தொலைந்துபோன சிறிய அளவிலான,கறுப்பு நிற பைபிள்.


கண்ணாடி முழுவதுமாய், படர்ந்திருந்த பனிமூட்டத்தை, நான் கைகளினாற் தேய்த்து கண்களைக் கிட்டே கொண்டு போய்ப் பார்த்தேன். நெடு, நெடுவென்று வளர்ந்திருந்த ஃபைன் மரங்களும்,ஒலிவ் மரங்களும் அந்தக் கும்மிருட்டிலும் பச்சையாகத் தெரிய, மற்றைய பகுதிகளனைத்தும் பனிக் காடாய் கிடந்தது.அந்தக் காட்சி, தாங்க முடியாத குளிரில் பூமியானது, வெள்ளை நிறப் போர்வையொன்றை தன் உடல் முழுவதும் போர்த்திக் கொண்டு துயில் கொள்வதைப் போல் தோன்றியது. இன்னும் சில நிமிடங்களில், முழு வேகத்துடன் சென்று கொண்டிருக்கும் இந்த ரயிலானது, வேகம் குறைக்கப்பட்டு; மாஸ்கோ நகரத்தில் நிறுத்தப்படும்.

இராணுவத்தில் சேருவதற்காக வர்ஷாவிற்கு வந்து கொண்டிருக்கும் என்னிடம் ஒரு அழுக்குப் படிந்த சிறியளவிலான ஆடைப் பையொன்றும், அதைவிடச் சிறியளவிலான தோற்பையொன்றுமிருந்தன.நான் என்னிடமிருந்த அந்த தோற்பையினுள் கீழ்கண்ட பொருட்கள் சிலவற்றை வைத்திருந்தேன்.

∙ இந்த ஆண்டின் நோட்டுப் புத்தகம்.

∙ (அந்தப் புத்தகத்தின் நடுப் பக்கமொன்றில்) வலது பக்க ஓரத்தில் சற்றே கிழிந்திருக்கும் என் மனைவியினதும், பிள்ளையினதுமான ஒரு கறுப்பு வெள்ளைப் புகைப்படம்.

∙ தாஸ்தாயோவ்ஸிகியின் அசடன், சூதாடி, மற்றும் போரும் சமாதானமும்.

∙ சிறியளவிலான கறுப்பு நிற பைபிள்.

∙ எழுதுகோல், ஒரு முழுச் சிகரெட் பெட்டி,இன்னபிற.

. இராணுவத் தலைமையகத்திலிருந்து அனுப்பப்பட்ட பழுப்பு நிறத் தாளில் அச்சடிக்கப்பட்ட கடிதம்.

ரயிலை விட்டு வெளியே வந்ததும் குளிர் தொட்டது. எதிரிலிருந்த மனிதர்களைப் பரவியிருந்த பனிமூட்டம் மறைத்தது.நான் என் இரண்டு கைகளையும், ஒன்றொடொன்று தேய்த்தபடியே, பைகளோடு நடக்கத் தொடங்கினேன்.

எங்களின் பயிற்றுவிப்பாளர் திரு.இவ்வானோவிச். முதல் நாளே நானும், சக சிப்பாய்களும் இருபது கிலோ மீட்டர்கள் ஓட வேண்டியிருந்தது.மைதானமெல்லாம் இருக்கவில்லை. ஒரே காட்டுப்பாதைதான்.பத்துக் கிலோ மீட்டர்கள் வந்தவுடனே விளாமிடின் வயிற்றைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்துவிட்டான்.மற்றவர்களுக்கு ஏதும் நடந்தால் அதைப்பற்றிய சிறு லஜ்ஜையுமின்றி உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை நீங்கள் தொடர வேண்டுமென்று எனக்கு முன்னமே அறிவுறுத்தப்பட்டிருந்தபடியால் ஒரு க்ஷ்ணம் அவனைத் திரும்பிப் பார்த்து விட்டு தொடர்ந்து ஓடலானேன்.

விளாமிடின்.உண்மையில் அவனொரு புவியியல் பட்டதாரி. தான் மனதார விரும்பியவள் வேறொருவனோடு படுத்திருந்ததை நேரே கண்டுவிட்டான்.கொலை செய்யுமளவுக்கு ஆத்திரப்பட்டிருக்கின்றான்.ஆனால் அவனுடைய இளகிய மனம் அவளைக் கொலைசெய்ய அவனுக்கு இடம் கொடுக்கவில்லை. செய்வதறியாது, தன்னந்தனியே தெருக்களில் அலைந்திருக்கின்றான். வீட்டுக்குப் போக மனமில்லாமல் கைவிடப்பட்ட புகையிரத நிலையமொன்றில் காலத்தைக் கழித்திருக்கின்றான். கூடிய சீக்கிரமே அவனுக்குப் பைத்தியமும் பிடித்துப் போனது. அய்ந்தரை வருடங்களாக மனநிலைக் காப்பகமொன்றில் சிகிச்சையெடுத்த அவன், இராணுவத்தில் சேருவதற்கு ஒரு மாத காலத்துக்கு முன்பு தான் காப்பகத்திலிருந்து விடுவிக்கப்பட்டான். இரண்டாம் கட்டப் பயிற்சி முடிந்து, மூன்றாம் கட்டப் பயிற்சிக்காக எங்கள் அணிக்கு கூட்டி வரப்பட்ட போதுதான் நான் முதல் முறையாக அவனைப் பார்த்தேன். எனக்கு இப்பொழுதும் நன்றாக நினைவிருக்கின்றது. அன்று அவனுக்கு அவனுடைய கன்னங்களை மறைக்குமளவிற்கு தாடி வளர்ந்திருந்தது. கொஞ்சம் குள்ளமானவன்.

விளாமிடினை நான் மறுபடியும் குளிக்கும் அறையில் வைத்துச் சந்தித்தேன். சர்ந்தப்பம் கிடைக்கும்போது அவனுடன் நைச்சியமாகப் பழகி அவனைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள எனக்கும் ஆர்வமிருந்தது. ஆனால் நான் அதைக் காட்டிக் கொள்ளாமல் மிக நுட்பமான முறையொன்றில் அதைத் தவிர்த்தே வந்தேன். என்னைப் போலவே அவனுக்கும் என்னுடன் பழக விருப்பமிருந்திருக்க வேண்டும். எதேச்சையாக நான் அவனை பார்க்க நேரிடும்போதெல்லாம் என்னைப் பார்த்து மய்யமாக சிரித்து வைத்தான். பதிலுக்கு சிரிப்புமற்ற, குரோதமுமற்ற ஒரு பார்வையை அவனுக்கு நான் வழங்கினேன்.

ஒருநாள் ,கழிப்பறையில் ஒரே கூட்டமாகயிருந்தது. முதலில் எனக்கு எதுவுமே புரிபடவில்லை.என்ன நடந்ததென்பதை அறிவதற்காக ; குழுமியிருந்த வீரர்களைத் கைகளினால் விலக்கிக் கொண்டே ஒருவித விறுவிறுப்புடன் கழிவறைக்குள் நுழைந்த நான் ;அங்கே, பிளவு பட்டுப் போயிருந்த தலையுடன் விளாமிடின் தற்கொலை செய்து செத்துப் போயிருப்பதைக் கண்டேன். உடப்பில் ஒட்டுத்துணி கூட இருக்கவில்லை.முழு அம்மணமாகக் கால்களைப் பரப்பி சரிந்து கிடந்தான். எனக்கு வயிற்றிலிருந்து குமட்டிக் கொண்டு வருமாற்போல் படவே வாயைப் பொத்திக் கொண்டு கழிப்பறையை விட்டு வெளியே வந்தேன்.

அன்று முழுவதும் விளாமிடின் எதற்காகத் தற்கொலை செய்து கொண்டான் என்பது பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன்.அவனுக்குளிருந்த மனவுளைச்சல். அது தான் அவனைத் தற்கொலை செய்யுமளவிற்கு உந்தியிருக்க வேண்டும். கதைத்திருக்கலாம்.தான் தற்கொலை செய்துகொள்வதற்கு முதல் தன் மனைவிக்கு கொடுப்பதற்காக கடிதமெதையும் எழுதி வைத்திருந்திருக்கலாம். அதற்கு தோதானவொரு ஆளாக நான் அவனுக்குத் தெரிந்திருக்கலாம்.அதற்காவே என்னுடன் பழகுவதற்கு அவன் முயன்றிருக்கலாம்.சே ,தவறிழைத்து விட்டேன். குறைந்தது ,அவன் என்னைப் பார்த்து சிரித்தபோது பதிலுக்கு நானும் சிரித்திருந்திருக்கலாம்.

இரண்டாம் கதை.

கரடியொன்றும் அவ்வளவு மதிப்பான உயிரல்ல தான். மற்ற மிருகங்களைப் போன்று அதுவும் ஒரு விலங்கு. தனக்குப் பசிக்கும் போது சாப்பிடுகின்றது, விடாய்க்கும் போது தண்ணீர் குடிக்கின்றது.அதனால் இன்னொரு உயிரின் துக்கத்தில் பங்கெடுக்க முடியுமா,அல்லது ஆறுதல் தான் கூற முடியுமா இல்லை தான். இருப்பினும் அந்தக் கரடி எனக்கு என்ன செய்தது என்னுடைய துப்பாக்கியின் இந்த விசையை அழுத்தி விட்டால் ஒரு உக்குருணி அளவேயான குண்டொன்று எந்தத் தடங்கலுமின்றி கரடியின் வயிற்றில் அழமாகப் புதையுண்டு போகும்.சொல்லமுடியாத வலியொன்றில் கரடியானது வீறிட்டுக் கதறும். வார்த்தைகளற்ற அந்தக் குழறலில் அதனுடைய எல்லாத் துயரங்களும் காற்றில் கலந்து பின் அடங்கிப் போகும். பீறிடும் இரத்தம் கண்டு தான் இன்னும் சில நொடிகளில் சாகப்போவதை அது உணரக்கூடும்.தன் தாயோ அல்லது தகப்பனோ தன்னைக் காப்பாற்ற வரகூடும் என்கின்ற தவிப்பில் அது தன்னுடைய இறுதி மூச்சினை விடக் கூடும்.எல்லாம் சரிதான்

ஆனால் நான் எதற்காக இந்தக் கரடியைக் கொல்ல வேண்டும் .அது எப்போதாவது கோபத்தில் என்னை ஏசியிருக்கின்றதா தன் பற்களால் என்னைக் கடித்திருக்கின்றதா குறைந்த பட்சம் என்னை விரட்டியாவது இருக்கின்றதா இல்லையே பின் எதற்காக உண்மையென்னவெனில் நான் அச்சொட்டாக என்னுடைய முதலாவது சூட்டிலேயே அந்த கரடியின் உயிரை எடுத்தால்த் தான் எனக்கான எதிர்காலம் நிச்சயிக்கப்படும்.நான் உயிர் வாழ்வதற்கான இன்னோர் சாத்தியம் அந்தக் கரடியின் இறப்பிலேயே தங்கியிருக்கின்றது.என்னுடைய எதிர்காலத்தை தீர்மானிக்கப் போவது நானொரு படைச்சிப்பாய் என்பதிலேயே தங்கியிருக்கின்றது. ஆகவே நான் இந்தக் கரடியைக் கொல்வதற்கு எந்தவிதமான காரணங்களும் இப்போதைக்கு எனக்குத் தேவையில்லை.ஆகவே கரடியே என்னை மன்னித்து விடு நான் இப்போது உன்மீது எனக்கு எந்தவிதக் முன் விரோதங்களும் இல்லையெனிலும் உன்னை கொன்றாகவேண்டுமென்பதே எனக்கிருக்கும் ஒரே வழி.

ஓர் உயிரின் சாவு என்பது இன்னொர் உயிரைப் பிறப்புவிக்கின்றது.அல்லது அவ்வுயிரைக் காக்க உதவுகின்றது.அதாவது இந்தக் கரடியின் சாவு,என்னுடைய அடுத்த கட்டத்தினைத் தீர்மானிக்கப்போவது போல.சாவு என்பது ஒரு அகண்ட வெளி – அது ஒரு பிரபஞ்சம் அளவிற்கு மிகப் பெரியது – ஒரு புள்ளியில் தொடங்கும் உயிரின் வாழ்வு இந்த வெளிகளில் சஞ்சரித்து -மிக நிதானமாக – சஞ்சரித்துத் வெளியின் விளிம்புக் கோட்டில் முடிந்து போகின்றது.பிரபஞ்சத்தின் மாயவெளிகளில் மிதந்து வந்த இந்தக் கரடியின் உயிர், இந்தத் க்ஷணமே விளிம்பை அடைகின்றது.அப்போது இன்னொர் உயிர் பிரபஞ்ச வெளியில் – அதாவது மேற்குறிப்பிட்ட மாயவெளிகளில் கரைந்து போகும் அபாயம் கொண்ட – தான்தோன்றியாகப் புலப்பட ஆரம்பிக்கின்றது.முடிவில் அந்த உயிரின் மரணமும் கரடியின் மரணத்தைப் போலவே அல்லது அதனைவிடக் கொடுமையானதாகவும் நிகழ்தேறி விடுகின்றது.

என்னால் கொல்லப்படவிருக்கும் இந்தக் கரடியின் வாழ்வு இன்னும் சில க்ஷணங்களில் முடிந்து விடுமென்பது எதனடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றது. கற்பனைவாதத்திலா? அல்லது யதார்த்தவாதத்திலா? கற்பனைவாதமென்பது கடவுளை அடிப்படையாகக் கொண்டது.யதார்த்தவாதமென்பது அகடவுளை அடிப்படையாகக் கொண்டது.இதில் எது உண்மை என்பது அறிஞர்களினால் கூட இந்தத் க்ஷணம் வரை கண்டறியமுடியவில்லை.

இவ்வாறு ஒரு மண்புழுக் கணக்காக நேரம் நகர்ந்து கொண்டிருக்க ஏன் தயங்குகிறாய் சுடு என்றார் ட்ரான்ஷ்கி.

மேலும், என்னுடைய தயக்கத்தின் காரணத்தை புரிந்து கொண்டவரான அவர் தொடர்ந்து பேசலானார்.

கொலை செய்வது சிரமமேயில்லாத காரியங்களிலொன்று. அதாவது தேகத்திற்கு எந்த நோவுமில்லை. ஆனால் மனதானது நம்மை துன்புறுத்திக் கொண்டேயிருக்கும். இந்த கரடியை எடுத்துக் கொள். இந்த க்ஷணம் அது தன்னுடைய வாழ்வினை விட்டு வெளியேறி விதிக்குள் வந்துவிட்டது. ஒரு வட்டத்தைப் போல் விதி கரடியோடு நகர்ந்து கொண்டிருக்க வட்டத்தின் மய்யத்தில் கரடி ஊசலாடுகிறது.

உன்னுடைய மகிழ்ச்சியில் இன்னொருவருக்கு துக்கம் இருக்குமாயின் நீ அந்த மகிழ்ச்சியை ஏற்றுக்கொள்வாயா?ட்ரான்ஷ்கி இப்படிக் கேட்பதில் ஏதாவது உள்நோக்கம் இருக்குமென எனக்குப் பட்டது.அத்தோடு அவர் கேட்ட கேள்வியின் சாரமும் சரிவரப் புரிபடவில்லை.பதில் சொல்வதற்கு எத்தனிப்பது போல் பாவனை காட்டிக் கொண்டே அவர் கேட்ட கேள்வியிலுள்ள சாரத்தைப் புரிந்து கொள்ள முற்பட்டேன்.எவ்வளவுதான் யோசித்தாலும் என் மண்டைக்குள் கேள்வியின் சாரம் ஏறுவதாயில்லை.

என்னுடைய மகிழ்ச்சியில் இன்னொருவருக்குத் துக்கமா,அது எப்படிச் சாத்தியமாகுமென்பதை சற்று விபரிக்க முடியுமா?

நீ தூர தேசமொன்றிற்குப் பயணப்படுகின்றாயென வைத்துக்கொள்,ஒரு குதிரை வண்டிக்காரர் உன்னை ஏற்றிப் போகச் சம்மதிக்கின்றார்.வண்டிக்காரரோ பரம ஏழை,அன்றாடம் காய்ச்சி.அவருடைய வண்டியில் இருவரை ஏற்றிச் செல்லக்கூடிய வசதியிருப்பினும் அன்று நீ மட்டும்தான் அவருக்கு சவாரியாக அமைகின்றாய். உனக்கோ வண்டியில் நான் மட்டுமே பயணிக்கப் போகிறேனென்பதில் மகிழ்ச்சி.சகபயணியின் எரிச்சலைத் தரும் கேள்வி, குழந்தைகளின் கூப்பாடு இதுவெதுவுமேயில்லாமல்

மன நிம்மதியோடு பயணிக்கின்றாய். ஆனால் வண்டிக்காரரோ உன் ஒருவனால் கிடைக்கும் காசை வைத்து பசியோடிருக்கும் தன் பிள்ளைகளுக்கு எவ்வாறு நிவேதனமிடுவதென ஆழ்ந்த கவலையிலிருக்கின்றார்.யோசித்துப்பார் நீ மகிழ்ச்சியாக இருப்பதற்கும், வண்டிக்காரர் துக்கப்படுவதற்கும் ஒரே காரணமே அடிப்படையாக அமைகின்றது.

இரண்டு பண்ட வியாபாரிகள். அருகருகே வியாபாரச் சாலை வைத்திருக்கின்றார்கள்.ஒருவர் நல்ல பண்டத்தை விற்கின்றார்.மற்றவரோ மட்டமான பண்டத்தை விற்கின்றார்.நல்ல பண்டம் விற்பவரின் சாலையில் தினந்தோறும் அதிகளவில் கூட்டம் கூடுகின்றது. மட்டமான பண்டம் விற்பவரின் சாலையிலோ கூட்டமேயில்லை. நாளுக்கு ஒருவரோ இருவரோதான். நீயொரு இரக்கமனதுக்காரன்.பண்டம் வாங்கப் போகையில் மட்டமான பண்டம் விற்பவர் மீது இரக்கப்பட்டு அன்று அவரின் சாலையிலேயே பண்டத்தைக் கொள்வனவு செய்கின்றாய்.உன்னால் கிடைத்த பணம் குறித்து மட்டமான பண்டத்தை விற்பவர் மகிழ்ச்சியடைகின்றார்.ஆனால் உனக்கோ மட்டமான பண்டத்தைச் சாப்பிட்டு அன்று நாள் முழுவதும் வயிற்றுக்குள் உளைச்சல்.கடுமையான வயிற்று வலியில் அவதிப்படுகின்றாய்.

அவர் இவ்வாறு சொல்லிக்கொண்டிருக்கும்போது கரடியானது தான் போன பாதையிலிருந்து விலகி,தலை நிமிர்த்தி எதையோ கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்தது. எனக்கு அது என்னுடைய குறியிலிருந்து தப்பிவிடுமோ என்று பட்டது.சற்றைக்கெல்லாம் என்ன நினைத்ததோ கரடி தான் போன பாதையிலிருந்து திரும்பி. வந்த பாதையிலேயே மீண்டும் வரலாயிற்று.எனக்கு வயிற்றில் எதோ பிசையுமாற்போல் படவே, ட்ரான்ஷ்கி சொன்னதுபோல் உண்மையில் கரடி தன்னுடைய கடைசி விதிக்குள் நடமாடுவது போலவே தோன்றியது.

அப்படியெனில், கரடி நிச்சயமாக தன்னுடைய இறுதி விதிக்குள் நுழைந்து விட்டதா?. நான் என்னுடைய இந்தக் கேள்வியை கொஞ்சம் அழுத்தியே கேட்டேன்.

ஆம், நிச்சயமாக. எந்த தயக்கமுமில்லாமல் என்னைப் போலவே தன்னுடைய பதிலையும் அழுத்தியே சொன்னார் ட்ரான்ஸ்கி.

அவரின் இந்தப் பதிலால் கொஞ்சமாக விரக்தியடைந்த நான் அவரின் திறமையில் அவரையே கவ்வுக்க எண்ணினேன்.

ஒருவேளை என்னுடைய குறி தவறிவிடுகின்றது என வைத்துக் கொள்ளுங்கள். கரடி தப்பிவிடுவதற்கான அபாயமிருக்கின்றதல்லவா? நீங்கள் குறிப்பிட்ட தன்னுடைய கடைசி விதியின் வட்டத்திலிருந்து அது வெளியேறி மறுபடியும் தன்னுடைய வாழ்வை அது வாழத் துவங்குகின்றதல்லவா?

என்னுடைய இந்தக் கேள்வியினை அவர் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை போலும். ட்ரான்ஸ்கி தன்னுடைய பதிலைச் சொல்வதற்கு தடுமாறுகின்றாரெனப் பட்டது. என்னுடைய இந்தக் கேள்வியால் ஆள் கொஞ்சம் நிலைகுலைந்து போகலாமென நான் முன்னமே எதிர்பார்த்ததுதான். எனிலும் நான் ட்ரான்ஸ்கியை மேலும் சங்கடப்படுத்த விரும்பாமல் துப்பாக்கியின் விசையை அழுத்தி விட்டேன்.

அன்றிரவு தூக்கத்தில் என்னால்க் கொல்லப்பட்ட கரடி என் கனவில் வந்தது.அதன் மடியில் படுத்திருந்த என்னை கரடியானது வாஞ்சையோடு தடவிக் கொடுத்தது.நான் மறுபடியும் மறுபடியும் என்னை மன்னித்துவிடு என்னை மன்னித்துவிடுயென்றே கூறிக்கொண்டிருந்தேன். கரடி ஒரு புன்னகையுடன் தன்னுடைய கைகளினால் என்னுடைய தலை முடியைக் கோதிவிட நான் அப்படியே தூங்கிப் போனேன்.

மறுநாள், திரு.அலெக்சாந்தர் லூக்கா சென்ஹாவிடமிருந்து அழைப்பு வரவே; இரண்டு மணித்தியாலங்கள் கழித்து அவரைப் பார்க்கச் சென்றேன். மனிதர் தன்னுடைய மேசையில் அமர்ந்தவாறு சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தார். என்னைக் கண்டதும் வாவென்று கைகளால் சைகை செய்தார். நான் ஒரு மரியாதையுடன் உள்ளே நுழைந்து அவருக்கு வணக்கம் தெரிவித்தேன்.

இப்போது திரு.அலெக்சாந்தர் லுக்கா சென்ஹா பேச ஆரம்பித்தார். புதிய இளைஞனே உன்னைப் பற்றி இப்போதுதான் ட்ரான்ஷ்கி கூறிவிட்டுப் போனார். மிக அற்புதமாகச் சுடுகின்றாயாம். அது நல்லது. இராணுவ வேலையென்பது யாராலுமே எடுத்துவிடக் கூடிய ஒன்று தான். ஆனாலும், ஒரு சிலரே அதற்கு முழுத்தகுதியானவர்களாகின்றார்கள். ஒருவரின் தேக நேர்த்தியும், திறமையும் அதைத் தீர்மானிக்கின்றன.

நான் அவர் என்ன சொல்கின்றாரென்பதையும், சொல்லும் ‘ விதத்தையும் கூர்ந்து கவனித்தபடியிருந்தேன். பொதுவாக மனிதர் யாரையும் அவ்வளவு எளிதில் புகழ்ந்து விடக் கூடி பவரல்ல. புகழ்ச்சியானது ஒரு மனிதனின் திறமையை மழுங்கடிக்கச் செய்து விடுமென்பதே அதற்குக் காரணம். நான் உலர்ந்து போயிருந்த என்னுடைய உதடுகளை நாவினால் மேவி ஈரப்படுத்திக் கொண்டு அவருக்கு பதில் சொல்ல ஆயுத்தமானேன்.

நீ சுடுவதைத் தவிர வேறெதுவும் அறிந்திருக்கின்றாயா?

அவர் இதைத் கேட்கும் போது அவருடைய முகமானது இறுக்கமானதாகவும், கண்கள் கூர்மையானதாகவும் இருந்தன.

உண்மையில், நான் நன்றாகச் சுடுவேனென்பது இங்கே வந்த பிறகுதான் எனக்கே தெரிந்தது. ஆனால் அவருடைய இந்த வெளிப்படையான கேள்வியில் நான் தடுமாறிப் போனதை அவருக்கு உணர்த்த விரும்பாமல் நான் என்னுடைய சிறிய வயதில் நன்றாக ஓவியம் தீட்டக் கூடியவனாகவும், என்னுடைய தாய் அவ் ஓவியங்களை விற்று காசு பார்த்திருக்கின்றாளென்றும் பச்சையாகப் பொய் சொன்னேன்.

நான் அவ்வாறு சொன்னபோது என்னுடைய குரலில் சிறியளவிலான நடுக்கமும், தடுமாற்றமும் இருந்ததாகவே எனக்குத் தோன்றியது.

என்னுடைய குரலில் இருந்த நடுக்கத்தை திரு.அலெக்சாந்தர் லூக்கா சென்ஹா உணர்ந்திருக்க வேண்டும். என்ன நினைத்தாரோ தன்னுடைய அடுத்த கேள்வியைக் கீழ்கண்டவாறான முறையொன்றில் கேட்டார்.

உனக்கு இயேசுவில் நம்பிக்கை இருக்கின்றதா?

இயேசு. இந்த உலகிலே என்னை அதிகம் பரவமூட்டும் வார்த்தையாக அவர் இருக்கின்றார். தனித்திருக்கும் பொழுதுகளில் கண்களை மூடி ஷ்நானிக்கும்போது நித்திய இயேசுவின் முகமும், அவரின் சாத்வீகமான குரலுமே என்னை முழுவதுமாய் ஆட்கொள்கின்றது.

ஒரு இனிமையான சங்கீதத்தைக் கேட்பதுபோல், ஒரு சிறந்த ஓவியனால் தீட்டப்பட்ட விலைமதிப்பற்ற ஓவியத்தை ரசிப்பதுபோல், ஒதுக்கப்பட்ட கிராமமொன்றின் மய்யத்திலிருக்கும் ஆற்றுப் பகுதியில் அமர்ந்து இயற்கையை உணர்வது போல் இயேசுவானவர் என்னைத் தன்னுள் ஈர்த்துக் கொண்டேயிருக்கின்றார்.தேவாலயத்தில் அமர்ந்து சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் முகத்தைப் பார்ப்பது போல் வேறெதுவும் எனக்கு அமைதியை தந்துவிடப் போவதில்லை.அது ஒரு சுகம், அது ஒரு இனிமை தாயின் கர்ப்பப் பையில் இருப்பதைப் போல.

இவை யாவற்றையும் அமைதியாகவும், தெளிவாகவும் திரு.அலெக்சாந்தர் லூக்கா சென்ஹாவிற்கு நான் சொன்னபோது அவருடைய கண்கள் மகிழ்ச்சியில் மின்னியதை நான் கண்டேன்.மனிதரும் என்னைப் போலவே இயேசுவை அதிகம் நேசித்திருக்க வேண்டும்.

இயேசு எனக்கும் மிகப் பிடித்தமான மனிதர் . அவரைப்போல் ஒரு நேரிய நல்லவனை தாஸ்தாவோஷ்கி படைக்க முயன்று தோற்றுப் போயிருக்கின்றார். தாஸ்தயோஷ்கியின் நாவல்கள் சிலவற்றை நீ வைத்திருப்பதாக அறிந்தேன். அசடன் வாசித்திருக்கின்றாயா?என்று விட்டு தன்னுடைய மேசையின் இழுப்பறையைத் திறந்து ஒரு மொத்தமான புத்தகத்தை கையிலெடுத்தார். சடசடவென பக்கங்களைப் புரட்டிய அவர் குறிப்பிட்ட ஒரு பக்கத்தில் நிறுத்தி ஒரு பந்தியை வாசிக்க ஆரம்பித்தார்.

“இந்நாவலின் கருத்து எனக்கு மிகவும் பிடித்தமான பழைய கருத்து.ஆனால் அது சிக்கலானதால் நீண்ட காலமாக நான் தொடவில்லை.இப்போது அதனைத் தொட்டிருக்கிறேன் என்றால் மிகவும் மோசமான நிலையில் என்னைக் காண்பதாலேயே.நாவலின் பிரதான கருத்தாக்கம் நேரியதான நல்லவனைப் படைப்பதே.உலகத்தில் வேறெதுவும் அவ்வளவு சிரமமானதல்ல.குறிப்பாக தற்போதைய காலகட்டத்தில்,நேரிய நல்லவனைப் படைக்க முயன்ற எல்லா எழுத்தாளர்களும் மட்டுமல்லாது,ஐரோப்பிய எழுத்தாளர்களும் எல்லாத் தடவைகளிலும் தோற்றுப் போயினர்.அது ஒரு வரம்பற்ற காரியம்.நல்லது என்பது ஒரு லட்சியம்.நம்முடையதும்,பண்பாடடைந்த ஐரோப்பாவினதுடையதுமான அந்த லட்சியம் இன்னும் ஈடேறவில்லை.உலகமெங்கிலும் ஒரே ஒரு நேரிய மனிதன்தான் இருக்கின்றான்…கிறிஸ்து.கிறிஸ்தவ இலக்கியத்தில் உள்ள நல்ல வகைமாதிரிகளில் மிகவும் பூரணமானது டான் க்விக்ஷோட். ஆனால் அவன் அசட்டுத் தனமாக இருப்பதினாலேயே நல்லவனாக இருக்க முடிகின்றது.இதன் காரணமாகவே வெற்றி பெறுகின்றது.தனது மதிப்பை உணராத நல்லவன் முட்டாளாக்கப்படுகையில் கருனையுணர்வு உண்டாகின்றது.அதன் காரணமாகவே வாசகனிடம் இரக்கம் பிறக்கின்றது.இந்தக் கருணை எழுவதே நகைச்சுவையின் இரகசியம்.விக்டர் ஹியூகோவின் துயருற்றவர்கள் நாவலின் ஜீன் பால் ஜீனும் சக்திமிக்க முயற்சியே.அவனது துரதிருஸ்டத்தின் அளவாலும்,சமூகம் அவன் பால் காட்டும் அநீதியாலும் அவன் இரக்கத்தை உண்டு பண்ணுகிறான்.எனது நாவலில் இந்த மாதிரி எதுவுமில்லை.ஒன்றுமில்லை.எங்கே அது முழுத் தோல்வியாகிவிடுமோ என்று மிகவும் அஞ்சுகின்றேன்.”

இனிய ஆன்யா!

இந்தக் கொண்டாட்டத்தில் பங்குபெற மாஸ்கோவிலிருந்து அக்லேயாவும் அழைக்கப்பட்டிருந்தார்.இந்த வெற்றியில் அவ்வளவாக அவருக்கு உடன்பாடில்லை என்பதை நான் அவருடைய முகத்தினை பார்த்த போதே கண்டுபிடித்திருந்தேன்.யாருடனும் அவ்வளவாகப் பேசவில்லை திரு அலக்சாந்தர் லூக்கா சென்ஹாவே அவருடன் வலுக்கட்டாயமாக பேசிக்கொண்டிருந்தார்.இந்த வெற்றிக்காக தன்னுடைய வீரர்களை தான் எப்படி தயார்படுத்தினாரென்றும்,தன்னுடைய முக்கோண வியூகம் பற்றியும் விளங்கப்படுத்திக் கொண்டிருந்தார்.ஆனால் அக்லேயா இவை யாவற்றையும் செவிமடுத்தாரில்லை.ஒரு மரியாதைக்காக அவர் சொன்னவற்றைக் கேட்டுக் கேட்டுக்கொண்டிருப்பதாக பாவனை செய்த அவர் திரு அலக்சாந்தர் லூக்கா சென்ஹாவிடமிருந்து பிரிந்து தனியானவொருவிடத்துக்கு சென்றுவிடவே விரும்பினார்.

நான் இதை ஒரு நாடகம் போல் பார்த்துக் கொண்டிருந்தேன்.ஒரு கட்டத்தில் அந்த நாடகம் சலிப்பை ஏற்படுத்தவே நான் எனக்காக ஒதுக்கப்படிருந்த மேசைக்குச் சென்று அமைதியாக வைன் அருந்த ஆரம்பித்தேன்.அப்பொழுது உன்னுடைய நினைவு வந்தது.கொண்டாட்டம் முடிந்து கூடாரத்துக்கு திரும்பியவுடனே இந்த மகிழ்ச்சியை உன்னுடனும் பகிரவேண்டுமேன்றும் தோன்றியது.அதற்கான உரைநடையை அப்பொழுதே தயார்படுத்த ஆரம்பித்தேன்.இருந்தாலும் அக்லேயாவின் முகமும்,அவருடைய மனக்குழப்பமும் எனக்குள் அடிக்கடி வந்து போனது.அக்லேயா சாதாரணமாக அவ்வாறான ஒரு பெண் கிடையாது.அவருடைய மாசற்ற முகமும் ,வெள்ளந்தியான புன்னகையும் எவராலும் மறக்கப்பட முடியாதவொன்று.மாஸ்கோவிலேயே அனைவரினாலும் மதிக்கப்படும் பெண்களில் அவரும் ஒருவர்.ஆறாண்டுகளுக்கு முன்னர் ரஷ்ய அதிபரினால் அவருக்கு கேடயம் ஒன்றும் அளிக்கப்பட்டது.

நான் அக்லேயாவைப் பற்றிய நினைவுகளை அழிக்க எண்ணி வாட்டப்பட்ட பன்றி இறைச்சித் துண்டினை மிகச்சிறிய கத்தியொன்றினால் வெட்டியபோது இறைச்சியிலிருந்து இரத்தமானது கசிய ஆரம்பித்தது.வெட்டிய இறைச்சித் துண்டிலிருந்து இன்னொரு சிறியளவிலான துண்டோன்றினை பிய்த்தெடுத்து இரத்தத்துடன் தோய்த்து உண்ணலானேன்.அதன் ருசியானது அற்புதமாகவிருந்தது.நான் என்னிடமிருந்த குறிப்புப் புத்தகமொன்றை கையிலெடுத்து கீழ்கண்டவாறு அதில் எழுத ஆரம்பித்தேன்.

“உலகிலேயே அற்புதமான உணவு இரண்டு கோப்பை சிகப்பு வைனுடனான வாட்டப்பட்ட இறைச்சித் துண்டுகளே.”

நாகோவ்.

மார்ச் 21 என்று தேதியிடப்பட்ட உன்னுடைய கடிதம் கிடைத்தது மகிழ்ச்சி .அன்று நாங்கள் வெற்றியீட்டியிருந்தோம் அல்லவா அதன் பிறகு இரண்டுவாரங்களாக சிப்பாய்களுக்கு வேலையே இல்லாமல்ப் போனது.எவ்வாறாயினும் நாஸி படைகள் பயந்து பின்வாங்கிவிடக் கூடியவர்களல்ல என்பதையும் நாங்கள் உணர்ந்தேயிருந்தோம்.அவர்கள் ஏதாவது ஒரு திட்டத்துக்காக காத்திருக்கலாம்.அல்லது அவர்களுடைய தலைவரிடமிருந்து அடுத்தகட்ட நடவடிக்கை எவ்வாறு அமையவேண்டும் என்கின்ற குறிப்பு இன்னும் வந்து சேராமலிருக்கலாம்.சூழ்நிலை ஏதுவாகிலும் நாங்கள் அனைவரும் கடந்த இரண்டு வாரங்களாக உஷார் நிலையோடே ஒரு கையில் துப்பாக்கியையும் மறுகையில் தொலைகாட்டியையும் ஏந்திய வண்ணமிருக்கின்றோம்.எங்கள் அணிக்கு திரு அலக்சாந்தர் லூக்கா சென்ஹா போன்றவொருவர் தளபதியாயிருப்பது கூடுதல் பலம்.எதிராளிகள் மீதான ஒவ்வொரு அடியையும் மிக நிதானமாகவும் அதே நேரம் மிகச் சிறப்பான திட்டத்தோடும் முன் வைத்தார்.இதுவரை எங்களின் வெற்றிக்காக பதினான்கு திட்டங்களை அவர் செயற்படுத்தியிருந்த போதும் அதில் மூன்று மாத்திரமே தோல்வியுற்றிருந்தது.அதிலும் கடைசித் தோல்வி சற்றும் எதிர்பாராதவோன்று.எங்கள் வீரர்கள் திட்டப்படி முன்னேறிக் கொண்டிருந்தார்கள்.ஆயுதங்களும் தலைமையகத்திலிருந்து வந்துகொண்டேயிருந்தது.எவற்றுக்கும் கணக்குச் சொல்லவேண்டிய தேவை உங்களுக்கு இல்லை ஆயுதங்கள் தீர்ந்து போனால் சொல்லி அனுப்புங்கள் இரட்டிப்பாக அனுப்புகின்றோம் என்று எங்கள் தளபதிக்கு அறிவுறுத்தப்பட்டிருந்த போதிலும் இவர் ஒவ்வொரு ரவைகளுக்குக் கணக்குக் காட்டினார்.அநியாயமாக எதையும் இழந்து விடாதீர்கலேன்று சிப்பாய்களுக்கு வேண்டுகோளும் விடுத்திருந்தார்.

ரஸ்சியாவின் புறநகரொன்றில் பிறந்தவரான எங்கள் தளபதி அலக்ஸாண்டர் லூக்கா சென்ஹா அதிகம் படித்தவரல்ல.ஆனால் அவர் கற்றுக்கொண்ட படங்களனைந்தும் அவரை ஒரு மேதை போலாக்கியது.அதுகுறித்து அவருக்கு பெருமையும் உண்டு.

மூன்றாம் கதை

இன்று முடிவு தெரிய வேண்டும் என்பதாய்ச் சண்டையிட்டோம். நாஜிகள் போர் விமானங்கள் எங்கள் தலைக்கு மேலாகப் பருந்துகளைப் போல் வட்டமிட்டுப் பறந்துகொண்டிருந்தன. எங்கள் படையின் ஒரு பிரிவு அவர்களின் விமானங்களை குறி வைத்துச் சுட்டுக் கொண்டிருந்தார்கள். இரண்டு பக்கமும் ஆட்கள் செத்துக் கொண்டிருந்தார்கள். உறைந்துபோய்க் கிடந்த பனியில் பிசிறிய இரத்தமும் கெட்டிபட்டுக் கிடந்தது.

நான் பிணங்களோடு பிணங்களாக என்னை மறைத்துக்கொண்டு சண்டையிட்டேன்.

ஒவ்வொரு உடல்களாக பொறுக்கியெடுத்து அவை எல்லாவற்றையும் ஓரிடத்தில் குவித்துக் கொண்டிருந்தோம்.சில உடல்கள் தலையில்லாமல் முண்டங்களாயிருந்தன,சில உடல்கள் கைகளில்லாமலிருந்தன ,சில உடல்கள் கால்களில்லாமல் ,சில உடல்கள் உடல்களேயில்லாமலிருந்தன. அப்போதுதான் அவனைப் பார்த்தேன்.அவனுடைய கண்கள் என்னையே நேராக ஊற்றுப் பார்த்துக் கொண்டிருந்தன.பயங்கரமாய் மூச்சு வாங்கினான்.நான் அவனருகில்ச் சென்று லாவகமாகத தூக்கி அவனை மடியில் கிடத்தினேன். தாகமாய் இருக்கின்றது தண்ணீர் கொடுங்கள் என்றான்.நான் என்னுடைய தண்ணீர் நிரப்பப்பட்ட குடுவையையெடுத்து அவனுக்கு தண்ணீர் பருக்கினேன்.களைப்புத் தீர்ந்ததும் ஒருவாறாகத் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட அவன், கண்களால் நன்றியென்றான்.

நான் என்னுடைய ஒரு கையால் மார்பினை நீவி விட்டுக் கொண்டே மறுகையினால் என்னுடைய சப்பாத்துக்குள் ஒழித்து வைத்திருந்த மண்ணிறக் கத்தியொன்றினை எடுத்து நேராக அவனின் கழுத்தில் குத்தினேன்.ஆரம்பத்தில் கத்தியின் அந்தக் கூரான முனை அவனின் தோலினைக் கிழித்துக் கொண்டு ஸூப்பர் பிசியல் செர்விகல் பாஸ்சியாவிக்குள் இறங்கியது.இருண்டு போன கண்களால் என்னை வெறித்துக் கொண்டே கால்களை பலமாக நிலத்தில் உதைத்தான்.அவனுடைய கைகள் என்னுடைய கைகளை உந்தித் தள்ள முயன்றன.நான் இன்னும் ஆவேசம் கொண்டவனாக கத்தியின் மீது என்னுடைய கையைப் பரப்பி மற்றக் கையால் கையின் மேற்புறத்தில் குத்தினேன்.கத்தி இன்னும் ஆழமாக உள்ளே சென்று, க்ரோரிட் வெசலஸ்ஸில் இறங்கியது.நான் இன்னுமொரு தடவை கையினால் குத்த அந்தக் கத்தி டீப் செர்விகல் பாஸ்ஸியாவிற்குள் நுழைந்து ,கடைசியாக மஸ்கியூலர் ஸ்ரக்ச்சருக்குள்ப் போய் நின்றது.சேமித்து வைத்திருந்த பையொன்றிலிருந்து தண்ணீரானது வெளியேறுவதைப் போல அவனின் இரத்தம் குபுகுபுவென்று அவனுடைய கழுத்திலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தது.

நான் இவை யாவற்றையும் முடித்து விட்டு பெர்லினின் மய்யத்திலிருந்த சிதைவுற்ற கட்டடமொன்றுக்குள் நுழைந்தேன். கட்டிடத்தின் ஒரு பகுதியில் இன்னமும் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது.சில பகுதி கரிக்கட்டைகளாகவும், நொறுங்கியவையாகவுமிருந்தன.தப்பிப் பிழைத்த யாராவது ஒருவர் இதற்குள் இருக்கலாமென்பதாலும், எதிர்பாராத நேரத்தில் அவர் என் மீது தாக்குதல் நடத்தலாமென்பதாலும் நான் என்னுடைய ஒவ்வொரு அடியையும் மிகக் கவனமாக எடுத்து வைத்தேன்.அப்போழுதுதான் அவளைப் பார்த்தேன். ஒரு வெருண்ட பூனையைப் போல் நடுங்கிக் கொண்டிருந்த அவளின் முகத்தில் பயம் அப்பிக் கிடந்தது.என்னுடைய சாப்பாத்துக் கால்களிலிருந்து எழும்பிய ஒலியினை அவள் கேட்டிருக்க வேண்டும்; ஓடிப் போய் அறையின் மூலைக்குள் ஒழிந்து கொண்டாள். நான் மெதுவாக அவளின் அருகில்ச் சென்று பாதங்களினால் அமர்ந்து கொண்டே அவளின் தோளைத் தட்டினேன். மேலும் நடுங்கியவளான அவள் தன் இரண்டு கைகளையும், இரண்டு மதில்களைப் போலமைத்து தன்னுடைய முகத்தினை மறைத்துக் கொணடாள்.அறையில் விரவியிருந்த இருள் இருண்டு போயிருந்த அவளின் முகத்தை இன்னும் இருண்மையாக்கிக் காட்டியது.

அவளின் முகத்தைப் பார்ப்பதற்கு விருப்பம் கொண்ட நான் அவளின் முகத்தை மூடியிருந்த அவளின் கைகளை விலக்க எத்தனித்த போது ஒரு வேகத்தோடு என்னுடைய கைகளைத் தட்டிவிட்ட அவள் அதே வேகத்தோடு மறுபடியும் தன்னுடைய முகத்தினை மறைத்துக் கொண்டாள்.நான் திரும்பவும் என்னுடைய கைகளை அவளை நோக்கி நீட்டியபோது அவள் பயங்கரமாகக் கத்திக் கொண்டே தன்னுடைய கால்களை என்மீது எத்தினாள். அவளுடைய பாதங்களை என்னுடைய மார்பில் வாங்கிக் கொண்டே சடசடத்த அவளுடைய கைகளைப் பற்றிப் பிடித்தேன். அவள் கொஞ்சம் பலமானவள்.தன்னுடைய திமிறளில் மார்பில் சொருகியிருந்த கால்களை மிக லாவகமாக விடுவித்துக் கொண்ட அவள் அதே வேகத்துடன் தன்னுடைய கால்களினால் என்னுடைய முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டாள்.அந்த அடியில் என்னுடைய மூக்கு உடைந்திருக்க வேண்டும். நல்ல வேளையாக அப்படி நடக்கவில்லை. இரத்தம் தான் கசிந்தது.

நான் கோபத்தில்,அவளுடைய கால்களிரண்டையும் பற்றிப் பிடித்து, சரசரவென்று இழுத்தேன்.கணுக்கால் வரை நீண்டிருந்த அவளின் பாவாடை இப்போது அவளின் தொடை வரை சென்றிருந்தது.அவசர அவசரமாக தன் ஆடைகளை ஒழுங்கு படுத்தினாள்.ஒரு வேகத்தோடு அவளின் பாவாடையை இழுக்க முயன்ற போது சடாரென என் கைகளைத் தட்டி விட்டாள்.அவளுடைய கண்கள் வெறுப்பைக் காறி உமிழ்ந்தன.

நான்,என்னுடைய ஒரு கையினால் அவளின் தாடையைப் பிடித்துக் கொண்டே,மற்றக் கையினால் அவளின் தலைமுடிக் கற்றையைக் கொத்தாகப் பிடித்து தூக்கினேன்.ஒரு பேயைப் போல் திமிறிய அவள்,சிகப்பேறிய கன்களுடன் கோபத்தில் என் முகத்தில் காறித் துப்பினாள்.அவமானமும்,கோபமும் தலைக்கேற முஷ்டியை மடக்கி அவளின் முகத்தில் இரண்டு தடவை பலமாகக் குத்தினேன்.மூக்கு உடைபட்டு இரத்தம் கசிந்தது.வலியில் அலறிய அவளின் முகத்தில் மேலும் இரண்டு குத்துக் குத்தினேன்.இப்போது அவளின் முகமே இரத்தக் களறியாகக் கிடந்தது.கண்களுக்குக் கீழே சற்றுக் கறுக்கத் தொடங்கியது.பற்றியிருந்த அவளின் தலைமுடிக் கற்றையிலிருந்து நான் என்னுடைய கைகளை விடுவித்துக் கொண்ட போது மயக்கத்தில் அப்படியே நிலத்தில்ச் சரிந்தாள்.

.நான் அவளைப் புணர்ந்து கொண்டிருக்கும்போது திடீரென்று அவன் தோன்றினான்.முகம் சரியாகத் தெரியவில்லை.அவனின் தேகத்தை ஒரு ப்ரகாசமான ஒளி சூழ்ந்திருந்தது.கூர்ந்து கவனித்தபோது என்னுடைய சாயல் இருப்பதாகப் பட்டது. நான் அப்போதும் புணர்ந்து கொண்டே இருந்தேன்.அப்போது ஒரு மென்மையான குரல் -அல்லது அசரீரி – என் காதுகளை நனைக்குமாற் போல் தாவிச் சென்றது.

மானிடனே, அதிகாரம் உன் தேகத்தில் மலைப்பாம்பினைப் போல் ஊர்ந்து கொண்டிருக்கின்றது.மமதையும்,அகங்காரமும் உன்னை மாற்றி விட்டது.உன்னுடைய தேகத் துவாரங்களிலிருந்து வியர்வைத் துளிகளைப் போல் விசமானது வெளியேறிக் கொண்டிருக்கின்றது.நீ உன்னை மறந்து விட்டாய்,உனக்குள் இன்னொருவன் குடியேறிவிட்டான்.

நான் ஒரு வெறியோடு அவளை புணர்ந்து கொண்டே,அப்பாற் போ சூத்தோட்டை என்று கத்தினேன்.என்னுடைய நெற்றியிலிருந்து பிரிந்த வியர்வைத் துளியொன்று ஜேர்மானியப் பெண்ணின் முகத்தில் பட்டுத் தெறித்தது.

இப்போது அவ்வுருவம் என் பின்னால் வந்து நின்று கொண்டது.நான் மறுபடியும்,மறுபடியும் உனக்குச் சொல்லுகின்றேன்.இது கொடுமை,மகா பாதகம்.உனக்கு மனைவியிருக்கின்றாள்.கூடவே ஒரு குழந்தையுமிருக்கின்றது. நீ இவளைப் புணர்வது போன்றே உன் மனைவியை வேறொருவன் புணரக் கூடும்,பரிதாபத்துக்குரிய உன் குழந்தையின் அல்குலில் இன்னொருவன் துருப்பிடித்த கத்தியைச் சொருகக் கூடும்.

இப்படியாக அந்த உருவம் கூறிக்கொண்டிருக்க மிதமிஞ்சிய கோபத்தில் எனக்கு உடல் நடுங்குமாற்போல் படவே, தலைவரையேறிய ஆத்திரத்தில்,அவளின் பிறப்புறுப்பில் சொருகியிருந்த என் ஜனன இயந்திரத்தை படாரென்று வெளியே இழுத்தேன். கண்கள் சிவக்க நின்று கொண்டிருந்த உருவத்தை நோக்கி காலால் எத்தினேன்.ஒரு மாயத் துவாரத்துக்குள் நுழைந்த காம்பினைப் போல் என்னுடைய கால்கள் அந்த உருவத்துக்குள்ளேயே சென்று மறுபடியும் வெளியே வந்தது.

இரட்டிப்பாகிய ஆத்திரத்துடன், அருகிலிருந்த சிலையொன்றினைத் தூக்கி அடிக்க ஓங்கியபோது உருவம் மங்கலாகி மறைந்து போனது. இப்போது என் முழுக் கோபமும் ஜேர்மானியப் பெண்ணின் மீது திரும்ப அவளின் மீது பாய்ந்து அவள் உடல் மேல் அமர்ந்தவாறே அவளின் முகத்தினை நோக்கி பல தடவைகள் சிலையால் அடித்தேன்.முதலில் அவளின் மூக்கு உடைந்தது ,பின்பு அவளின் தாடை,அதன் பின்பு அவளின் முகம் .

கடைசிக் கதை

மூன்று வாரம் விடுப்புத் தந்திருந்தார்கள். கடிதம் கிடைத்து இரண்டாவது நாள் ஒரு ஆர்வத்தோடும், மகிழ்ச்சியோடும் பெட்டியைக் கட்டிக் கொண்டு கிளம்பினேன். முகாம் சலனமற்றுக் கிடந்தது. ஏற்கனவே நிறையச் சிப்பாய்கள் விடுப்பில் போய்விட்டிருந்தார்கள். தூரத்தில் சிலர் கூடைப் பந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவன் என்னை அடையாளம் கண்டு இரண்டு கைகளையும் விரித்துக் காட்டி விசிலடித்தான். கொடுப்புக்குள் சிரித்துக் கொண்டே ரயில் நிலையம் சென்று எனக்கான ரயில் வரும் வரைக் கத்திருந்து, அது வந்ததும் ஏறி ஊர் வந்தேன்.

அதீதமானவொரு காதலுடன் ஆன்யா என்னை வரவேற்றாள்.நான் அவளை அள்ளியெடுத்து அவளின் நெற்றியின் மய்யத்தில் முத்தமிட்டேன்.அன்றைய இரவுணவுவை மிகவும் அற்புதமாக தயாரித்திருந்தாள்.

இரவு இரண்டு மணியளவில் எதேச்சையாக என்னுடைய தோற்பையினை கையிலெடுத்த நான் எப்போதும் என்கூடவேயிருக்கும் சிறிய அளவிலான கறுப்பு நிற பைபிள் தொலைந்து போயிருப்பதை உணர்ந்தேன்.திடுக்கென்றாகவில்லை,தூக்கிவாரிப்போடவில்லை.மொத்தமாக இருந்த போர்வையை தேகம் முழுவதும் படர விட்டபடி கண்களை மூடினேன்.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Scroll to Top