ஆம், கமல் நிகழ மறுத்த அற்புதம் தான்.


ஏனெனில், ஒரு உதாரணம் சொல்லுகிறேன். 

படம் தொடங்கி முப்பது நிமிடங்கள்கூட ஆகாத நிலையில் படத்தில் இப்படியொரு காட்சி வருகிறது. கமல்ஹாசன், பூஜா குமார், ஆண்ட்ரியா இன்னும் இருவர். மொத்தமாக ஐந்துபேர் கார் ஒன்றில் பயணம் செய்துகொண்டிருக்கிறார்கள். திடீரென்று ஒரு விபத்து. அப்படியே மலைச்சரிவொன்றில் தடம் புரள்கிறது கார். புரண்டு கொண்டிருக்கும்போதே கமல் காரின் முன்பக்க கண்ணாடியை உடைத்துக்கொண்டு வெளியே தூக்கி வீசப்படுகிறார். 

Lone Survivor திரைப்படத்தில் இப்படி ஒரு காட்சி வருகிறது. தாலிபான்களின் தாக்குதலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் படுபயங்கரமான கற்சரடுகள் கொண்ட மலைச்சரிவிலிருந்து உருண்டு புரள்வார்கள் அமெரிக்க வீரர்கள். இறுதியில், முதுகு, மார்பு, முகமென அத்தனையும் உடைந்துபோய் கிடப்பார்கள். எழும்பி நடப்பதற்கு என்ன பேசவே முடியாத நிலை. நிலத்தில் ஊர்ந்து, ஊர்ந்து தங்களை தாலிபான்களிடமிருந்து மறைத்துக்கொள்வார்கள். 

இதைத்தான் யதார்த்த தரிசனம் என்கிறேன். (Realistic vision) 

ஆனால், எப்போதுமே தன்னையொரு பகுத்தறிவுவாதியாக, அறிவுவாதியாக நிலைநிறுத்த விரும்பும் கமல்ஹாசன் இந்தக் காட்சியை எப்படி அமைத்திருக்கிறார் பாருங்கள். 

ஏற்கனவே கமலின் முகத்தில் இரண்டு பாண்டேஜ்ஜூக்கள் ஒட்டப்பட்டிருக்கிறன. அவர் காரிலிருந்து தூக்கி வீசப்படுகிறார். முதுகு உடைந்துபோகும் அளவுக்கு மரமொன்றில் மோதுண்டுகிறார். பிறகு அப்படியே சரிந்து முறிந்துகிடக்கும் மரக்கிளையில் தன்னை நிறுத்திக் கொள்கிறார். 

உயிரே போயிருக்கும். அல்லது பத்து நாட்கள் கோமா. அதுவுமில்லையெனில் இரண்டு வாரம் மருத்துவமனை வாழ்க்கை. குறைந்தபட்சம் இரண்டு, மூன்று மணித்தியாலங்களுக்கு கண் முழிக்கவே முடியாது. ஆனால், கமல்ஹாசனுக்கு இத்தனை நடந்தும் அவரின் உடலில் சின்னக் கீறல்கூட இல்லை. கீறலை விடுங்கள். ஏற்கனவே அவரின் முகத்தில் இரண்டு பாண்டேஜ்ஜூக்கள் ஒட்டப்பட்டிருக்கிறதே, இத்தனை நடந்த பிறகும் கூடவா அதிலிருந்து ஒரு இரத்தக் கசிவுகூட ஏற்பட்டிருக்காது? 

இது எதுவுமே இல்லாமல் அடுத்த நிமிடமே, எங்களுடைய அறிவுவாதி, துப்பாக்கியையும் எடுத்துக்கண்டு தீவிரவாதிகளுடன் சண்டைபோடக் கிளம்பி விடுகிறார். சரி அவர்தான் கதாநாயகன். இரண்டு வாரங்கள் மருத்துவமனையில் படுத்துக்கிடப்பதாக காட்சிகளை அமைத்தால் தீவிரவாதிகளோடு சண்டைபோட்டு யார்தான் தேசத்தைக் காப்பாற்றுவது? 

அதனால் கமலை விடுங்கள். காரிலிருந்த மற்றைய நான்கு பேரின் நிலைமை. நம்புங்கள். ஒரே ஒருவருக்கு மாத்திரம் கழுத்திலிருந்து இரத்தம் கொப்பளிக்கிறது. மற்றைய மூவருக்கும் மயக்கம்கூட வரவில்லை. கமல் கேட்கும் கேள்விகளுக்கு ஏதோ ‘ரெட்பூல்’ குடித்ததைப் போன்ற உற்சாகத்துடன் பதில் சொல்லுகிறார்கள். 

இதனால்தான் தமிழ் சினிமா இப்போதைக்கு உருப்படச் சாத்தியமில்லை என்கிறேன். 

பொதுவெளியிலும் சரி, சினிமாவிலும் சரி தன்னையொரு முற்போக்குவாதியாக, நாஸ்த்திகவாதியாக இன்னும் என்னவெல்லாமோ கண்டகண்டவாதியாக முன்னிறுத்தும் கமல் போன்றோரிடமிருந்து இப்படியொரு ‘சப்பை’காட்சிகள் கொண்ட திரைப்படம் வெளிவரலாமா?  

தமிழ் சினிமாவில் மாத்திரமென்றல்ல, இந்திய சினிமாவில்கூட  கமலைப் போன்ற நுண்ணறிவுமிக்க ( Insight ) படைப்பாளியையோ அல்லது நடிகரையோ காண்பது அரிது. கமலின் மேட்டிமைத்தனத்துக்கு இன்னோர் உதாரணமிது  

குருதிப்புனல் என்றொரு படம்.  1995ல் வெளிவந்தது. ஆதிநாராயணனும் (கமல்)  அப்பாஸும்  (அர்ஜுன்) ஒரு அறையில் இருந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். அப்போது,  ஆதிநாராயணனுக்கு அவன் மனைவி கால் பண்ணுகிறாள். என்னதான் உற்ற நண்பனாக இருந்தாலும் அப்பாஸை வைத்துக்கொண்டு  தன் மனைவியுடன் பேச சங்கடப்படுகிறான் ஆதிநாராயணன்.  நேரடியாக வெளியே போகச் சொல்லவும் தயக்கம். அதனால்,  ஆதிநாராயணன் அப்பாஸிடம் இப்படிச் சொல்கிறான்.   

‘உன்னிடம் நான் கொஞ்சம் தனியாகப் பேச வேண்டும்’  

‘இப்போதே நாங்களிருவரும் தனியாகத்தானே இருக்கிறோம்’ – இது அப்பாஸ்.  

‘ஆம்..தனியாகத்தான் இருக்கிறோம் ; ஆனால், இப்போதல்ல பிறகு’ என்கிறான் ஆதிநாராயணன். 

தன் நண்பன் தன்னை அறையை விட்டுப் போகுமாறு நாசூக்காகச் சொல்லுகிறான் என்பதை அப்பாஸ் புரிந்து கொள்கிறான் . ஒரு மன்னிப்புடனேயே அறையைக் காலி செய்கிறான்.  

எப்பேர்ப்பட்ட epitome of culture இது. நாகரீகத்தனத்தின் அதி உட்சமல்லவா? ஆனால் இப்பேர்ப்பட்ட  நுண்ணறிவுமிக்க கமலிடமிருந்து விஸ்வரூபம் போன்ற லாஜிக்கே இல்லாத சினிமா வந்தால் அதை எப்படிப் பொறுத்துக் கொள்வது?   

எழுத்தாளர் சாரு நிவேதிதா சொல்வதைப்போன்று இலக்கியம் மாத்திரம் படித்தால்தான் தரமான சினிமா எடுக்க முடியுமென்றில்லை. தரமான திரைப்படங்களையும் தொடர்ச்சியாகப் பார்த்துக்கொண்டிருந்தாலே சிலாகிக்கக் கூடிய படமொன்றினை எடுத்துவிட முடியும். ஆனால்,  தமிழ் நாட்டில் என்ன நடக்கிறது?  அரைத்த மாவையே திரும்பத்  திரும்ப அரைத்துக்கொண்டிருக்கிறார்கள்.  இதில் துரதிஷ்டம் என்னவெனில் கமல் போன்ற உலக இலக்கியத்தையும், உலக சினிமாவையும் சமைத்துச் சாப்பிட்டவர்களிடமிருந்து  தர்க்கமே இல்லாத திரைப்படங்கள் வெளிவருவதுதான்.   

என்னைப் பொறுத்தவரை இலக்கியம், சினிமா இரண்டுமே வெறும் பொழுதுபோக்கும் அம்சம் கிடையாது. மாறாக தரிசனங்கள். இந்த இரண்டு தரிசனங்களின் மூலமே மனிதன் முழுமையடைகிறான். எப்படி எழுத்தில் இலக்கிய எழுத்து வெகுஜன எழுத்து என இரண்டு வகையறாக்கள் இருக்கிறதோ அதே போன்றே சினிமாவிலும் வணிக சினிமா உலக சினிமா என இரண்டு வகையறாக்கள் உண்டு. இலக்கிய எழுத்தும் உலக சினிமாவுமே ஒரு மனிதனை தரிசனத்துக்கு உட்படுத்துகிறது.

ரஜினியை ஆன்மிக அரசியல் செய்பவரென்றும்,  மோடி அரசாங்கத்தின் அடியாள் என்றும் கூறுகிறோம். என்னளவில் அது நிஜமும் கூட. ஆனால் இங்கு ரஜினி என்பவரின் பின்னணியை நாம் ஆராய வேண்டி உள்ளது. நடிக்க வருவதற்கு முதல் அவரொரு பஸ் காண்டெக்ட்டர். முழுமையான படிப்பறிவில்லாதவர். சமயங்களில் மூட்டையும் தூக்கி இருக்கிறார். ஆனால், அதன் பிறகு நடிகனாகி மிகப்பெரிய ஸ்டாரானது வரலாறு. ஆனால் இன்று அவர் ரஜினி என்கிற தன்னுடைய மிகப்பெரிய விம்பத்தையே ( Image ) தூக்கிக் கடாசிவிட்டு இளைஞனான ரஞ்சித் பின்னால் ஓட வேண்டிய தேவை என்ன? ஞானமா அரசியலா எப்படி வேண்டுமென்றாலும் இருக்கட்டும். 

ஆனால் யோசித்துப்பாருங்கள்.  ரஜினிக்குத் தெரிந்தது ஆன்மிகமும், நடிப்பும் தான். இதைத் தவிர வேறு எதுவுமே ரஜினிக்குத் தெரியாது. ஆங்கிலம்கூட ஐந்தாறு வருடங்களுக்கு முன்னர் கற்றுக்கொண்டது தான்.  அவருடைய விருப்பமாகவும் இருக்கலாம் அல்லது மோடியின் ஆலோசனையாகவும் இருக்கலாம். தமிழ்நாட்டின் அடுத்த முதல்வராக தானே வர வேண்டும். அதற்கு முதல் தேவை தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த ஓட்டு. சும்மா கொடுத்துவிடுவார்களா ஓட்டு. மக்களை தன் பக்கம் கவர்ந்திழுக்க வேண்டும். எம். ஜி.ராமச்சந்திரனின் பாணிதான்.  ஏழைகளுக்கு உதவுவது போலவும், தாழ்த்தப்பட்ட சனங்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பது போலவும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இதனால்தான் தான், தான் இதுவரைகாறும் கட்டிக்காத்து  வந்திருந்த மாபெரும்ம்ம்ம்ம்ம்ம் விம்பத்தை இழக்க நேரிட்டாலும் பரவாயில்லை என்று கபாலி, காலா என்கிற இரண்டு தலித் அரசியல் பேசும் திரைப்படங்களைக் கொடுத்தார். 

ஆனால் தன்னுடைய கட்சிக்கு ‘மக்கள் நீதி மய்யம்’ என்கிற பெரியாரின் எழுத்துச் சீர் திருத்தத்தின் கீழ் நாமத்தை சூட்டிக்கொண்டு எங்களுடைய பகுத்தறிவுவாதி என்ன செய்கிறார் ?  

உலகத்தின் முதல் சர்வாதிகார தேசமே அமெரிக்காதான். ஆனால், தன்னுடைய அரசியலின் மூலமும், தான் தயாரிக்கும் திரைப்படங்களின் மூலமும் ஒரு சனநாயகவாதியாகவும், தீவிரவாதச் செயற்பாடுகளிலிருந்து காக்க வந்த காப்பாளனாகவுமே தன்னை முன்னிறுத்துகிறது அமெரிக்கா.  தான் நல்லவனென்றால் தான் அடிக்கும் அவன் கெட்டவன். நாமும் கண்களை மூடிக்கொண்டு அதையே நம்புகிறோம். ஆனால் இங்கு பிரச்சனை என்னவெனில் பாமரராகிய எங்களோடு சேர்ந்து கமல் போன்ற ஜீனியஸ்கள் கூட அதை நம்புவதுதான். நம்புவது மாத்திரமல்லாமல் தன்னுடைய பங்குக்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு சார்பாக சினிமாவும்  எடுத்து விடுகிறார்கள்.   

இதைத்தான்  அரைவேற்காட்டுத்தனம் என்கிறேன். தரிசனம் இல்லாத ஒற்றைப் பார்வை. தேசியவாதத்தை கடைபிடிப்பவன் நல்ல எழுத்தாளனாகவோ படைப்பாளியாகவோ முடியாது. கமல் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்குச் சார்பாகச் சினிமா எடுப்பதன் மூலம் எதை நிறுவ முயல்கிறார். அமெரிக்க தேசத்தின் மீதான தன்னுடைய தேசியவாதத்தையா?    

இது விஸ்வரூபம் திரைப்படத்தில் வரும் பாடல் ஒன்றின் வரிகள். ஆப்கானிஸ்தான் காட்சியின் போது பின்னணியில் ஒலிக்கிறது. 

//துப்பாக்கி எங்கள் தொழிலே,

துர்பாக்கியம் தான் வாழ்விலே.

எப்போதும் சாவு நேரிலே,

இப்போது வெல்வோம் போரிலே. 

போர்களை நாங்கள் தேர்ந்தெடுக்கவில்லை ;

போர்தான் எம்மைத் தேர்ந்தெடுத்துக் கொண்டது.

எங்களின் கைகளில் ஆயுதங்கள் இல்லை ;

ஆயுதத்தின் கைகளில் எங்கள் உடல் உள்ளது.

ஊரைக் காக்கும் போருக்கு ஒத்திகை செய்கின்றோம் ;

சாவே எங்கள் வாழ்வென்று சத்தியம் செய்கின்றோம். 

ஒட்டக முதுகின் மேல் ஒரு சமவெளி கிடையாது ;

டாலர் உலகத்தில் சமதர்மம் கிடையாது.

நீதி காணமல் போர்கள் ஓயாது. 

தாக்க வீரன் கேட்கின்றோம்,

புயலை சுவாசிக்க நுரையீரல் கேட்கிறோம்,

எட்டுத் திசைகளில் ஓர் இதயம் கேட்கிறோம்,

இருநூறாண்டு இளமை கேட்கிறோம்,

துப்பாக்கி எம் தலையணை, தூங்கித் திரிகின்றோம். 

ஒட்டக முதுகின் மேல் ஒரு சமவெளி கிடையாது;

டாலர் உலகத்தில் சமதர்மம் கிடையாது.

நீதி காணமல் போர்கள் ஓயாது.// 

நன்றாக மீண்டுமொருமுறை இந்தப் பாடல் வரிகளைக் கவனித்துப் பாருங்கள். இப்படியொரு பாடலை எழுதிவிட்டு, பின் தாலிபான்களை வில்லன்களாகச் சித்தரிக்க வேண்டிய தேவை கமலுக்கு ஏன் ஏற்பட்டது? இது முழுக்க முழுக்க தன்னுடைய சுகந்திரத்திற்காகவும், விடுதலைக்காகவும் புரட்சி செய்யும் இயக்கத்திற்குச் சார்பாக  எழுதப்பட வேண்டிய பாடலல்லவா? ஆனால் தன்னுடைய திரைப்படத்தில் மனித நேயமற்ற கொடூரமான வில்லன்களாக சித்தரிக்கும் ஓர் இயக்கத்திற்குச் சார்பாக  ஏன் எழுதினார்? 

அதுவும் எப்பேர்ப்பட்ட கொடூரமான வில்லன்கள்? 

கமல் ஆப்கானிஸ்தனில் இருக்கும்போது நாசருக்கு கமலின் இரட்டைவேடம் தெரிந்துவிடுகிறது. அவரை அடிபணிய வைப்பதற்காக தன்னுடைய கிராமத்துப் பெண்களையும், குழந்தைகளையும் பிடித்துவைத்துக் கொள்கிறார். உன்னை நம்பியதற்கு இப்படியொரு துரோகத்தைச் செய்து விட்டாயே என்று கூறி காக்கைகளைச் சுடுவது போல்அவர்கள்  அத்தனை பேரையும் சுட்டுக் கொல்கிறார். 

இன்னொரு காட்சியில், கமல், ராகுல் போஸிடம், உன்னுடைய மனைவியும், பிள்ளைகளும் சாகவில்லை அவர்கள் உயிருடன்தான் இருக்கிறார்கள் என்கிறார். அதற்கு ராகுல் போஸ் அப்படியெனில் அவர்கள் சாகவேண்டும் ஏனெனில் அவர்கள் எனக்குத் துரோகம் செய்து விட்டார்கள் என்கிறான். 

இப்படிப்பட்ட  தன்னுடைய சொந்த இனத்தையே அரக்கர்கள்  போல் கொன்று தள்ளும் இயக்கத்திற்கு மேற்கண்டவாறான பாடல் வரிகளைக் கொண்ட பாடல் தேவைதானா?    திரைக்கதையைப் பொறுத்தவரை விஸ்வரூபம் மகா சொதப்பலென  ஏன் குறிப்பிடுகிறேனென இப்போது புரிகிறதா? 

இன்னுமொன்று. உதாரணத்திற்கு இந்த வரியைக் கவனியுங்கள். 

“ஒட்டக முதுகின் மேல் ஒரு சமவெளி கிடையாது;

டாலர் உலகத்தில் சமதர்மம் கிடையாது” 

கமல் டாலர் உலகமென இங்கே குறிப்பிடுவது அமெரிக்க தேசத்தைத்தான். ஆக, உலகின் மிகப்பெரிய சர்வாதிகார தேசமே அமெரிக்காதான் என்பது கமலுக்கு தெரிந்தேதான் இருக்கிறது.  அமெரிக்கர்களின் யுத்தக்குற்றம் பற்றி எழுதுவதென்றால் அதற்கு தனியாக இன்னொரு ஆயிரம் பக்கக் கட்டுரையே எழுதலாம். அந்தளவுக்கு மோசமான யுத்த குற்றங்களையும்,  நினைத்துப் பார்க்கவே முடியாத மனித நேயத்திற்கு எதிரான செயல்களையும் அவர்கள் செய்துள்ளார்கள்.    

இப்போது கேள்வி என்னவெனில், விஸ்வரூபம் திரைப்படத்தை அமெரிக்கச் சார்பு சினிமாவாக எடுத்திருப்பதன் மூலம் கமல் என்ன சொல்ல வருகிறார் என்பதுதான். 

2005ல் வெளிவந்த திரைப்படம்  ஆமைகளால் பறக்க முடியும். பஃமான் கோபதி என்கிற ஈரானிய இயக்குனர் இயக்கியது. இத்திரைப்படத்தில் நடித்துள்ள பெரும்பாலான சிறுவர்கள், நிஜமான அங்கவீனர்கள். படத்தில் இப்படியொரு காட்சி வருகிறது. ஒரு கால் உடைந்த ஈராக்  சிறுவனொருவன் துப்பாக்கியுடன் இருக்கும் துருக்கிய இராணுவ வீரன் ஒருவனிடம் இப்படிச் சொல்கிறான். யுத்தம் தொடங்க வேண்டுமென்று நினைக்கிறாயா இதோ என்னுடன் யுத்தம் செய். என்னிடமும் ஆயுதங்கள் இருக்கின்றன. இதோ பார் என்றுவிட்டு தன்னுடைய உடைந்துபோன காலினைத் தூக்கி அதை துப்பாக்கி போல் சுட்டுச் சுட்டுக் காட்டுகிறான். எப்பேர்ப்பட்ட வீரத்தனம் இது. தன் எதிரி நாட்டு வீரனிடமே சென்று அதுவும் தன்னுடைய உடைந்துபோன காலை வைத்துக்கொண்டு யுத்தம் செய்ய வருகிறாயா எனக் கேட்கிறான். 

ஆனால் நம் உலக நாயகனோ அமெரிக்காவுக்கு வால் பிடிக்கிறார்.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Scroll to Top