இருவர் – சாரு நிவேதிதா.


அராத்துவைப் பற்றிச் சொல்வதாலேயே எனக்கு இலக்கியம் தெரியவில்லை, நட்புக்காக ஏற்றி விடுகிறேன் என்று என்னைத் தூற்றுபவர்களும் உண்டு.  அராத்துவை நான் பாராட்டவே இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள், அப்போதும் வேறு ஒரு பெயரை வைத்து இப்படித்தான் சொல்வார்கள்.  இப்படிச் சொல்பவர்களுக்கு என் ஒரே வேண்டுகோள் என்னவென்றால், அவரது தற்கொலைக் குறுங்கதைகள் நூலுக்கு நான் எழுதியுள்ள நாற்பது ஐம்பது பக்க முன்னுரையை இல்லாமல் ஆக்குங்கள்.  நானும் உங்கள் கட்சிக்கு வந்து விடுகிறேன்.  என் கருத்திலேயே நின்று கொண்டிருப்பேன் என்ற அடம் எல்லாம் எனக்கு எப்போதுமே கிடையாது.  சரியான வாதங்களை வைத்தால் எப்போதுமே நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு விடுவேன்.  இருபது ஆண்டுகளுக்கு முன் புதுமைப்பித்தன் குப்பை என்றேன்.  காரணம், புதுமைப்பித்தனின் தலித் விரோதக் கருத்துக்கள்.  அப்போதைய நிலைப்பாடு அது.  ஆனால் அப்படிப் பார்த்தால், நான் திருவள்ளுவரையே நிராகரிக்க வேண்டியிருக்கும், அவரது பெண்ணடிமைக் கருத்துக்களுக்காக.  மாணிக்கவாசகரை நிராகரிக்க வேண்டியிருக்கும், அவரது சமண விரோதக் கருத்துக்களுக்காக.  சிந்தித்தேன்.  மனமாற்றம் நிகழ்ந்தது.  அதைப் போலவேதான் கடவுள் சமாச்சாரமும்.  அது போல அராத்துவின் கதைகள் பற்றிய என் கருத்துக்களை மறுத்துப் போடுங்கள்.  விவாதிப்போம். 

ஆனால் அராத்துவுக்கு இருந்த இந்த விபரீத சூழல் சாதனாவுக்கு இல்லை.   சாதனா விளையாடுவது பாரம்பரிய ஆட்ட விதிகளைப் பின்பற்றி.  ஆனால் அதன் உள்ளீடுதான் தமிழுக்கு முற்றிலும் புதிது.  எனவே சாதனாவை யாருமே புறக்கணிக்க முடியாது.  வண்ணதாசனுக்கும் பிடிக்கும், ஜெயமோகனுக்கும் பிடிக்கும், எனக்கும் பிடிக்கும்.  சாதனாவைப் படிக்கும்போது செவ்வியல் இலக்கியத்தின் கூறுகளைக் கொண்டு இன்னும் பல நூற்றாண்டுகளுக்குக் கூட கதைகளைச் சொல்ல முடியும் என்பது நிரூபணமாகிறது.  ஆனால் அது மிகவும் சவாலானது.  கொஞ்சம் இறங்கினாலும் தஸ்தயேவ்ஸ்கியைப் பிரதி செய்வது போல் ஆகி விடும்.  தமிழ்நாட்டில் பல எழுத்தாளர்களின் எதார்த்தக் கதைகளைப் படிக்கவே முடியாமல் போவது அதுதான்.  சாதனாவின் கதைகள் ஆன்மாவின் உள்ளடுக்குகளைத் தொட்டு உலுக்குவதன் காரணம், வாழ்வின் உக்கிரமும் சொற்களின் மந்திரத் தன்மையும்.  இந்த இரண்டும்தான் அவரை எல்லோருக்கும் பிடித்த எழுத்தாளர் ஆக்குகிறது. 

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Scroll to Top