய்தது. தாவீதுவிற்கு மூத்திரத்தோடு சேர்ந்து தன்னை வாட்டியெடுக்கும் மலைப்பாம்பும் வெளியே வந்துவிட்டால் என்னயென்று தோன்றியது. தாளமுடியாத வலி. கழிவறையைச் சுத்தம் செய்துவிட்டு நேராக குசினிக்குச் சென்றார். முடிவெடுத்தவராய்  கூரிய கத்தியொன்றினை எடுத்துக்கொண்ட அவர் சிறிது நேரம் அந்த கூரான மெல்லிய முனைகொண்ட கத்தியையே பார்த்துக்கொண்டிருந்தார்.  வயிற்றினுள்ளேயிருந்த மலைப்பாம்பு இப்போது தேகம் முழுவதுமே ஊர்ந்து கொண்டிருப்பதைப் போற்பட்டது.  ஒரு சில கணங்களின் பின், இயேசுவே என்று அலறிய தாவீது, அந்தக் கூரிய கத்தியினால் தன் வயிற்றை அறுக்கத் தொடங்கினார். 

பாம்பின் வால் தெரிந்தது. கையில் பிசுபிசுத்த இரத்தக்கறையோடு அதைப் பிடித்திழுத்த அவர், ஒரு முழு பலத்தோடு சடாரென முழுப் பாம்பினையும் வெளியே இழுத்தார். நிம்மதியாகவிருப்பது  போற்படவே அறுந்துபோயிருந்த வயிற்றைத் தைத்துக் கொண்டார். வெளியே காற்று பலமாக வீசுவது போற் தெரிந்தது. அவசரமவசரமாக யன்னல்களை அடைத்துக் கொண்டபோதுதான் இன்று இயேசுவின் படத்திற்கு முன்னால் மெழுகுதிரி கொளுத்தப்படவில்லையேயென்கின்ற நினைவும், உடனடியாக ஒரு மெழுகுதிரியையேனும் கொளுத்திவிடமேண்டுமென்கின்ற எண்ணமும் அவருக்குத் தோன்றியது. நிலவறைக்குச் சென்ற அவர் எப்படியோ ஒரு மெழுகுதிரியைத் தேடித் கண்டுபிடித்தார். அருகிலிருந்த தீப்பெட்டியையெடுத்து அதன் திரியைப் பற்ற வைத்தார். அதன் நீலநிறச் சுவாலை அணையாதவாறு கைகளினால் சுவரமைத்து பவுத்திரமாக ஏந்தி  வந்தார். இயேசுவின் முன்னாலிருந்த தாங்கியில் அதை நிறுத்தி ஜெபித்தார். 

அப்போது அவரின் முதுகுப்புறமாயிருந்து புஸ்ஸு, புஸ்ஸு என்கின்ற அரவம் வரவே, ஒரு அச்சத்தோடு திரும்பியவர், பச்சைநிறத் தோலினையும், ஒளிரும் கண்களையும் கொண்ட பாம்பொன்றினைக் கண்டார். தேகம் புல்லரிக்குமாற் போல்ப்படவே பெரும் குரலெடுத்து அலறிய தாவீது இடறிக் கீழே விழுந்தார். பயத்தோடு ஊர்ந்து சென்றவர் தன் முன்னால் இன்னொரு கரும்சிகப்பு பாம்பொன்றிருப்பதைக் கண்டு மேலும் அச்சமடைந்தார். திகைத்துப் போன தாவீதுவிற்கு தேகம் வியர்த்து ஓடியது. தன் வியர்வையில் தன் முழுத் தேகமும் கரைந்துவிடுமோ என்று ஐயமுற்றார். எழுந்து ஓடியவர், சுவரின் மேல்மூலையிலிருந்து ஜுரோபெல்ரிடா பாம்பொன்று தன் உடலை வளைத்து, வளைத்து வீழ்வதைக் கண்டார். குனிந்து தரையைப் பார்த்தபோது தரைநெடுகிலும் பாம்புகள். வீட்டுக்குள் நுழையாமல் தவறி பாம்புகளின் சரணாலயத்திற்குள் நுழைந்துவிட்டோமோ என்றெல்லாம் தாவீது நினைத்தார். 

ஒரு கரிய நிற கொழுத்த பாம்பொன்று, ஆக்ரோஷமாகத் தன் வாயைப் பிளந்து அவரை விழுங்க முயன்றபோது ஓ வென்று அலறியபடியே வீட்டைவிட்டு வெளியே ஓடினார் தாவீது. இருட்டில் அவருக்கு எதுவுமே தெரியவில்லை. தூரத்தில் கடல் அலைகள் நுரைத்துப் பொங்குவது மாத்திரமே தெரிந்தது.  பாம்புகளிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ள கடலானது தனக்கு உதவுமென அவர் நினைத்தார். என்னவென்று கூறிவிடமுடியாத ஒரு சத்தம் அவர் காதுகளுக்குள் ஊடுருவிக்கொண்டேயிருந்தது. அது இருட்டின் சத்தம். உண்மையில் இருட்டு நிசப்தமாயிருப்பதில்லை. அதற்கும் குரலிருக்கின்றது. அந்தக் குரலைவைத்து அது அடிக்கடி நம்மை  கலவரப்படுத்திக்கொண்டேயிருக்கும். தாவீது ஓடினார். கரிய இருளிலிருந்து பாம்புகளின் ஒளிரும் கண்கள் ஒரு ப்ரகாஸமான ஒளியைப் போலத் தெரிந்தது. அச்சமுற்ற தாவீது தன்னைச் சூழ்ந்திருக்கும் இந்த இருளே ஒரு  பாம்பின் கூட்டம் தானா என்று நினைத்தார். 

பாதங்களை கடல் அலையில் நனைய விட்டவர், திரும்பி வீட்டைப் பார்த்தார். அது அவருக்கு ஒரு  புள்ளியாகத் தெரிந்தது. அப்படியே அலையின் மீது படுத்துக் கொண்டார். சிறிது நேரம் அப்படியே படுத்திருந்தவர் எழும்பி ஓட ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் அது அவருக்கு சலிப்பை ஏற்படுத்தவே ஓடுவதை நிறுத்தி விட்டு மணலைக் குழைத்து மனை போல் ஏதோ செய்தார். அவரின் இந்தச் செய்கை அவருக்கே வேடிக்கையாகயிருந்தது. அப்போது கடல் நீர்த்திவலைகளாக உருமாறியது. ஒளிபொருந்திய வண்டுகள் ரீங்காரித்துப் பாடின. அற்புதமேதும் நிகழப்போகின்றதோயென தாவீது நினைத்தார். தூய ஆடையணிந்து ஒளிபொருந்தியவராய் இயேசு தோன்றினார். அவரின் முதுகிலிருந்த சிறகுகள், மெதுமெதுவாக அசைவது போற் தோன்றியது. தேவனேயென்று இரு கை கூப்பி வீழ்ந்தவர்  மறுபடியும் எழும்பியபோது ஆர்ப்பாட்டமின்றி ஆர்ப்பரிக்கும் கடலையே கண்டார். மணல் அப்பிய கைகளோடு வீட்டுக்குத் திரும்பி நடந்தார்.  இப்பொழுது பாம்புகளைக் காணோம். 

இயேசுவின் முன்னால் கொளுத்தப்பட்டிருந்த மெழுகுதிரி அணைந்திருந்தது. நேராக நிலவறைக்குச் சென்றவர் இரண்டு மெழுகுதிரிகளை எடுத்துக் கொண்டார். பற்ற வைத்து  இயேசுவின் முன்னால் நிறுத்தினார். முழு வீடுமே ப்ரகாசமானதைப் போலத் தோன்றியது. பைபிளையெடுத்து ஜெபித்தார்.  

குசினிக்குச் சென்றவர், சூடாகயிருந்த கோப்பியை ஒரு கோப்பையில் ஊற்றிக்கொண்டார். கோப்பையோடு சாப்பாட்டு மேஜைக்குச் சென்றவர், அதை அழகாக அலங்கரித்தார். தட்டு நிறையவிருந்த உணவுகளையும், பழங்களையும் கொணர்ந்து வைத்தார். அவருக்குப் பிடித்தமான வான்கோழி வறுவலும், அவித்த சோளமும் அதிலிருந்தது. அமைதியாக – மிக அமைதியாக – இருக்கையில் அமர்ந்தவர், ஏதோ ஒன்றை மறந்து விட்டவராக இருக்கையிலிருந்து எழுந்து கொண்டார். மறுபடியும் நிலவறைக்குச் சென்றவர் அந்த அறையின் இடதுபக்கமிருந்த மூலையில், அடுக்கப்பட்டிருந்த பழைய பெட்டிகளை ஒவ்வொன்றாக துழாவி அதைக் கண்டுபிடித்தார். அதுவொரு காகிதக் கிரீடம். தளர்ந்து போயிருந்த  கைகளினால் அதைத் தூசிதட்டியவர்  முகத்துக்கு நேராகப் பிடித்து அதில் வரையப்பட்டிருந்த நீலநிற வைரக்கல்லினையே சிறிது நேரம் உற்றுப் பார்த்தவராக நின்றிருந்தார். பின், மேலே வந்து சாப்பாட்டு மேஜையின் இருக்கையில் அமர்ந்து தலையில் கிரீடத்தினை அணிந்து கொண்டார். அது அவருக்கு எடுப்பாகவும், ஒரு ராஜாவினைப் போன்ற தோற்றத்தினையும் கொடுத்தது.  அச்சு அசலாகத் தாவீது ராஜாவைப் போலவே.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Scroll to Top