சாதனாவின் கதை மாந்தர்கள் அகவயமானவர்கள். இருத்தலியல் கேள்விகளை சுமப்பவர்கள். அக்கேள்விகளே அவருடைய படைப்புலகை நிறைக்கிறது, கதைகளை எழுத தூண்டுதலாக இருக்கிறது. ஆகவே அவருடைய கதை மாந்தர்கள் இயல்பாக கேள்விகளை விவாதிக்கும் பிரதிநிதிகளாக உருக்கொள்கிறார்கள். போருக்கும் இருத்தலியலுக்கும் நேரடி தொடர்புண்டு. இருத்தலியல் கேள்விகளுக்கு போர் ஒரு முன் நிபந்தனை அல்ல என்றாலும் போரின் இயல்பான விளைவு என உறுதியாக சொல்லிவிட முடியும். இத்தொகுதியில் இடம்பெற்றுள்ள ‘சிறுமி கத்தலோனா’ ‘தொலைந்து போன சிறிய கறுப்பு நிற பைபிள்’ மற்றும் ‘ஒ தாவீது ராஜாவே’ ‘ஜூதாசின் முத்தம்’ ஆகிய கதைகளில் சாதனா தனக்கான சில அடிப்படை கேள்விகளை பின் தொடர்ந்து செல்கிறார். அவை எடுத்துக்கொண்ட பேசு பொருள் காரணமாக முக்கியமான கதைகள் ஆகின்றன.
‘அக்கா’ கதையிலும் ஒரு பகுதி ஈழத் தமிழரின் புலம்பெயர் வாழ்க்கையை காட்டுகிறது என்றாலும் கூட ‘சிறுமி கத்தலோனா’ இந்த தொகுதியில் உள்ள ஒரே ஈழக்கதை என சொல்லலாம். ஈழக்கதைக்கான வரையறைகள் எவை? ஈழத்தை களமாக கொண்டிருக்க வேண்டும். ஏதோ ஒரு வகையில் போர் ஒரு பேசுபொருளாகவோ/ பின்னணியாகவோ/ அல்லது நினைவாகவோ கதையில் இடம்பெறும். ஈழத் தமிழர் மையக் கதாபாத்திரம் அல்லது கதைசொல்லியாக இருப்பார். கதை ஈழத் தமிழில் இருக்கும். எழுத்தாளர் ஈழத்தை சேர்ந்தவராக இருப்பார். சாதனாவின் மொழியில் ஈழத் தமிழின் சாயல் சன்னமாகவே தென்படுகிறது. சில அரிதான சொற்களை பயன்படுத்துகிறார். (உதாரணம்- ஜூதாஸின் முத்தம் கதையில் ஸ்தேயம் எனும் சொல்லை திருட்டுக்கு பயன்படுத்துகிறார்).
ஒன்பது பகுதிகள் கொண்ட கதையில் ஐந்து பகுதிகள் சிலோன் நாதனின் வாழ்க்கையை படர்கையில் விவரிக்கிறது. இரண்டு பகுதிகள் சிலோன் நாதனின் தன்னிலையிலும் இரண்டு பகுதிகள் சிலோன் நாதனின் கதையை எழுதும் எழுத்தாளரின் தன்னிலையிலும் வருகிறது. சிலோன் நாதன் ஜெர்மனியில் வசிக்கிறார். அவருடைய கடந்த கால ஈழ வாழ்வில் ராணுவத்திடம் பிடிபடுதல், சிறையிலடைக்கப்படுதல், கொடுமைக்கு உள்ளாகுதல் என எல்லாமும் பொதுவாக ஈழக்கதைகளில் நிகழும் அதே வகையில் நிகழ்கின்றன. போரில் மருத்துவராக இருக்கும் சிலோன் நாதன் கால் சிதைந்த சிறுமி கத்தலோனாவை காப்பாற்ற முயல்கிறார். பெண் ராணுவத்திடம் பிடிப்பட்டு அவர்களால் கடுமையாக அவமதிக்கப்படுகிறார். சிங்கள மொழியில் ‘உத்தோ’ என கேவலமாக வசைப்பாடப்படுகிறார். இந்த சிறை அனுபவம் ஆறாத காயமாக உள்ளூர உழன்றபடி இருக்கிறது. அவருடைய முதலாளி பாஸ்பெர்கின் மரணத்திற்கு பிறகு நேராக வேசியிடம் செல்லும் போது அந்த பெண்ணின் நடத்தை ராணுவ பெண்னை நினைவுறுத்துகிறது. சட்டென தடுமாறி விலகுகிறார். வேசியிடம் கூடியபிறகு அந்த நினைவுகளில் இருந்து மீள முடியாமல் கடும் குற்ற உணர்வில் தற்கொலை செய்துகொள்ள முயல்கிறார். அனோஜனின் ‘உறுப்பு’ கதையில் சிங்கள ரானுவ வீரனின் பாலியல் இம்சைகளை அனுபவித்து அந்த வாதையிலிருந்து வெளியேற சிரமப்படும் சித்திரம் ஒன்றுண்டு. ஏறத்தாழ அம்மாதிரியான அகக் காயம் சிலோன் நாதனுள்ளும் உள்ளது. சிலோன் நாதனின் இருத்தலியல் கேள்விகளும், வாழ்வின் பொருளின்மை சார்ந்த பார்வைகளும், தற்கொலை முயற்சிகளும் கதையின் இறுதியில் வெளிப்படும் உண்மையினால் துலக்கம் பெறுகிறது. அந்த இறுதி உண்மையே இக்கதையை வழக்கமான ஈழக்கதை அமைப்பிலிருந்து தனித்து காட்டுகிறது.
ஈழத்தமிழர் சிங்களவர் எனும் இருமையை கடந்து மானிடர் எனும் நிலைநோக்கி நகர்கிறது. இரண்டாவது வாசிப்பில் சிலோன் நாதன் வீட்டில் இருக்கும் புத்தர் சிலை அவருடைய அடையாளத்தை குறிப்புணர்த்துகிறது. கண்முன் காலற்ற சிறுமி கத்தலோனா கைவிடாதீர்கள் என கூறி அழும்போது சிங்களர் எனும் ஒரே காரணத்திற்காக உயிருடன் விடுதலை செய்யப்படும் சிலோன் நாதன் குற்ற உணர்வினால் உந்தப்பட்டு தான் ஏன் இனியும் வாழ வேண்டும்? எனும் கேள்வியை எழுப்பிக்கொள்கிறார். சாதனாவின் கதை மாந்தர்களின் பொதுவான மனப்போக்கு என்பது இந்த குற்ற உணர்விலிருந்தே எழுகிறது. இந்த கதையில் வரும் பாஸ்பெர்க் வழியாக பாத்திரங்களுக்கு இடையிலான முரண் பேசப்படுகிறது. அவர் இருத்தலியல் சிக்கல் ஏதுமற்றவர். வாழ்க்கையையே மரணத்தை நோக்கிய பயணமாக காணும் சிலோன் நாதனுக்கு கிட்டாது ஒன்று பாஸ்பெர்கிற்கு எளிதாக கிடைக்கிறது. மகிழ்ந்து ஆடிக்கொண்டே இருக்கும் போது நிகழும் மரணம்.
இக்கதையில் அவர் வளர்க்கும் நத்தைக்கு சிலோன் நாதன் என பெயரிடுகிறார். “நத்தைகள் குறித்து இன்னும் சொல்லவேண்டுமென்றால் அவை தன் வீட்டைத் தானே சுமக்கும். மழை காலங்களிலோ, அல்லது தனக்கு ஒவ்வாத காலநிலையைக் கொண்ட காலங்களிலோ தன் முதுகிலுள்ள ஓடு போன்ற கூட்டினுள் தன்னை மறைத்துக் கொள்ளும். தன்னுடைய இந்தத் தன்மையை எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளவும் அவை பயன்படுத்துகின்றன.” எனும் சிலோன் நாதனின் குறிப்பில் அவருடைய அடையாள மறைப்பு வாழ்வு கோடிட்டுக்காட்டப்பட்டு நத்தை அவருடைய குறியீடாகவே இருக்கிறது. சிலோன் நாதன் ஏன் தன்னை மறைத்துக் கொள்ள வேண்டும்? தன் அரசின் குரூர முகத்தை கண்டவனின் மனசாட்சியின் தொந்திரவு. அச்சம். ஒவ்வாமை. இதற்கு நான் பொறுப்பல்ல எனும் விலக்கம் என பலவாறாக விளங்கிக்கொள்ள முடியலாம் என்றாலும் கதையில் அதற்கான காரணம் எதுவும் வலுவாக கூடி வரவில்லை. அதுவும் ஒரு தமிழர் பகுதியில் மருத்துவராக இருக்கும் சிங்களர் தன் அடையாளத்தை ஏன் மறைத்துக் கொள்ள வேண்டும்? கதையில் “எதிர்காலம் குறித்த பயம் அந்த ‘ஏதோ ஒன்றை’ என் வாயிலிருந்து வெளிவராமல் தடுத்தது.” என எழுதுகிறார். இது மர்மமாகவே விடப்படுகிறது. வாசகரிடம் இது ஒரு நம்பிக்கையை கோருகிறது. தனிப்பட்ட காரணங்கள் ஏதேனும் இருக்கும் என சமாதானம் அடைந்துகொள்ளச் சொல்கிறது. கதை இறுதியில் சிறுமி கத்தலோனாவின் காலற்ற ஊருதல் நத்தையுடன் இணைவைக்கப்படுவதன் வழியாக ஒரு தலைகீழாக்கம் நிகழ்கிறது.
சயந்தனின் ‘ஆறாவடுவில்’ ஒரு பகுதி, குணா கவியழகனின் ‘அப்பால் ஒரு நிலத்தின்’ இறுதி பகுதி, அனோஜனின் ‘பபுலி’ போல் பெரிதும் மனவிரிவளித்த கதை. அடிப்படையில் ஒரு சிங்களவர் தமிழ் பெண்ணிற்காக பெரும் துயரத்தை சுமந்து தன்னையே அழித்து கொள்வதென்பது கற்பனாவாதத்தன்மையுடைய கதைக்கரு. ஈழக் கதைகளில் கற்பனாவாதம் ஒரு மிக முக்கிய கூறாகவே திகழ்கிறது. கற்பனாவாதத்தை முழுக்க எதிர்மறையாக அணுகவேண்டியதுமில்லை. தமிழின் முதன்மை நாவல்களில் ஒன்றாக கொண்டாடப்படும் ‘புயலிலே ஒரு தோணி’ கூட தமிழக வீரனொருவன் அந்நிய நாட்டை விடுவிக்கும் சாகச கற்பனாவாத கதையின் தன்மையுடையதே. சிலோன் நாதனின் துயரம் எஞ்சியிருப்பதின் துயரம். அறத்திலிருந்து எழும் துயரம். சிலோன் நாதனின் குற்ற உணர்வு இன்னும் நுண்மையானது. மரணம் மற்றும் அழிவுக்கு மனிதன் சாட்சியாக இருக்கும்போது வாழ்விச்சை பெருகுகிறது. பாஸ்பெர்கின் மரண சடங்கிற்கு பின் அவர் நேராக வேசியை தேடுகிறார். விடிந்ததும் குற்ற உணர்வில் தற்கொலைக்கு முயல்கிறார். அதிலிருந்து உயிரிச்சையால் மீள்பவர் ராணுவப் பெண் நினைவை போக்க வேசியை நினைத்து சுய மைதுனம் செய்ய முயல்கிறார் ஆனால் குறி விறைக்கவில்லை. தெருவில் விளையாடும் பதின் வயது சிறுமியொருத்தி தொடை தெரிய விளையாடிக்கொண்டிருப்பதை பார்த்ததும் விறைக்கிறது. சிலோன் நாதனின் சிக்கல் என்பது அவர் உயிருடனிருக்க எந்த நியாயத்தையும் உணராத போதும் அவருடைய உயிரிச்சை அவரை சாக விடவில்லை என்பதே. இயேசு இறந்தபிறகு ஜூதாஸ் அடையும் அதே துயரம். இங்கிருந்துதான் அவருடைய கதை உலகின் பிரதான கேள்வியான வாழ்வு விதிக்கப்பட்டதா? மனிதர்களின் சுய தேர்வின் ( freewill) பங்கு என்ன? எனும் கேள்வியை கேட்கிறார். மனிதருக்கு வாழ்வில் வேறு சில தேர்வுக்கான சாத்தியங்கள் இருந்தபோதும் அவன் ஏன் அழிவையே தேர்வு செய்கிறான்? இக்கேள்விகள் எவையும் புதியவை அல்ல. ஆனால் விவாதித்து தீராதவை. கடவுளற்ற உலகில் மனிதர்களின் அறம் என்னவாக இருக்கும் என்பதே தாஸ்தாவெஸ்கியின் அக்கறையாக இருக்கிறது. தாஸ்தாவெஸ்கியின், தால்ஸ்தாயின் கிறிஸ்து இப்படி உருவானவர் தான். தால்ஸ்தாய்க்கு இயேசுவின் தேவையில் எவ்வித ஐயமும் இல்லை. தால்ஸ்தாய் இருமுனைகளுக்கு இடையேயான ஊசலில் இருந்தார் என்பது என் எண்ணம். ‘தொலைந்துபோன சிறிய கறுப்புநிற பைபிளின்’ முடிவில் அறம் தொலையும் போது கடவுளும் தொலைவது சுட்டிக்காட்டப்படுகிறது. இந்த ஊசலின் மறுமுனையை ‘ஒ தாவீது ராஜாவே’ சென்றடைகிறது.
‘தொலைந்து போன சிறிய அளவிலான கறுப்பு நிற பைபிள்’ தொகுதியின் தலைப்பு கதை. இரண்டாம் உலகப் போரின் பின்புலத்தில் ரஷ்யாவை களமாக கொண்ட கதை. ‘குளிரில் பூமியானது வெள்ளைநிற போர்வையோன்றைத் தன் உடல் முழுவதும் போர்த்திக்கொண்டு துயில் கொள்வதைப் போல் இருந்தது.’ போன்ற விவரணைகள் நல்ல காட்சி அனுபவத்தை அளிக்கிறது. வார்சா நோக்கி ராணுவத்தில் சேருவதற்கு ரயிலில் பயணித்துக் கொண்டிருக்கிறான் கதை நாயகன். தாஸ்தாவேஸ்கி நாவல்கள் மற்றும் குடும்ப புகைப்படம் உள்ள நோட்டு மற்றும் சிறிய கறுப்புநிற பைபிள் அவன் கொண்டு செல்லும் பையில் உள்ளது.
அங்கே விளாமிடினை சந்திக்கிறான். புவியியல் பட்டதாரியான அவன் நேசித்தவள் வேறொருவனுடன் இருப்பதை கண்டு கொலை செய்யும் அளவிற்கு ஆத்திரம் கொண்டு பின்னர் பைத்தியமாகி மீண்டு ராணுவத்திற்கு வந்தவன். அவன் தற்கொலை செய்து தலைசிதறி இறக்கிறான். அவனுடைய சிநேக சமிஞைகளை கதைசொல்லி அங்கீகரித்து அவனுக்கு திருப்பியளிக்கவில்லை. ராணுவ ஒழுங்கிற்கு பொருத்தமில்லாத மனிதனாக இருக்கிறான் என்பது விளாமிடின் ஓடிவரும்போது கீழே விழுவதையும் அவனை வேறெவரும் கவனிக்காததையும் சுட்டுவதன் வழியாக நிறுவுகிறார்.
துப்பாக்கி சுடும் பயிற்சிக்காக அவனை அழைத்து செல்கிறார்கள். ‘ஆனால் நான் எதற்காக இந்தக் கரடியைக் கொல்ல வேண்டும்?’ என்றொரு கேள்வியை எழுப்புகிறான். சம பலமற்ற எதிரி. ஆனால் அந்தக் கரடியின் சாவும் கதைசொல்லியின் வாழ்வும் பிணைந்திருக்கிறது. ஏறத்தாழ கீதையின் காட்சி இங்கு மறு ஆக்கம் செய்யப்படுகிறது. ஆனால் போதிப்பவரான ட்ரான்ஸ்கியின் உறுதி குலைகிறது. ‘உன்னுடைய மகிழ்ச்சியில் இன்னொருவருக்கு துக்கம் இருக்குமாயின் நீ அந்த மகிழ்ச்சியை ஏற்றுக்கொள்வாயா?’ என எழுப்பப்படும் கேள்வி ‘சிறுமி கத்தலோனா’ வில் எழுப்பப்படும் அதே கேள்வியின் நீட்சி. பெரும்பாலான கதைகளை துளைத்து செல்லும் மைய சரடு இக்கேள்வியே.
கரடியை சுடுவதற்கு முன்பு நிகழும் விவாதம் மனிதனின் சுய தேர்வுக்கும் விதிக்கும் இடையிலான ஊசலைப் பற்றிய உரையாடல். எல்லா சமயங்களிலும் வேறொரு வாய்ப்பு இருக்கு என நம்ப விரும்பும் கதைசொல்லி. அவற்றை மறுக்கும் ராணுவ அதிகாரி. ஏனெனில் ராணுவத்திற்கு அதுவே உகந்தது. ஒருவகையில் இதே கேள்வியைத்தான் சிலோன் நாதன் சிறையில் எதிர்கொள்கிறார். தவறான தேர்வு என தான் நம்புவதே அவரை வதைக்கிறது. ஜூதாசும் தனது தேர்வை எண்ணி மருகுகிறான். சுட்டுக்கொல்லப்பட்ட கரடி கனவில் தலைகோதி தூங்க வைத்து அவனை மன்னிக்கிறது. சிலோன் நாதனை மன்னிக்க கனவில் எவரும் வரவில்லை. இறுதியில் தற்கொலை செய்துகொண்டு மரிக்கிறார்.
உயரதிகாரி லூக்கா அவனை அழைத்து பேசுகிறார். அவரிடம் தானொரு நல்ல ஓவியன் என பொய் சொல்கிறான். இயேசுமீது நம்பிக்கை இருக்கிறதா என லூக்கா கேட்கிறார். தேவாலயத்தில் அமர்ந்து சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் முகத்தைப் பார்ப்பதுபோல் வேறெதுவும் எனக்கு அமைதியைத் தந்து விடப்போவதில்லை என்கிறான். தொடர்ந்து விவாதிக்கிறார்கள். நேரியதான நல்லவனை படைப்பதே உலகத்தில் மிகவும் சிக்கலான காரியம் டான் குயிக்சோட் பூரண நல்லவன். அவன் அசடனாக இருப்பதாலேயே நல்லவனாகிறான். தன் மதிப்பையறியாத நல்லவன் முட்டாளாக்கப்படுகையில் கருணையுணர்வு பிறக்கிறது. இந்த உரையாடல் கதையின் பின்புலத்தில் மிக முக்கியமான ஒன்று. படிப்படியாக மனித தன்னிலை மறைவதையே கதை சொல்கிறது.
மனைவி ஆன்யாவிற்கு கடிதம் எழுதுகிறான். போர் கொலைகள் பற்றிய விவரணைகள்- உன்னுடைய மகிழ்ச்சியில் இன்னொருவருக்கு துக்கம் இருக்குமாயின் நீ அந்த மகிழ்ச்சியை ஏற்றுக்கொள்வாயா? எனும் அந்த கேள்வியை விரிவாக்குகிறது. இயேசுவை ஆதர்சமாக கொண்ட லூக்கா தான் கொல்வதில் இன்பமடைகிறார். போரில் அடிபட்டு கிடப்பவனுக்கு நீர் கொடுத்துவிட்டு மறைத்து வைத்த கத்தியால் அவனை குத்தி கொல்லும் போது அவன் மற்றொரு லூக்காவாக மாறுகிறான். அதற்குப்பின் அஞ்சி ஒளிந்து கொண்டிருக்கும் பெண்னை வெறும் ஆர்வத்தில் நெருங்கி அகங்காரம் சீண்டப்பட்டு அவளை துன்புறுத்தி புணர்கிறான். கிறிஸ்து ஒரு ஒளியாக அவனுடைய சாயலில் தோன்றி குரலாக ஒலிக்கிறார். அகங்கார வெறியில் இருப்பதை சொல்கிறார். புணர்ந்து கொண்டிருப்பவனின் பின்னால் நின்றுக்கொண்டு அவ்வுருவம் மீண்டும் எச்சரிக்கிறது. அவனுடைய மனைவிக்கும் பிள்ளைக்கும் இது நேரலாம் என சொல்கிறது அக்குரல். ஆனால் அவன் கேட்கவில்லை. வெறியில் அந்த பெண்ணை சிலையொன்றால் அடித்து கொல்கிறான். நம்பிக்கையாளன் கிறிஸ்துவை தொலைக்கும் கதை என சொல்ல முடியும். கிறிஸ்து ஒருவகையில் அவன் மனசாட்சியாக இருக்கிறார். கதையிறுதியில் பைபிள் தொலைந்ததும் பெரும் ஆசுவாசத்தை உணர்கிறான். இதுவே இதை ஒரு தாஸ்தாவெஸ்கிய கதையாக ஆக்குகிறது. ஜூதாஸ் மற்றும் சிலோன் நாதன் தங்களுடைய குற்ற உணர்விலிருந்து மீள முடியாமல் மரிக்கிறார்கள். ‘தொலைந்துபோன பைபிள்’ நாயகன் இயேசுவை கைவிடுவதன் வழியாக தற்கொலையிலிருந்து தப்பிக்கிறான். நிம்மதியாக வாழ்கிறான். ‘ஒ தாவீது ராஜாவே’ அகங்காரத்தை விட்டுவிட்டு இயேசுவை பற்றுவதன் வழியாக தற்கொலையில் இருந்து தப்பிக்கிறான்.
கதையை தற்காலத்திலிருந்து விலக்கி வேறொரு காலத்தில் வேறொரு நிலத்தில் நிகழ்த்தும் போது அரசியல் தரப்புகளை கடந்து ஆதாரமான கேள்விகளை எழுப்பிக்கொள்ள முடியும். சுரேஷ்குமார் இந்திரஜித்தின் ‘காலத்தின் அலமாரி’ ‘எலும்புக்கூடுகள்’ போன்றவை இப்படியாக சமகால நிகழ்வுகளிலிருந்து விலக்கிக்கொண்டு ஈழ சிக்கலை அணுகுபவை. சாதனா போர் ஒரு மனிதனின் நுண்ணுணர்வுகளை அழித்து படிப்படியாக மிருகமாக்குவதை சித்தரிக்கிறார். அ. முத்துலிங்கத்தின் ‘வெள்ளிக்கிழமை இரவுகள்’ வன்புணர்வு செய்த சிங்கள சிப்பாயின் வீட்டுக்கு அவனால் உருவான பெண் குழந்தையை அழைத்துக்கொண்டு சென்று காண்பதை சொல்லும் கதை. தன் நல்ல கணவன் , மகளின் நல்ல தந்தை, வேறொருத்தியை வன்புணர்வு செய்தவன் என அறியவரும்போது அவள் என்ன ஆவாள்?
இரண்டாம் உலகப்போர் என்பது ஸ்டாலினின் காலம். ஸ்வெட்லான அலேக்சிவிச் ‘second hand time’ நூலில் ரஷ்யாவை குறித்து கொடுக்கும் சித்திரத்தில் ரஷ்யாவின் தேவாலயங்கள் இடிக்கப்பட்டதையும் கடுமையாக ஒடுக்கப்பட்டதையும் சொல்கிறார். இரண்டாம் உலகப்போரை ஒட்டியே ஸ்டாலின் ஒரு உத்தியாக மீண்டும் கிறிஸ்தவத்திற்கு இடமளிக்கிறார். கிறிஸ்தவத்தின் ரட்சகராக தோற்றம் அளிக்கிறார். ஆனால் பிற்காலத்தில் நிலைமை மோசமாகிறது. சோவியத் உடைந்தபிறகு பெருந்திரளாக மக்கள் தேவாலயங்களுக்கு சென்றார்கள். கிறிஸ்தவ நம்பிக்கை சோவியத்தில் கிட்டத்தட்ட ராஜ துரோகமாக கருதப்பட்டது. இந்த சூழலில் ராணுவ உயரதிகாரி புதிய வீரனிடம் இப்படி உரையாடுவது முற்றிலும் சாத்தியமற்றது என சொல்லிவிட முடியாது என்றாலும், சற்றே நம்பகமற்ற பின்புலத்தை அளிக்கிறது. இங்கும் வாசகரின் நம்பிக்கையும் தனிப்பட்ட உரையாடல் எனும் சமாதானமும் தேவைப்படுகிறது.
இதே வரிசையில் ‘எஞ்சியிருப்பதன் துயரை’ பேசும் அடுத்த கதை ‘யூதாசின் முத்தம்.’ இது ஒரு தொன்ம மறு ஆக்க ஊகப் புனைவு. நாமறிந்த யூதாசின் கதையில் உள்ள இடைவெளிகளை படைப்பூக்கமிக்க வகையில் நிரப்புகிறார். துரோகத்தின் முத்தமாக பார்க்கப்பட்ட யூதாசின் முத்தம் உண்மையில் அன்பின் முத்தமாக ஆகிறது. துரோகத்தின் சின்னமாக காலம் காலமாக கருதப்படும் யூதாஸ் முன் இருந்த தேர்வுகள் எவை? அவன் எதை தேர்ந்தான்? எனும் கேள்விகள் வழியாக அவனுடைய பிம்பத்தை தலைக்கீழாக்குகிறார். யூதாசுக்கு ஒரு காதல் வாழ்க்கை, நெருக்கடிகள், அரசியல் பின்புலம் என அனைத்தையும் உருவாக்குகிறார். பிலாத்துவின் வீரர்கள் நகர்வலம் வரும் இயேசுவை கைது செய்ய வரும்போது யூதாஸ் முதல் ஆளாக அவர்களுக்கு முன் நின்று அவர்களை விரட்டியடிக்கிறான். யூதாசின் காதலி சாரா, அவளுடைய அண்ணன் இப்ராகிம் நகர தலைமைக்கு எதிராக ஒரு புரட்சிப்படையை தொடங்கியதாக சொல்கிறாள். அதற்காக முப்பது வெள்ளிக்காசுகளை அளிக்க கோருகிறாள். அதற்காக அலையும்போது யூதாசின் குடும்பத்தை பிலாத்துவின் ஆட்கள் பிடித்து கொண்டு போய்விடுகிறார்கள் (இப்பகுதி மட்டும் சற்றே வழக்கமான பரப்பியல் பாணி எனத் தோன்றியது). சாராவின் வீட்டிலிருக்கையில் யூதாஸும் பிடிபடுகிறான். இறுதி விருந்தின்போது இயேசு கூறும் கதையில் குடிகாரன் இறந்த தந்தையை தங்க மோதிரத்துடன் சேர்த்தே புதைக்கிறான். இயேசு நன்றியைப் பற்றி பிரசங்கம் செய்வதும் வருகிறது. யூதாஸ் இயேசுவை கைது செய்யும்போது அவருக்கு முத்தமிடுகிறான். விசாரணையின்போது பராபஸ் விடுவிக்கப்படவேண்டும் என எல்லோரும் கூக்குரலிடுவதை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. இயேசுவை நிர்பந்தத்தினால் காட்டிக்கொடுத்தாலும் பிறகு மீட்டுவிடலாம் என்பதே அவனுடைய கணக்கு. எப்படியும் அவர் தன்னை காப்பாற்றிக் கொள்வார் என நம்பினான். ‘இயேசுவையே விடுதலை செய்யுங்கள் என கண்ணீர்விட்டு அழுவதை’ எவரும் கேட்கவில்லை. பிலாத்து கொடுத்த வெள்ளிக்காசை வீசிவிட்டு வனத்திற்கு செல்கிறான். இயேசுவின் மரணத்திற்கு தான் காரணம் என்பது அவனை வருத்துகிறது. பாம்பொன்று அவனிடம் ஓநாயாக உருமாறி பேசுகிறது. இவையும் இயேசுவின் திட்டம் என சொல்கிறது. நீ ஒரு துரோகியல்ல, சாக வேண்டாம் என சொல்கிறது ஆனால் காட்டுக்குள் சென்று தூக்கிட்டு சாகிறான் யூதாஸ். சாத்தான் சொல்லும் சமாதானம் எல்லாவற்றையும் இறைத் திட்டத்தின் பகுதி என ஏற்க சொல்வதே. அதை ஏற்றுக்கொண்டால் யூதாஸ் சமாதனமடைந்து நிம்மதியாக வாழ்ந்திருக்கக் கூடும். ஆனால் சுய தேர்வின் வாய்ப்பையும் அதற்கான பொறுப்பையும் முற்றிலுமாக மறுத்ததாக ஆகும். ஆகவே அவன் தற்கொலை செய்துகொள்கிறான். தற்கொலைகள் ஒருவகையில் விதியின் வலைப்பின்னலுக்கு எதிரான கலகம். பழி தீர்ப்பு. சுமத்தப்படும் விதியின் வழித்தடங்களுக்கு எதிரான மறுப்பு. சுய தேர்வுக்கான சாட்சியங்களை வலுக்கட்டாயமாக நிறுவும் யத்தனங்கள்.
‘ஓ… தாவீது ராஜாவே!’ இதே கேள்விகளை கொண்டு வேறொரு பதிலை அடைந்த கதை என சொல்லலாம். நார்வே கடலில் மீன் பிடிக்கும் கிழவரின் கதை. கிழவனும் கடலை நினைவுபடுத்தும் காட்சியனுபவம். கிழவர் தாவீது தந்தை மோசேயுவுடன் மீன் பிடிக்க சென்ற நினைவுகளில் ஆழ்கிறார். தேவன் நம்மை கைவிடமாட்டான் என தத்தளிக்கும் படகில் இருந்தபடி மோசேயு ஆறுதல் சொல்லும்போது ஒரு ராட்சச அலை அடங்கி செல்கிறது. ‘இத்தனை ஆண்டுகளாக கடல் என்றால் மிகவும் அமைதியான ஒன்று, ஒரு தாயைப் போன்றோ அல்லது தந்தையைப் போன்றோ எங்களை அரவணைக்கக் கூடியது என்று நினைத்திருந்தவனுக்குக் கடலின் இத்தனை மூர்க்கத்தனங்களையும் பார்த்தபோது வேதனையும் அதேசமயம் கோபமும் உண்டாயிற்று.’ எனும் இவ்வரியில் கடல் வாழ்க்கையின் குறியீடாகி அதன் கருணையின்மையை முதன்முறையாக எதிர்கொள்ளும் இளம் மனதின் தவிப்பு புலப்படுகிறது. ‘முட்டாள்களையும் குழந்தைகளையும் தேவன் காப்பாற்றுவார். நீ குழந்தை, நான் முட்டாள், ஆகவே எதற்கும் பயப்படாதே என்றார்.’ இந்த உரையாடல் ‘தொலைந்து போன பைபிள்’ கதையில் லூக்காவுடன் டான் குவிக்சாதே பற்றி நிகழும் உரையாடலுடன் தொடர்புடையது. கிழவர் பெரும் முயற்சிக்கு பிறகு பிடித்த சிவலை மீன் அவரிடம் பேசத் தொடங்குகிறது. கிழவரும் தனிமையை போக்கிக்கொள்ள மீனிடம் பேசுகிறார். ‘நான் தோற்றுப்போனவன்’ என அரற்றுகிறார். மரணத்தை தவிர தனக்கு வேறென்ன எஞ்சி இருக்கிறது என மீனிடம் கேட்கும் கிழவரை தேற்ற மீன் மரணத் தருவாயில் பிழைத்து வந்த தாஸ்தாவெஸ்கியின் கதையை சொல்லி அவருக்கு ஆறுதல் அளிக்கிறது. மீனிடம் “இறப்பின் இறுதி நொடியில் என்னிடமிருந்து தப்பிவிடும் சாத்தியம் உள்ளதா?” என கேட்கும் கிழவரின் கேள்வி “தொலைந்து போன பைபிள்” கதையில் கதைசொல்லி அவனுக்கு துப்பாக்கி பயிற்றுவித்த ட்ரான்ஸ்கியிடம் கரடியை சுட சொன்னப்போது கேட்ட அதே கேள்வியின் நீட்சி. கொடும் பசியில் இருக்கும் தாவீது உயிர்வாழ வேண்டும் என மன்றாடாதபோதும் மீனை முத்தமிட்டு மீண்டும் நீரில் விடுகிறார். இந்த தருணத்தையும் “தொலைந்து போன பைபிள்” கதையில் கரடி சுடப்பட்டு இறப்பதுடன் ஒப்பிட முடியும். கரடி சுடப்படுவதிலும் மீன் உண்ணப்படுவதிலும் தான் பிழைத்திருக்க முடியும் எனும் நிலையில் இருவேறு முடிவுகளை இருவரும் எடுக்கிறார்கள். வீடு திரும்பும் தாவீது தனது பாடுகளில் பங்குபெறாத இயேசுவின் மீது கோபப்படுகிறார். தாவீது தனது வயிற்றை அறுத்து உள்ளுக்குள் உழன்று கொண்டிருக்கும் மலைப்பாம்பை வெளியே இழுத்து போட்டுவிட்டு வயிறை தைத்துக்கொள்கிறார். வீடு முழுவதும் பாம்புகள் சூழ்கின்றன. கடற்கரையில் சிற்றில் கட்டிக்கொண்டிருக்கும்போது இயேசு அவர் முன் தோன்றுகிறார். வீட்டுக்குள் திரும்பும்போது பாம்புகள் மறைந்து போகின்றன. இதே கதையில் மீன் முன்னர் பேசும்போது சாத்தானை விட கர்த்தர் வலிமையானவர் என சொல்கிறது. கொடும் பசியே உள்ளுக்குள் உழலும் பாம்பாக, சாத்தானாக உருவகப்படுத்தப்படுகிறது. இக்கதை எனக்கு இரண்டு கதைகளை நினைவுபடுத்தியது. ஒன்று தால்ஸ்தாயின் ‘where love is god is’ – இதில் மார்டின் எனும் மகனை இழந்த, செருப்புதைப்பவர் கனவில் வரும் இயேசு நாளை உன் வீட்டிற்கு வருவதாக சொல்கிறார். காலையிலிருந்து இயேசுவிற்காக காத்திருக்கும் மார்டின் வெவ்வேறு பாவப்பட்ட ஜீவன்களை சந்திக்கிறான். அவர்களுக்கு உதவுகிறான். இயேசு வராததை எண்ணி மருகும் அன்றிரவு கனவில் மீண்டும் இயேசு வரும்போது ஏன் வரவில்லை என கேட்கிறான். அதற்கு நான் தான் வந்தேனே என சொல்வார். பதின்ம வயதில் பள்ளியில் படித்த கதை. இயேசுவின் வருகையையும் இருப்பையும் உணர்த்தும் கதை. ஆயிரத்தொரு அரேபிய இரவுகளில் கடலில் மீன்பிடிக்க செல்லும் கிழவனிடம் கிட்டும் பேசும் மீன் கதை ஒன்றுண்டு. இக்கதையும் அமைப்பில் அத்தகைய தேவதை கதை/ நீதிக்கதை அமைப்பைக் கொண்டிருக்கிறது. தாஸ்தாவேஸ்கியின் கதையுலகிலிருந்து நன்னம்பிக்கையும் ஆசுவாசமும் அளிக்கும் தால்ஸ்தாய் கதையுலகிற்கு சென்ற கதை என இதை சொல்லலாம். சிலோன் நாதனும் யூதாசும் தற்கொலை செய்து இறந்து விட, மீதி இரண்டு கதைகளின் நாயகர்களும் உயிர் பிழைத்து இருக்கிறார்கள். தொலைந்து போன பைபிளின் நாயகன் நம்பிக்கையை தொலைப்பதன் வழியாகவும் தாவீது நம்பிக்கையை பற்றியபடியும். ஒருவகையில் ஒரே சிக்கலின் மூன்று சாத்தியமான விடைகளை சாதனாவின் கதைகள் பரிசீலிக்கின்றன என சொல்ல முடியும்.
தொகுப்பின் மீதி இரண்டு கதைகளும் எனது வாசிப்பில் என்னை பெரிதாக ஈர்க்கவில்லை. ‘அக்கா’ இரண்டு சரடுகள் கொண்ட கதை. கதைசொல்லியின் கதை ஒரு பகுதியும். பிற பகுதிகள் அவன் எழுதும் கதையும் கொண்ட அமைப்பு. கதை சொல்லியின் கதை சற்றே சுவாரசியமான வாசிப்பை அளிக்கிறது. அவன் எழுதும் கதை எவ்விதத்திலும் புதுமையாகவோ அரிதாகவோ இல்லை. சாதி பிரச்சனை, இன சிக்கல், ஆணவக் கொலை போன்ற பேசு பொருளையே விந்தையான ஒரு நிலப்பரப்பிற்கு கொண்டு சென்று விவாதிக்கிறது. இரண்டாம் பகுதியில் கதைசொல்லியின் வாழ்க்கை விவரிக்கப்படுகிறது. புலம்பெயர்ந்து பாரிசில் ஒரு இத்தாலிய உணவகத்தில் வேலை செய்கிறான். அதன் பிறகு அவனுடன் வேலை பார்க்கும் மருது பற்றிய கதை வருகிறது. மருதுவைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போதே தன்னை பற்றி பேசத் தொடங்குகிறான் (மருதுவை பற்றிய கதையாகவே வாசிக்கப்படும்). முன்னர் வேலைப்பார்த்த அலுவலகத்திலிருந்து வெளியேறிய கதை, பெண்களுக்கு எதிரான ஆவேசம், பென்னியவாதிக்கு டில்டோ அனுப்பிய ஆணாதிக்கவாதி. முள்ளி வாய்க்கால் மரணத்தின் போது தற்கொலை செய்து கொள்ள எண்ணியவன். குடும்பத்திற்கு அறையை கொடுத்தவன். தன்னை தாஸ்தாவெஸ்கியுடன் ஒப்பிட்டு கொள்கிறான்.பெயரை மாற்றும் அளவிற்கு. கதை மாந்தர்களை அங்கிருந்தே எடுப்பதாக சொல்கிறான். தான் வாழும் உலகம் நாஜிக்களின் வதை முகாம் என எழுதுகிறான்.
தாத்தாவைக் காட்டிலும் முற்போக்காக இருந்த, ஜாதிகளே ஒழிய வேண்டும் என விரும்பிய தந்தை தன் மகள் வேறொரு இன ஆணை திருமணம் செய்தது பிடிக்கவில்லை என்பதால் அக்கா வீட்டை விட்டு வந்ததை அறிகிறான் என்பதே கதைசொல்லி எழுதும் கதை. லட்சியவாதத்தின் மீதான சலிப்பு அல்லது அவநம்பிக்கையை சொல்லும் கதை. ஒரு அரசியல் அல்லது தத்துவ கேள்விகளை கதைக்களனை பெயர்க்கும் (decontextualise) போது எழும் உயரம். உறவு சிக்கல்களின்/ சமூக அமைப்பின் கதைகளை பெயர்க்கும்போது நிகழ்வதில்லை. ஒட்டகப்பால், புகையிலை செடி, பெயர்கள் என புதிய யதார்த்தத்தை அளிக்க முற்படுகிறார். இதே சிக்கலே மற்றொரு கதையான ‘தாய்’ கதையிலும் உள்ளது. உறவுகளின் சுயநலம், சுரண்டல், துரோகம் போன்றவற்றை சொல்வதற்கு ரஷ்யாவின் பனி படர்ந்த பின்புலம் எவ்வகையில் உதவுகிறது?
‘தாய்’ ரஷ்யாவில் நிகழ்கிறது. கதையில் மாசி மாச பனி என்பதால் நான்கு இன்ச் அல்லது ஐந்து இன்ச் இருக்கும் என்கிறார். ரஷ்ய பின்புல கதையில் தமிழ் மாதத்தை கொண்டுவருவது பொருந்தவில்லை. பனிவெளியில் குதிரைகள் இழுக்கும் வண்டியை பற்றிய சித்திரம் (படர்கையில்?) வருகிறது. தன்னிலையில் கதைசொல்லி தனது தந்தைக்கும் தாயுக்கும் இடையிலான உறவை பற்றி சொல்கிறான். சிறுவனாக தந்தையின் பக்கமே அவன் சாய்கிறான். ரத்தம் வரும்படி தாயை தாக்கிவிட்டு தந்தை வெளியேறி செல்கிறார். அதற்காக அவனுக்கு தாயின் மீது உள்ளுக்குள் ஆத்திரம் கனன்று கொண்டபடி இருக்கிறது. அப்பாவிற்காக காத்திருக்கும் அம்மாவின் மாற்றங்களை நுட்பமாக சொல்கிறார். அப்பா இருந்தபோது வைத்த சூப்பை விட ருசியான சூப்பை வைக்கிறாள், காசு கொடுத்து அவளும் அவனுக்கு ஷூ வாங்கித் தருகிறாள். அவனுடைய தேவையை தீர்ப்பவரிடம் அவனுக்கு அன்பு கூடுகிறது. தனது சேகரிப்பை எல்லாம் முதிர்ந்த தாய் அவனிடம் அளிக்கும்போது அவனுக்கு அவள் மேல் பாசம் கூடுகிறது. அம்மாவிற்கு எதாவது செய்ய வேண்டும் என எண்ணும்போது நல்ல நிலையிலிருக்கும் தந்தையிடமிருந்து அவனையும் வரச்சொல்லி எழுதிய கடிதம் கிடைத்ததும் தந்தையின் மீது பெரும் கோபம் கொள்கிறான் யோகோவிச். அம்மா என்றாள் என்னவென்று உனக்கு காட்டுகிறேன் எனும் ஆவேசத்துடன் தனிமையில், தந்தையின் நினைவிலேயே வாழும் முதிர்ந்த அம்மாவை வண்டியில் ஏற்றிக்கொண்டு செல்கிறான். நடுவழியில் பனிப்பொழிவில் முதிர்ந்த அம்மாவை இறக்கிவிட்டு வண்டியில் கடந்து செல்கிறான் யோகொவிச். முதிர்ந்த தாயை காசுக்காக கைவிடும் மகனின் கதை இங்கே கதைகளிலும் நிகழ்வுகளிலும் நாம் நன்கறிந்த கருதான். முதியோர் இல்லத்திற்கு சென்றால் அத்தனைபேரும் இப்படியான கதையை சொல்வார்கள். மனிதர்களை பயன் கருதி கைவிடுவது என்பது இலக்கியத்தின் சாசுவதமான பெசுபோருல்களில் ஒன்று. ஆனால் ‘அக்காவின்’ சிக்கல் இதிலும் உண்டு. இந்த கதை கருவிற்கு கதை நிகழும் வெளி எந்த அளவிற்கு பங்களிப்பாற்றுகிறது? யோகொவிச்சின் அந்த முடிவைத்தான் நவீன இலக்கியவாதி எழுதுவார். நவீன இலக்கியத்தின் கருபொருட்களில் கூட தேய்வழக்கு உண்டு. தேய் வழக்கு என்பது என்ன சொல்லப்படுகிறதோ அதுவல்ல, அது எப்படி சொல்லப்படுகிறது என்பதே. சாரு முன்னுரையில் ‘இதுகாறும் பழகியிருந்த நிலங்களிலிருந்து விலகி இந்தப் பூமிக் கோளத்தில் நம்மைப் போலவே சிரித்து நம்மைப் போலவே கண்ணீர் விட்டு நம்மைப் போலவே துரோகம் செய்து நம்மைப் போலவே கொலைகள் செய்து நம்மைப் போலவே புணர்ந்து நம்மைப் போலவே சுரண்டப்பட்டு வாழும் வேற்று நில மனிதர்களின் கதைகளைச் சொல்கின்றன. இதுதான் இந்தக் கதைகளின் விசேஷம். இதுதான் முதலில் என்னை ஆச்சரியப்படுத்தியது. சாதனாவை கவனிக்கவும் வைத்தது.’ என எழுதுகிறார். சாரு இதை பெரும்பலமாக கருதுகிறார். ஆனால் ஒரு கதைக்கும் அது நிகழும் நிலப்பரப்பிற்கும் ஆதாரமான பிணைப்பு உள்ளது. தத்துவ நோக்கோ, வரலாற்று நோக்கோ இல்லாத கதைகளுக்கு இந்த கதைகள மாற்றம் பாதகமான விளைவையே ஏற்படுத்தும். பிற நான்கு கதைகளுக்கு அவற்றின் பேசு பொருள் காரணமாக இத்தகைய கதைக்களம் சாதகமான விளைவை ஏற்படுத்துகிறது. சாருவின் கூற்றை பொத்தாம்பொதுவான வரையறையாக கொள்ளமுடியாது. ஜெயமோகனின் ‘தேவதை’ ஒருவகையில் காந்தியின் வாழ்க்கையை ஆப்ரிக்க பின்புலத்தில் புனைந்த கதை. அந்நிய கதைக்களம் எங்கு தேவைப்படும்? சற்றே விலகி நின்று நோக்கும்போது நாம் நன்கறிந்த ஏதோ ஒன்றில் பண்பாட்டு/ வரலாற்று/ சமூக பூச்சுகளுக்கு உள்ளே அறியாத வேறொன்றின் இயங்குமுறை தென்படும். அப்படி ஒரு புதிய கோணம் கிட்டாதபோது கதைகளன் மாற்றப்படுவது ஒரு உத்தியாக மட்டுமே எஞ்சிவிடும். ஒரு கணவன் மனைவி சண்டை அமெரிக்காவில் நிகழ்வதாக கதை எழுதும்போது, அங்கே அமெரிக்க பண்பாடு எவ்வகையிலாவது ஊடுபாவை நிகழ்த்தியுள்ளதா என பார்க்கப்படும். அப்படி எதையும் நிகழ்த்தவில்லை என்றால் இந்த கதையை அமெரிக்காவிற்கு கொண்டு செல்ல என்ன காரணம் என வாசகன் ஒரு கேள்வியை எழுப்பக் கூடும். அப்படிச் செய்யக் கூடாதா? என்றால் அப்படியான விதிகள் ஏதுமில்லை. ஆனால் அது வாசிப்பில் ஒரு இடராகவே கருத்தில் கொள்ளப்படும். சிறுகதையின் மற்றொரு விதியான ‘சொல்லாதே காட்டு’ நினைவில் கொள்ளப்படவேண்டியது. தத்துவ பகுதிகள் நேரடியாக விவாதிக்கப்படுகின்றன. ‘புகழ்ச்சியானது ஒரு மனிதனின் திறமையை மழுங்கடிக்கச் செய்துவிடும் என்பதே அதற்குக் காரணம்’ போன்ற பொதுவான வரிகள் ஆங்காங்கு விரவிக் கிடக்கின்றன. ‘தனது வலது கையின் கட்டை-விரலுக்கு அடுத்துள்ள விரலினால் கண்ணாடியைத் தேய்த்து நத்தையை உசுப்பினார்’ என எழுதுகிறார். வலது ஆள்காட்டி விரல் என எழுத வேண்டிய இடத்தை இப்படி சுற்றி எழுதுவதான மொழி பயன்பாடுகள் ஒரு சில இடத்தில் இடறுகின்றன.
சாதனாவின் கதைகள் அவை எடுத்துக்கொண்ட கேள்விகளை நேர்த்தியாக பின் தொடர்ந்தவை எனும் முறையில் முக்கியமான கதைகளாகின்றன. தனிப்பட்ட முறையில் எனக்கான கதைகள் என்றும் சொல்வேன். தமிழ் சிறுகதைகள் உலக நிலப்பரப்புகளில் விரிந்து பரவுவது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. எழுத்தாளர் சாதனாவிற்கு வாழ்த்துக்கள்.