சோஃபியா அப்போதும் ஏன் அழுதாள்?


அவளுக்கு அழுகை வந்தது. மேசையில் கைகளை ஊன்றிக் கொண்டு அழத்தொடங்கினாள். பின், சட்டென்று அழுகையை நிறுத்திக் கொண்டவள், நிமிர்ந்து கண்ணாடியைப் பார்த்தாள். அவள் அழுத அழுகையின் கண்ணீரானது அவள் முகத்தில் போடப்பட்டிருந்த ஒப்பனையை சற்றுக் கலைத்திருந்தது. கைகளினால் தேய்த்து ஒப்பனையைச் சரி செய்தவள், தன்னைத் தானே மேலிருந்து கீழாகப் பார்த்துக் கொண்டாள். தான் அணிந்திருந்த அந்த நீண்ட வெள்ளை நிறப் பாவாடை சற்று தூக்கியிருப்பது போல் தோன்றவே அதைக் கைகளால் தேய்த்து எடுத்தாள். அப்போதும் தூக்கிக் கொண்டுதான் இருந்தது. 

சுவரில் பொருத்தப்பட்டிருந்த கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தாள். இன்னும் இரண்டு நிமிடங்கள்தான் இருக்கிறது. சற்றுத் தாமதித்தாலும் படுகேவலமான தூசண வார்த்தைகளால் பவுல்விச் திட்டுவான். அவனுக்கு எல்லாம் நேர்த்தியாகவும், நேர ஒழுங்கோடும் இருக்க வேண்டும். 

ஒரு பரபரப்போடு அந்த மிகச்சிறிய ஒப்பனை அறையை விட்டு வெளியேற நினைத்தவள், என்ன நினைத்தாளோ… மறுபடியும் வேகமாய் ஓடி வந்து, கண்ணாடிக்கு முன் நின்றுகொண்டு தன்னை முழுவதுமாய் பார்த்தாள். திருப்தியாய் படவே கணுக்கால் வரை நீண்டிருந்த பாவாடையை தன் இரண்டு கைகளினாலும் தூக்கிக்கொண்டு அந்த அறையை விட்டு வெளியேறலானாள். 

வெளியே, பவுல்விச் சோஃபியாவைக் கண்டதும் சற்று முகம் மாறினான். “இப்போதுதான் வருகிறாயா ; போன வாரமே நான் உனக்கு அறிவுறுத்தியிருந்தேன் அல்லவா?” என்றான். அவ்வளவு சீக்கிரம் பவுல்விச்சை சோஃபியா எதிர்பார்க்கவில்லை. தாமதத்திற்கு ஏதாவது காரணம் சொல்லித்தான் ஆக வேண்டும். இல்லையென்றால் விடமாட்டான். “மன்னித்துவிடுங்கள்… திரு. பவுல்விச் நகோவ், தாமதமாக வரவேண்டுமென நான் ஒருநாளும் விரும்பியதில்லை. ஆனால் என்னுடைய புறச்சூழல் சொல்லிக்கொள்ளும்படியில்லை. அதுவே என் இன்றைய தாமதத்துக்கும் காரணம்” என்றாள். சோஃபியா அவ்வாறு சொல்லும்போது அவள் கண்கள் பவுல்விச்சையே பார்த்துக்கொண்டிருந்தன.  

ஆனால், பவுல்விச் சோஃபியா கூறியதை செவிமடுத்தானில்லை. அவன், தன்னுடைய கைகளிலிருந்த நாடகம் எழுதப்பட்டிருந்த பிரதிகளைச்  செப்பனிடுவதிலேயே குறியாக இருந்தான். அப்படிச் செப்பனிடும்போது அவன் உதடுகள் துடித்துக்கொண்டிருந்தன. அவன் ஏதோ கோபத்திலிருக்கிறான் என்பதை சோஃபியா உணர்ந்து கொண்டாள். தான் கூறிய காரணத்தை அவன் ஒருபோதும் நம்பப் போவதில்லை. நான் பொய் சொல்வதாகவே அவன் நினைப்பான். ஏற்கனவே கோபத்திலிருக்கும் அவன் இதனால் இன்னும் எரிச்சல்படக் கூடும். ஆகவே இப்போதைக்கு இந்த இடத்தைவிட்டு நகர்ந்துவிடுவதுதான் சரியென்று அவளுக்குத் தோன்றிற்று.  

பவுல்விச்சை விட்டு விலகி அப்பால் நடந்தாள். ஆனால், அப்படி விலகிச் செல்லும்போது பவுல்விச் தன்னை மறுபடியும் அழைத்துவிடுவானோ என அச்சமடைந்தாள். நல்லவேளையாக… பவுல்விச் அவளை மறுபடியும் அழைக்கவில்லை. ஆறுதலடைந்த சோஃபியா திரைச்சீலையை விலத்தி மேடையை அடைந்தாள்.  

மூன்றாவது வாரமாகவும் ‘குரோசியாவும்,  வேலைக்கார பெண்களும்’ நாடகம் இன்று அரங்கேற்றப்படுகிறது. ‘Croatie et femmes servantes’ என்ற  ஃபிரெஞ்சு மொழியில் எழுதப்பட்ட நாடகத்தையே அவர்கள் ரஷ்ய மொழியில் மொழிபெயர்த்திருந்தார்கள். கதையின்படிக்கு சோஃபியா எஜமானி. அதாவது குரோசியா. அக்லேயாவும், ஸென்னியும் குரோசியாவின் வேலைக்காரப் பெண்கள். சோஃபியாவை கண்டதும், அக்லேயாவும், ஸென்னியும் புன்னகைத்துக் கொண்டார்கள். அவர்கள் ஏற்கனவே தங்களை தயார்படுத்தியிருந்தார்கள். அவர்கள் இருவரும் வெள்ளைநிறத்திலான கவுணொன்றையும் அதை மூடினாற்போல் நீல நிறத்திலான அங்கி ஒன்றையும், காலுக்கு முழங்கால் வரை நீண்டிருந்த காலுறைகளையும், கருப்பு நிறச் சப்பாத்துக்களையும் அணிந்திருந்தார்கள். இருவரின் தலைகளிலும் வேலைக்காரிகள் அணியும் தொப்பி.  

ஸென்னி அன்று மிதமிஞ்சிய அழகுடன் இருப்பதுபோல் சோஃபியாவுக்குப் படவே, அதை அவள் அவளிடம் கூறினாள். புன்னகைத்துக் கொண்டவளான ஸென்னி, “நன்றி” என்றாள். ஸென்னி சோஃபியாவின் நல்ல தோழிகளில் ஒருத்தி என்று சொல்லிவிட முடியாது. ஆனால் அக்லேயாவுடன் ஒப்பிடும்போது ஸென்னி நல்லவளென்று சோஃபியா நினைத்தாள். ஆகவே, தன்னுடைய பாடுகளனைத்தையும் ஒன்றுவிடாமல் நாடகத்தின் இடையில் கிடைக்கும் ஓய்வு நேரங்களிலும், அல்லது நாடகம் முடிந்து திரும்பும்போதும் அவளிடம் கூறுவாள். சோஃபியா மீது இரக்கம் கொள்பவளான ஸென்னி, ஆறுதலான வார்த்தைகளையும், சர்ந்தப்பம் கிடைக்கும்போது அவளின் உச்சம் தலையில் முத்தமிடுபவளாகவும் இருந்தாள்.  

அப்போது மேடையில் நுழைந்தவனான பவுல்விச், முகத்தை தீவிரமாக வைத்துக்கொண்டு “எல்லாம் சரியாகத்தானே இருக்கிறது ; வார்த்தைகள் எப்படி… நினைவில் நிற்கிறனவா?” என்றான். பெண்கள் மூவரும் பரபரப்பாகி பின்னர் ஆமாமென்றார்கள்.  

காட்சி: 1 

மேடையை மூடியிருந்த திரைச்சீலையானது விலகுகிறது. ஒரு மெல்லிய வெளிச்சம் மேடையைச் சூழ்ந்திருக்க… அக்லேயா, சூடு பறக்கும் தேநீர் கோப்பையை ஏந்தியபடிக்கு சாளரத்தின் திரைச்சீலையை விலக்குகிறாள். பின், நித்திரையிலிருக்கும் சோஃபியாவை தயங்கியவாறு எழுப்புகிறாள்.  

“மதிப்புக்குரிய எஜமானி குரோசியா அவர்களே, வழக்கமாக நீங்கள் எழும் நேரம் ஆகிவிட்டது. ஆகவே, நான் உங்களுக்காக தேநீர் கோப்பையோடு வந்திருக்கிறேன் எழும்புங்கள் எழுந்து இந்த தேநீரை அருந்துங்கள்”  என்றாள். தன் இரண்டு கைகளையும் உயர்த்தி சோம்பல் முறித்தவளான சோஃபியா பிற்பாடு போர்வையை விலத்தி அமர்ந்து கொண்டாள். அவள் அப்படிச் செய்யும்போது அனிச்சையாக அவளுடைய வலதுகை, அவளின் மார்புப் பகுதி ஆடையை சரிசெய்து கொண்டது.  

“நேரம் சரியாக ஒன்பதரையா?” சோஃபியா அக்லேயாவிடம் இவ்வாறு வினவியபோது அக்லேயா மிதமிஞ்சிய பணிவுடன் தன்னுடைய உடலை பணித்து “ஆமாம், எஜமானி குரோசியா அவர்களே” என்று பதிலுரைத்துவிட்டு பின் நிமிர்ந்து கொண்டாள். தேநீரை வாங்கி ஒரு மிடறு குடித்தவளான சோஃபியா பின் அக்லேயாவை போகச் சொன்னாள். தேநீரை முழுவதுமாக குடித்து முடித்தாள். காலி கோப்பையை அருகிலிருந்த மேஜையில் வைத்துவிட்டு பாதணிகளை அணிந்து கொண்ட அவள் குளியலறைக்குள் சென்று ஐந்து நிமிடங்கள் கழித்து மறுபடியும் வெளியே வந்தாள். அப்போது மெல்லிய வயலின் இசை ஒலிக்கத் தொடங்கிற்று.  

காட்சி: 2 

விலையுயர்ந்த ஆடைகளையும், நகைகளையும் அணிந்திருந்தவளான சோஃபியா உணவு மேஜையில் அமர்ந்திருந்தாள். பின்னணியில் வயலின் இசை தொடர்ந்து ஒலித்துக்கொண்டேயிருந்தது. அக்லேயாவும், ஸென்னியும் பணிவுடனும், நேர்த்தியுடனும் தங்கள் எஜமானிக்கு உணவு பரிமாறினார்கள். அப்படி அவர்கள் பரிமாறும்போது தங்கள் எஜமானியை விட்டு ஓரடி விலகியே நின்றுகொண்டார்கள். அப்போது சோஃபியா பேசத் தொடங்கினாள்.  

“நான் என்னுடைய கணவரின் விஷயமாக இன்று வெளியூர் செல்கிறேன் ; கனவான் இவ்நோஸ்கியைச் சந்திக்க வேண்டும் ; இரவுபோல் தான் திரும்புவேன்” 

“நல்லது எஜமானியே நீங்கள் அவ்வாறே செய்யுங்கள் ஒரு சிறிய கேள்வி நீங்கள் இங்கு இல்லாத சமயத்தில் நாங்கள் என்ன செய்யவேண்டுமென்பதை சொன்னீர்களென்றால்  எந்த குழப்பமுமில்லாமல் நாங்கள் அதைச் செய்து வைப்போம்” என்றாள் ஸென்னி. அப்போது  ஸென்னியை உற்றுப் பார்த்த சோஃபியா, “நான் என்ன செய்ய வேண்டுமென்பதை நீ எனக்குச் சொல்லாதே நான் இங்கு இல்லாத சமயத்தில் நீங்கள் இருவரும் என்ன செய்யவேண்டுமென்பதை நான் முன்னரே யோசித்து வைத்திருக்கிறேன்” என்றாள். சோஃபியா தன்னை அவமானப்படுத்தும் விதமாக அவ்வாறு கூறியதைக் கேட்ட ஸென்னி அக்லேயாவை பார்த்தபோது அக்லேயா அவ்வளவு நேரமும் தன்னையே பார்த்துக்கொண்டிருந்ததையும் தான் பார்த்தபோது தலையைத் தாழ்த்திக் கொண்டதையும் கவனித்தாள். ஏதோ சொல்ல நினைத்தவள் தன் எஜமானியின் குணம் தெரிந்து அமைதியானாள்.  

எட்டு விநாடிகள் கழித்து சோஃபியா அக்லேயாவைப் பார்த்து “இன்று எப்படியாவது அந்தக் கடிதத்தை எழுதி முடித்துவிடு” என்றாள்.  

பின்னர் ஸென்னியிடம், “என்னைச் சந்திப்பதற்காக மாலைபோல் ஒருவர் வருவார். அவர் அரசாங்கத்தில் பணிபுரியும் திரு. ரஸுமிகின். அவர் வரும்போது அவருடைய குளிரங்கியை  கழற்றுவதற்கு அவருக்கு உதவி செய் அவரை அன்பாகவும் மரியாதையாகவும் உபசரி ஏனெனில் திரு. ரஸுமிகின் அவர்கள் என் கணவருக்கு மிகவும் வேண்டியவர் அவரில்லையெனில் சிறையிலிருக்கும் என் கணவரை மீட்பது கடினம்” என்றாள். 

தான் அப்படிக் கூறியும் பதிலேதும் சொல்லாமல் கைகளைப் பிசைந்துக்கொண்டிருந்த ஸென்னியை உற்றுப் பார்த்த சோஃபியா, “நான் சொன்னது உன் காதுகளில் ஏறவில்லையா?” என்று கத்தினாள். அப்போது பின்னணியில் ஒலித்துக்கொண்டிருந்த வயலின் இசையானது இரண்டு தடவைகள் விட்டு விட்டு ஒலித்தன. நடுங்கிப் போனவளான ஸென்னி, “என்னை மன்னித்துவிடுங்கள்… எஜமானி குரோசியா அவர்களே நீங்கள் கூறிய அனைத்தையும் நான் செவிமடுத்தேன் உங்கள் விருப்பப்படியும் திரு. ரஸுமிகின் அவர்களின் விருப்பப்படியும் நான் நடந்து கொள்வேன்” என்றாள்.  

காட்சி: 3 

அக்லேயாவும், ஸென்னியும் சமையலறையில் இருந்தார்கள். அவர்கள் தங்களின் எஜமானி குரோசியாவுக்காக மதிய உணவினை தயார் செய்துகொண்டிருந்தார்கள். அப்போது அக்லேயா ஸென்னியிடம் கிசுகிசுப்பான குரலில் “உனக்கு குரோசியாவைப் பற்றித் தெரியும்தானே பிறகேன் அப்படி நடந்து கொண்டாய்?” என்றாள். ஸென்னியின் தேகமானது கோபத்தினாலும், அவமானத்தினாலும் நடுங்கிக்கொண்டிருந்தது. கைகளில் படபடப்பை உணர்ந்த அவள் விம்மி விம்மி அழ ஆரம்பித்தாள். அவளால் பேச முடியவில்லை. தொண்டை அடைத்து குரல் அடைக்குமாற் போல் தோன்றவே அவள் பெரும் குரலெடுத்து அழத் தொடங்கினாள். அக்லேயா, ஸென்னியின் தோள்களைத் தடவிக் கொடுத்து “அழாதே, அழாதே” என்றாள்.  

ஸென்னியால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. குழாயைத் திறந்த அவள் வெதுவெதுப்பான தண்ணீரை முகத்தில் அறைந்து அடித்தாள்.  பிற்பாடு, முகத்தை வழித்துத் துடைத்த அவள், மற்றக் கையினால் குழாயினைத் திருகிக்கொண்டே அக்லேயாவைப் பார்த்து சிவந்திருந்த கண்களால் கீழ்கண்டவாறு சொன்னாள். 

“கொன்றுவிடலாமா?” 

திரை மூடியவுடன் சோஃபியா மறுபடியும் ஒப்பனை அறைக்கே சென்றாள். அவளைத் தொடர்ந்து ஸென்னியும் உள்ளே நுழைந்தாள். மறுபடியும் நாடகம் தொடங்குவதற்கு இன்னும் பத்து நிமிடங்கள் இருக்கின்றன. ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். முதலில் ஸென்னிதான் ஆரம்பித்தாள். “அப்போதே கேட்கவேண்டுமென்று நினைத்தேன் இப்போதெல்லாம் எதற்காகத் தாமதமாக வருகிறாய்? பவுல்விச் மிகவும் கோபமாக இருந்தான், உன்னை அவன் காணவில்லையா?” 

சாயத்தை உதடுகளில் அழுத்தித் தேய்த்தவள், பிற்பாடு, உதடுகள் இரண்டையும் ஒன்றோடொன்று நீவினாள். முகத்தை கண்ணாடிக்கு அருகாகக் கொண்டு சென்றவள், “பார்த்தான்… ஆனால் ஏதோ வேலையாக இருந்திருக்கிறான் போலிருக்கிறது… நான் சொன்னதைக் காது கொடுத்துக்  கேட்டானில்லை” என்றாள்.  

“பார்த்து…  சூதனாமாக இருந்துகொள். பவுல்விச் எப்போதும் ஒரே மாதிரி இருப்பவனில்லை.” 

என்ற ஸென்னி, பவுடரை எடுத்து முகத்தில் அப்பினாள். இரண்டு கன்னங்களையும் திருப்பித் திருப்பிப் பார்த்தாள். இடது கன்னத்திலிருந்த ஒப்பனை கொஞ்சம் குறைச்சலாகத் தெரியவே மறுபடியும் பவுடரை அப்பிக்கொண்டாள். “அதுசரி… இன்று எதற்காகத் தாமதமாக வந்தாய்?” ஸென்னி கேட்டாள். 

“உனக்குத் தெரியாததா… வழக்கம்போல்தான் என் கணவனோடு இருப்பதற்குப் பதில் செத்துவிடலாமென்று தோன்றுகிறது” அவள் மேலும் சொன்னாள். “தயவு செய்து இதற்கு மேல் எதுவும் கேட்காதே ; அழுகை வந்துவிடும் ; அழுதால் ஒப்பனை கலைந்து எல்லாம் நாசமாகிவிடும்.” அப்படிச் சொல்லும்போதுகூட தன்னுடைய கண்கள் கலங்கத் தொடங்குவதை சோஃபியா உணர்ந்தாள். தன்னையும் மீறி அழுகை வந்துவிடுமோ எனப் பயந்தாள். கொஞ்ச நேரம் தனியே இருந்தால் தேவலாமென்று தோன்றிற்று. திடீரென்று, சிகரெட் பெட்டியிலிருந்து சிகரெட் ஒன்றை உருவி எடுத்தவள் அதைப் பற்ற வைத்து புகையை ஆழமாக உள்ளிழுத்தாள். சோஃபியா எப்போதுமே இப்படித்தான். மனம் நிரம்பிய துன்பத்தோடிருக்கும்போது சிகரெட் ஒன்றை பற்ற வைத்து அதன் புகையை ஆழமாக உள்ளிழுப்பாள். அது அவளுக்கு ஆசுவாசம் தருவதாய் தோன்றும். ஒரேயொரு உள்ளிழுப்பில் புகையின் ஆழத்தில் தன் அத்தனை ஆக்கினைகளும் பொசுங்கிப் போவதாக அவளுக்குப் படும்.  

காட்சி: 4 

ரஸுமிகினுக்கு  நீள் முகம். தலைமுடியை வாரி படிய இழுத்திருந்தார். சுத்தமாக மழிக்கப்பட்டிருந்த நாடியில் பச்சை தெரிந்தது. ஸென்னி அவருடைய குளிரங்கியைக் கழற்றுவதற்கு உதவி செய்தாள். ரஸுமிகின் அவையெல்லாவற்றுக்கும் நன்றி நன்றியென்று சொல்லிக்கொள்பவராகயிருந்தார். அப்படிச் சொல்லிக்கொள்ளும்போது அவர் கொடுப்பின் தங்கப்பல்லானது தெரியலாயிற்று. அக்லேயா அவருக்கு ஏலக்காய் சுவையுடைய தேனீரையும், அவிக்கப்பட்ட சோளப்பொத்திகள் இரண்டையும் பரிமாறினாள்.  

திரைச்சீலைக்கு பின்னாலிருந்து, இவை யாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த சோஃபியாவுக்கு சிரிப்பு வந்தது. அப்போதெல்லாம் அவள் தன்னுடைய நிஜமான வாழ்க்கையை நினைத்துக் கொள்வாள். மேடையில் தானொரு எஜமானி ; தனக்குப் பணிவிடை செய்ய இரண்டு வேலைக்காரப்  பெண்கள் ;  பகட்டான ஆடம்பரமான வாழ்க்கை. ஆனால் நிஜத்தில், குடிகாரக் கணவன் ; பசிக்கிறபோது அவித்த உருளைக்கிழங்கையும் கெட்டுப்போன சூப்பையும் உண்ணுவதற்கு பழக்கப்பட்ட ஆனால் பாவப்பட்ட  பிள்ளைகள். அப்போது, சோஃபியாவின் கண்களிலிருந்து உதிர்ந்த கண்ணீர்த்துளி ஒன்று நிலத்தில் வீழ்ந்து தெறித்தது.  

  •  

நாடகம் முடிந்து சோஃபியா வெளியேறியபோது சாமமாயிருந்தது. பனி முகத்திலடித்தது. காதுகளில் ‘உய்’யென்கிற சத்தம். நிதானித்துத் தெருவைப் பார்த்தவளான சோஃபியா, சிரமம்தான் எனச் சொல்லிக்கொண்டாள். சதக், புதக்கென்று சப்பாத்துக்கால்கள் பனியினுள் புதைய அவள் நடக்க ஆரம்பித்தாள். இருபது சப்தடிகள் தூரம் நடந்தவள் – அப்படி நடக்கும்போது அவளுடைய கிழிந்த சப்பாத்தினூடாகக் குளிர்ந்த நீர் உட்புகுந்து அவளின் காலுறைகளை நனைத்தது – அடிக்கடி மூக்கை இழுத்துக்கொண்டாள். “சவம்…இந்த இரவு நேரத்திலுமா இப்படிக் கொட்டித் தொலைக்க வேண்டும்.” என்று முணுமுணுத்தவளான சோஃபியா கையுறைகளை மறந்து வீட்டிலேயே விட்டு வந்ததை நினைத்து வருந்தினாள். கைகள் இரண்டையும் ஒன்றோடொன்று தேய்த்து சூடேற்றிக் கொண்டாள்.  

சோஃபியாவுக்கு மறுபடியும் கணவன் பற்றிய நினைவு வந்தது. அப்படியான நேரங்களில் அவள் தன்னையும் அறியாமல் ‘சூக்கா பில்லியர்ட்ஸ்’ என்கிற வசைச் சொல்லொன்றினைச் சொல்லிக்கொள்வாள். ஆனால், பிற்பாடு அப்படிக் கூறிக்கொண்டதற்காக கணவனிடமும், கிருஸ்துவிடமும் மானசீகமாக மன்னிப்புக் கேட்பாள். ஏனெனில், தன் கணவன் மாபெரும் குடிகாரனே ஒழிய அவன் கெட்டவன் இல்லையென்பதை அவள் அறிந்தேயிருந்தாள். இருந்தாலும், அவள் தன் கணவனை ஏதோ ஒரு விதத்தில் வெறுக்கவே செய்தாள். அதற்கான நியாயமான காரணங்களும் அவளுக்குள் இருக்கவே செய்தன. அதில் முதல் காரணம், இப்படிப் பொறுப்பில்லாமல் குடித்துக்கொண்டு திரிகிறான் என்பதே. 

சரிதான்…! திருமணத்தையும் முடித்துவிட்டு போதாததற்கு பிள்ளைகளையும் பெற்றுவிட்டு அவர்களைப் பற்றிய எந்த அக்கறையுமில்லாமல் இரவு பகலெனக் குடித்துக்கொண்டு திரிந்தால் எந்தப் பெண்தான் அதை விரும்புவாள். சோஃபியா இப்போது நன்றாக அழுதாள். யாருக்குத் தெரியப் போகிறது என்கிற தைரியத்தில் – அப்படித் தெரிந்தால் தான் என்ன வந்துவிடப் போகிறது? – அழுதாள். இந்த விஷயத்தில், சோஃபியாவை அதிகமும் வருத்தியது, ஒரு இரண்டு மாதங்களுக்கு முதல், இனிமேல் குடிக்கவே மாட்டேன் எனச் சத்தியம் செய்துவிட்டு ‘அப்படி’ நடந்து ஐந்து நாட்களின் பின்னர் குடித்துவிட்டு வந்ததுதான். 

சோஃபியாவுக்கு தன் கணவனின் உளச்சிக்கல் பற்றி இன்னமும் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லையே என்கிற கவலையிருந்தது. ஆனால், அதே நேரம், நிரம்பக் குடித்துவிட்டு தன்னையும் அறியாமல் வரும்போதுகூட திருமணமாகி இத்தனை ஆண்டுகளாகியும் தனக்கோ பிள்ளைகளுக்கோ அடித்ததில்லை என்பதை நினைக்கும்போது அவளுக்கு வியப்பாகவுமிருந்தது.  

சோஃபியா வீட்டின் கதவை அறைந்து மூடினாள். அத்தனை நேரமுமாய் குளிரிலிருந்தவளுக்கு வீட்டின் வெதுவெதுப்பு சற்று ஆசுவாசமாயிருந்தது. அவள் தன்னைத் தானே சிலுப்பிக்கொண்டாள். அவள் அவ்வாறு செய்யும்போது அவளின் குளிரங்கியில் படித்திருந்த பனித் தூவல்கள் உதிர்ந்து விழுந்தன. குளிரங்கியைக் கழற்றி கொழுக்கியில் மாட்டியவள், சப்பாத்துகளைத் தேய்த்துப் பின் கழற்றிக்கொண்டாள். பிற்பாடு, ஈரமாயிருந்த காலுறைகளை பாதங்களிலிருந்து உருவி அதைச் சப்பாத்துக்குள் புதைத்துக் கொண்டாள்.  

விரல்களை மடக்குவதற்கு பிரயத்தனப்பட்ட சோஃபியா, ஒரு கோப்பை சூடு நிரம்பிய கோப்பி இருந்தால் நன்றாக இருக்குமேயென நினைத்துக் கொண்டாள்.  

  •  

இயலுமானவரை குதிகாலினை மேலெழுப்பி சுற்றிச் சுற்றி ஆடினாள் அன்னா. அப்படி அவள் தன்னையே சுற்றிக்கொள்ளும்போது அவள் அணிந்திருந்த பாவாடை, ஒரு அழகான குடைபோல் விரிந்து, சுற்றி பின் அமர்ந்தது. அன்னா எப்போதுமே இப்படித்தான் ; நேரம் கிடைக்கும்போது நடனம் ஆடுவாள். பக்கத்தில், அவளின் தங்கை சோனியா நிலத்தில் அமர்ந்திருந்து தாளம் போடுவாள். சிலநேரங்களில், அன்னா, தங்கை சோனியா இசைக்கும் தாளத்துக்கு ஏற்றவாறு தன்னுடைய நடனத்தை அமைத்துக்கொள்ளவேண்டும். சிலநேரங்களில், சோனியா, அக்கா அன்னாவின் நாட்டியத்துக்கு ஏற்றவாறு தன்னுடைய தாளத்தினை அமைத்துக்கொள்ள வேண்டும்.  

சோஃபியா இவை யாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்தபோது மிகுந்த போதையிலிருந்தவனான மார்ஃபா பெத்ரோவிச் அந்த அறைக்குள் உள்ளிட்டான். அவன் அணிந்திருந்த குளிரங்கியில் பனித் தூவல்கள் படர்ந்திருந்தன. குளிரில் அவனுடைய இரண்டு கன்னங்களும் இரத்தம் கன்றிக் கண்டிருந்தது. நேராகப் பிள்ளைகளிடம் சென்றவன், அவர்களிருவரையும் அரவணைத்து நெற்றியின் உச்சியில் முத்தமிட்டான். பின் அவர்களோடு கூட அமர்ந்துகொண்டவனான  மார்ஃபா பெத்ரோவிச்சின் உதடுகள் புன்னகைத்தவாறேயிருந்தன. சோஃபியா இவையாவற்றையும் கண்டுகொண்டாளில்லை. அவள் கைகள் உருளைக்கிழங்கின் தோல்களைச் சீவுவதிலேயே குறியாக இருந்தன. 

சோனியாவின் மடியில் தலை வைத்துப் படுத்திருந்தவனான பெத்ரோவிச் சிறிது நேரம் கழித்து எழுந்து கொண்டான். நேராக சோஃபியாவிடம் சென்றவன், அவள் முகத்தைப் பார்ப்பதற்கு அஞ்சி அவள் கையினைப் பற்றிக்கொண்டு அதன் மய்யத்தில் முத்தமிட்டான். அப்போது, பெத்ரோவிச் கண்களிலிருந்து இளஞ் சூட்டுடனான கண்ணீர்த் துளியானது வெளியேறி சோஃபியாவின் விரல்களை நனைத்தது. 

சோஃபியா அப்போதும் ஒரு சொல் பேசினாளில்லை. 

  •  

  அது, கிருஸ்மத்து மாதமென்பதால் நகரத்தில் அப்போதும் பனி தூவிக்கொண்டிருந்தது. கூடவே நல்ல வெய்யிலும் சந்தையில் கூட்டமுமிருந்தது. ‘திசைஸ்’ குளத்துக்கு அப்பால், வெரோனிக்காவின் பத்திரிக்கைக் கடையைத் தாண்டி நிறையப் புறாக்களிருந்தன. யாரோ ஒருவர் அந்தப் புறாக் கூட்டத்துக்கு  சோளப் பொறிகளை விசிக்கிக் கொண்டிருந்தார். அதற்கும் அப்பால், கனமான குளிரங்கி அணிந்திருந்த சிறுவர்கள், பனிக்கட்டிகளை ஒருவர் மேல் ஒருவர் விசிறி விளையாடிக்கொண்டிருந்தார்கள். அதில், பச்சை நிறத்தில் குளிரங்கி அணிந்துகொண்டு தொக்கையான முகத்துடனிருந்த குழந்தை ஒன்று  சோஃபியாவைப் பார்த்துச் சிரித்தபோது சோஃபியாவும்  சிரித்துக்கொண்டாள்.  

அன்னாவையும், சோனியாவையும் சந்தைக்குள் அழைத்துச் சென்ற மார்ஃபா பெத்ரோவிச், அவர்களிருவருக்கும் கருப்பு நிறத்திலானதும் ‘பிங்’ நிறத்திலானதுமான சப்பாத்துக்கள் இரண்டை வாங்கிக் கொடுத்தான். கூடவே, அவர்களுக்குத்  தோதாகயிருக்கும் ஒரே நிறத்திலானதும் ஒரே சாயலிலுமான குளிரங்கிகள் இரண்டையும் வாங்கிக் கொடுத்தான். அந்த இடத்தில் வைத்தே பழையதைக் கழற்றிவிட்டு புதியதை அணிவித்தான்.  பிள்ளைகளைப் பார்த்துச் சிரித்து பின் அவர்கள் இருவரினதும் உச்சந்தலையில் ஆசையாக முத்தமிட்டுக்கொண்டான். சோஃபியாவைப் பார்த்து உனக்கு ஏதும் வேண்டுமாயெனக் கேட்டபோது சோஃபியாவானவள்,  

அப்போதும் ஒரு சொல் பேசினாளில்லை.  

இப்போது, அவர்கள் நால்வரும் தெருவின் ஓரத்தில் நடந்து கொண்டிருந்தார்கள். பிள்ளைகள் இருவரும் பல வண்ணங்களிலான பலூன்களை ஏந்தியபடிக்கு இருந்தார்கள். அப்போது, மார்ஃபா பெத்ரோவிச் தெருவில் இறங்கி திடுமென்று நின்று எதையோ சிந்தித்தான். அவ்வேளையில், குதிரை வண்டிக்காரனொருவன், மார்ஃபா பெத்ரோவிச்சைப் பார்த்து, “ஏய்… குடிகார நாயே, கண் மண் தெரியாமல் குடித்துவிட்டு இப்படித்தான் நடுத்தெருவில் நின்று நித்திரை கொள்வாயா?” என்று திட்டினான். சுதாகரித்து சுற்றும் முற்றும் பார்த்த மார்ஃபா பெத்ரோவிச், ஒரே தாவலில் தெருவின் ஓரத்துக்குப் பாய்ந்தான். குதிரை வண்டிக்காரனைப் பார்த்து, தன் நெஞ்சில் கை வைத்துக் கொண்டவனான அவன், என்னை மன்னித்து விடுங்களென்று முணுமுணுத்தான்.  

இவை யாவற்றையும் மௌனமாகப் பார்த்துக்கொண்டிருந்த சோஃபியாவுக்கு அழுகை வந்தது. ஆனால், அவள், 

 அப்போதும் ஒரு சொல் பேசினாளில்லை.  

  •  

சுருட்டப்பட்டிருந்த சூடான ரொட்டித் துண்டை தன்னுடைய வாய்க்குள் அதக்கிக்கொண்டபோது சோஃபியா, பெத்ரோவிச்சை பார்த்துக்கொண்டாள். அப்புராணியாக, வஞ்சனையற்ற முகத்தோடு பெத்ரோவிச்சும் தன்னுடைய ரொட்டித் துண்டை வாய்க்குள் அதக்கிக் கொண்டபோது சோஃபியாக்கு அவனை நினைத்து பரிதாபமாகயிருந்தது. அந்தக் க்ஷணத்தில், சோஃபியாவை தாங்க முடியாத துயரம் பற்றிக்கொள்ளும். பெத்ரோவிச் மீதிருக்கும் அத்தனை கோபங்களையும், வெறுப்புகளையும் உதறி எறிந்து விட்டு அப்படியே அவரை கட்டிக் கொள்ளலாமா என்று தோன்றும். யாருமற்ற வசந்தகால நேரமொன்றில் – சோளக் காட்டின் மத்தியில் – அவரை தன் மடியில் படுக்க வைத்து ஆறுதலாக அவரின் தலைமுடியினை விரல்களால் கோதி விட வேண்டுமென்றும் அவளுக்குத் தோன்றும். ஆனால், அதெல்லாம் ஒரு க்ஷண நேரத்தில் முடிந்து விடக்கூடிய ஒரு விஷயமாகவே அவளுள் இருந்தது. ஏனெனில், தன் கணவனைக் குறித்து அவளுள் வெறுப்புமிருந்தது.  

இரவில் மார்ஃபா பெத்ரோவிச் சோஃபியாவை புணர ஆரம்பித்தபோதும் சோஃபியா ஒரு சொல் பேசினாளில்லை. கணவனின் உலர்ந்திருந்த உதடுகள் தன் ஈரலிப்பு நிறைந்த உதடுகளை ஸ்பரிசித்த போது மறுப்பேதும் சொல்லாமல் கண்களை மூடிக் கிடந்தாள். போதையிலிருந்தவனான பெத்ரோவிச் வேகமாக இயங்க ஆரம்பித்தான். அப்போது அவனுடைய முகத்திலிருந்து வியர்வைத் துளியொன்று வழிந்து சோஃபியாவின் நெற்றியில் வீழ்ந்து தெறித்தது. ‘எல்லாம்’ முடிந்த பின், சோஃபியா அவனிடம், “நாம் பிரிந்து விடக் கூடாதா?” என்றாள்.  

நெற்றிக்கு கையைக் கொடுத்துப் படுத்திருந்தவனான மார்ஃபா பெத்ரோவிச், திடுக்கிட்டு… சோஃபியாவை பார்க்க எத்தனித்து… பின் பார்க்காமலேயே மறுபடியும் கையை நெற்றிக்குக் கொடுத்தான். சிறிது நேரம் கழித்து பெருமூச்சொன்றை சொரிந்தவன் “ஏன்… நான் தான் திருந்தி விட்டேனே” என்றான். கிடையாகக் கிடந்து தன் கணவனின் பக்கவாட்டு முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த சோஃபியா, நேராக மல்லாந்து படுத்தாள். பின் இப்படிச் சொன்னாள். 

“இப்படி எத்தனை தடவைகள் சொல்லி விட்டீர்கள்… ஆனால், மறுபடியும் மறுபடியும் குடித்துக்கொண்டுதான் இருக்கிறீர்கள். ஒரு பெண்ணுக்குத் தன் கணவன் அசடனாக இருப்பதில் கவலையில்லை. உங்களிடம் ஒன்று சொல்கிறேன்; நாமிருவரும் திருமணம் முடித்த ஆரம்பத்தில்… உங்களின் நல்ல உள்ளத்தை குறிப்பாக உங்களுக்குள்ளிருந்த அசட்டுத்தனத்தை நான் விரும்பினேன். உங்களை போன்ற ஒரு நல்ல இதயம் கொண்ட ஒருவரை என்னுடைய கணவராகக் கொடுத்ததற்கு மாதாவுக்கு நன்றி கூடக் கூறினேன். ஆனால், காலப்போக்கில், அதுவும் பிள்ளைகளென்று வந்த பிறகு உங்களின் அசட்டுத்தனத்தை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை” 

பதிலேதும் பேசாமல் அப்படியே கிடந்த மார்ஃபா பெத்ரோவிச் தேகத்தைச் சரித்து கிடையாகப் படுத்தான். பக்கவாட்டாகத் தெரியும் தன் மனைவியின் முகத்தைப் பார்த்து “எவ்வளவு முயன்றும் என்னால் என் குணத்தை மாற்ற முடியாமலிருக்கிறது… நானென்ன செய்வது?” என்றான். 

“தெரியும்… உங்களால் உங்கள் குணத்தை மாற்ற முடியாதென்று எனக்குத் தெரியும்” என்றவள், தன் தேகத்தைச் சரித்து தானும் கிடையாகப் படுத்து சிறிது நேரம் தன் கணவனின் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தாள். பின் பார்வையை அவன் மார்புக்கு தாழ்த்தி “அது உங்களுடைய குற்றமல்ல… எதன் குற்றமென்றும் எனக்குத் தெரியவில்லை. உங்களை வளர்த்த விதம் அப்படியிருக்கலாம். ஆனால், இந்த நாற்பத்தி   இரண்டு வயதிலும் நீங்கள் இன்னமும் அசடாகவே இருக்கிறீர்கள்” என்றாள்.  

“எனக்கு நிச்சயமாகப் புரியவில்லை… நான் இப்படி இருப்பதில் உனக்கென்ன வந்து விடுகிறது. கொஞ்சமோ நஞ்சமோ தருகிறேன் தானே…?” 

“நீங்கள் கொடுப்பது போதுமானதாக இருப்பின் நான் எதற்கு வேலைக்குப் போக வேண்டும்” என்றவள், மார்ஃபா பெத்ரோவிச்சின் கண்களையே பார்த்துக்கொண்டு மேலும் சொன்னாள். “கடந்த வாரம் ஸ்விட்ரிகைலோவுக்கு எதற்காக ஆறு கோபேக்குகள் கொடுத்தீர்கள்?   

சோஃபியா இப்படிக் கேட்டதும் தன் தலையைத் சற்று உயர்த்திக் கொண்டவனான மார்ஃபா பெத்ரோவிச், பாவம்… உனக்கு அவனைப் பற்றித் தெரியும் தானே… திரு. பெலகாயா இவான்விச் இறந்த பிறகு அவன் தனி மரமாகி விட்டான். நண்பனென்று நான் மாத்திரம் தானிருக்கிறேன்” என்றான். பின், தன் தலையை மறுபடியும் தலையணைக்கே கொடுத்து கண்களை மூடிக்கொண்டான்.  

“அப்படியெனில் எனக்கும் நம் பிள்ளைகளுக்கும் யாரிருக்கிறார்கள்?” 

மார்ஃபா பெத்ரோவிச் இப்போது மல்லாந்து படுத்துக்கொண்டான். கண்களைத் திறந்து ஒரு குறிப்பிட்ட விட்டத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். தன் கணவனின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த சோஃபியா பரிதாபம் நிரம்பிய ‘அந்த’ முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தால் தனக்கு மறுபடியும் அவன் மீது இரக்கம் வந்து விடுமோ என்கிற பயத்தில் ஒரு வேகத்தோடு தன் உடலைத் திருப்பிக் கொண்டாள். துக்கம் எதையோ அடைப்பது போற் தோன்றியது. சிறிது நேரத்துக்கு அவர்களிருவரும் எதுவும் பேசிக்கொண்டர்களில்லை. பெரும் நிசப்தமாயிருந்தது. இறுதியில், சோஃபியாவே ஆரம்பித்தாள்.  

“நீங்கள் அவன் மீது இரக்கம் கொள்கிறீர்கள்; பணம் கொடுக்கிறீர்கள்; ஆனால், அவனோ… கொஞ்சம் கூட நன்றியில்லாமல் அன்று உங்களை அத்தனை பேர் முன்னிலையிலும் தூஷண வார்த்தைகளால் நிந்தித்தான். கட்டிய மனைவியாகிய எனக்கு எவ்வளவு அவமானமாக இருந்ததென்று உங்களுக்குத் தெரியுமா? கூனிக் குறுகிப் போனேன். ஆனால், நீங்களோ அப்போதும் கூடச் சிரித்துக்கொண்டுதான் இருந்தீர்கள்.” 

“ஆனால் முழுப் பிழையும் என் மீது தானே…?” 

“பிழை உங்கள் மீதுதான்… ஆனால், அதை நீங்கள் வேணுமென்றா செய்தீர்கள். உங்களின் அசட்டுத்தனம். உங்களின் புத்தியில்லாத்தனம்.” என்றவள் இடையில் நிறுத்தினாள். சிறிது நேரம் கழித்து மேலும் சொன்னாள். “முதலில் ‘இப்படி’ யோசிப்பதை நிறுத்துங்கள் கொஞ்சமாவது அக்கிரமம் செய்யப்பழகுங்கள்” 

“சரி விடு… இப்போது இந்த விஷயத்தில் நீ என்ன முடிவெடுத்திருக்கிறாய்?” 

“நாம் பிரிந்து விடுவோம் மார்ஃபா பெத்ரோவிச்.” 

இப்போது சோஃபியா, மார்ஃபா பெத்ரோவிச்சுக்கு தன் முதுகினைக் காட்டியவாறு படுத்திருந்தாள். தன்னுடைய முடிவில் தான் தீர்மானமாக  இருப்பதாய் உணர்த்துவதற்கு அவளுக்கு அதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. அழுகை வருமாற் போல் படவே சற்று விம்மியவள் பிறகு அதை நிறுத்தி சட்டென்று திரும்பினாள். “எனக்கு நிச்சயமாய் தெரியும்… நாம் பிரிந்து விடுவதுதான் நல்லது.”  

பெரும் குழப்பத்திலிருந்தவனான மார்ஃபா பெத்ரோவிச் எழுந்து கொண்டான். அவன் எதுவும் பேசினானில்லை. நேராகக் கழிவறைக்குச் சென்றவன், சிறிது நேரம் கழித்துத்  திரும்பி வந்தான். அவன் முகத்தில் லேசாகத் தண்ணீர் படர்ந்திருப்பதையும் கண்களில் இரத்தம் கண்டிருந்ததையும் சோஃபியா கவனித்தாள். கட்டிலில் சரிந்தவன், போர்வையால் தன் தேகம் முழுவதையும் போர்த்திக்கொண்டான். அப்போது சோஃபியா மேலும் சொன்னாள். 

“என்னை மன்னித்து விடுங்கள்… உங்களை நினைத்து பரிதாபம் கொள்கிறேன். ஆனால், எனக்கு இதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. நான் உங்களை சபிக்கவில்லை. வெறுக்கவுமில்லை. மாறாக, உங்கள் வாழ்வு சிறப்பாகவும் திருப்தியாகவும் அமைய வேண்டுமென்றே ஆவல் கொள்கிறேன். கடவுளிடத்திலும் மன்றாடுகிறேன். ஆனால், எனக்கு விடுதலை தாருங்கள். உங்களுடனான இந்த வாழ்விலிருந்து எனக்கு நிரந்தர விடுதலை கொடுங்கள்.”  

தன் தேகம் முழுவதையும் போர்வைக்குள் மறைத்திருந்த மார்ஃபா பெத்ரோவிச், சோஃபியாவின் சொற்களனைத்தையும் மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்தானே ஒழிய மாறாக ஒரு சொல்லாகினும் பேசினானில்லை.  

“நீங்கள் அழுகிறீர்களென எனக்குத் தெரியும்; ஆனால், பிள்ளைகளின் எதிர்காலத்துக்காவது நாம் பிரிந்து விடுவோம்.” 

  •  

மார்ஃபா பெத்ரோவிச் இரண்டு வாரங்களாக வீட்டுக்கு வரவில்லை. அதாவது, நாமிருவரும் பிரிந்து விடுவோமென சோஃபியா கூறிய அத்தினத்திலிருந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு அவன் வரவேயில்லை. நகரத்தில் கூட அவன் குறித்து எந்த அசுமாந்தமும் கிடையாது. அவனின் குதிரை வண்டிகூட அப்படியே இருந்தது. ஆரம்பத்தில், பிழைப்புக்கு அவன் குதிரை வண்டியையாகினும் எடுத்துச் சென்றிருக்கலாமென நினைத்த சோஃபியா, பின்னர் அது குறித்துச் சிந்தித்தாளில்லை. இப்போதெல்லாம், ஒரு நேர ஒழுங்கோடு அவள் நாடகத்துக்குப் போய் வந்து கொண்டிருந்தாள். நடிப்பிலும் சிரத்தை எடுத்து நடித்தாள். அவளுடைய முகமும், அகமும் மகிழ்ச்சியால் நிரம்பித் தளும்பிற்று. உன்னுடைய நடிப்பைப் பார்ப்பதற்காகவே நாங்கள் இங்கே வருகிறோமென பார்வையாளர்கள் கூறியதாக பவுல்விச் அவளிடம் கூறியபோது துள்ளிக் குதித்து ஆடினாள். அடிக்கடி ஸென்னியையும், அக்லேயாவையும்… சமயங்களில், பவுல்விச்சையும் தன் வீட்டுக்கு அழைத்து வான் கோழி விருந்து கொடுத்தாள். மார்ஃபா பெத்ரோவிச்சின் குதிரை வண்டியை நல்ல விலைக்கு விற்றவள் அந்தப் பணத்தைக்கொண்டு ஸென்னியின் கடனையும் பவுல்விச்சின் கடனையும் கொடுத்தாள். மிகுதியை வட்டிக்குக் கொடுப்போமாயென யோசித்தவள்… பின், அதை தானியமிருந்த மண் பானையொன்றுக்குள் புதைத்து வைத்தாள். ஆரம்பத்தில், தகப்பனைக் குறித்து விசாரம் கொண்ட பிள்ளைகள் இப்போது அவரைக் குறித்து எதுவுமே தன்னிடம் கேட்பதில்லை என்பதை நினைத்து ஆசுவாசம் கொண்டாள்.  

அன்று, பிள்ளைகளுக்கு அவர்களின் வயிறார உணவு கொடுத்தவள் அவர்கள் சாப்பிட்டு முடித்ததும் அவர்களை நித்திரைக்கு அனுப்பினாள். பின், தானும் சாப்பிட்டாள். பாத்திரங்களை கழுவித் துடைத்து அடுக்கினாள். நித்திரைக்குப் போகும் முன், சட்டகமிட்ட மாதாவின் படத்துக்கு முன்னால் முழந்தாழிட்டு ஜெபித்தாள். தனக்கும், தன் பிள்ளைகளுக்கும் நிம்மதியான வாழ்வைக் கொடுத்தமைக்காக மாதாவுக்கு நன்றி கூறினாள்.  

எல்லாவற்றையும் முடித்து விட்டு தன் அறைக்குச் சென்றவள் கட்டிலில் ஏறிப் படுத்தாள். மொத்தமாயிருந்த போர்வையை கழுத்து வரை இழுத்துவிட்டுக் கொண்டாள். சட்டென்று போர்வையை தன் மூக்குக்குக் கொடுத்து அதன் வாசனையை நுகர்ந்தாள். “என்னுடைய மேரி மாதாவே” என்று முணுமுணுத்தவளான அவள், விளக்கை அணைத்து கண்களை மூடிக் கொண்டாள்.  

சிறிது நேரம் கழித்து, சோஃபியா அப்போதும் அழுதாள்.  

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Scroll to Top